15 February, 2013

சவால்களை சந்திக்க மன உறுதி வேண்டும் - ஜெயலலிதா அவர்கள் சொன்ன குட்டிக்கதை

சென்னையில் தனது 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 65 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில் இரு குட்டிக்கதைகள் கூறினார்.

’’பழிப்புக்கு இடமில்லாத வாழ்க்கையை இல்லறம் என்கிறார் திருவள்ளுவர். இப்படிப்பட்ட இல்வாழ்க்கை அமைய வேண்டும் என்றால், அன்பும், அறமும், அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை. அப்பொழுது தான் வாழ்க்கை இன்பமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

ஓர் ஏழைச் சிறுவன் வீடு வீடாக சென்று துணிகளை விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் அவனுக்கு கடும் பசி. அவன் கையில் ஐம்பது காசு மட்டுமே இருந்தது. இந்தக் காசை வைத்து எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

“யார்?” என்று கேட்டவாறே, ஒரு இளம்பெண் கதவைத் திறந்து அந்தச் சிறுவனைப் பார்த்து “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

அந்தப் பெண்ணிடம் சாப்பாடு கேட்க மனமில்லாத அந்தச் சிறுவன், “குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.

அந்தச் சிறுவனை ஏற, இறங்கப் பார்த்த அந்தப் பெண், அவன் கடும் பசியில் இருப்பதை உணர்ந்தாள். பின்னர், ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் கொடுத்தாள்.

அந்தப் பாலை குடித்து முடித்த சிறுவன், “நான் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்?” என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

அதற்கு அந்தப் பெண், “நீ எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு ஒரு பொருளை அன்பாகக் கொடுக்கும் போது காசு வாங்கக் கூடாது என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்கள்” என்று கனிவுடன் கூறினாள்.

அதற்கு அந்தச் சிறுவன், “என் அடி மனதிலிருந்து தங்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினான்.

அழகாக இருந்த அந்த இளம்பெண் திடீரென நோய்வாய்பட்டாள். அந்த ஊரில் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியாததால் நகரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண்ணை அனுமதித்தனர். புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டார்.

அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் விவரங்களையும் அந்தப் பெண்ணுக்கு வந்துள்ள நோயினையும் படித்து தெரிந்து கொண்டார். உடனடியாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டார். அந்தப் பெண்ணுக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண் குணமடைந்தாள். மருத்துவ சிகிச்சைக்கான பில்லை கொண்டு வரும்படி மருத்துவமனையின் கணக்கரிடம் மருத்துவர் தெரிவித்தார். அவ்வாறே பில்லும் வந்தது. அந்த பில்லில் எதையோ எழுதி, பில்லை அந்தப் பெண்ணிடம் அனுப்பிவிட்டார் மருத்துவர்.

அந்த பில்லின் உறையைப் பார்த்ததுமே அந்தப் பெண்ணுக்கு நடுக்கம் வந்துவிட்டது. மருத்துவச் செலவு எவ்வளவு இருக்குமோ என்ற பயத்துடன் உரையை பிரித்தாள் அந்தப் பெண்.

அந்த பில்லில், “ஒரு டம்ளர் பாலுக்கு ஈடாக இந்தப் பில்லுக்கு முழுக் கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” என்று எழுதப்பட்டிருந்தது. இது வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு ஆகும்.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது, அன்பின் சக்தியை, அன்பின் வலிமையை என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பினை, மணமக்களாகிய நீங்கள் உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம், உங்கள் பெற்றோர்களிடம், உங்கள் உற்றார் உறவினர்களிடம் செலுத்தினால், உங்கள் வாழ்வில் நிச்சயம் அமைதியும், ஆனந்தமும் நிலவும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்ல. எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நாம் செய்கிற நல்ல காரியம், என்றாவது ஒரு நாள் நமக்கு நன்மையைத் தரும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மட்டுமல்லாமல், அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.

அன்பு செலுத்துவதால், துன்பம் வராது என்று சொல்ல முடியாது. இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால் அந்த துன்பங்களை எதிர்கொள்ளக் கூடிய, மன வலிமை; சவால்களை சமாளிக்கக் கூடிய மன உறுதி உங்களிடம் இருக்க வேண்டும்.’’

1 comment:

  1. ஜெகூட நல்லா கதை சொல்றாங்களே.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!