கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 January, 2014

கோலி சோடா சினிமா விமர்சனம் / Goli Soda Movie Review



இந்த உலகம் மனிதனை இரத்தம், சதை, இதயம், மனசாட்சி உள்ள ஒரு உயிராகப் பார்ப்பதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்த அடையாளங்கள்தான் அவனுக்கு மகுடங்கள்.. அந்த அடையாளங்கள் அவனுக்கு முகவரி... அந்த அடையாளங்கள் அவனுக்கு எல்லாமாகவும் இருந்துவிடுகிறது. இங்கு ஆடைகள் இன்றி கூட வாழ்ந்துவிடலாம் ஆனால் அடையாளங்கள் இன்றி வாழ்வது கடினம்...

நாம் மறைந்தப்பிறகும், நம்மை இந்த உலகம் மண்ணோடு மண்ணாக்கிவிட்டப்பிறகும், நம் அடையாளங்கள் மட்டும் இந்த‌ உலகைவிட்டுப் பிரிவதில்லை... உலகச்சரித்திரங்கள் இந்த அடையாளங்களைத்தான் வரலாறு என்று இதுவரை பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறது...

கலிங்கப்போர் என்ற அடையாளம்தான் அசோகரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது... உலகை வெல்லும் ஆசை என்ற அடையாளம் தான் மாவீரன் அலேக்சாண்டரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது... சேகுவேர-வின் வீரமும், விவேகானந்தனின் பக்தியும், பெரியாரின் பகுத்தறிவும் இதுபோன்ற அடையாளங்களே... இப்படியாய் அடையாளங்கள் இல்லாதவர்களே தன் புகைப்படங்களை ஒட்டி எதையெதையோ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்...

அட என்ன... படத்தின் விமர்சனத்தை விட்டுவிடடு எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார் என்ற கோவம் வேண்டாம்... படத்தின் சிறுதாக்கமே இந்த முன்னுரை....

தனக்கென எந்த அடையாளமும் இல்லாது... ஆசியாவின் மிகப்பெரிய காய்கனி அங்காடியான கோயம்பேடு மார்‌கெட்டில் மூட்டை தூக்கிபிழைக்கும் நான்கு சிறுவர்கள்.. தனக்கென ஏற்படுத்திக்கொண்ட அடையாளத்தையும், அந்த அடையாளம் அழிக்கப்படும்போது கோவப்பட்டு எழுவதையும் தன்னுடைய பாணியில் விஜய்மில்டன் எளிமையாக சொல்லியிருக்கும் படம்தான் கோலிசோடா...

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டிமணி, யாமினி ஆகியோரே இந்தபடத்தில் நடித்திருக்கிறார்கள்....

கோயம்பேடு மார்கெட்டில் இரவு முழுவதும் மூட்டை தூக்கிபிழைத்து கொண்டு... தனக்கென்று எதுவும் இல்லாது.. தன்னுடைய பெயர்கூட என்னவென்று தெரியாத இந்த நான்கு சிறுவர்களும் (சிறுவர்களும் அல்ல பெரியவர்களும் அல்ல) எப்படியாவது.. நமக்கும் ஏதாவது அடையாளம் வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்...


இந்த மார்கெட்டிலே ஏதாவது செய்து தன்னுடைய சொந்தகாலில் நிற்க நினைக்கும் இவர்களை.. மார்க்கெட்டில் காய்கறி ஏஜென்டாக இருக்கும் ஆச்சி இவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்... (ஆச்சியாக பசங்க படத்தில் கிஷோருக்கு அம்மாவாக நடித்தவர்)... மேலும் மார்க்கெட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி நாயுடை (வில்லன்) பார்த்து உதவிகேட்கிறார்கள்...

அவரும்‌ தன்னுடைய பயன்படாத குடோனை கொடுத்து உதவுகிறார்... என்ன தொழில் செய்வது என்று யோசித்து பின் ”ஆச்சி மெஸ்” என்ற உணவகத்தை திறக்கிறார்கள்.... நன்றாக செயல்பட்டு “ஆச்சி மெஸ்” என்ற அடையாளத்தை பெறுகிறார்கள்...

