கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 September, 2013

போதைப்பழக்கம் உடையவரா நீங்கள்..? இது உங்களுக்குத்தான்...



தினம்தினம் மதுவின் மயக்கத்தில்
தன்னையே மறந்துப்போனவனே...!

உன் வாலிபம் மரித்துக்கிடப்பது
இந்த மதுக் கோப்பையிலா..!

வேர்பிடித்து அரும்பும் போதே
அறுந்து விடுவதா வாழ்க்கை...

உன் வசந்தத்தின் துவக்க சங்கமம்
வீதியில் கிடக்கும் பலி பீடத்திலா...

எல்லா எதிர்காலமும் எரிந்து போகும் 
முறையற்ற உன் தடுமாற்றத்தில்...

வாழ்க்கையென்ற வாலிபப் பூங்காவில்
நீ பிணங்களோடு பிணங்களா...

உனக்கு மகிழ்ச்சியும் துக்கமும்
ஏன் போதையின் போதனையில்..?

நம்பிக்கையென்ற நாளைய பொழுதின் 
முளைவிடும் இளைய நாற்றே...!

போதையின் சுமையினை 
கொஞ்சம் நிறுத்திவை
நம்பிக்கையின் துடுப்பை பழக்கப்படுத்து
உன் நெடுந்தூர பயணத்திற்கு...

உன் வைகறையை
பூபாளத்தோடு பூக்கவிடு...

அன்று உன் காலடியில் 
காலம் பணியும்...

வாசித்தமைக்கு மிக்க நன்றி..!

28 September, 2013

பேஸ்புக் பதிவர் குறித்து தன் படத்தில் மிஸ்கின் கூற்று சரிதானா..?


‌நேற்றுமட்டும் இரண்டு மாறுப்பட்ட படங்கள் பார்க்க நேர்ந்தது... காலை 10.30 மணி காட்சி ராஜா ராணி படம்.. (விமர்சனம் படிக்க கிளிக் செய்யவும்) இருந்த வேலைகளை மதியம் முடித்துவிட்டு மாலை 6.00 மணி காட்சிக்கு அடுத்த திரையரங்கில் ஓடும் மிஸ்கின் படமான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (விமர்சனம்) பார்க்க சென்றுவிட்டேன்.. 

ராஜா ராணி...! இரு காதல் ஜோடியின் வாழ்க்கையை மாறுப்பட்ட கோணத்தில் பொழுதுப்போக்காக சொல்லப்பட்ட நகைச்சுவைத் திரைப்படம்... ஆனால் மிஸ்கின் திரைப்படம் எல்லாவற்றிலும் மாறுப்பட்டது.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு 6.15 மணி காட்சிக்கு 6.00 மணிக்கு சென்றேன் திரையரங்க வளாகம் காலியாக இருந்‌தது ஒருவேளை படம் போட்டுவிட்டார்களா என்று பார்த்ததேன்... அப்படி‌யோதும் இல்லை... கூட்டம் இல்லை... இறுதியில் 15 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தும் 1000 பேர் அமரக்கூடிய இருக்கை வசதிகொண்ட  அரங்கில் வெறும் 15 பேர் மட்டுமே படம் பார்த்தோம். (ரைட்டு விடுங்க)


சரி விஷயத்துக்கு வருகிறேன். பொதுவாக பேஸ்புக் பயன்படுத்துவோர் மீது ஓர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது... (நாம் எந்த மாதிரியாக சமுகத்தில் வாழ்கிறோம்) இப்படி பல்வேறு சூழலில் பேஸ்புக் பதிவர்களை தன்னுடைய படத்தில் சமூக அக்கறையற்றவர்களாக காட்டியிருக்கிறார் மிஸ்கின்.

ஆரம்ப காட்சியில் குண்டடிப்பட்டு இரத்தவெள்ளத்தில் ஒருவர் வீழ்ந்துகிடக்கிறார்... அந்த உடலைப்பார்த்து ஆட்டோவில் செல்பவரும்.. நடந்து செல்பவரும் பரிதாபத்துடன் பார்த்துச் செல்வார்கள்... யாரும் அவருக்கு உதவிசெய்யவில்லை...

