கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 December, 2011

பப்பரமிட்டாய் - அறுசுவைகளை அனுபவியுங்கள்... 31-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை :

ஓர் ஆன்மிக சொற்பொழிவின் போது, அனுமன் பிரம்மச்சாரி, கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனைகள் பல புரிந்தார். முக்கியமாக கிங் மேக்கராக இருந்தார். சுக்ரீவனுக்கு ஆட்சி கிடைத்தது அனுமனுடைய அறிவாற்றலால்தான்.

இராவணனைக் கொன்று இராமர் ஆட்சியை ஏற்கவும் அனுமன் பெரிதும் உதவினார். ஆக பெரிய நோக்கோடு பிரம்மச்சரிய விரதம் இருப்பவர்கள் எல்லோருமே கிங் மேக்கராக இருப்பார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் குறிப்பிட்டார்.

உடனே கூட்டத்தில் பலத்த ஆரவாரமும், கைதட்டலும் எழுந்தன. அதற்குக் காரணம் அந்த மேடையில் காமராஜரும் இருந்தார். அவர் பிரம்ச்சாரி. அதோடு அப்போது நேருஜிக்குப்பிறகு இரண்டு பிரதமர்களைப் பதவியில் அமர்த்தி கிங் மேக்கர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார்.

இது போல் கிருபானந்த வாரியார் அவர்கள், இடம் சூழல் காலத்திற்கு ஏற்றவாறு நகைச்சுவையுடன் நயத்துடன் பேச வல்லளர்.


2. கவிதை :



அவளோடு...
அன்றொறுநாள்...
சிரித்து சிரித்துப் பேசிய
 மழைச் சந்திப்புக்குப் பிறகு... 

ஒவ்வொரு ‌மழைத்துளியும் 
அழவைத்து விடுகிறது என்னை... 

அவளை நினைவுறுத்தி..!

3. நகைச்சுவை துணுக்கு :

நண்பன் 1 : ஈரான் அதிபர் எனக்குக் கிடைக்க இருந்த வேலையைக் கெடுத்திட்டான், பாவி...!
 

நண்பன் 2 : அவர் வந்து ஏதும் சொன்னாரா..?
 

நண்பன் 1 : அதில்லை..! ஈரான் அதிபர் யாருன்னு இன்டர்வியூல்லே கேள்வி கேட்டாங்க. எனக்கு பதில் சொல்ல தெரியல..!
 

4. விடைகொடுப்போம்..!
பல்வேறு மாற்றங்கள், ஏற்றங்கள் தந்த இந்த ஆண்டின்கடைசி நளை அன்போடு வழிஅனுப்புவோம்.

5. நகைச்சுவைப்படம் :
போட்டி வச்சிக்கலாமா..!


6. புத்தாண்டு வாழ்த்து: 
 
இன்று போல் என்றும் இணைந்திருப்போம் நட்பால்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் 
என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

அன்புடன்
கவிதைவீதி செளந்தர்...

30 December, 2011

2011-ல் தனுஷின் ஏற்ற இறக்கங்கள் ஒரு பார்வை

2011-ல் அதிக படங்கள் நடித்த பெருமை தனுஷ்-க்கு கிடைத்துள்ளது. அந்த படங்களின் மூலம் அவருக்கு கிடைத்த பலன்களையும், அந்த படங்களைப்பற்றியும் தற்போது விவாதிப்போம்.

ஆடுகளம் (14-01-2011)
 

மதுரையை மண்ணில், மறைந்துபோன தமிழரின் விளையாட்டுகளில் ஒண்றான சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்.
கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் ஒரு யாதார்த்தமான மதுரைக்காரர் போன்றே அங்கு பேசும் வழக்கு மொழி பேசி அசத்தினார்.
இந்தப்படத்தில் அவரின் நடிப்பு இந்தியாமுழுவதும் பேசப்பட்டது. மத்திய அரசின் 2010-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விரும் தனுஷிக்கு கிடைத்தது. (இப்படம் 2010 ஆண்டுக்காக தேசிய விருது போட்டியில் பங்கேற்றது) ‌இப்படம் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்தது. வசூலில் மிகப்பெரிய சாதனையை ஏதும் செய்ய வில்லையென்றாலும் சன்மூவீஸ் இப்படத்தை உலகம்முழுவதும் கொண்டு சென்றது.
இந்த ஆண்டின் முதல் படமே தனுஷ்க்கு மிகப்பெரிய படமாக அமைந்தது.


சீடன் (25-02-2011)

லண்டன் போகப்போகும் வசதியான வீட்டு பையன் அந்த வீட்டு வேலைக்காரி மேல் காதல். அதை தனது அம்மாவிடம் சொல்லாமல் காலம் கடத்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த இருவரையும் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் தனுஷ்.