இதற்கிடையில் ரவுடி நாயுடுவின் ஆட்கள் ஹோட்டலில் தண்ணியடிப்பது, தவறான செய்கைகள் செய்வது என தொடர... அதை இந்த பசங்க கேட்க இருவர்களுக்கும் கைகலப்பு ஆகிவிடுகிறது....

தெருவில் அவமானப்பட்ட ரவுடிகள் தன்னுடைய ரவுடி என்ற அடையாளத்தை காட்ட  இழந்த மானத்தை காப்பாற்ற அதே இடத்தில் அவர்களை அழித்து மக்களுக்கு தம்மீது உள்ள பயத்தை தக்கவைக்க நினைக்கிறார்கள்...

இந்த பசங்களும் எப்படியாவது தன்னுடைய ஆச்சி மெஸ் என்ற அடையாளத்தை விட்டுவிடக்கூடாது என்று அந்த ரவுடிகளுடன் போராடுகிறார்கள்... ஒரு கட்டத்தில் நான்குபேரையும் அ‌டித்து உதைத்து திரும்பி வராதமாதிரி இந்தியாவின் நான்கு மூளைகளில் விட்டுவிடுகிறார்கள்...

நம்முடைய அடையாளம் போய்விட்டதே என்று குமுரும் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து தம்முடைய அடையாளம் எங்கு பறிபோனதோ மீண்டும் அங்கேதான் அதை பெற வேண்டும் என்று மீண்டும் கோயம்பேடு ஆச்சி மெஸ் வருகிறார்கள்...

ரவுடிகளுடன் சண்டையிட்டு அந்த இடத்தை பிடித்தார்களா... தன்னுடைய அடையாளத்தை பெற இவர்கள் என்ன செய்கிறார்கள்... அவமானம் பட்ட ரவுடி கும்பல் ரவுடிஸம் என்ற தன்னுடைய அடையாளத்தை பெற என்ன வில்லத்தனம் செய்கிறார்கள்.. இறுதியில் யார் யார் தன்னுடைய அடையாளங்களை தக்க வைத்துக்கொண்டார்கள் என்று நல்லதொரு கிளைமேக்ஸில் சொல்லி கைதட்டலோடு முடித்திருக்கிறார் விஜய் மில்டன்....

பசங்க படத்தில் நடித்த அந்த நான்குபேரும் கதைக்கு எற்றார்போல் பொருந்தியிருக்கிறார்கள்... முதல்பாதியில் காதல், கலாட்டா, என துருதுருவென்று குறும்போடு திரியும் இவர்கள்... பிற்பாதியில் ரவுடிகளோடு போராட்டம் என ஒவ்வொறு காட்சிகள் நெகிழவைக்கிறது...


இந்த நால்வரோடு நம்ம அண்ணாச்சி இமான் நடித்திருக்கிறார்... நகைச்சுகைக்கும் பையன்களோடு செய்யும் சேட்டைக்கும் சபாஷ்பெறுகிறார்..

படம் முழுக்க முழுக்க கோயம்பேடு மார்கெட்டில் படமாக்கியிருக்கிறார்கள்... கேமராவை மறைத்துவைத்து யதார்த்தமாக எடுத்ததாக சில தகவல்கள் வந்தது.. உண்மையில் அப்படித்தான் சில காட்சிகள் எடுத்திருக்கிறார்கள்... பாராட்டலாம்...

பாடல்கள் என்று தனியாக மொக்கை போடாமல் கதையோடு கலந்து ஒருசில கானாக்கள் வருகிறது.... ஒரு பாடலுக்கு நம்ம பவர்ஸ்டாரையும், சாம் ஆண்டர்சனையும் ஆடவைத்திருப்பது சூப்பர்...

சில படங்களை ஒளிப்பதிவு செய்ததின் மூலம் தனித்துவிளங்கிய விஜய்மில்டன் இந்தபடத்தின் மூலம் இயக்கத்திலும் வித்தியாச இயக்குனர் வ‌ரிசையில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறேன்...

