கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 April, 2018

மாணவர்கள் இப்படித்தான்.... பெற்றோரே கோடையில் உஷார்...!



சில தினங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு அருகிலுள்ள நண்பரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பள்ளி விட்டு வந்த அவருடைய 12 வயது மகன் தந்தையைக் கட்டிப்பிடித்து தொங்கியவாறு, நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கேன் என்றான். அவனுடைய இயல்புக்கு மாறான இந்தச் செய்கை எங்களுக்கு வியப்பாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாத நண்பர், என்ன விஷயம் என்றார் மகனிடம்.

அதற்கு அவன், எனக்கு நாளையோட "எக்ஸôம்' முடியுது... ரெண்டு மாசத்துக்கு லீவு என்றான். மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், இதன் பின்னணியில் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

விவசாயிக்கு விளைச்சல் பெருகினால் மகிழ்ச்சி. தொழிலதிபருக்கு தடையற்ற உற்பத்தியும், நிறைந்த ஏற்றுமதியும் மகிழ்ச்சி, பணியாளருக்குப் பணி உயர்வும், ஊதிய உயர்வும் மகிழ்ச்சி, வியாபாரிக்கு விற்பனை அதிகரித்து லாபம் கிடைத்தால் மகிழ்ச்சி, தேர்தல் வெற்றியும், பதவியும் அரசியல்வாதிக்கு மகிழ்ச்சி.

இப்படி ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு விடுமுறைதான் மகிழ்ச்சி.

குறிப்பாக, மழையின்போது வியாபாரிகள், விவசாயிகள், அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாவார்கள்...

ஆனால், தொலைக்காட்சிக்கு முன்பாக அமர்ந்து, பள்ளி விடுமுறைக்கான அறிவிப்பு வருகிறதா என்பதைக் கவனித்து, அறிவிப்பு வந்தவுடன் துள்ளிக் குதித்து மகிழ்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகள்.

தின்பண்டங்கள், புத்தாடைகள், விளையாட்டுப் பொருள்களைக் காட்டிலும் விடுமுறையால் கிடைக்கும் சந்தோஷம்தான் அவர்களுக்குப் பெரிது.

அந்த சந்தோஷம் இப்போது அவர்களுக்குக் கிடைத்தாயிற்று. அதை அவர்கள் முழுமையாக அனுபவிக்க, கொண்டாடி மகிழ பெற்றோர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த விடுமுறையைக் குழந்தைகள் பயனுள்ளதாகக் கழிக்க பலவிதமான திட்டங்களை அவர்கள் தயாரித்திருப்பார்கள்.

நம்மால் நம் விருப்பத்துக்குத் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் குழந்தைகளைச் சந்தோஷப்படுத்துமா என்பதை ஆராய்வது மிக அவசியம்.

2 மாத விடுமுறையில் தட்டச்சு, கணினி கற்றுக் கொடுப்பது, ஹிந்தி வகுப்புகளுக்கு அனுப்புவது, முழுநேர இசை, நாட்டியப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி வகுப்பு, கணிதத் தேற்றங்களைக் கற்றுக் கொடுப்பது, அடுத்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவது, பொது அறிவு, நுண்ணறிவு பயிற்சி வகுப்புகள், இல்லையேல், குறிப்பிட்ட சிலர் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இப்போதுள்ள பாடத்திட்டங்களினாலோ அல்லது அவற்றைச் செயல்படுத்தும் முறையினாலோ தங்களது விளையாட்டு நேரத்தை பெரும்பாலும் இழந்துவிட்ட இந்தச் சிறார்கள், தாங்கள் சற்று இளைப்பாற நாடுவது தொலைக்காட்சியைத்தான். இதனால், மன, உடல் ஆரோக்கியங்களை இழக்கும் இவர்கள், சிறு வயதிலேயே 25 சதம் பேர் கண்ணாடி அணியும் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அதே திட்டமிட்ட பாடங்கள், வகுப்பறை, வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை இந்த விடுமுறையிலும் திணிப்பது குழந்தைகளை மன அழுத்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிடும். இன்று அதன் பாதிப்பை அவர்கள் உணராவிட்டாலும், எதிர்காலத்தில் இது பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம்.


விடுமுறையில் அவர்களை ஊர் சுற்றவிட்டால் கெட்டுப்போய் விடுவார்களே.... என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தனியாகவோ, பிறரோடு சேர்ந்து ஊர்சுற்றினால்தானே கெட்டுப் போவார்கள். அதற்குப் பதிலாக, பெற்றோர்களே அவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றினால் எப்படிக் கெட்டுப்போவார்கள். வியாபாரம், அலுவல் போன்றவற்றில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமே. திட்டமிடுதல்தான் முக்கியம்.

ஏப்ரல் மாதம் தொடங்கியாயிற்று. இதில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு, தேர்தல் முடிவு என முதல் 15 நாள்களை விட்டு விடுங்கள். மீதமுள்ள 45 நாள்களை 5 அல்லது 6 வாரங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை உண்டு. அந்த விடுமுறை தினத்தை உங்கள் குழந்தைகளுடன் ஊர் சுற்றப் பயன்படுத்துங்கள்.

நாம் செல்லும் இடங்கள் நம் குழந்தைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் அறிவை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

நம் பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பயணம் செய்வது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது, பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அங்குள்ள ரயில்வே போலீஸôரிடம் புகார் செய்வது, ரயில் ஓட்டுநர்களை அறிமுகப்படுத்தி அவர்கள் ரயிலை இயக்கும் முறை போன்றவற்றை விளக்குவது பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், விமான நிலையம் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தலாம். கோளரங்கத்துக்கு அழைத்துச் சென்று காட்டுவதோடு, அங்கு நடைபெறும் வான் நோக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கச் செய்யலாம். அருங்காட்சியகத்துக்கு சென்று அங்குள்ள அதிசயங்களைக் காட்டலாம்.

மேலும், நாம் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே நமக்குத் தெரியாத பல வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கலைச் சின்னங்கள் நிச்சயமாக இருக்கும். அதுகுறித்து அறிந்து அங்கு அழைத்துச் செல்லலாம். நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.

நம் ஊரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் பல விஷயங்கள் உள்ளன. நூலகங்களில் உள்ள என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் தகவல் களஞ்சியங்களில் வண்ணப்படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதுதானே என நாம் நினைக்கும் பல விஷயங்கள் நம் குழந்தைகளுக்கு அதிசயமாகவும், அறிவுச் செய்திகளாகவும் இருக்கும்.

நாம் செய்ய வேண்டியது: இந்த 45 நாள்களிலும் நம் குழந்தைகளோடு எவ்வளவு அதிமான நேரத்தைச் செலவழிக்க முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இதைத்தவிர, அந்த இளம் மொட்டுகளுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது எதுவுமில்லை.

நான் சந்தோஷமாக இருக்கேன் என்ற வார்த்தையை ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர்களிடம் இருந்து கேட்க வேண்டுமானால், இந்த 2 மாதங்கள் அவர்கள் சந்தோஷத்துக்கு விட்டுவிடுங்கள். இது அவர்கள் துள்ளித் திரியும் நேரம்... (கல்வி சோலையிலிருந்து....)

1 comment:

  1. யோசிக்க வேண்டியவங்க யோசிக்கனுமே!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...