இந்தப்படத்தை பொருத்தவரை தனுஷ்-க்கு சிறப்புத்தோற்றம் என்ற அளவிலே கையாளப்பட்டார். திருடா திருடி இயக்குனர் சுப்பிரமணி சிவாவுக்கு தனுஷ் செய்ய கைமாறு இந்தப்படம்.

இது இசையமைப்பாளர் தினாவுக்கு 50-வது படம். இதுமிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.

மாப்பிள்ளை (08-04-2011)

சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த மாப்பிள்ளையின் கதைதான் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி படம் பார்க்க வந்தவர்களை சிரிக்கவைத்து அனுப்பியிருக்கிறார் சுராஜ்.

தனுஷ்-விவேக் கூட்டணியில் இப்படத்தின் நகைச்சுவைக்காட்சிகள் மட்டும் மனதில் நின்றது. இதுவும் தனுஷிக்கு ஒரு சுமார் படம்தான். சன் பிக்சர் வெளியிட்டும் வசூல் இல்லை.

வேங்கை(07-07-2011)

ஊரில் மிகபெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் MLA பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது.

இயக்குனர் ஹரி-ன் மசாலாப்படம். இதில் தனுஷ் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்தார். இதுவும் அவருக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது.

மயக்கம் என்ன (25-11-2011)

தனுஷ் பெரிய போட்டோகிராபர் ஆக ஆசைப்படுகிறார். இவரின் கனவும், லட்சியமும் சிறந்த போட்டோகிராபர் ஆக வேண்டும் என்பதுதான். அதோடு தனுசுக்கு பிடித்த, தெரிந்த ஒரே தொழிலும் போட்டோகிராபி மட்டும் தான்.

நாயகி ரிச்சா தனுசின் நண்பனின் கேர்ள் ஃப்ரண்டாக அறிமுகமாகிறார். முதலில் தனுசும், ரிச்சாவும் முட்டி மோதினாலும் வழக்கம்போல ரிச்சா, தனுசை காதலிக்க முயற்சி செய்கிறார். நண்பனின் காதலி என்பதால் தனுஷ் தவிர்க்க முயற்சிக்கிறார் பிறகு காதலில் விழுகிறார்.

தனுஷ் எடுத்த புகைப்படங்களை தான் எடுத்ததாக சொல்லி தனுசை ஏமாற்றுகிறார் ஒரு பெரிய போட்டோகிராபர். திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமலே வாழ்க்கை நகர்கிறது. இறுதியில் தனுஷ் சிறந்த புகைப்படத்திற்க்கான சர்வதேச விருது வாங்கி படத்தை சுபமாக முடித்துள்ளார்கள்.

செல்வராகவல்-தனுஷ் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஆனால் வருவாயில் அந்த அளவு முன்னேற்றம் இல்லை.
இந்த ஆண்டு அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் இவராகத்தான் இருக்க முடியும். அந்த வரிசையில் தனுஷ் சிறப்பான வருடம்தான் இது.
ஆடுகளம் படத்தில் கிடைத்த தேசிய விருது மிகப்பெரிய ஏற்றம், இதைதவிர வேறு எந்தபடமும் நல்ல பேரையும் வசூலையும் சேர்க்காததால் ‌இந்த வருடம் அவருக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அவருக்கு மிகவும் பேரையும் புகழையும் கொடுத்திருப்பது “3” படத்தின் கொலைவெறிப்பாடல்தான். அந்த விதத்தில் அவருக்கு மகிழ்ச்சியே. அடுத்த ஆண்டாவது தனுஷுக்கு நல்லபடியாக அமையுமா பொருத்திருந்து பார்ப்போம்.

29 December, 2011

குடும்ப அட்டை தாமதத்திற்கு உண்மையான காரணம்.. பிண்ணனியில் ஜெயலலிதா..?


தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டையின் காலம், இம்மாதம் 31, 2011 உடன் முடிவடைகிறது. அதன்பிறகு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தக் காலக் கெடுவை, அடுத்த ஆண்டு டிசம்பர் 31, (2012) வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. நாட்டில் உள்ள போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து, உண்மையான பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்க வேண்டுமென்பதே நோக்கம் என்றும், தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றி, தனித்தன்மை கொண்ட பிரத்யேகமான அடையாள அட்டையை, ஒவ்வொரு குடிமக்களுக்கும் வழங்கும் பணியை, "தனித்தன்மை அடையாள அட்டை ஆணையம்' அமைத்ததன் மூலம், மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. 