செண்டிமெனட் வசனங்கள், (சில வசனங்கள் உண்மையில் கைதட்டவைக்கிறது.. கண்ணீரை வரவைக்கிறது) யதார்த்தமான சண்டைக்காட்சிகள், பசங்க செய்யும் குறும்புள், கூடசேரும் இரண்டு பள்ளி மாணவிகள்... பசங்களுக்கு பரிதாபப்பட்டு உதவும் போலீஸ் என படம்முழுக்க ரசிக்கும்படி இருக்கிறது...

கோடிகோடியாய் கொட்டி படம் எடுத்து... அதை நல்லப்படம் என்று மக்களை நம்பவைத்து.. தேவையில்லாத விளம்பரங்களை தேடி அப்படியும் ஊத்திக்கொண்டுப்போதும் படங்களுக்கு மத்தியில்.. குறைந்த முதலீட்டில் எளிமையான கதையின் மூலம் ஜெயித்துவிட்டது இந்த கோலி சோடா.

எல்லாருக்கும் இங்கு அடையாளங்கள் இருக்கிறது. அந்த அடையாளங்களை அழிக்க நினைத்தால் அவர்களுக்குள் இருந்து ஒரு எழுச்சி பொங்கிவரும் அப்படி பொங்கி வந்தால் என்னாவாகும் என்று... கோலி சோடாவை மேற்கோள்காட்டி 2 மணிநேர கதையில் சொல்லியிருக்கிறார்கள்....

பணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..?


ஒரு நாள் பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான்.

ஆனால் பரமஹம்சர் அதை வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான்.

சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே? என்று கேட்டார் பரமஹம்சர்....

ஒரு தடையும் இல்லை! என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான்.

அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்து விட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன்.

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார்.

ஆனால், இன்று பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் எவ்வளவு சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமென்ற மனமே இருப்பதில்லை. தனக்கு மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் தானே பணத்தைச் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பணம் அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியைத் தந்து விடாது. ஆன்மிகம், தர்மமும், மனித ஒழுக்கமுமே உண்மையான மன நிம்மதியைத் தரும்.

17 January, 2014

இப்படியும் பெண்களா...?



ஒரு குளிர்கால மழைப்போல்
என்னை ‌அதிகம் சிலிர்க்க வைத்தவள் நீ....

ஒரு கோடைகால நிழல் போல்
என்னை அதிகம் ரசிக்க வைத்தவள் நீ...

ஒரு கடலோர படகுப்போல்
என்னை அதிகம் தடுமாற வைத்தவள் நீ...

ஒரு குறிஞ்சி பூத்த பள்ளத்தாக்குப்போல்
என்னை அதிகம் ஆக்கிரமித்தவள் நீ...

ஒரு இரவு ‌நேர வீண்மீன்களைப்போல்
என்னை அதிகம் வியக்க வைத்தவள் நீ...

ஒரு வசந்தகால பூக்களைப்‌ போல்
என்னை அதிகம் மிளிர வைத்தவள் நீ...

ஒரு அவசரக்கால ஒலிப்பானைப் போல்
என்னை அதிகம் பரபரக்கவைத்தவள் நீ...

ஒரு ஏழையின் மகிழ்ச்சிப்போல
என்னை விண்ணில் மிதக்கவைத்தவள் நீ....

நீயின்றி தோற்றுவிடுகிறது என் விதிகள்
நீயிருந்தால் மாறிவிடும் என் புவியீர்ப்பு விசைகளை...!


 

11 January, 2014

குடும்ப வாழ்க்கையில் நடப்பவை இவை.. புரிந்தால் சிரிக்கலாம்...!


"உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க".

"ஏன் டாக்டர்" ?

"நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும்"!.
 
******************************* 
 
 ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க" ?

"நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு"!....

*******************************
 
 
 "என்னங்க... திருடன்பாட்டுக்கு நம்ம 

வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான். நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க".. .?

"சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா" ?

*******************************

 
 டாக்டர், என்னோட மனைவி தொல்லை தாங்க முடியல! ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ண முடியுமா?

