18 December, 2010

நீயின்றி நானில்லை...


நான் எல்லோரிடத்திலும்
சினேகம் பாராட்டி
அன்போடு கலந்தபொழுதில்
என்னோடு அன்பு காட்டியும்... 


நெஞ்சில் நஞ்சுக் கலந்து
கண்களில் தீ வளர்த்து சினம் கொண்டு
எதிரியை சொல்லால் சுட்ட பொழுதில் 

என்னோடு மேனிச் சிவந்தும்.... 

பள்ளி படிப்பு முடிந்தப்பின்
மூன்றாம் பிறையாய் மீசை முகம் காட்ட
கல்லூரி சாலைகளில் கால் பதித்து
நான் காலங்களை தின்ற போது

சகத்தோழனாய் என் மீது கைப்போட்டும்... 

சான்றிதழ்களை சுமந்துக் கொண்டு
வேலை கேட்டு ஏறிய படிகளில்
வெறுமையாய் திரும்ப

எதிர்கால கனவுகளில் தலைத் தாழ்கையில் 
எனக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டும்...
 

வேலையில்லாதவர் எதற்கும் தேவையில்லாதவர்
என நாடே புறம்தள்ள மாநகர பூங்காக்களில்
‌புள்வெளிகளில் படுத்துக்கிடக்கும் போது 

என் அருகில் படுத்துக் கிடந்தும்...

காதல் நோய் பிடித்து
வானுக்கும் பூமிக்கும் பறந்து திரிந்து
பூக்கள் கூட்டத்தில் முகாமிட்டு
கவிதை சோலையில் கால் நீட்டி சாய்ந்து கிடக்கும் போது 

என் மடியில் தலை வைத்துச் சாய்ந்தும்... 

ஆயுளில் ஒரு நாளை கூட்டிக் ‌கொள்ள
அடிவயிறு வலியெடுக்க
அங்கமெல்லம் குலுங்க
ஆனந்தமாய் சிரித்த பொழுதில் 

என்னோடு சிரித்துக் கொண்டும்... 

ஊராரின் செய்கை எண்ணி
உற்றாரின் வஞ்சகத்தாலும்..
நட்பாளரின் துரோகத்தாலும்.

நொந்து நொடிந்து கண்ணீர் கசிந்து நிற்கையில் 
என்னோடு  விசுப்பிக் கொண்டும்... 

தூரப்பயணங்களில் 
நொடிகலெல்லாம் மணிகளாகும் போது
இடமிருப்போரும் வலமிருப்போரும்
அன்னியராய் அமைதி காக்கையில் 

என் அருகில் அமர்ந்துக் கொண்டு ஆதரவு கொடுத்தும்... 

புதுமையை கூறி வியக்க வைத்தும்
கடமை கூறி நடக்க வைத்தும்

காட்சி கூறி பயம் படுத்தியும்
காவியம் கூறி கலங்க வைத்தும் 

என்னை மனிதனாய் மாற்ற முயற்சித்தும்..

கவிதைச் சொல்லியும்
கதைச் சொல்லியும்
காதல் சொல்லியும்
காலத்தை சொல்லியும் 

விதவிதமாய் ஆடைகள் அணிந்தும் 
புது விதமாய் கவசங்கள் போட்டும்... 

முடி நரைத்து.. மூளை நரைத்து..
நாடிகளும் நரம்புகளும் இற்றுப்போன பிறகும்

மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டு
என் வாயில் ஊற்றிய பால் வழியும் வரைக்கும்...
என்ன்னோடு ஊன்று கோலாய் இருந்தும்...



என்னோடு  


எப்போழுதும் ஒன்றென 

கலந்துக்கிடக்கிறது...

புத்தகம்...

1 comment:

  1. புத்தகம் பற்றிய உங்க பார்வைகள் நல்லா இருக்குங்க ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!