கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 January, 2011

வியாபாரமாகும் கிரிக்கெட்


விளையாட்டை என்றுமே இந்தியாவில் விளையாட்டாய் பார்த்து தான் வந்துள்ளனர். அதையும் வியாபாரமாக்கலாம் என்று வர்த்தக நிறுவனங்கள் எங்கோ கொண்டு போய் விட்டன.  இது ஒரு வகையில் நல்லது தான். ஆனால், மற்ற விளையாட்டுக்களுக்கு இந்த அளவுக்கு மவுசு இந்தியாவில் இருக்கிறதா? அவற்றை ஊக்கப்படுத்த ஏன் நாம் முயற்சிக்க முடியாது?

ரசிகர்களை பொறுத்தவரை, பணக்கார விளையாட்டான கோல்ப் அளவுக்கு கிரிக்கெட் கொண்டு செல்லப்படுகிறதா என்ற கேள்வி உள்ளது. அப்படியானால், வரும் காலங்களில் ‘மல்டி பிளக்ஸ்’சில் சினிமா பார்ப்பது போல, குறைந்தபட்சமே பல நூறுகளை டிக்கட்டுக்கு தர வேண்டிய நிலை தான் ஏற்படும்.

திறமை காட்டினால் சாதிக்கலாம் என்பதை சமீப கால கிரிக்கெட் வரலாறு நிரூபித்தபடி உள்ளது. ‘என்னமாய் மட்டை போடறாங்க; பிக்ஸ் பண்ணிட்டாங்கப்பா, நாம தான் முட்டாள் மாதிரி பார்க்கறோம். இவங்களாவது வெற்றி பெறதாவது...’ என்று அங்கலாய்க்கும் பல ரசிகர்களுக்கும் இன்றைய புதுமுகங்களின் கிரிக்கெட் வேகத்தையும் சாதனைகளையும் பார்க்கும் போது, நிச்சயம் கொடுத்த காசுக்கு திருப்தியா ஆடறாங்கப்பா... என்ற அளவிலாவது திருப்தி இருக்கும்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.  இதுவரை கேள்விப்பட்டிராத வீரர்கள் கூட கோடிக்கணக்கில் விலை போயிருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனியை ரூ. 6 கோடிக்கு வாங்கியபோது அம்மாடியோவ் என்று வாயைப் பிளந்தவர்கள், இப்போது கம்பீர் (11.04 கோடி), உத்தப்பா, யூசுப் பதானுக்கு (தலா 9.66 கோடி) கிடைத்திருக்கும் தொகையை பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.

விளையாட்டு உலகில் பிரிமியர் லீக் கால்பந்து மற்றும் அமெரிக்க தேசிய கூடைப்பந்தாட்ட லீக் வீரர்களுக்கு அடுத்தபடியாக அதிக பணம் கிடைக்கும் போட்டியாக ஐபிஎல் உருவெடுத்திருக்கிறது. இதில் பணம்தான் பிரதானம். விளையாட்டு இரண்டாம் பட்சம்தான். குறைகள் நிறைய இருந்தாலும்! ஒரு சீசனில் விளையாடினாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற அளவுக்கு இளம் வீரர்களுக்கு ஏராளமான வாய்ப்பையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது ஐபிஎல்.

இப்படி கோடி கோடியாய் கொட்டுகிறார்களே... போட்ட காசாவது மிஞ்சுமா என்ற சந்தேகமும் எழுகிறதா? அதில் உண்மை இல்லை.  ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள், தொப்பி, டி ஷர்ட், டிக்கெட் விற்பனையில் பங்கு, திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு என்று பல வழிகளில் வருமானம் கிடைப்பதுடன் மீடியா வெளிச்சம் தரும் இலவச விளம்பரத்தின் மதிப்பையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அணி உரிமையாளர்களின் கணக்கு சரியாகத்தான் வருகிறது.
 
 
டிக்கெட் விற்பனை ஆன்லைனில் கொடிகட்டிப் பறக்கிறது. இது போதாதென்று தியேட்டர்களிலும் நேரடியாக ஒளிபரப்பி காசு பார்க்கிறார்கள். ஏற்கனவே கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்துடன் ஐபிஎல் வருமானம் மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஏக்கப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

கட்டெறும்பான ஹாக்கி

ரசிகர்களும், மீடியாக்களும் கிரிக்கெட்டை மட்டுமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் வந்த வினை இது. தேசிய விளையாட்டான ஹாக்கி கட்டெறும்பாகி நீண்ட நாள் ஆகிவிட்டது. சமீபத்தில் நடந்த காமன்வ்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிராமங்களில் இருந்து வந்த வீரர், வீராங்கனைகள் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

ஏழ்மை, பயிற்சி மற்றும் பிற வசதிகள் இல்லாத நிலையிலும் கடுமையாகப் போராடி சாதனை படைத்துள்ள இவர்களைப் போன்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர் செய்ய யாரும் அவ்வளவாக முன் வருவது இல்லை. 