அது தெரிஞ்சா நான் ஏன் 24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்?

*******************************
 
 
கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.

அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார் 
 
******************************

 
"என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன்" ?

"நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்"!!!!.....

*******************************

10 January, 2014

வீரம் சினிமா விமர்சனம் / Ajith Veeram Tamil movie review


அஜீத்துக்கு ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்தை மையாக்கி ஒரு படம். அஜீத் கிராம பின்னணியில் நடிக்கும் படம் என்றும்... பாசபிணைப்பு படம் என்று சொன்னார்களே ஏதாவது ஜீ.. ஆழ்வார்... ஆஞ்சநேயா.. மாதிரி ஏதாவது பல்பு கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டுதான் தியாட்டர்பக்கம் போனோம்... (நானும் வேடந்தாங்கல் கருணும்)

ஆனால் கொடுத்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறையாமல் நகைச்சுவை, அதிரடி, காதல், சென்டிமென்ட், என அத்தனை அம்சங்களுடன் வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான திரைப்படத்தை தந்திருக்கிறார்... அஜீத்-துடன் இணைந்த சிவா...

அஜீத் கிராம பின்னணி கொண்ட கதையில் அத்தனை அழகாக பொருந்தியிருக்கிறார்.... படம் முழுக்க அத்தனை கம்பீரம்...  மங்காத்தா, ஆரம்பம், படங்களை தொடர்ந்து வீரத்தோடு எழிச்சிப்பொற்றிருக்கிறார் அஜீத்....

வீரம் கதை...

விநாயகம் & பிரதர்ஸ்... என்ற பெயரில் அஜீத்தின் தம்பிகளாக மைனா ஹீரோ விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் ஆகியோர் இணைந்து நியாயத்துக்காக குரல்கொடுக்கும் வீரம் நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்... அங்கு நடக்கும் அநியாயத்தை எதற்கும் அஞ்சாமல் தட்டிக்கேட்டு தவிடுபொடியாக்குகிறார்கள்... தம்பிகளுக்காக அண்ணனும் அண்ணன்களுக்காக தம்பியும் என அப்படி ஒரு பிணைப்பு...

விநாயகம் கேரட்டரில் அஜீத்... அவரின் பேச்சைத்தட்டாத நான்கு தம்பிகள்... ஒட்டன்சத்திரம் கிராமத்தில் அமர்களாமாக வாழும் குடும்பம் அஜீத்துடையது.. 

நான்கு நம்பிகளுடன் யாரும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது... அப்படி திருமணம் செய்துக்கொண்டால் நம்பளை பிரித்துவிடுவார்கள் என்று வாழ்கிறார்கள்...

இதற்கிடையில் நான்கு தம்பிகளும் தனித்தனியே காதல் செய்ய தனக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால் அண்ணனுக்கும் யாரையாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சந்தானத்துடன் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்...

அஜீத் பள்ளி பருவத்தில் விரும்பிய கோப்பெருந்தேவி என்ற பெண்ணை நினைவில் கொண்டு... அதே பெயருடைய ஒரு பெண்ணை தேட.. அந்த சமயத்தில் கோயில் சிலைகளை பராமரிக்கும் ஆய்வாளராக வரும் கோப்பெருந்தேவி என்ற பெயருடைய தமன்னாவை  கண்டுபிடித்து அவரையும் அஜீதையும் காதலிக்க வைக்கிறார்கள்....


இடைவேளை வரை அஜீத்துக்கு திருமண ஆசையை வரைவைக்க இவர்கள் செய்யும் அமர்க்களங்கள்... உள்ளூர் வில்லனுடன் அதிரடி சண்டைக்காட்சிகள்... என பயங்கர விருவிருப்புடன் நகர்கிறது படம்.

அஜீத் எதற்கும் அடிதடி செய்பவர்.. அதன் பின்ன¦ணி தெரியாத தமன்னா அஜீத்தை மிகவும் அமைதியானவர் என்று நம்பி திருமணம் பேசுவதற்காக தன்னுடைய ஊருக்கு அழைத்துப்போகிறார்... இரயிலில் போகும்போது வரும் ரவுடிகளை துவம்சம் செய்யும் அஜீத்தை கண்டு மிரண்டுப்போகிறார் தமன்னா...

