27 September, 2021

சினிமாவின் பாசிச விமர்சகர்கள்...


திரைப்படத்தை விமர்சிக்கத் தகுதி தேவையா தேவையில்லையா... என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடந்தது...

பொதுவாக அனைவரும் சொன்ன கருத்து என்னவென்றால்... 

ஒரு திரைப்படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் எனக்கு அது நன்றாக உள்ளதா, நன்றாக இல்லையா, என்று சொல்லும் உரிமை இருக்கிறது என்பதுதான்.

தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்தைச் சொல்வதற்கான முழு உரிமையும் சினிமா பார்க்கும் அனைவருக்கும் இருக்கிறது என்று விவாதித்தார்கள்.

பொதுவாகச் சொல்லப் போனால் சினிமா விமர்சனம் செய்யத் தனிப்பட்ட தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதே அது...

ஆனால் சமீபகாலத்தில் சில தயாரிப்பாளர்கள் சில இயக்குநர்கள் இன்றைய விமர்சகர்கள் அனைவரும் சினிமாவை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்,  

நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் படங்களைக் குறை சொல்லியே விமர்சனம் செய்கின்றனர், என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

ஆனால் சினிமா விமர்சகர்களோ.... நீங்கள் சரியான முறையில் தரமான படம் எடுத்து இருந்தால்... காசு கொடுத்து படம் பார்க்கும் நாங்கள் ஏன் அதைக் குறை சொல்லப் போகிறோம். 

சரியாக இருந்தால் சரியாக இருக்கிறது என்றும், சரி இல்லை என்றால் சரி இல்லை என்று சொல்வது மட்டுமே எங்களுடைய வேலை என்று அவர்கள் வாதிட்டனர்...

என்னுடைய கருத்தையும் பதிவு செய்வதே இந்த பதிவு....

90களில் நான் பார்த்த விமர்சனம் சன் தொலைக்காட்சியில் மட்டும் தான்... வாரத்திற்கு ஒரு படம் என விமர்சனம் செய்வார்கள். அந்த விமர்சனத்தைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதன் பிறகு சில வார இதழ்களில் வாரத்திற்கு ஒரு படத்தை விமர்சனம் செய்து அதற்கு மதிப்பெண்ணும் கொடுத்து, ஒரு திரைப்படத்தின் தரத்தை   மதிப்பிட்டுக் காட்டினார்கள்.

உதாரணத்திற்கு ஒரு பண்டிகைக்கு 5 படங்கள் வருகிறதென்றால் ஐந்து படத்தையும் விமர்சனம் செய்து முடிக்க ஒரு மாதம் கடந்து விடும்.

தினமும் படத்தைப் பார்த்துவிட்டு வருபவர்கள் சொல்லுகிறதை வைத்தே அந்தப் படத்தை எத்தனை நாள் ஓட வைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அதற்குள் திரைப்படம் 25 நாள் 50 நாட்களைக் கடந்து விட்டிருக்கும்...

பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், அதில் எந்தவித பாதிப்பும் இருக்காது...

ஆனால் இன்றைய நவீன சூழலில் இணைய விமர்சகர்கள் 10 மணிக்குப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு மணிக்கே இப்படம் எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்...

இதனால் பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்க வரும் சிலரும் கூட இந்தப்படம் சரியில்லையாம் என்று சொல்லித் தவிர்த்து விடுகிறார்கள்.

இப்படி விமர்சனம் செய்வதால் யாருக்குப் பாதிப்பு என்றால், அந்த படத்திற்குப் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கும், மற்றும் அதை இயக்கிய  இயக்குநருக்கு  மட்டுமே. 

நடிகர்கள் அவர்களுக்கு உண்டான பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் படத்தை நடித்தே முடிக்கிறார்கள். அதனால் ஒரு படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் எப்படி இருந்தாலும் அந்த நடிகர்களைப் பாதிப்பதில்லை.

உண்மையான பாதிப்பு என்பது தயாரிப்பாளருக்கும்,  சினிமா திரையரங்க உரிமையாளர்களுக்கும் மட்டுமே.

நான் சொல்ல வருகிற கருத்து என்னவென்றால்...

ஒரு சினிமாவை விமர்சனம் செய்ய.... ஏன் குறைந்தது ஒரு வாரக் கால அவகாசம் ஆவது எடுத்துக்கொள்ளக்கூடாது.

அன்றே விமர்சனம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் என்ன... ஊடகங்கள் வழியே இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் ஒரு படத்தை அலசி ஆராய்ந்து விட வேண்டும் என்ற அவசியம் எதற்கு வருகிறது...

தன்னுடைய சேனலை அதிகமானோர் பார்த்த வேண்டும் என்பதற்காகவும்... தனது தனிப்பட்ட லாபத்திற்காக மட்டுமே இப்படிப்பட்ட விமர்சனங்கள் தோன்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது....

ஒரு திரைப்படத்தை ஒரு வாரம் கழித்து விமர்சனம் செய்தால்... பொருளாதார ரீதியாக யாருக்கும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை... அந்த ஒரு வார காலத்தில்  தயாரிப்பாளரும் திரையரங்குகளும் தாங்கள் போட்ட பணத்தைப் பெற்றிருக்கும்....

படத்தைப் பார்ப்பவர்களுக்கு நட்டம் வந்தால் பரியில்லையா என்று நீங்கள் கேட்கலாம்... 

நாம் சினிமா பார்க்கச் செல்வதே பொழுதுபோக்கிற்காகத் தான் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் செலவு என்பது அவ்வளவு பெரிய நட்டமாகக் கருத முடியாது. இன்னும் இன்றைய சூழ்நிலையில் திரையரங்குகளுக்கு சினிமா பார்ப்பவர்கள் வரும் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது... இப்படியே சென்றால் பொழுது போக்கிற்கான ஒரு சரியான இடம் திரையரங்கம் என்ற சூழலே மாறிவிடும்.... 

புதுமுகமாக வரும் இயக்குநர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மொத்த கனவையும் அந்த சினிமாவில் கொட்டித் தீர்க்கிறார்கள். அப்படிப்பட்ட கனவைத் பொசுக்குவது என்பது    அவ்வளவு நியாயமாக இருக்காது....

நாம் செய்யும் விமர்சனம் மெதுவாக மக்களிடையே சென்றடைந்தால் பிரச்சினையில்லை.... ஆனால் இன்றைய 5G கால கணினி யுகத்தில் நாம் சொல்லுகிற விஷயம் ஒரே நேரத்தில் அனைவருக்கும் ஒரே சமயத்தில்  சென்றடைகிறது.  இதனால்தான் சினிமாக்கள் மிகப் பெரிய நட்டத்தைச் சந்தித்து வருகிறது.

சரி இல்லாத படத்தைப் பார்க்க வரும் நூறு பார்வையாளர்களைக் காப்பாற்றுவதாக நீங்கள் எண்ணிவிடலாம்.... அப்படிக் காப்பாற்றும் நீங்கள் தான் சினிமாவை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் நூறு தொழிலாளர்களைப் பழிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நூறாண்டுக் கால சினிமாவும் அழிந்து விடக்கூடாது...

நூறாண்டுக் கால ரசிகனும் அழிந்து விடக்கூடாது... 

என்பதை மனதில் வைத்து சினிமாக்களை விமர்சனம் செய்தால்... விமர்சகர்கள் அனைவராலும் சிறப்பாகவே ரசிக்கப் படுபவர்களாக ஆவார்கள்..


ஒரு ரசிகனாய்...

நான் சௌந்தர்...

27-09-2021