அடுத்து இருசக்கர வாகனத்தில் வரும் இருவர் அந்த காட்சியை பார்க்கிறார்கள்.. பின் பக்கம் அமர்ந்து இருப்பவர் “டேய் நமக்கு ஏன் வம்பு செல்லாம்” என்று சொல்கிறார்..

உடனே வண்டி ஓட்டிவந்த நபர்.. தன்னுடைய செல்போனை எடுத்து அந்த காட்சியை தன்னுடைய செல்போனில் படம்பிடிக்கிறார்... நண்பர் எதற்கு என்று கேட்க...

போஸ்புக்-ல போடலாம்டா என்று கிண்டலாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்கள்....

இப்போது சொல்லுங்கள்.... அடிப்பட்டு விழுந்துகிடக்கும் ஒருவரைப் பார்த்து அவருக்கு முதலில் எதாவது உதவி செய்யாமல்... பேஸ் புக்கில் படத்தை போடுவதற்கு ஆர்வம் காட்டுவது மிகவும் கிழ்த்தனமான ஒரு செயல் அல்லவா...? பேஸ்புக்கில் இருப்பவர்கள் சமூக அக்கறையற்று பேஸ்புக்கில் இப்படியா செய்துக்கொண்டிருக்கிறோம்.


ஒருவேளை இதுதான் உண்மையா... பேஸ்புக் தற்போது சமூக சிந்தனையில் இருந்து விலகி வெட்டித்தனம், கிண்டல், நையாண்டி, வீண் வேலை, வதந்திகளை பரப்புதல், என இப்படித்தான் போய்கொண்டிருக்கிறதா...?

உண்மையில் இந்த காட்சியில் மிஸ்கின் சொல்லவருவது என்னதான் என்று எனக்கு தெரியவில்லை..

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சிறப்பு சினிமா விமர்சனம்

 
அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வெளிவந்தன. அன்றைய ரசிகர்கள் திரைப்படங்களை பகுத்துப் பார்க்கத்தெரியாமல் அல்லது படத்தைப்பற்றிய போதிய தொழிற்நுட்பம் பற்றிய தகவலும் அதிகம் அறியாமல் இருந்தனர். அதனால் அன்றைய படங்களுககு அதிகமான விமர்சனங்கள் எழவில்லை..!

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சாதாரண ரசிகன் வரை படம் எப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அந்த கடைசி ரசிகனையும் திருப்பிப்படுத்துகிற திரைப்படங்கள் மட்டுமே இந்த தமிழ் சினிமாவை அலங்கரிக்கிறது.

பல்வேறு விமர்சகர்கள் வந்துவிட்டப்பிறகு (இணையம், செய்திதாள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சி, போன்றவை) படம் வந்த அன்றைய தினமே படங்களை பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள். ஒரு படம் சரியில்லையென்றால் அதை தூக்கிகுப்பையில் போடவும்.. ஒரு படம் சரியாக இருந்தால் அதை ‌மகுடத்தில் வைத்து கொண்டாடவும் தயங்குவதில்லை.

முகமூடி படம் மூலம் மிகவும் விமர்சிக்கப்பட்ட மிஸ்கின்... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் மூலம் மீண்டும் கொண்டாடப்பட வேண்டியவராகிவிட்டார்.


படம் துவங்கியவுடன் டைட்டலில் படத்தின்  பெயர் மற்றும் இசைக்காக இளையராஜா பெயர் மட்டுமே போடப்படுகிறது. (நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள்.. ஏன் மிஸ்கின் பெயர் கூட இடம்பெயரவில்லை)

சந்துரு... ஒரு மருத்துவகல்லூரி மாணவர் (சந்துருவாக ஸ்ரீ) இரவில் தான்வரும் வழியில் குண்டடிப்பட்டு விழுந்து கிடக்கும் ஒருவரை காப்பாற்ற பல்வேறு மருத்துவமனைகளை அனுகுகிறார்... ஆனால் அவர்கள் போலீஸ்... கேஸ்... ‌என்று பயமுறுத்த மருத்துவ உபகரணங்களை வாங்கி தானே வீட்டில் அவருடைய HOD-யின் ஆலோசைனையின் பேரில் தானே ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றுகிறார். (முதல் 40 நிமிட படம் இதுதான்... சுவாரஸ்யமும் கூட)

காப்பாற்றிய நபர் விடிந்துப்பார்த்தால் காணவில்லை. அதன்பிறகுதான் தெரிகிறது அவர் 14 கொலைகள் செய்து... போலீஸ் என்கவுண்டருக்கு ஆளான “உல்ப்” என்று தெரியவருகிறது. உல்ப் கதாபாத்திரத்தில் மிஸ்கின்.