ஆதார் அடையாள அட்டைகள் வழங்கும் பணியை மேற்கண்ட ஆணையம், தபால் துறையிடமும், வேறு சில தனியார் நிறுவனங்களிடமும் ஒப்படைத்துள்ளது. ஆனால் ஆதார் அடையாள அட்டை வழங்க, ஒவ்வொரு குடிமகனது, விரல் ரேகை மற்றும் அவரது கண்களின் கருவிழிகள் ஆகியவற்றை பதிவு செய்து, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கும் பணி, முழு வீச்சில் நடந்து வந்தது. 

இதுவரை நாடு முழுவதும், 20 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டைக்கான பதிவை செய்து கொண்டுள்ளனர். இதில் யார் கண் பட்டதோ? தெரியவில்லை! உருப்படியாக நடந்து கொண்டிருந்த பணியில், பூஜை வேளையில் கரடி புகுந்தது போல, தடை ஏற்பட்டது! "தனித்தன்மை அடையாள அட்டை வழங்கும் ஆணையம்' கேட்டிருந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு சம்பந்தமாக ஆய்வு செய்த எம்.பி.,க்கள் குழு, அதற்கான அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆணையம், தன் பணியைத் தொடர முடியாமல், நிறுத்தி வைத்துள்ளதால், 


ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகளை மேற்கொண்டிருந்த தபால் துறையும், வேறு சில தனியார் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் யோசிக்க ஆரம்பித்துள்ளன. அந்தப் பணிக்கான நிதி கிடைக்க வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மும்முரமாக நடந்து கொண்டிருந்த பதிவுகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 
 

அந்தப் பணிகளை நிறுத்தி விடக் கூடிய சூழ்நிலையும், உருவாகி உள்ளது. "மேற்கண்ட பணியைத் தொடர வேண்டாம்' என்று தபால் அலுவலகங்களுக்கு, தபால் துறை இயக்குனர் ஆணை வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க, "ஆதார்' அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு, மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, புது குடும்ப அட்டைகள் வழங்குவதை, தமிழக அரசு டிச., 31, 2012 வரை தள்ளிப் போட்டுள்ளது. 
 

அஸ்திவாரமே ஆடிப் போயுள்ளபோது கட்டடம் கட்ட முடியுமா? இது பற்றி தெரியாமலா அல்லது யோசிக்காமலா தமிழக அரசு முடிவு எடுத்திருக்கும்? சந்தேகமாகவே உள்ளது. "ஆதார்' அட்டை இந்திய குடிமக்களுக்கு வழங்கப் படுமா என்பதே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் புது குடும்ப அட்டைகளும் வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆக மொத்தத்தில், புதிய குடும்ப அட்டை வருமா; அல்லது வராதா என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர் மக்கள்.

28 December, 2011

ரசிகர்களை ஏமாற்றிய 2011 -ன் டாப் 10 மொக்கைப் படங்கள் / Top 10 Mokkai Tamil Movies in 2011


2011-ல் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. (2011-ல் வெளிவந்த படங்களை பார்க்க) அவைகளில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் தோல்வியடைவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்படுகிற படங்கள் தோல்வியை தழுவும்போது எல்லாதரப்பிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அப்படிபட்ட கதை, இப்படிப்பட்ட கதை, இது தமிழ்சினிமாவில் புதுசு என்றெல்லாம் விளம்பரப்படுத்திவிட்டு படத்தை வெளியிடுவார்கள். அப்படி வரும் படங்களை பார்க்கும்போது இது வெறும் வெத்துவேட்டு என்று ரசிகர்களால் ஓரம் கட்டப்படும். அப்படி ஓரம்கட்டப்பட்ட ஐ-பட்ஜெட் படங்களைத்தான் டாப் 10 மொக்கைப்படங்கள் என்று இங்கு வெளியிட்டுள்ளேன்.

அவைகள்...

1. வெடி
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் அதிரடியாக நடித்தபடம்.
சண்டை, ஹீரோயிஷம் என பழயை பல்லவியையே பாட...
போட்ட பணத்தைகூட எடுத்தார்களா என்று தெரியவில்லை.

கவிதைவீதி பஞ்ச் : வெடி - புஸ்வானம்

2. ராஜபாட்டை
இந்த படத்தில் மிகப்பெரிய பலமாக இவர்கள் சொல்வது விக்ரம் 18 கெட்டப்பில் வருகிறார் என்பதே...

அதை நிறுத்தியிருந்தாலே போதும் காசாவது கொஞ்சம் மிச்சமாயிருக்கும்.
ஸ்ரேயா-ரீமாசென்னை நம்பியதற்க்கு பதிலாக நல்ல கதையை நம்பியிருக்கலாம் இயக்குனர் சுசிந்திரன்.
 