கால்பங்கு கூட இல்லை
கால்பந்து, ஹாக்கி, வாலிபால், டென்னிஸ் என்று எல்லா விளையாட்டுகளிலுமே திறமையான இளம் வீரர், வீராங்கனைகள் இந்தியாவில் ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் சர்வதேச அளவில் நிச்சயம் பிரகாசிப்பார்கள்.

ரஞ்சி போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு கூட லட்சக் கணக்கில் பணம் கிடைக்கிறது. மற்ற விளையாட்டுகளில் சாதனை படைப்பவர்களுக்கு இதில் கால் பங்கு கூட கிடைப்பதில்லை.10 அணிகள்... ரூ. 20 ஆயிரம் கோடி

ஐபிஎல் சீசன் 4ல் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் 3 சீசனிலும் 8 அணிகள் விளையாடிய நிலையில் இப்போது கொச்சி மற்றும் புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அணிகளின் மொத்த மதிப்பு ரூ. 6131 கோடி. ஐபிஎல் டி20ன் சந்தை மதிப்பு ரூ. 18,500 கோடி என்று இங்கிலாந்தை சேர்ந்த பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுக்கான மதிப்பீடு. இன்று ரூ. 20,000 கோடியை தாண்டியிருக்கும்.16 மணி நேர ஏலம்

இரண்டு நாட்களில் 16 மணி நேரத்துக்கு நடந்த ஏலத்தில் 350 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இவர்களில் 166 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டனர். இதற்காக 10 அணிகளும் செலவிட்ட தொகை ரூ. 358 கோடி. கம்பீர் அதிகபட்சமாக ரூ. 11.04 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.

ஏலத்தில் பங்கேற்காத ‘ஐகான்‘ வீரர்கள் சச்சின், டோனி, சேவக் ஆகியோருக்கு தலா ரூ. 8.1 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் கம்பீருக்கு ரூ. 11 கோடி கிடைத்திருப்பதால் இவர்களுக்கான தொகையும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டென்னிசுக்கு அதே மவுசு

கிரிக்கெட்டுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் டென்னிசுக்கு ஓரளவு மவுசு ஏற்பட்டுள்ளது. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரின்காவுக்கு ரூ. 31 லட்சம் பரிசாக கிடைத்தது. சோம்தேவ், பாம்ப்ரி, சனம்சிங், போபண்ணா போன்ற இந்திய வீரர்கள் ஒற்றையர் பிரிவில் ஏமாற்றினாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் லியாண்டர் & மகேஷ் பூபதி ஜோடி இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பயஸ், பூபதி, போபண்ணா, சோம்தேவ், சானியா மிர்சா போன்றவர்கள் டென்னிசில் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். இதனால் இளசுகளின் பார்வை டென்னிஸ் பக்கமும் திரும்பியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் (2013 வரை) சென்னை ஓபன் போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் 500 தரவரிசை புள்ளிகளைக் கொண்ட பெரிய போட்டியாக நடத்த முடிவு செய்துள்ளனர். அப்படி நடந்தால் இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல டென்னிசும் அசுர வளர்ச்சியை பெற்று விடும். ஹாக்கி பிரிமியர் லீக்

ஐபிஎல் போல நகரங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாக்கி பிரிமியர் லீக் (எச்.பி.எல்.) போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டில் இருந்தே இந்தியன் ஹாக்கி லீக் என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட்டு வந்தாலும், இப்போது பல புதிய மாற்றங்களை செய்து எச்.பி.எல். என்ற மிகப் பிரம்மாண்டமான போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய அந்த பொற்காலம் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையை எச்.பி.எல். ஏற்படுத்தி உள்ளது. இதைப் போலவே எல்லா விளையாட்டுகளுக்கும் வசதிகளை மேம்படுத்தி, திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து முறையான பயிற்சி அளிக்க கார்பரேட் நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் கிரிக்கெட் அல்லாத ஏதாவதொரு விளையாட்டை தத்தெடுத்து வீரர், வீராங்கனைகளுக்கு உதவி செய்வதை கட்டாயமாக்க வேண்டும். ஐபிஎல் வருமானத்தில் ஒரு பகுதியை மற்ற விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கவும் கிரிக்கெட் வாரியம் முன் வர வேண்டும்.
 

நன்றி : தினகரன் (11-01-2011 செய்திதாள்)

3 comments:

 1. நன்றி நண்பரே
  ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் .
  பகிர்வுக்கு நன்றி ....
  பதிவுலக நண்பர்களே..
  அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
  நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...