பின்பு ஸ்ரீ கைதுசெய்யப்பட்டு ஸ்ரீவை வைத்தே மிஸ்கினை சுட்டுத்தள்ள காவல்துறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீயை கூட வைத்துக்கொண்டு மிஸ்கின் எப்படி போலீஸ் படையை ஏமாற்றுகிறார் என்று படம் நீள்கிறது...

குருடாக இருக்கும் ஒருகுடும்பத்தை மூன்று நபர்களை காப்பாற்ற படம் முழுக்க அவர்செய்யும் அதிரடிகள்... யார் அந்த குருடர்கள் ஏன் காப்பாற்ற வேண்டும்...  இறுதியாக
ஸ்ரீ-யோ உல்ப்-க்கு எதனால் உதவுகிறான் என்று ஒரே இரவுக்குள் விவரிக்கப்பட்டிருக்கும் கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.


படத்தைப்பற்றி இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல் இருக்கிறது. அப்படி மீதிக்கதையும் சொல்லிவிட்டால் படிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும்.

படம் முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை வீதிகளை.. சாலைகளை.. சந்துபொந்து என அத்தனையையும் இரவில் எப்படியிருக்கும் என்று காட்டிவிட்டார்.

மிகநீளமான கதையாக இல்லாவிட்டாலும் மிகச்சிறியக்கதையை எங்கும் தோய்வில்லாமல் கொண்டுசென்ற விதம் மிரமிக்கவைக்கிறது. கேமரா ஆங்கிள்.. காட்சி அமைப்பு.. லைட்டிங் என எதையும் குறைசொல்ல முடியவில்லை... நிறைய காட்சிகள் ஒரே டேக்கில் படமாக்கியிருப்பது சிறப்பு.

மிகப்பெரிய நடிகர் பட்டாளமோ.. ஆடல் பாடல்களோ நகைச்சுவையோ இந்த படத்தில் இல்லை அதற்காக படத்தை தரமற்றதாக உள்ளது என்று சொல்லிவிட முடியாது. இருக்கும் களத்தில் இருந்துக்கொண்டு போராடுவதில்தான் வெற்றி இருக்கிறது.

இரவு முழுவதும் போலீஸ்... ரவுடி கும்பல்...  கூட இருக்கும் ஸ்ரீ என அனைவரும் மிஸ்கினை கொல்ல தீவிரமாக தேடுகிறார்கள். ஏன் அவரை கொலை செய்ய துடிக்கிறார்கள்... அவற்றில் இருந்து எப்படி அவர் தப்பிக்கிறார் என்பது சுவாரஸ்யம். (காட்சிக்கு காட்சி சுட்டுத்தள்ளுதல்... கழுத்தை அறுத்தல் என படம் செல்வதால் குழந்தைகள் இப்படத்தை தவிர்க்கவும்).

இடைவேளைக்கு பிறகு ஒரு பெரிய பிளாஸ்பேக் கதைவரும் என்று நினைத்து படம்பார்க்கையில்... எதற்காக இப்படி நடந்துக்கொள்கிறேன் என்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதுவும் ஒரே ஷாட்டில் கதையை சுருக்கமாக சொல்லி முடித்து கண்கலங்க வைக்கிறார் மிஸ்கின். (அந்த காட்சியை பார்க்க வில்லையென்றால்.. சரியாக புரிந்துக்கொள்ள வில்லையென்றால் படம் புரியாது)
 
இசை...! பட டைட்டலில் முன்னணி இசை இளையராஜா என போடுகிறார்கள்... உண்மையில் பின்னணி இசையில் தான்தான் முன்னணி இசையமைப்பாளர் என்று நிருபித்துவிட்டார். இசைதவிர்த்து படத்தை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.