கவிதை வீதி பஞ்ச் : ராஜபாட்டை : கம்பீரம் இல்லை

 பழைய மலையூர் மம்பட்டியானை வைத்து பிரசாந்த் நடித்த படம்.
புதிய ‌ட்ரெண்டுக்கு ஏற்ப மாற்றமுடியாத பழைய கதை ஆகையால் இது எடுபடவில்லை.

கவிதைவீதி பஞ்ச் : மம்பட்டியான் - பழைய பல்லவி

4. 180
 தெலுங்கில் கலக்கும் சித்தார்த் ஏன்னென்று தெரியவில்லை தமிழுக்கு ஒத்துவரவில்லை.
 
கவிதைவீதி பஞ்ச் : 180 - ரூல்ஸே வேண்டாம்.

5. ஒஸ்தி
இருப்பதில் இதுதான் செம மொக்கை.
தரணியின் அதிரடி படவரிசையில் இப்படம் இடம் பெறாது.
 
கவிதைவீதி பஞ்ச் : ஒஸ்தி - படு நாஸ்தி

6. மாப்பிள்ளை
ரஜினியின் படத்தை ரீமேக் செய்ய, அப்படியே கவுத்துக்கிச்சி இந்தப்படம்
 
கவிதைவீதி பஞ்ச் : மாப்பிள்ளை- எடுப்பில்லை

7. நடுநிசி நாய்கள்
கௌதம் மேனன் தயாரிப்பில் வந்தப்படம்.
மிகுந்த எதிர்பார்க்கப்பட்டது ஆனால் கதையில் இருந்த கொடுமையால் இப்படம் ஓடவில்லை.

கவிதைவீதி : நாடுநிசி நாய்கள் - பயம் இல்லை

8. வேங்கை
 ஹரியின் அதிரடியில் எடுக்கப்பட்ட படம் ஆனால் தனுஷிக்கு எடுபடவில்லை
 
கவிதைவீதி பஞ்ச் : வேங்கை - சீற்றம் இல்லை

9. மயக்கம் என்ன

செல்வராகவன்-தனுஷ் கூட்டணி மிகப்பபெரிய வெற்றிப்படம் என கதைவிட்டார்கள். ஆனால் கண்டுக்கொள்ளபடவில்லை.

கவிதைவீதி பஞ்ச்: மயக்கம் என்ன - தெளியவே இல்லை

10. வந்தான் வென்றான்
 
கோ   படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட படம்
ஆனால் எடுபடவில்லை.
 
கவிதைவீதி பஞ்ச் : வந்தான் - தோற்றான்.

அவ்வளவுதான் மக்களே.
இதைவிட ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது
வரும் 30-ந்தேதி கிட்டதட்ட 10 க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகிறது. அவற்றை அடுத்த ஆண்டு பட்டியலில் சேர்த்து விடலாம்.

கொள்ளைக்காரனாக மாறாமல் தடுத்தார்கள்.. (இதற்கும் பிலசபி பிரபாகரனுக்கும் எந்தசம்மந்தமும் இல்லை)


ராஜஸ்தானின் ஒரு பகுதியில் ஒருசமயம் விநோபாஜி கிராம மக்களிடம் கல்வி நிதி வசூலிக்கச் சென்றார்.

அப்பொழுது கிராம மக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு ராத்திரிதான் இலட்சக்கணக்கில் கொள்ளையர்களுக்கு பணத்தை பறிகொடுத்திருக்கிறோம். ‌அதற்குள் விநோபாஜி வந்து நிதி கேட்கிறாரே..! வந்ததே வந்துவிட்டார். எல்லோருமாகச் சேர்ந்து ஓர் ஆயிரமோ அல்லது இரண்டு ஆயிரமோ கொடுத்து அனுப்பி விடுவோம் என்று ஒரு தீர்மானத்திற்கு வந்து அதை விநோபாஜியிடமும் சொன்னார்கள்.

போனால் போகிறதென்று ஒரு சிறு தொகையைக் கொடுக்க முன் வந்துள்ளீர்கள். இதிலிருந்து எனக்குப் புரிவது என்னவென்றால் நான் அன்பளிப்பாக கேட்டதினால்தான் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். ஆனால் இரவு நேரங்களில் வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினால் இலட்சம் இலட்சமாக வாரிக் கொடுப்பீர்கள் அப்படித்தானே..? என்று கிராம மக்களிடம் கேள்வி எழுப்பினார். விநோபாஜி.