சின்ன பிளவுக்குபிறகு மீண்டும் தமன்னாவின் ஊருக்குப்போகிறார் அஜீத்... அங்கு தமன்னாவின் அப்பா நாசர் அஜீத்தை தன்னுடைய ஊரில் நடக்கும் திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி கேட்டுக்கொள்ள தம்பிகளுடன் அங்கு தங்குகிறார் அஜீத்...

அங்கும் ரவுடிகள் தாக்க வருகிறார்கள்.. தன்னைதான் தாக்க வருகிறார்கள் என்று அஜீத் துவம்சம் செய்கிறார்... உங்களை யார் அனுப்பியது என்று கேட்க... நாங்கள் உங்களை கொல்ல வரவில்லை.. நாசர் குடும்பத்தை அழிக்கத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல சூடிபிடிக்கிறது கதை...


நாசர் குடும்பத்தை ஏன் அழிக்கவருகிறார்கள்.. அவர்களுக்கே தெரியாமல் அஜீத் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்... அதன் பிண்ணனி என்ன... அஜீத்துக்கும் தமன்னாவுக்கும் திருமணம் நடந்ததா என்று விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கும் அழகிய வண்ணமயமான படம்தான் வீரம்....

அஜீத்....

பெப்பர் அன்டு சால்ட் கெட்டப்பில் படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் அமர்களப்படுத்துகிறார் அஜீத்... ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தம் காதைபிளக்கிறது... டான்ஸ் செம... சண்டைக்காட்சிகள் அனைத்து பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்... நான்கு தம்பிகள் கூட இருந்தும் அஜீத்துக்கு மட்டும் அதிக சண்டைகாட்சிகள் அதிகம்... 

இரயிலில் ஒரு சண்டையும்... கிளைமேக்ஸில் ஒரு மழைச்சண்டையும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது...

படம் முழுக்க வேட்டி சட்டை என்பதால் இரண்டு பாடல்களில் மட்டும் கோட்டுசூட்டுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள்...


தேவி ஸ்ரீ பிரசாத் இசையை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார்.... பாடல்கள் சூப்பர்.... ஓப்பனிங் பாடல்... நல்லவன்னு நம்பிடாதீங்க... செமராக்... ஒரு மெலடி அழகு....  பின்னணி இசை அமர்களம்... அதிக இடங்களை கெண்டமேளத்தை பயன்படுத்தியிருக்கிறார்...

தமன்னா யாதார்த்தமான குடும்ப பாங்கான கேரட்டர் என்பதால் கச்சிதமாக பொருந்திப்போகிறார்...

தம்பிகளாக வரும் நால்வருடன்.. சந்தானம் செய்யும் லூட்டிகள் இடைவேளைவரை அமர்களப்படுத்துகிறது... இடைவேளைக்கு பிறகு இவர்களுடன் தம்பி ராமையாவும் கலந்துக்கொள்ள சிரிப்பொலியில் அதிர்கிறது திரையரங்கம்...


பாடல்கள் அத்தனையும் சூப்பர்... கலர்புல்லாகவும் ரசிக்கும்படியும்... ரசிகர்களை அப்படியே ஆடவைத்துவிடுகிறது...

படவில்லன்களாக முதல்பாதியில் கஜினி பட வில்லன்... பிற்பாதியில் ரன் படவில்லன்..
(பெயர் தெரிலிங்கசாமி...) இருவரும் நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்...

காட்சி அமைப்பு அத்தனையும் சூப்பர்... ஒட்டன்சத்திரம் போன்றே செட் என்று சொன்னார்கள் ஆனார் செட்போல் தெரியாமல் அப்படி பொருந்தியிருக்கிறது...

படத்தில் இருக்கும் காட்சிகளை அத்தனை அழகாவும்... காட்சிக்கு காட்சி விருப்புடனும்... எங்கும் தோய்வில்லாமல் நகர்த்தி ஒரு வெற்றிப்படம் என்தை உறுதிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா... இந்தப்படம் இவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை...

