கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

13 March, 2018

பாதிக்கப்பட்டோர் தான் குற்றவாளியா...?


             ஒரு சம்பவமோ அல்லது இடரோ என்பது அது சார்ந்த அனைத்து  மனித தவறுகளையும் வெளிச்சம்போட்டு காட்டிவிடுகிறது...

இடர்கள் நிகழ்ந்தப்பின்னே... அது எப்படி நடந்தது? ஏன் நடந்தது..? தவிர்த்திருக்க என்னன்ன செய்திருக்கலாம்....? இனியும் நடக்காமல் என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் ஓடும்... ஆனால் விபத்து என்பது நிகழ்ந்து விடுகிறது... அதில் சில உயிர்களை பலிகொடுத்து விடுகிறோம்... அதன்பிறகே அறிகிறோம் அதனதன் தவறுகளை...?


இந்த இரண்டு நாட்களால் தமிழகத்தை உலுக்கும் நிகழ்வு தேனி மாவட்டம் குரங்கணியில் டிரக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலியாகிய சம்பவம் தான்.... இதில் மேலும் பலர் காயமடைந்தனர். என்ற செய்தி அனைவரின் இதயங்களையும் காயப்படுத்தியிருக்கிறது.

மீட்புக்குழுவினர் தாமதம்.... இரவு நேரம்... மற்றும் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணியின் தோய்வினால் இறப்பு எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதற்கு அரசு தரப்பில் உடனடியாக கூறும் பதில் 'டிரக்கிங் செய்தவர்கள் வனத்துறையினர் அனுமதியில்லாமல் தான் மலையேற்றம் செய்தனர். அவர்கள் சென்ற பகுதியில் கோடை காலத்தில் மலையேற்றம் செய்ய அனுமதி கிடையாது...” என்பதுதான்... 

என்னுடைய கேள்வி என்னவென்றால் அனுமதியோடு டிரக்கிங் சென்றிருந்தால் அரசு என்ன முன்ஏற்பாடு செய்துவிட்டிருக்கும்...?  அரசு இரண்டு ஹெலிகாப்டர்களை கூடவே அனுப்பி இருக்குமா..? அல்லது பாதுகாப்பு படையினரை தயாராக வைத்திருந்திருப்பார்களா..? அல்லது இரவுப்பொழுதே வரதா? என்பது தான்... இது இந்த சம்பவத்துக்கும் அரசுக்கு எந்ததொடர்பும் இல்லை என்பதை காட்டிக்கொள்வதற்காகவே இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது.

பொதுவாக ஒரு இடரோ.. பேரிடரோ நடக்கும் சமயங்களில் மக்களோடு மக்களாக இருக்க அரசு கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து இந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்ற ஒரு மாயையை எற்படுத்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலேபோய் பாதிக்கப்பட்ட பொதுமக்களையே குற்றவாளி ஆக்கிவிடுகிறார்கள்... அதனால் அரசு பொதுமக்களின் பார்வையில் இருந்து நல்லவர்களாவே காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.... 




இந்த சம்பவம் மட்டுமல்ல.... இது தவிர்த்து சமீக காலமாக பல சம்பவங்களில் அரசின் முதல் அறிக்கை இப்படியாகத்தான் இருக்கிறது...! கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்தா... அரசு பதில் அவர்கள் அனுமதி வாங்கவில்லை...? படகு கவிழ்ந்து விபத்தா...? அனுமதியின்றி ஆட்களை அழைத்துச் சென்றுற்றனர்...? கோயிலில் விபத்தா...? அனுமதியின்றி நடந்திருக்கிறது...? மீனவர் மாயமா..? அவர்கள் அனுமதியின்றி கடலுக்குள் சென்றுள்ளனர்...? பள்ளியில் விபத்தா..? அனுமதியின்றி பள்ளி நடந்துள்ளது.. அல்லது.. போதிய வசதிகள் அங்கு இல்லை..? குடிசைகள் எரிந்து சாம்பல்..? அது புறம்போக்கு இடம் அனுமதியின்றி அவர்கள் வீடுகட்டியுள்ளர்..? வெள்ளத்தால் மக்கள் பாதிப்பா..? அனுமதியின்றி ஆக்கிரமித்து உள்ளனர்..?