அதைகேட்ட மக்கள் வெட்கத்தால் தலைகுனிந்து ஒரு கணிசமான தொகையை வசூலித்து விநோபாஜியிடம் கொடுத்தார்கள். நிதியை பெற்றுக்கொண்ட விநோபாஜி, நள்ளவேளை, என்னை ஒரு கொள்ளைக்காரனாக மாறவிடாமல் நிதியைக் கொடுத்துவிட்டீர்கள். என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
 
(நான் மறுபடியும் சொல்றேன். ‌ இந்த பதிவுக்கு பிலசபி பிரபாகரனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை)

27 December, 2011

MP-க்கள் அனைவரும் குண்டர், ரவுடிகளே என சாடல்..! தடம்மாறுகிறார் அன்னா ஹசாரே..


ஊழலுக்கு எதிரான தன்னுடைய அடுத்தகட்ட போராட்டத்தை மும்பையில் துவங்கிவிட்டார் அன்னா ஹசாரே அவர்கள். டில்லியில் தற்போது சீதோஸ்ன நிலை சரியில்லை. மேலும்  காவல் துறையின் கட்டுபாடுகளை காரணம் காட்டி மும்பையி்ல் தன்னுடைய உண்ணாவிரதத்தை இன்று காலை துவங்கியிருக்கிறார்.

மருத்துவர்கள் எவ்வளவு வலியுருத்தியும் அதையும் பொருட்படுத்தாமல் விஷகாய்ச்சலோடு உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள அன்னா தன்னுடைய கோவத்தை இன்று தன்னுடைய அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“விஷகாய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25- ஆண்டுகளாக நான் ஊழலுக்கு எதிராக போராடிவருகிறேன். நான் என்னுடைய மரணத்தைக்கண்டு அஞ்சவில்லை” என்று கூறியுள்ள அன்னா மேலும் கூறியதாகவது.

5 சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக இந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் பிரசாரம் செய்ய வேண்டும்.
 
நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை MP க்களும் குற்றவாளிகள்தான். தற்போதைய பாராளுமன்றத்திற்கு குண்டர்கள், மற்றும் ரவுடிகள்தான் அரசியல்வாதிகளாக வருகிறார்கள்.

நாம் தேர்ந்தெடுக்கும் MP-க்கள், MLA-க்கள் தேவை ஏற்படும் பேர்து அவர்களை வேண்டாம் என்று சொல்லி திரும்ப அழைத்துக்கொள்ளவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்..

பண திமிரால், அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது.
 
மேற்கண்ட அறிக்கைகள் அன்னா அவர்கள் இன்றைய அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுவரை அமைதிகாத்து வந்த அன்னா அவர்கள், உலகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நம்முடைய பாராளுமன்றத்தையே குறைக்கூறி, இழிவான சொல்கொண்டு சாடியிருக்கிறார்கள். 

அன்னா ஹசாரேவின் நோக்கம் சரிதான், இவக்கு துவக்கத்தில் இருந்த ஆதரவு மற்றும் இவரது நோக்கம் தற்போது தடம் மாறுவதுபோன்று தெரிகிறது.

இன்று இவர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று இவருரை கோரிக்கையை ஏற்றால் நாளை வேறு ஒருவர் ‌வேறெரு பிரச்சனையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்துவிடுவார். இப்படியே போனால் நம்முடைய நாடாளுமன்றம் கையால் ஆகாததனத்துக்கு தள்ளப்படும்.

அதற்காக நான் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு துணைபோவதாக எண்ணவேண்டாம். எந்த ஒரு சட்டமும், ஒந்த ஒரு உத்தரவும் நியாயமாகவும், சரியானதாகவும், பாராளுமன்றத்தில் இருந்துதான் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.

இந்த போராட்டங்களுக்கு பரதிய ஜனதா கட்சி ஆதரவு தருவது போலவும், ஆதரவு இல்லாதது போலவும் இரட்டைவேடம் போட்டுவருகிறது. இந்த ஜன்லோக்பால் வரைவு மசோதாவை இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளுமா? என்று தெரியவில்லை.

அன்னா அவர்கள் காங்கிரஸ்-க்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகிறேன் என்கிறார். அப்படி என்றால் இது யாருக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரியவில்லை. தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் பி‌ஜேபி என இரண்டுகட்சிகள் மட்டுமே வலிமையாக இருக்கிறது.

அன்னா அவர்கள் தன்னுடைய கொள்கையினை வெற்றிபெறச்செய்ய தன்னுடைய போராட்டத்தையும், தன்னை நம்பி வந்தவர்களையும் வேறுபக்கம் திருப்பாமல் இருந்தால் சரி.