09 January, 2014

அஜீத்தின் வீரம் - சினிமா விமர்சனத்திற்கு முன்.... ஒரு சிறப்பு முன்னோட்டம்


அஜீத், தமன்னா, விதார்த், பாலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்ட் செய்துள்ளார். படம் பொங்கல் (நாளை) ரிலீஸ். விஜயா புரொடக்ஷன் வெங்கட்ராம ரெட்டி தயாரித்துள்ளார்.

கதை

சம்பவங்கள், திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் நிகழ்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஊரில் நடக்கும் தப்பு–தவறுகளை தட்டிக் கேட்பவராக அஜீத் வருகிறார்.

படத்துக்காக, ஒடிசா மாநிலம் ராயகரா அருகே 100 ஏக்கர் பரப்பளவில் ஒட்டன்சத்திரம் கிராமம் போன்ற அரங்கு பல கோடி செலவில் அமைக்கப்பட்டது. அஜீத் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். 

‘வீரம்’

எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டு பிள்ளை,’ ‘நம்நாடு,’ சிவாஜிகணேசன் நடித்த ‘வாணி ராணி’ உள்பட 72 படங்களை தயாரித்தவர், நாகிரெட்டி. இவருடைய நூற்றாண்டையொட்டி மகன் வெங்கட்ராமரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில், ‘வீரம்’ படம் தயாராகியிருக்கிறது.

படத்தை பற்றி தயாரிப்பாளர் வெங்கட்ராமரெட்டி கூறியதாவது:–

‘‘அஜீத் முதல்முறையாக படம் முழுக்க வேட்டி–சட்டை அணிந்து, கிராமிய பின்னணியில் நடித்துள்ள படம் இதுதான். படத்தின் கதைப்படி, அவருக்கு 4 தம்பிகள். அவர்களுடன் ஒரு விசுவாசமான வேலைக்காரரும் இன்னொரு தம்பி போல் இருக்கிறார்.


‘டூப்’ இல்லாமல்...

படத்தில், மிக பயங்கரமான ஒரு ரெயில் சண்டை காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, ஒடிசாவில் ஒரு ரெயிலை வாடகைக்கு எடுத்தோம். ரெயில் ஒரு பாலத்தின் மீது ஓடிக்கொண்டிருக்கும்போது, அஜீத் அதில் தொங்கியபடி நடித்தார். இந்த காட்சியில், ‘டூப்’ நடிகரை நடிக்க வைத்து விடலாம் என்று எவ்வளவோ கூறியும், அஜீத் அதை ஏற்றுக்கொள்ளாமல் துணிச்சலாக அவரே நடித்தார்.

அந்த சண்டை காட்சி, 4 கேமராக்களை பயன்படுத்தி படமாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கோவில் திருவிழா காட்சியும் ஒடிசாவில் படமாக்கப்பட்டது. அதில், அஜீத்–தமன்னாவுடன் தினமும் 500 துணை நடிகர்–நடிககள், நடன கலைஞர்கள் கலந்துகொண்டு நடித்தார்கள்.

2 பாடல் காட்சிகள், சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அஜீத் காய்ச்சலுடன் ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி நடித்துக் கொடுத்தார். படத்தில் அவர் ஒரு குடும்பத்தின் மூத்த மகனாக, 4 தம்பிகளுக்கு அண்ணனாக நடித்துள்ள காட்சிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும்.’’


மழை காட்சியை 14 நாட்களில் படமாக்கினோம். காட்சியில் அஜீத் மட்டுமே மழையில் நனைய வேண்டும். இதற்காக நாங்கள் ஏற்படுத்திய செயற்கை மழையில் அவர் 14 நாட்களாக நனைந்தபடியே நடித்தார் என்றார்



வருகிற பொங்கலுக்கு தல அஜீத் தனது வீரத்தை சர்க்கரை பொங்கலாக பரிமாறப்போகிறார். அதற்கான ஒரு சிறிய முன்னோட்டம் இது...

