27 March, 2013

மயானத்தில் ஒர் இரவு... உங்கள் அனுபவம் எப்படி...?





ஒருநாள் புத்தர் தன் சீடர்களை அழைத்துக் கொண்டு பயணம் ‌சென்று கொண்டிருந்தார். மாலைவேளை போய், இரவு வந்துவிட்டது. அனைவரும் உறங்கலாம் என்று முடிவெடுத்தனர்...

அப்போது புத்தர் தன் சீடர்களிடம், “யாரோனும் நாம் உறங்குவதற்கு தகுதியான இடம் இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள்!“ என்று கூறி சில சீடர்களை அனுப்பினார்.

அவர்கள் சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு மயானம் இருந்தது. அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் இரவில் தங்கலாம் என்று சீடர்கள் நினைத்தனர்.

அவர்கள் புத்தரிடம் திரும்பி வந்தனர். தாங்கள் வழியில் கண்ட மயானத்தைப்பற்றியும், அதற்கு அப்பால் ஒரு ஊர் இருப்பதையும் கூறினர்.

உடனே புத்தர் “நாம் இன்று இரவு உறங்குவதற்கு ஏற்ற இடம் அந்த மயானம் தான்!“ என்று கூறி, சீடர்களை மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.

சீடர்களுக்கோ உள்ளூற உதறல் எடுக்க ஆரம்பித்தது. மயானத்தில் எப்படி இரவு தங்க முடியும்? பேய்களும் ஆவிகளும் உலவுகிற இடமல்லவா அது. என்ன செய்வது? குரு தங்களை மயானத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாரே.

மறுக்க முடியாமல் அவர்கள் அனைவரும் அன்றிரவு மயானத்திலே தங்கினர். சீடர்கள் யாருமே இரவில் உறங்கவில்லை. ஒரு வழியாக மறுநாள் பொழுது விடிந்தது.

அவர்கள் எல்லோரும் முதல் வேளையாக புத்தரிடம் சென்று, “குருவே! சற்று தொலைவில் அழகான ஊர் இருக்க, எங்கள் எல்லோரையும் இந்த மயானத்தில் தங்கும்படிக் கூறினீர்களே, எதற்காக?“ என்று கேட்டனர்.

அதற்கு புத்தர், “எல்லோரும் இரவு நன்றாக உறங்கினீர்களா?“ என்று திரும்பிக் கேட்டார்.

“ஒரு நொடியும் நாங்கள் கண் மூடவில்லை“ என்று பதில் கூறினர்.

அதைக்கேட்ட புத்தரும், “அதற்காகத்தான் உங்களை இரவில் இங்கே தங்கும்படிக் கூறினேன்“ என்று கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

எந்நேரமும் விழித்திருத்தலே ஜென். அமைதியான, பாதுகாப்பான சூழலில் ஒருவன் இறந்த காலத்தில் ஆழ்ந்து விடுகிறான்: அல்லது எதிர்காலத்தில் மிதக்கிறான்: நிகழ்காலத்தில் வாழ மறந்துவிடுகிறான். 

அதனால் எப்போதும் மனதில் பயம் கொண்டு நிகழ்காலத்தில் விழிப்போடு இருப்போம்.

10 comments:

  1. நல்ல கதை!
    நிகழ்காலத்தில் விழிப்பாய் இருப்பது நல்லது, ஆனால் பயப்படச் சொல்றீங்களே? :)

    //நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
    கருத்தெல்லாம் சொல்றீங்க...// - வித்தியாசம், ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete
  2. விழிப்புடன் இருப்போம்;ஆனல் பயங்கொள்ள மாட்டோம்;பயங்கொல்வோம்!

    ReplyDelete
  3. நல்லதொரு கருத்தை குட்டிக்கதையாக சொல்லி இருக்கிறீர்கள்.இலங்கையிலுள்ள புத்தரின் சீடர்களோ மற்ற மதத்தவரை மயானத்தில் நிரந்தரமாய் உறங்க வைக்க எண்ணுகிறார்களே

    ReplyDelete
  4. சிந்திக்க வைக்கும் பதிவு

    ReplyDelete
  5. இப்படி பட்ட புத்தரை வணங்கி கொண்டுதான் இலங்கையில் மனிதர்களை கொன்று குவித்தார்களா...!

    ReplyDelete
  6. அன்பின் சௌந்தர் - வாழ்க்கையே இப்படித்தானே ஓடுகிறது - தனியாக மயானம் செல்ல வேண்டுமா என்ன - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அருமையான சிந்தனை.

    ReplyDelete
  8. நன்றி நிஜம் சொல்லும் கதை

    ReplyDelete
  9. நல்லதொரு கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!