என் காதலிக்கு கல்யாணம்....


காந்தக் கண்களால்
என் கனவுகளை கலைத்து
சிரமம் இல்லாமல்
சிறகடித்துச் சென்றவ‌ளே...

மௌனம் கொண்டு யுத்தம் செய்தவள் - நீ
காதல் கொண்டு காயம் ‌செய்தவள்...

ன் முள் கூட்டில் நான் மெத்தையா‌னேன்
வசந்தம் ‌தேடி நீ எந்த வா‌னேறினாயோ...

மாற்றிய மாலையில்
என் மனதை நசுங்கவைத்து
அம்மி மிதித்தவளே...!

நீ கனிந்த சிரிப்போடு போகிறாய்
நான் கண்களால் சிரப்பூஞ்சி ஆகி்றேன்...

னமெல்லாம் சகதியை வைத்துக்கொண்டு
குளத்து தாமரைப்‌போல் சிரித்தவ‌ளே..!

ரம் கொத்திக்கும் உனக்கும்
என்னடி வித்தியாசம்
அது மரம் கொத்திவிட்டு போகிறது...
நீ மனம் கொத்திவிட்டு போகிறாய்...

பிஞ்சி மொழிபேசி
என் பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்தவளே...

ன்று மட்டும் ஏன் 
பிரிவு என்னும் புழுதி கிளப்பி
என் நூற்றாண்டுகளை மூழ்கடிக்கிறாய்...

டும் நதி
மலர் ‌செறியும் மரங்க‌ளோடு
காதல் புரிந்துவிட்டு
கடலுக்குள் சங்கமிப்பது ‌போல்
எந்த கடலுக்குள் கரைந்துப்போனா‌யோ...!

தென்றல் வந்து
உன்னை தட்டி எழுப்பி
என் நினைவுகளை
ஞாபகம் படுத்தும் போதெல்லாம்

நீ... நிச்சயம் உணர்வாய்
நதி வழியோ
பூக்கள் சுமந்து வரும்
என் கண்கள் சிந்திய உப்பின் படிமங்களை...

(Re-Post)

26 December, 2011

உன்னை அலங்கரிக்கிறது என் மரணம்..!




வு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே..

ந்நேரம் 
என் காம்பின்  கண்ணீரைப் 
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்..
 
ழுது கொண்டிருக்கும் 
என்னை தாங்கிய காம்புகளுக்கு 
ஆறுதல் சொல்லியிருக்கும் 
அரும்புகள்...

வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...

லைகோத வந்து
நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து 
தவித்திருக்கும் தென்றல்...

வெடுக் கொன்று பறித்த 
உன் விரல்களுக்கு தெரியாது 
என் வலி...!

லித்துக் கொண்டே 
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்...!


(Re-post)
என் கவிதை எதிர் பார்ப்பது உங்கள் கருத்தையே..
ஏதாவது சொல்லிட்டு போங்க

தமிழ்த்திரையின் பரவசங்கள்..! நான் ரசித்த 2011-ன் சிறந்த 10 படங்கள் // Top 10 Tamil movies 2011


தமிழ் சினிமா தற்போது உலக சினிமாவோடு போட்டிப்போடும் அளவுக்கு வளர்ந்து உள்ளது. 2011-ல் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட படங்கள் வந்து தமிழ் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
 
ரஜினி மற்றும் கமல் படங்களைத்தவிர மற்ற அத்தனை நட்சத்திரங்களுடைய படங்களும் இந்த ஆண்டு வெளிவந்தன. விஜய், அஜித், மற்றும் தனுஷ், சூர்யா, விக்ரம் போன்றோர்க்கு இந்த ஆண்ட சிறப்பாகவே இருந்தது எனலாம்.

சினிமாவை ஒரு ரசிகனாய் ரசித்துபார்க்கும் ஞானம் மட்டுமே என்னிடம் உள்ளது. அந்த அடிப்படையில் 2011-ல் நான் பார்த்து ரசித்து பரவசப்பட்ட படங்களை இங்கு பட்டியலிட்ட இருக்கிறேன். இவை Top-10  என்ற அளவில் வரிசைப்படுத்த வில்லை. இந்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பாதித்தது எனலாம். அவைகளின் பட்டியல்.