*அஜீத் முதன் முதலாக நடிக்கும் பக்கா வில்லேஜ் சப்ஜெக்ட்

*எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளை மாதிரியும், ரஜினியின் முரட்டுக்காளை மாதிரியும் செண்டிமெண்ட் கம் ஆக்ஷன் மூவி.

*படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் வினாயகம்.

*அஜீத்தின் தம்பிகளாக மைனா விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் நடிக்கிறார்கள்.

*அஜீத்தை அத்தான்... அத்தான்... என்று துரத்தி துரத்தி காதலிக்கும் வில்லேஜ் குலாப் ஜாமூன் தமன்னா.

*சந்தானம், அப்புக்குட்டி, வித்யூலேகா ராமன், கிரேன் மனோகர், மயில்சாமி, இளவரசு, இவர்களுடன் அஜீத் அடிக்கும் காமெடி லூட்டிகள் சிரிப்பு பொங்கல்தான். முதன் முறையாக அஜீத் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருக்கும் படம்.

*நாடோடிகள் அபிநயா, தேவதர்ஷினி பிரதீப் ராவத், மனோசித்ரா, ரமேஷ் கண்ணா ஆகியோர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள்.

*வேட்டிய கால் வரைக்கும் அவிழ்த்து விட்டிருந்தால் தல சாந்தமாக இருக்கார்னு அர்த்தம். வேட்டிய மடிச்சு கட்டிட்டார்னா அதகளம்தான்.

*கோவில் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உரியடி, தப்பாட்டம், கரகாட்டம்னு களைகட்டும்.


*தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்கள் பட்டைய கிளப்பும்.

*உள்ளூர் மண்மணக்கும் பாட்டும் உண்டு. சுவிட்சர்லாந்து பனிமலை பின்னணியில் அழகா டூயட்டும் உண்டு.

*படத்தில் நோ பன்ஞ் டயலாக். ஆனா காமெடி சீன் தவிர வில்லன்கிட்ட பேசுற ஒவ்வோரு டயலாக்கும் பன்ஞ் டயலாக் எபெக்டுல இருக்கும்.

*சோறு சாம்பாரு, ரசம், தயிர்னு வெஜ் அயிட்டமும் உண்டு, வெடக்கோழி குழம்பு, வஞ்சிரம் மீனு, மட்டன் மசாலா, ரத்த பொறியல்னு நான் வெஜ் அயிட்டமும் உண்டு. படத்தில்

‘வீரம்’ படம், பொங்கலுக்கு முன்பே வருகிறது. இந்த படத்துக்காக, 1,800 பிரிண்டுகள் போடப்படுகின்றன.

அஜீத்குமார் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவில் ‘பிரிண்ட்’ போடப்படும் படம் இதுதான்.

08 January, 2014

இதை பொய்யென்று நம்பலாமா...?


ஒரு பொய்யை ஒருவர் சொன்னால், அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி. 
 
பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம். நாம் காலையில் ஒரு பொய் சொன்னால் அது மாலைக்குள் பல விதங்களில் பரவி திரும்ப நம்மிடமே வந்துவிடும். அப்போது அது உண்மையா, பொய்யா என்று நம்மையே சந்தேகப்பட வைத்துவிடுகிறது.
 
நாம் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன. அதே சமயம் நாம் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். 
 
உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம். 'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது“. 
 
பொய் மிகவும் மேம்போக்கானது. அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு. ஆனால் உண்மை அப்படி அல்ல. பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும். பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.

தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது. அங்கீகரிக்காது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி, அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம். அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.

எல்லா நிலையிலும் பொய்மைக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஆனால் அது நிரந்தரம் அல்ல... மெய்க்கு ஒரு சக்தி இரு்க்கிறது... ஆனால்தான் எல்லாக்காலங்களிலும் உண்மையோடு உறவாடுபவர்களே இந்த உலகத்தில் நீங்காத இடத்தை பெருகிறார்கள்...
Related Posts Plugin for WordPress, Blogger...