படம்பார்த்துவிட்டு வெளியில் வரும்போதும்கூட இசை நம்மை பின்தொடர்கிற அளவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதுதான் உணரமுடிகிறது. (என்னை தூங்க விடாமல் செய்த அன்பே சிவம், எவனோ ஒருவன், நந்தலாலா, சேது போன்ற ஒருசில படவரிசையில் இந்த படத்தையும் இணைத்துக்கொள்கிறேன்.)


தயவு செய்து பொழுதுபோக்குவதற்காக இந்தபடத்தை காண செல்லாதீர்கள். சினிமாவை ரசிப்பவர்கள், வித்தியாசமான சினிமாவை காண விரும்புபவர்கள், விமர்சகர்கள், எதிர்கால சினிமா ஆசைஉள்ளவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்...

ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது அந்த ஈரத்தின் பிரிதிபலிப்புதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.

ooh... My God..! எப்படியிருந்த நான்...!














 








































தேடி பிடித்தவை...
ரசித்தமைக்கு நன்றி..!

27 September, 2013

ராஜா ராணி சினிமா விமர்சனம் / raja rani tamil film review

 

ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.

காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். அப்படியில்லையென்றால்...?

இப்போது கதை உங்களுக்கே புரிந்திருக்கும் ஒரு திருமண ஜோடிக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. ஏன் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற வேள்வி எழும்போது இதற்கு முன் இருவரும் ‌வேறு ஒருவருடன் தனித்தனியே அழகிய காதலில் ரசித்து வாழ்கிறார்கள்... 

விதிவசத்தால் அந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. இப்படியிருக்க... காதலை பறிகொடுத்த இருஜோடியும் இணையும்போது பழைய பாதிப்பில் இருந்து விலகி இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

ராஜா ராணி... டைட்டில் பேர்டும் போது ஆர்யா-நயன் திருமணம் நடக்கிறது (ஜான்-ரெஜினா). திருமணம் முடிந்த இருவரும் இல்லறவாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்..

ஆர்யாவுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறார் நயன்தாரா என்று நினைக்கும் போது பிளாஸ்பேக்....

நயன்தாரா தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்பதற்காக கஸ்டமர்கேர்-க்கு போன் செய்கிறார். அங்கு இருப்பது சூர்யாவாக ஜெய்...  சண்டை திட்டில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் கடைசியில் காதலில் முடிகிறது. அதன்பிறகு விழுந்து விழுந்து காதலிக்கும் இவர்கள் பதிவு திருமணம் செய்ய காத்திருக்கிறார் நயன்.. 


கடைசி வரை ஜெய் வராததால் ஏமாந்து திரும்பும் ‌நயன்.. ஜெய் ‌‌அமெரிக்கா சென்றதும் அதன்பிறகு அங்கு தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவருகிறது... பிறகு அப்படியே நெடிந்துப்போகிறார்... வாழ்க்கையை வெறுக்கிறார்....

தைரியமற்ற கொஞ்சம் வெகுளி கதாபாத்திரத்தில் அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம்பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கைத்தட்டல் வாங்குகிறார் ஜெய்...


இடைவேளைக்கு பிறகு... குடும்ப வாழ்க்கையை ஏன் ஆர்யா வெருக்கிறார் என்பதற்கு அதற்கு ஒரு பிளாஸ்பேக்....

ஆர்யாவும் சந்தானமும் செக் வாங்க செல்லும் ஒரு வீட்டில் ஆர்யா.. நஸ்ரியாவை பார்க்க இருவருக்கும் பற்றிக்கொள்கிறது காதல்... பிரதர் என்று வெறுக்கும் நஸ்ரியாவை விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறார் ஆர்யா...

ஒரு கோயிலில் யாருக்கும் தெரியாமல் தனியாகவே திருமணம் செய்துக்கொண்டு... வெளியில் செல்லும்போது ஒரு விபத்தில் நஸ்ரியா இறந்துவிடுகிறார். இதைநேரில் பார்க்கும் ஆர்யா வாழக்கைவெறுத்து வாழ்கிறார்.

