கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 June, 2016

கடவுளானாலும் இப்படித்தான் இருக்க வேண்டும்...!




உண்மையைத் தேடி ஒருவன்... ஞானி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்தான். அவனை எப்படியாவது வீட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட சாத்தான் முடிவு செய்தது. அதனால் ஞானியின் வீட்டுக்குள் நுழையமுடியாதபடி அந்த மனிதனுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டன.

அழகிய பெண்ணொருத்தி அவனை அணுகி இன்முகத்துடன் கொஞ்சு மொழியில் பேசி அவனை தன்னுடன் அழைத்துச் சென்றாள். சிறிது தூரம் சென்ற உடன் சட்டென சுய உணர்வு பெற்றவனாக அவளிடம் இருந்து விடுபட்டு திரும்பி விட்டான். அவ்வாறு திரும்பும் வழியில் பிரபு ஒருவர் அவனைக் கண்டு பேசினார். தனது அரண்மனைக்கு வரும்படி அவனை அன்புடன் அழைத்தார்.

அந்த சமயத்தில் சாத்தான் தன்னிடம் இருந்த அத்தனை விதமான அஸ்திரங்களையும் ஒன்று விடாமல் எய்தான். பொருள், காமம், புகழ், அதிகாரம், அந்தஸ்து என அத்தனையும் அணிவகுத்து நின்று ஒன்றன் பின் ஒன்றாக அவனைத் தாக்கின. எனினும் எதனாலும் அவனது உறுதியை அசைக்க முடியவில்லை.

எந்த மயக்கங்களுக்கும் ஆட்படாமல் இயல்பாக அவற்றை எல்லாம் உதறிவிட்டு ஞானியிடம் வந்து சேர்ந்தான் அவன். தனது அத்தனை ஆயுதங்களும் செயலற்றுப் போய் சாத்தான் ஒரு மூலையில் போய் சோர்ந்து ஒடுங்கினான்.

ஞானியிடம் வந்து நிமிர்ந்து பார்த்த அந்த மனிதன் அதிர்ச்சி அடைந்தான். இவர் ஆசனத்தில் அமர்ந்திருக்க இவரைச் சுற்றி சீடர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். ஒரு குருவுக்கு இருக்க வேண்டிய அடிப்படை இலக்கணமான அடக்கம் இவரிடம் இல்லையே என்று எண்ணினான் அவன்.

ஞானி இவன் வந்ததை கவனிக்கவில்லை. அங்கிருந்த எவரும் இவனை பொருட்படுத்தவும் இல்லை. வந்தவரை வரவேற்பது, இன்சொல் கூறுவது என்ற எந்த நல்ல பழக்கமும் இல்லை என்று எண்ணினான்.


சற்றுநேரம் மவுனமாக அங்கே நடப்பனவற்றைக் கவனித்தான். ஞானியின் பேச்சில் உயர்ந்த தத்துவங்களோ, கோட்பாடோ, ஏதும் காணப்படவில்லை. ஒரு படிப்பறிவற்ற கிராமவாசி கூட இதைவிட சிறப்பாகவே பேசுவான் என்று எண்ணிய அவனுக்குள் ஏளனப் புன்னகை உதித்தது. மக்கள் மடையர்கள், யாரையாவது தொழுது வணங்கவேண்டும். அதற்காக எந்த பரதேசியையாவது பிடித்துக்கொண்டு தொங்குவார்கள் எல்லாக் காலங்களிலும் என்று நினைத்தவாறு ஒன்றுமே சொல்லாமல் மவுனமாக வந்த வழியே வெளியேறினான்.


அவன் வெளியேறியதும் குரு அந்த இடத்தின் மூளையில் உற்றுப் பார்த்தார். நீ இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டியதே இல்லை. அவன் தொடக்கத்தில் இருந்தே உன்னுடையவன்தான் என்றார் சாத்தானிடம் சிரித்தபடியே. (ஜென் கதைகள் என்ற நூலிலிருந்து)

நீதி : இறைவனைத் தேடும் பொழுது பொருள், புகழ், பெருமை, ஆசை, எல்லாவற்றையும் உதறத்துணிந்தவர்கள் கூட இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தங்கள் மனதில் தாங்கள் உருவாக்கிக் கொண்டுள்ள கருத்துக்களில் இருந்து விடுபட மாட்டார்கள்

தற்போது... இன்னும் ஒருபடி மேலேபோய் எவ்வளவு நேரத்தில் கடவுளை பார்க்க வேண்டும்... எவ்வளவு ரூபாயில் கடவுளை பார்க்க வேண்டும் என்பதெல்லாம் கூட பக்தர்கள் முடிவுசெய்யும் காலம் எப்போதோ வந்துவிட்டது...!

இறுதியாய் கடவுள்  அவரவர் எண்ணங்களிலே வாழ்கிறார்...!

22 June, 2016

இப்படியாய் சில மொக்கைகள்


வழுக்கைத் தலை ஆசாமி: எனக்கு இப்படி முடி கொட்டினதுக்கும் எனக்கிருக்கிற குடிப்பழக்கத்துக்கும் சம்பந்தம் உண்டா டாக்டர்?

டாக்டர்: சேச்சே! குடி குடியைத்தான் கெடுக்கும். 

முடியை ஏன் கெடுக்கப்போகுது! 
------------------------------------------------

""31 நாட்கள் கொண்ட மாதங்களைத்தான் உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஏன்டா?''

""மாதம் 30 நாளும் குடிக்கமாட்டேன்னு என் பொண்டாட்டிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்''
 ------------------------------------------------

""விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''

""விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
 
------------------------------------------------

"ஹலோ, டாக்டர் நான் உங்களப் பார்க்க வரணும். 
நீங்க எப்ப ஃப்ரீ''
 

"எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. 
ஃபீஸ் வாங்குவேன்''
------------------------------------------------



தலைவர்: யோவ்! இங்கே வாய்யா! 
ஒரு பேச்சுக்கு "இசட் ப்ளஸ்' பாதுகாப்பு கேட்டேன். 
ஜன்னல் கம்பிக்கு அந்தப் பக்கம் பாரு. எத்தனை போலீஸ் நிக்குறாங்கன்னு!

தொண்டன்: நாசமாப் போச்சு. தலைவரே! 

நேத்து ராத்திரியிலேயிருந்து நாம ஜெயிலுக்குள்ளே இருக்கோம். அது ஜன்னல் கம்பி இல்லே, ஜெயில் கம்பி. அவங்கள்லாம் போலீஸ் இல்ல. ஜெயிலருங்க தலைவரே!

தலைவர்: ?...?...?
 
------------------------------------------------


மகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க?

அப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை நீ ஏன்டா அடிச்சே?

மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான் பண்ணியிருக்கீங்க.
 
------------------------------------------------


கணவன்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் சிகிச்சைக்கு பணம் அனுப்பச் சொல்லி போன் வந்தது.

மனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.

கணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன் பண்ணிடுறேன்.

மனைவி: ???
 
------------------------------------------------

 
மனைவி: மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்?

கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்
 
------------------------------------------------



டாக்டர்: பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க?

நோயாளி: நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்
 
------------------------------------------------
 


""நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்''

""நான் என்ன செய்யணும் டாக்டர்''

""அதான் சொன்னேனே நடங்கன்னு''

---------------------------------------------- 

கூகுளில் கிடைத்த அழகிய ஓவியங்களுடன்
எப்போதோ படித்த சி‌ல மொக்கைளும்....!
Related Posts Plugin for WordPress, Blogger...