இப்படியாய் எதற்கு எடுத்தாலும் அனுமதியின்றி அனுமதியின்றி என்ற வார்த்தையை போட்டு அரசு தப்பித்துக்கொள்ள நினைக்கிறது. யாரிடம் அனுமதி வாங்கவேண்டும்...? எப்படி வாங்க வேண்டும் என்ற நெறிமுறைகளையும் அரசு செயல்படுத்துவதில்லை என்பதுதான் சோகமான உண்மை... அப்படி அனுமதியின்றி நடக்கும் நிகழ்வுகள் என்னன்ன என்று இதுநாள் வரை ஏன் அரசு கண்டுக்கொள்வதில்லை.

விபத்துக்கள் என்பது எங்கு? எப்போது? எப்படி? நடக்கும் என்று தெரியாது..? ஆனால் எல்லா விபத்துக்காலத்திலும் பதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் ஒரு அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை மட்டும் ஆட்சியாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.




தனக்கான பாதுகாப்பையும், பொறுப்பபையும் தனிமனிதன் எப்போதும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தன்னால் தனக்கும் மற்றவர்களுக்கு ஏற்படும பாதிப்புகள் குறித்து கவலைப்படும் தனிமனிதன் இன்று நாட்டில் இல்லை.. இப்படி பொறுப்பற்ற தனிமனிதர்களால் நிறைந்ததுதான் நாடு...

இப்படிபட்ட சூழ்நிலையில் அரசாங்கம் இன்னும் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளி ஆக்குவதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான விரைவான மீட்பு, முதலுதவி நடவடிக்கைகளை அரசு எடுக்க தயக்கம்காட்டக்கூடாது. (இவ்வளவு பெரிய இந்திய திருநாட்டில் மீட்பில் முழுமையாக ஈடுபட இன்னும் போதிய உபகரணங்கள் இல்லை என்பதுதான்...!)

மேலும் விபத்து நடந்தப்பிறகு அதுகுறித்து கவலைப்படுவதை விடுத்து நடப்பதற்கு முன் என்னன்ன வழிவகைகள் செய்யவேண்டுமோ அதை சரியாக விதிக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை. அனைத்துக்கும் சரியான துறைகள் இருந்தும்... அதற்காக போதிய அதிகாரிகள் இருந்தும் அவற்றை சரிவர கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் நிர்வாகம் ஓடிக்கொண்டிருக்கிறது.. இதை கவனிக்காதது யார் தவறு...!

இப்போது பாருங்கள்... இனி எங்கெங்கு டிரக்கிங் கிளப்-இருக்கிறது என்பதை ஆய்வார்கள்... அதற்கு ஒன்று கூட அனுமதி வாங்கவில்லை என்று கூறுவார்கள்... டிரக்கிங் செல்ல தடை என்பார்கள்... அவர்கள் மீது நீதி விசாரணை என்பார்கள்... இப்படிப்பட்ட கிளப்கள் இதுவரை எப்படி நடந்தது என்ற கேள்விக்கு எந்த அரசு அதிகாரியும் பதில்சொல்ல மாட்டார்கள்... பிறகு என்ன நடக்கும் கொஞ்ச நாள் இதைப்பற்றி மட்டுமே பேசுவோம்...  இதுப்போன்ற வேறொரு சம்பவம் வந்தவுடன் இதைமறந்துவிடுவோம்...




       நாம் ஒவ்வொன்றிலும் இருந்தும் ஒரு பாடத்தை கற்றுக்கொள்கிறோம். ஆனால் அதற்கு கொடுக்கும் விலைதான் மிக அதிகமாக இருக்கிறது... பள்ளிகளில் கூரைகள் இருக்க கூடாது என்ற பாடத்தை 90 குழந்தைகளை பலிகொடுத்தப்பிறகுதானே கற்றுக்கொண்டோம்... டிரக்கிங்கை முறைப்படுத்த 10 பேரை பலிகொடுத்திருக்கிறோம்... இன்னும் என்னனன்ன சம்பவத்துக்கு எத்தனைப்பேரை பலிக்கொடுக்கப்போறோமோ...?

வலிகளுடன்....
கவிதை வீதி சௌந்தர்....
13/03/2018.

2 comments:

  1. இது திட்டமிட்டு நடந்ததுன்னு சொல்றாங்க. ஆகமொத்தம் பலரது பணத்தாசைக்கு சில உயிர் பறிபோனது.. அதும் துடிதுடித்து.....

    ReplyDelete
    Replies
    1. இப்படியாய் பல சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கே நடந்தவண்ணமே உள்ளது.... சம்பவங்கள் நடந்து முடிந்தபிறகு தான் அரசாங்கம் விழித்து பார்க்கிறது... அதுதான் வேதனை

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...