இப்படி தனித்தனியாக காதலை பறிக்கொடுத்த இருவரும் திருமணத்தில் இணையும்போது இருவரும் ஒட்ட மனவரவில்லை. அதன்பிறகு இவருவருக்கும் இவர்கள் வாழ்வில் நடக்கும் பழைய சம்பவங்களை தெரியவரும்போது ஏன் நாம் அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கையை துவங்கக்கூடாது என்று இல்லறத்தில் இணைகிறார்கள். (அம்புட்டுதாங்க... இன்னும் கதை ஞாபகம் வரலின்னா நம்ம மௌன ராகம் படத்தை மனசுல ஓடவிட்டுக்கங்க)

ஆர்யா பிளேபாய் கேரட்டர் நன்றாக வந்திருக்கிறது. திருமணம் செய்தபிறகும் தன்னை மதிக்காத நயன்தாராவை வெறுப்பேத்தும் காட்சியிலும், நஸ்ரியாவை காதலிக்கும் போதும் சந்தானத்துடன் இணைந்து கலக்கும்போதும் கலக்கியிருக்கிறார்.


நயன்தாரா படத்தில் அழுதுவடியும் காட்சிகள் இருந்தாலும் படம் முழுக்க அழகாக காட்டிருக்கிறார் இயக்குனர். ஜெய்யுடனான காட்சிகள் இன்னும் ரசிப்பதற்குறியது... தந்தை சத்தியாராஜ்க்கு பீர் வாங்கி கொடுத்து நனக்கு தேவையா‌னதை பெரும் போது அப்பா-மகள் இப்படி நண்பர்களாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...

படத்தில நகைச்சுவைக்கு யாருன்னு எந்தபோஸ்டரிலும் போடவில்லைன்னு பார்த்தா படத்தில சந்தானம் இருக்காரு... நகைச்சுவைக்கு என்று ஆர்யாவுடன் சந்தானம், ஜெய்யுடன் சத்யன்...  செல்லும்படியான நகைச்சுவை இல்லையென்றாலும் அழகிய நகைச்சுவைதனம் படத்தில் இழையோடியிருக்கிறது...

இன்னும் சத்தியராஜ் அவர்களைப்பத்தி சொல்லியே ஆகனும்... படத்தில் அம்புட்டு இளமையாக வந்திருக்கிறார். நயன்தாராவின் அப்பாவாக மகளுக்கு ஒரு நல்ல நண்பராகவும் நடித்திருக்கிறார்...

பாடல்கள் பராவாயில்லை... இசையைபொருத்த வரை எந்தகுறையும் சொல்லமுடியாது. ஜி.வி.பிரகாஸின் கைவண்ணம் இதில்தெளிவாகத்தெரிகிறது. பிண்ணனி இசை அசத்தியிருக்கறார்.

நம்முடைய முந்தைய வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது கிடைக்கும் வாழ்க்கையை பாழடிக்ககூடாது. காதலித்த  பழைய வாழ்க்கையை  மறந்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை காதலிக்க பழகிக்கொள்ளுங்கள் என்று ஒரு எதார்த்தமான காதையை கையிலெடுத்துக்கொன்டு திரையில் அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் அட்லி.


அட்லி ஷங்கரிடம் உதவிஇயக்குனராக இருந்தவர் என்பது படத்தில் தெரிகிறது... காட்சிகளை அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியிருக்கிறார். திரைக்கதையில் நன்றாக கையாண்ட அல்லி கிளைமாக்ஸ் பொருத்த வரை கொஞ்சம் இழுத்திருக்கிறார். மற்றபடி பரவாயில்லை.

எப்படியும் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று நினைக்கும்போது  அது இது என்று இழுத்துவிடுகிறார்.... என்று படத்தின் இறுதி காட்சிகளை இழுக்காமல் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக முடித்திருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும்.

கிடைக்கும் வாழ்க்கையில் பழைய நினைவுகளை போட்டு குழப்பிக்கொள்ளாமல் கிடைத்த வாழ்க்கையை விரும்பி காதலித்து வாழுங்கள் என்கிறது...  இந்த ராஜா ராணி...

26 September, 2013

இப்படியெல்லாம் SMS வந்தா இரவில் உங்களுக்கு தூக்கம் வருமா....?


பிசாசு விசிறி வீச...
பேய்கள் தாலாட்டு பாட...
பூதங்கள் இசை அமைக்க...
காட்டேரி கால் அமுக்க...

மோகினி கதைச்சொல்ல...

அவைகளின் மத்தியில்
நீங்கள் நிம்மதியாய்
தூங்குக...!


