16 December, 2010

ஒன்றி போதலே வாழ்க்கை... (ஜென்கதைகள்)

             
புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை மக்களுக்குக் கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.

பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
 
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப் பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”

“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…

“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”

“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.

திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”

“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”

“ஆஹா இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,

“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும் ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும் நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.


பொது நீதி : எந்தச் சூழலையும் ஆனந்தமாக அணுகக் கற்றுக் கொண்டால், எந்த சூழலையும் ஆனந்தமயமாக்கிட முடியும். இல்லாவிட்டால் ஆனந்தமயமான சூழல்கள் வாய்த்தால்கூட, அதிலும் ஏதாவது துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!