20 August, 2013

தமிழனுக்கு சண்டையிட மட்டும்தான் தெரியுமா?



கர்நாடகா அரசு, எங்கெங்கே, நீரைச் சேமிக்க முடியுமோ, அங்கே எல்லாம் அணைகளைக் கட்டி, அவை அனைத்திலும் நீரைச் சேமித்து, அவர்களின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்து, அதற்கு மேல், வேறு வழியில்லாத பட்சத்தில், தமிழகத்தின் பக்கம், தண்ணீரை திறந்து விடுகிறது.


ஒரு பக்கம் கர்நாடகாவிலிருந்தும், இன்னொரு பக்கம் கேரளாவிலிருந்தும், இன்னொரு பக்கம் ஆந்திராவிலிருந்தும், தண்ணீர் வெள்ளமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த நீரை, நாம் முறையாக சேமித்து, பயன்படுத்துகிறோமோ என்றால், நிச்சயமாக இல்லை.


மன்னர்களும், வெள்ளைக்காரர்களும், அதன் பின் காமராஜரும் கட்டிய அணைகளை வைத்து தான், இன்னமும் நாம் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், யாரும் இந்த விஷயத்தில் சுத்தமாக அக்கறை காட்டவே இல்லை. அதனால், ஆறு, குளங்கள், ஏரிகள் எதுவும் தூர்வாரப் படாமல், அங்கங்கே புதர்கள் மண்டி, மணல் கொள்ளையடிக்கப்பட்டு, அணைகள் வறண்டு போய், வரும் நீர் அனைத்தும், கடலில் போய், வீணாய் கலந்து உப்பு நீராகிறது.



நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம், காலில் போட்டு மிதித்து, "தமிழகத்திற்கு தண்ணீரே திறந்து விடமாட்டோம்' என்று, அண்டை மாநிலங்கள், அடம் பிடிக்கும் போது, அவர்களோடு, சண்டைக்கு மல்லுக்கட்டி நிற்கிறோம்.

இதோ, கர்நாடகாவிலும், கேரளாவிலும் இருந்து தண்ணீர் வெள்ளமாக வந்து கொண்டிருக்கிறது, என்ன செய்து விட்டோம்... எல்லாவற்றையும், வங்காள விரிகுடாவில் கலக்க விட்டு விட்டு, கைகட்டி வாய் பொத்தி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாடு கட்டிப் போரடித்தால், மாளாது என்று சொல்லி, யானை கட்டிப் போரடித்த நம் தமிழகத்தில், இப்போது, ஆடுகட்டி போரடிக்கவே விளைச்சல் இல்லை. இதற்கெல்லாம், காமராஜருக்குப் பின் ஆண்ட ஆட்சியாளர்களின், மெத்தனப் போக்கு மட்டும் காரணமல்ல... பொது மக்களாகிய நமக்கும், தண்ணீரின் மகத்துவமும், அதன் அவசியமும் சுத்தமாக புரியவே இல்லை.


அண்டை மாநிலங்களோடு, சண்டை போட்டு, தண்ணீருக்காக, நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்காமல், நம் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிலவற்றை பின்பற்ற வேண்டும்.




அவை... நீரைச் சேமிக்க, புதிய அணைகளைக் கட்டி, மழைநீர், ஒரு சொட்டு கூட கடலில் கலக்க விடாமல், பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடிய, ஆரஸ்பதி போன்ற மரங்களை, நடாமல், வனத்துறையினர் தவிர்க்க வேண்டும். சிமென்ட் சாலைகள் அமைத்தால், மழைநீர் பூமிக்குள் இறங்காமல் நேராக வழிந்தோடி, சாக்கடையில் கலந்து விடும். அதனால், அரசு, சிமென்ட் சாலைகளை, ஊருக்குள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

வீடு கட்டும் அனைவரும், மொட்டை மாடியில் இருந்து விழும் மழைநீர் முழுவதையும், வீணாக வெளியே செல்லவிடாமல், கிணற்றுக்குள் விட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர, வழி செய்ய வேண்டும். ஏரி, குளங்கள், கண்மாய்க்கு வரக் கூடிய நீரின் பாதைகளை அடைத்துக் கொண்டிருக்கும், ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீரை ஏரி, குளம், கண்மாய்களை நிரப்ப, அரசு வழிவகை செய்ய வேண்டும். கட்டுரை : ஆ.மோகன், அமராவதிபுதூர்

10 comments:

  1. சரியாகத்தான் சொல்லியுள்ளார்... ஆ.மோகன், அமராவதிபுதூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  2. மிகச் சரியான கட்டுரை, சென்னை பகுதிகளில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள் எல்லாம் தூர்த்தப்பட்டு பள்ளிகள், கல்லூரிகள், வீட்டு மனைகள் கட்டப்பட்டுள்ளது. இருப்பதை எல்லாம் கெடுத்துவிட்டு, புதிதாய் எதையுமே உண்டாக்கமல் அண்டை மாநிலங்களோடு மல்லுக் கட்டுகின்றோம். அவமானமே !!! இதனால் தீராப் பகையையும் பக்கத்து மாநிலங்களோடு உண்டாக்கியும் விட்டோம். :(((

    ReplyDelete
  3. ஏரி, குளங்கள், கண்மாய்க்கு வரக் கூடிய நீரின் பாதைகளை அடைத்துக் கொண்டிருக்கும், ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீரை ஏரி, குளம், கண்மாய்களை நிரப்ப, அரசு வழிவகை செய்ய வேண்டும்.//

    இதுக்குன்னு கோடிக் கணக்குல அரசு ஒதுக்கத்தான் செய்கிறது. ஆனால் அத்தனையும் சிலர் தங்களுக்கென்று 'ஒதுக்கி' விடுகிறார்கள். அதில்தான் பிரச்சினையே!

    ReplyDelete
  4. அடுத்தவனை குறை சொல்லத்தான் முன் நிற்கிறோம் நம்மை நாமே திருத்தி கொள்ள முயல்வதில்லை.மிக சரியான கட்டுரை வாழ்த்துக்க

    ReplyDelete
  5. சரியான, தேவையான கட்டுரை..

    ReplyDelete
  6. ஆள்வோர்களும் அதிகாரத்தில் இருப்போரும்
    அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை...

    ReplyDelete
  7. சரியாகத்தான் சொல்லியுள்ளார்... ஆ.மோகன், அமராவதிபுதூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றிகள்..

    ReplyDelete
  8. அன்பின் சௌந்தர் - நல்லதொரு கட்டுரை - உரியவர்கள் கவனத்திற்கு வர வேண்டுமே - வராது - பகிர்வினிற்கு நன்றி சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. தமிழன் என்னைக்கு சண்டை போட்டான். எல்லா பக்கமும் அடி வாங்கிட்டு தானே வரான். அவன் சண்டை போட்டதெல்லாம் வரலாறு.

    ReplyDelete
  10. காமராஜருக்கு பின் வந்த தலைவர்கள் இதில் அக்கறை காட்டாமல் விட்டதை, ஏரிகளை வளைத்து போட்டு ஆட்டையை போடத்தானே

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!