(அடப்பாவிகளே இதுமாதிரி SMS  வந்தபிறகு அப்புறம் எங்க நிம்மதியா தூங்குறது...)

********************************************************** 
நீங்க வீட்டில் தூங்கிக்கிட்டு இருக்கீங்க... 
அப்போ இடி.. மின்னல்... மழை... வருது... 
அப்போ உங்க பெஸ்ட் பிரண்டு ஒருத்தர் பயங்கரமா அடிப்பட்டு வராரு.... அவங்களை அழைச்சிக்கிட்டு 2-வது மாடிக்கு போறீங்க... 
அங்க காயங்களுக்கு மருந்து போடுறீங்க...

அப்போ உங்க வீட்டில் இருக்கிற போன் அடிக்குது...

உங்க நண்பர்கிட்டே... இருங்க வரேன்னு சொல்லிட்டு வறீங்க... 
உங்களை சீக்கீறம் வரச்சொல்ல உங்ககிட்ட உங்க பிரண்டு சத்தியம் வாங்கிட்டார்...

கீழே வந்து போனை எடுத்து பேசினா.. 

அந்த நண்பரோட அம்மா பேசுராங்க...
தற்போது தான் வந்த அந்த நண்பர் அடிப்பட்டு இறந்துவிட்டாக தகவல் சொல்கிறார்கள்...

அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்...
மேலே செல்வீர்களா இல்லையா...!


**********************************************************

யாராவது உன்னை “லூசு“-ன்னு சொன்னா
அமைதியா இருங்க...


“குரங்கு“ன்னு சொன்னாகூட
கோவப்படாம அமைதியா இருங்க...


ஆனால் யாராவது உன்னை “அழகு“-ன்னு
சொன்ன அவனை அப்படியே தூக்கிப்போட்டு மிதி...

********************************************************* 
இவைகள் எனக்கு குறுந்தகவல்களாக வந்தவைகள்...

**************
மீள் பதிவு


25 September, 2013

அனைத்தையும் துறப்போம் வா...!


வா.. நண்பனே...
ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தை
பரிசீலனை செய்வோம்...
 
நெருப்‌பை கக்கும் சூரியனைக்கும்
பொருப்போடு சுற்றிவரும் பூமிக்கும்
இடையில் வாழும்
நீயும் நானும் எத்தனை வேற்றுமைகளோடு...

நமக்குள் ஏன் வெறுப்பு...
உறவாடி களியாமல் ஏன்இந்த பகை
நீயும் நானும் சகோதரன் என்றால்..?

இதை அறிந்தோமா?
தாய்பூமி சுமந்த அமைதி கர்ப்பம்
கலைந்துக்கொண்டிருப்பதை...

நம் அனைவரும் சகோதரர்கள்...
நம்மை சுற்றிய அனைவரும் சகோதரிகள்...
நாட்டை எரிக்கும் நெருப்பிலா
நாம் குளிர்காய்வது...?

சாதிக்கென்றும்....
மதத்துக்கென்றும்...
மொழிக்கென்றும்...
இன்னும் எப்படி‌எப்படியோ
மாறிவிட்டது நம் முகங்கள்..?

செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயத்துக்காக
உன் இயலாமையின் தடுமாற்றமும்
என் எதிர்பார்ப்பும் என்ன..?

என்னையும் உன்னையும்
குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கிறது
இந்த ஜாதியும் மதமும்..!

பொறுத்தது போதும்... 
இனியும் எதற்கு வேறுபாடு
வா..! நீயும் நானும் வேற்றுமை துறப்போம்.. 
“தூங்காத விழிகளோடு..” 
என்ற என் கவிதை நூலிலிருந்து..!

24 September, 2013

சமூக வலைதளங்களை கண்டித்த பிரதமர்...! கொதிக்கும் வசகர்கள்..!


ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். 

இந்த செய்தியை வெளியிட்ட தினமலர் இணையதளத்தில் காட்டமான கருத்தளித்த சிலவாசகர்களின் கருத்தை இங்கு பகிர்கிறேன்..!