1. ஆடுகளம்.
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வந்த இப்படம் சேவல் சண்டையை மைப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. நடிப்பு இயக்கம் கலை என பல்வேறு தேசிய விருதுகளை பெற்றது. தனுஷின் நடிப்பு இதில் எல்லோராலும் பராட்டும்படி இருந்தது. இதில் நடித்த கதாநாயகி தப்ஸி மிகவும் பிரபலமாக போசப்பட்டார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடலுக்கு தனி பெயரை இப்படம் பெற்றது.
ஆத்தே.. பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

2. மங்காத்தா
அஜித்தின் அசத்தல் நடிப்பில், வெங்கட்பிரபு கூட்டணியில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அஜித்தின் 50-வது படம் என்ற எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் நிறைவேற்றியது. சூதாட்ட குழுவிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு கும்பலின் கதையை மையப்படுத்தி மும்மையில் எடுக்கப்பட்ட படம். அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், பிரேம்ஜி ஆகியோர் நடித்து தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெறற்ப்படம்.

இந்தப்படம் இதுவரை 130 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

3. 7-ஆம் அறிவு
6-நூற்றாண்டில் வாழ்ந்த போதி தர்மர் என்ற மகானின் வாழ்க்கை வரலாரை மையபப்டுத்தி எடுக்கப்பட்ட படம்.
சூர்யா இந்த படத்தில் மிகவும் சிரமம்கொண்டு நடித்திருக்கிறார்.

போதி தர்மனாக வரும் சூர்யாவின் நடிப்பு கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது. தமிழரின் பெருமையை இப்படம் உலம்முழுவதும் எடுத்துச்செல்லும் என்ற ஏ.ஆர்முருகதாஸின் நம்பிக்கை இப்படம் முழுமையாக நிறைவேற்றியது.

4. எங்கேயும் எப்போதும்
இரு வேறு குணாசியங்கள் கொண்ட இரண்டு ‌ஜோடிகளை மைப்படுத்தி எடுக்கப்பட்ட காதல் காவியம்.

கதை ஒரு பேருந்து பயண விபத்தில் தொடங்கி அதில் பயணப்பட்ட  இரண்டு ஜோடிகளின் காதலை அழகுபட சொல்லி மிகப்பெரிய பாராட்டையும், வாழ்த்துக்களையும் பெற்றப்படம்.

ஜெய், அஞ்சலி, சர்வானந்த் அனன்யா. என இரண்டு ஜோடிகளின் வல்லின மற்றும் மெல்லின காதலை அழகுற சொல்லியிருப்பார் இயக்குனர் சரவணன்.
இருபேருந்து மோதிக்கொள்ளும் காட்சிகள் தத்ரூபமாக காட்டி சிலிர்க்க வைத்திருப்பார். இப்படி எனக்கு மிகவும் பிடிந்திருந்தது.

5. தெய்வத்திருமகள்
இயக்குனர் விஜய்யின் படைப்பில் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இத்திரைப்படம்.
கமர்சியலாக வெற்றிப்பெறா விட்டாலும் விக்ரமின் நடிப்புக்கு ஆஸ்கார்கூட கொடுக்கலாம்.

மூளை வளர்ச்சியில்  சிறியவனாக இருக்கும் ஒருவன் திருமணம் செய்துக்கொண்டு கு‌ழந்தை பெற்று அந்த குழந்தை மிகுந்த பாசத்துடன் வளர்ப்பது போன்ற கதை

தன் குழந்தையை ‌தொலைத்துவிட்டு நிலா... நிலா... என விக்ரம் தன்னுடைய குழந்தையை மீட்க போராடும் காட்சிகள் கண்ணீர் வரவைக்கூடியவை.
அனுஷ்கா, சந்தானம் கூட்டணி படத்திற்க்கு பலம்.

6. கோ

கே.வி.ஆனந்த இயக்கத்தில் ஜீவா நடித்து மிகப்பெரிய வெற்றிப்படம் கோ.
ஒரு போட்டாகிராப்பராக ஜீவா தன்னுடைய நண்பருக்கு அரசியலில் உதவிச்செய்வதுபோல் கதை அமைக்கப்பட்டிருந்தது.
 
திரைக்கதையில் இருந்த வித்தியாசம் ரசிகர்களை பரவசப்படுத்தியது.
“என்னமோ ஏதோ” பாடல் தமி‌ழ்‌ நெஞ்சங்களை ஆட்டிவைத்தது.

7. காவலன்
விஜய் அவர்களை மிகப்பெரிய  சரிவில் இருந்து மீட்டப்படம் காவலன்.
தன்னுடைய பாணியில் இல்லாமல் மிகவும் யதார்த்தமான ஒரு காதல் திரைப்படமாக இது அமைந்தது.

இதன் வெற்றிமூலம் தன்னுடைய இரண்டாது வெற்றிக்கணக்கை விஜய் துவங்கினார் என்று சொல்லாம்.

விஜய்-வடிவேலு கூட்டணி நகைச்சுவையில் அசத்தியிருந்தது.

