கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 April, 2013

கோடைகாலத்தில் இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி..?

இந்த ஆண்டு கோடை வெயில் ஆரம்பமே மிக மோசமாக இருக்கிறது. பல நகரங்களில் வெயிலின் கடுமை 110 டிகிரியைத் தாண்டிவிட்டது. புவிவெப்பம் அதிகரிப்பின் காரணமாக பருவநிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு மார்ச் மாதம் வரை நீடித்தது. 

அதைத் தொடர்ந்து வந்த கோடைகாலம், தொடங்கிய உடனேயே தகிக்கத் தொடங்கி விட்டது. கடும் பனிப்பொழிவால் கருகிப்போன மரங்கள், செடி கொடிகள் இன்னமும் துளிர்விடத் தொடங்கவில்லை. அதற்குள் கோடையின் வெப்பத்தால் தொடர்ந்து வாடிவதங்கத் தொடங்கி விட்டன. 


கடலோரப் பகுதிகளில் பொதுவாக பகல் 11 மணிக்கு கடல் காற்று வீசத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வெப்பம் தணியும். ஆனால் கோடை காலத்தில் கடல் காற்று வீசும் நேரம் தாமதம் ஆவதால் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. 

கோடை மழைக்கான அறிகுறி பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் தென்படவில்லை. கோடை வெயில் கொளுத்துகிறது என்பதற்காக ஏழை எளிய நடுத்தர மக்கள் வீட்டுக்கு உள்ளேயே முடங்கி விட முடியாது. தங்கள் குடும்பத்துக்கு உணவளிக்கும் தொழிலை பார்க்க, வெளியில், வெயிலில் செல்லத்தானே வேண்டும். ஆனால் மிகுந்த எச்சரிக்கையுடன் கோடை காலத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று, அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இல்லையேல் சன்ஸ்ட்ரோக் போன்ற மோசமான நோய்களைச் சந்திக்க நேரிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நோய்கள் பலவும் வந்து விடுகின்றன. நீர் கடுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறுநீரகத்தில் கல், மஞ்சள் காமாலை, அம்மை போன்ற பல நோய்கள் கோடை காலத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

கோடை காலத்தில், வெயிலின் பாதிப்பில் இருந்து விடுபட குளிர்பானங்களை மக்கள் அதிகம் நாடுகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து கவர்ச்சியான விளம்பரங்களுடன் வினியோகிக்கும் குளிர் பானங்கள் பலரையும் சுண்டி இழுக்கின்றன. அவைகள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ ஆலோசகர்கள்.

கோடை வெயில் தொடங்கியதும் வெப்பத்தைச் சமாளிக்கும் வகையில், இயற்கையே பல பொருள்களை மனிதனுக்குக் கொடையாகத் தந்து விடுகிறது. 

பதனீர், பனை நுங்கு, இளநீர், சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்கள், வெள்ளரிக்காய் போன்றவை அந்தப் பட்டியலில் அடங்கும். 

யோசனைகள்:

கோடைகாலம் வந்து விட்டால் வழக்கத்தைவிட கூடுதலாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

சுரக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். நன்னாரி சர்பத், வெண்ணெய் எடுத்த தாளித்த நீர் மோர், இளநீர், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறுகள் போன்றவை உடல் உஷ்ணத்தை வெகுவாகத் தணிக்கும். உடலைக் குளிர்ச்சி ஆக்கும்.

குளிர்பானம் கூடாது பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் குளிர்பானங்களால் எந்தப் பயனும் இல்லை. அவைகள் குளிர்ச்சியான உணர்வைத் தோற்றுவித்தாலும், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், 

எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே அத்தகைய குளிர் பானங்களைத் தவிர்ப்பதே நலம். உஷ்ணத்தால் ஏற்படும் நீர் கடுப்பு, சிறுநீரகத்தில் கல், மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகளுக்கு, பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத சித்த மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் உள்ளன. 

நெரிஞ்சில், நீர்முள்ளி கசாயங்கள், வெண்பூசனி லேகியம் உள்ளிட்ட பல மருந்துகள் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். பெரும்பாலும் தகிக்கும் வெயிலில், வெளியில் செல்வதைத் தவிர்ப்பதே நல்லது என்றார் டாக்டர் செந்தில்குமார்.

7 comments:

 1. /// பன்னாட்டு குளிர் பானங்கள் சூட்டைத் தணிப்பதற்குப் பதில், மோசமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் ///

  உண்மை...

  ReplyDelete
 2. இப்படி நீங்க பதிவிட்டதும் கோடைக்கும் இதம் தேவை போல மழை வந்து விட்டது.

  ReplyDelete
 3. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
  இப்படிக்கு
  தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 4. இப்பத்தான் தர்பூசணி வாங்கிட்டு வந்தேன்!

  ReplyDelete
 5. இளநீர் குடிக்கலாம் தான். ஆனால் 30 ரூபாய் சொல்கிறார்களே... தண்ணீரும் பழ வகைகளும் நமக்கு இப்போது கை கொடுக்கிறது... நல்ல பதிவு...

  ReplyDelete
 6. மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி

  ReplyDelete
 7. நல்ல விஷயங்களை சொன்னீர்கள் நல்ல பகிர்வு

  ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...