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar சர்தார்ஜி - உங்களுக்கு அதுக்கு மேல் பேச இத்தாலியில் இருந்து உரிமை கிடைக்கவில்லை. ஏதோ வந்தோமா குடுக்குற ஏலக்காய் டீ மற்றும் மசால் வடையை சாப்பிட்டோமா என்று இருக்காமல் ஓவரா கூவகூடாது

பி.டி.முருகன் - Trichirapalli,இந்தியா
பி.டி.முருகன்    சமூகம் என்பது என்ன? மக்கள் தானே சமூகம்? மக்களின் கருத்துகளை வலை தளத்துக்கு கொண்டு செல்ல கூடாது என்று அவசர சட்டம் போடலாமா என்று பார்க்கிறாரோ? எந்த வலை தளத்தில் மத உணர்வுகளை எவர் தோண்டுகிறார் என்று பார்த்து சரி செய்தால் நன்றாக இருக்கும்.


Sanjay Kumar - Chennai,இந்தியா
Sanjay Kumar வெட்கம் கெட்ட மனிதர், தன் மேல் உள்ள கையாலகாத தனத்தை அடுத்தவர் மேல் போடுவதில் இவர் மௌனியாக இருந்தே சாதிப்பார். கேவலம் வாக்கு வங்கிக்காக, சிறுபான்மையினர் மனதில் நஞ்சை மற்றும் அச்ச உணர்வை விதைத்ததே உங்கள் அன்னையார் தான்.

செல்வ.கமலகண்ணன் - ஸ்ரீமுஷ்ணம்,இந்தியா
செல்வ.கமலகண்ணன் ஏதேதோ சொல்லி பார்த்தாங்க எதையும் சரியா மக்கள் ஆதரிக்கிற மாதிரி தெரியலை சரி எதாவது சொல்லி வைப்போம் அது எப்பயாவது உதவும் சொல்லி பார்க்கிறாங்க அதை மக்கள் ஏத்துக்கிற ஜடியாவே இல்லை என்ன சொன்ன இவங்க சந்தோஷ படுவாங்கனு இவங்க தனிப்படை வச்சு விசாரிச்சாங்க அவங்க இவங்கிட்ட சொன்னது நீங்க ஆட்சியை கலைக்க போறாம்னு சொன்னா எல்லா மக்களும் ஆதாரிப்பாங்கனு அவங்க சொல்லிட்டாங்க அதான் இப்படி பேச்சு

ஆரூர் ரங - chennai,இந்தியா
ஆரூர் ரங எதப் பத்தி யார் பேசறதுன்னு விவஸ்தையே இல்லை இவங்க காங்கிரசோ அல்லது இவர்கள் ஆதரிக்கும் சிறுபான்மை தீவீரவாத இயக்கங்களோ சமூக வலைதலங்களையா நம்பியுள்ளன ? டெல்லி வாக்காளர் பட்டியலை வைத்தே சீக்கியர் வீடுகளைக் கண்டுபிடித்து கொன்று குவித்தபோது ட்வ்விட்டரும் பேஸ் புக்கும் இல்லையே.

டாடி எனக்கு ஒரு டவுட்டு உங்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்தை விட சமூக வலை தளங்களில் தகவல் உடனுக்கு உடன் கிடைக்கிறது அதுவும் நேரம் நாள் கடத்தாமல்...அதனால் மக்கள், நாட்டில் நடக்கும் அவலங்கள், அக்கிரமங்களை உடனுக்கு தெரிந்து கொள்ள முடிகிறது...உங்களுடைய ஆட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும் ஒரு உன்னத சாதனம் சமூக வலை தளங்கள் தான்...எனவே தடை செய்ய வேண்டியது உங்கள் ஆட்சியை தான்..சமூக வலை தளங்களை அல்ல...
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
Samy Chinnathambi இவரு எல்லாத்தையும் மூடிட்டு ராஜபக்சே மாதிரி அரசாங்கத்தை நடத்தலாம்னு பாக்கறாரு.......அடுத்ததா இந்த நாட்டில் குழப்பம் விளைவிப்பது ஊடகங்கள் தான் என்று சொல்லி பத்திரிக்கைகளுக்கும், டிவி சானல்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும் என்பார்...அதில் காங்கிரஸ் கட்சியையோ பிரதமரையோ விமர்சிக்க கூடாது என்பார்.......கையாலாகாத பிரதமரை கைபில்லையை போன்று இருப்பவரை விமர்சிக்காமல் வேறு யாரை விமர்சிப்பார்கள்? 


Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani காங்கிரசின் போலி மதவாத கொள்கையினால் வந்த கேடுகள்தான் இவை. சிறுபான்மையினரின் ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று காங்கிரஸ் செயல்படுவது - கிட்டத்தட்ட இந்தியாவை துண்டு போட எடுக்கும் முயற்சியே...

senthilnathan - ramanathapuram,இந்தியா
senthilnathan // சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும்// நீர் யாரை அழைக்கிறீர் . நீர் என்ன பிரதமர் தானே , தவறை கண்டுபிடித்ததே மிக தாமதம் இதில் யாரிடம் அனுமதி கேட்கிறீர் . இழுத்து மூடுங்கள்


Vettri - Coimbatore,இந்தியா
Vettri போலி மத சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் தான் மத மோதல்கள் உருவாகின்றன. சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது உத்தர் பிரதேஷ் மந்திரி ஒரு சாரரை விடுதலை செய்யுமாறு பணித்து இருக்கிறார். அவர் மீது மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதை தட்டி கேட்க வேண்டிய மத்திய அரசு வாய் மூடி மவுனியாக இருந்தது ஏன்? ஆட்சி, அதிகாரம், சட்டம், போலீஸ் மற்றும் ராணுவம் அனைத்தையும் கையில் வைத்துகொண்டு சமூக வலை தளங்கள் மீது பழியை போடுகின்றனர். ஆட தெரியாதவனுக்கு மேடை கோணல்.


ரகு - chennai ,இந்தியா
ரகு புதிய கண்டு பிடிப்பு. அரசியல் வியாதிகள் தானே மத கலவரத்தை உருவாக்குகின்றது. போலி மதசார்பின்மை என்று கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்குவது தான் இத்தாலி கொள்கை. மதத்தின் அடிப்படையில் சலுகை வழங்குவது இது எல்லாம் கலவரம் வெடிக்க காரணம் என்பதை மறந்து வலைத்தளங்கள் மீது குற்றத்தை சுமத்துவது வேடிக்கை. உங்கள் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதற்க்கு வலைத்தளங்கள் காரணம். இதை பொறுக்க முடியாமல் வலைத்தளங்கள் மீது பாய்கிண்றீர்கள்.



Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
Baskaran Kasimani இப்பொழுதெல்லாம் எதற்க்கெடுத்தாலும் சமூக வலைத்தளங்களை பழி சொல்வது ஒரு பேஷன்.

தமிழ்நிதி - chennai,இந்தியா
தமிழ்நிதி இண்டர்நெட்டை அரபு நாடுகள் போன்று நம் நாட்டில் கட்டுபடுத்த வேண்டும். பாலுணர்வுகளை தூண்டும் மற்றும் அரசியல்வாதிகளை அவதூறாக சித்தரிக்கும் வலை தளங்களை தடை செய்ய வேண்டும். தவறான செய்திகளை நெட்டில் பரப்புவோருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். மத கலவரங்களை தூண்டிவிடும் வகையில் செய்திகளை வெளியிடுவோருக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம்.
 ‌
மேலும் கருத்துகளுக்கு...
 
என்னுடைய கருத்து...!

சமூக வளைதளங்கள் பெரும்பாலும் சில சமூக பிரச்சனைகளுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்துக்கொண்டு வருகிறது. ஏதோ ஒருசில தரம்கெட்டவர்களை வைத்துக்கொண்டு முழு சமூக வலைதளங்களை குறைச்சொல்வது தவறே...

சமூக வலைதளங்களில் மதஉணர்வை தூண்டும் செயல்கள் மட்டும் இல்லாமல், ஏமாற்றுவேலை, பெய்யான தகவல்களை பரப்புதல், காதல் வலை வீசுதல், சமீபத்தில் ஒரு சில கொலைகள் கூட இதனால் ஏற்பட்டிருப்பது நாம் பார்க்கிறோம். இப்படி ஒருசில தவறுகளை தவிர்த்துவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த சமூகம் விழையுமானால் எல்லாம் நன்றானதாகவே நடக்கும்...!

தங்களின் கருத்தையும் பதிவுசெய்யுங்கள்..!
Related Posts Plugin for WordPress, Blogger...