8. எங்கேயும் காதல்
ஜெயம் ரவியும், ஹன்சிகா மோட்வானியும் இணைந்து பாரீஸில் படமாக்கப்பட்ட படம் எங்கேயும் காதல்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அமர்க்களப்பட்டது.

தன்னுடைய கமர்சியல் பாணியை மாற்றி பிரபுதேவா நல்லதொரு எதார்த்தமான காதல் கதையை இதில் பதிவு செய்தார்.

9. வானம்
வானம் சிம்புவுக்கு மீண்டும் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்த படம்.
நான்கு காதாப்பத்திரங்களை மைப்படுத்தி நான்கு விதமான திசையில் பயணித்து இறுதியில் ஒரு அச்சில் சந்திப்பதுபோன்று கதை அமைக்கபட்டிருந்தது.

சிம்பு, பரத், சந்தானம், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா. ஆகியோர் சிறப்புற நடித்திருப்பார்கள்.

சிம்புவின் “என்ன வாழ்க்கடா இது” என்ற வசனம் அனைத்து இளைஞர்களையும் உச்சரிக்க வைத்தது.

10. அவன்-இவன்
பாலாவின் இயக்கத்தில் விஷாலும் ஆர்யாவும் இணைந்து கலக்கிய படம். கமர்சியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நடிப்புக்கு பேசப்பட்டபடம்.
பாலாவின் வித்தியாசமான கதைக்களம் இதிலும் பளிச்சிட்டது.


மேலும் இவ்வாண்டில் போராளி, மௌனகுரு, பாலை, உச்சிதனை முகர்ந்தால், யுத்தம் செய் போன்ற படங்களை நான் பார்க்கவில்லை என்பதால் அந்த படங்கள் குறித்து என்னால் விமர்சனம் செய்யமுடியவில்லை.
 

24 December, 2011

'பப்பரமிட்டாய்' ரசிக்க ருசிக்க என அனைத்துக்கும்... 24-12-2011

1. அறிஞர்கள் வாழ்வில் நகைச்சுவை


ஐசக் நியூட்டனுக்கு பூனைகள் என்றால் ரொம்பவும் பிரியம். சோதனை சாலையில் நியூட்டன் சோதனையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது பூனை வந்து கதவைப் பிராண்டும்.

உடனடியாக நியூட்டன் கதவைத் திறப்பார். சிறிது நேரம் க‌ழித்து அது தானாகவே வெளியே செல்லும். அப்போது நியூட்டன் கதவை மூடுவார்.

இது நியூட்டனுக்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது. ஆயினும் எந்தகாரணத்தைக் கொண்டும் பூனை, ‌சோதனை சாலையில் வந்து போவதை நியூட்டன் தடுக்கவில்லை.

எனவே தச்சுத் தொழிலாளி ஒருவரை அழைத்து பூனை எப்போதும் தங்குதடையின்றி வருவதற்கும், போவதற்கும் உதவும் வகையில் ஒரு பெரிய வழி வைக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அந்த தச்சுத் தொழிலாளியைக் கூப்பிட்டு, பூனை வருவதற்கு ஒரு பெரிய வழி வைத்துவிடு. அதற்கு ஒரு குட்டி இருக்கிறது. 

என்ன செய்வது அந்தக் குட்டிப் பூனை வருவதற்கு அந்தப்பெரிய வழியின் பக்கத்திலே ஒரு சிறிய வழி ஒன்றையும் வைத்துவிடு என்றாறாம்.

2. காதல் கவிதை




உன்னால் மட்டும் எப்படி முடிகிறது 
தூரத்தில் இருந்தே கொல்வதற்கு...

உன்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்
காதல் கூட நோய்தான் என்று...

என்னோடு நிறுத்திக்கொள்
உன்கருணைக்கொலையை...!

3. நகைச்சுவை துணுக்கு
ஒருவர் :- உங்களுக்கு ஒரு அமைப்பிலேர்ந்து “தியாகச் செம்மல்”னு பட்டம் கொடுக்கப் போறாதாகச் சொன்னாங்களே, பட்டம் கிடைச்சுதா..?
 

மற்றவர்:- நான் தான் அப்படிப்பட்டம் எதுவும் வேணாமுன்னு அதையும் தியாகம் பண்ணிட்டேன், தெரியுமா..?
 

ஒருவர் : -,,,,,,,,,,,,??????????!!!!!!!!!!!!


4. அஞ்சலி
 காலத்தால் மறையாத என் காவியத் தலைவனுக்கு...!

5. பார்க்க சிரிக்க
அம்மாடி....!

6. என் அன்பிற்கினியவற்களுக்கு..
 

இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...