24 January, 2014

பணத்தை ஆற்றில் எறியும் தைரியம் உண்டா..?


ஒரு நாள் பெரிய பணக்காரன் ஒருவன், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஆயிரம் காசுகளை அன்பளிப்பாக அளிக்க விரும்பினான்.

ஆனால் பரமஹம்சர் அதை வாங்க மறுத்தார். பணக்காரனோ விடாமல் வற்புறுத்தினான்.

சரி, உன் மன நிம்மதிக்காக பெற்றுக் கொள்கிறேன். இனி, நான் விரும்பியபடி இதைச் செலவழிக்கத் தடையில்லையே? என்று கேட்டார் பரமஹம்சர்....

ஒரு தடையும் இல்லை! என்றான் செல்வந்தன்.

“இந்த ஆயிரம் காசுகளையும் கொண்டு போய் கங்கையில் எறிந்துவிட்டு வா!” என்றார் அந்த மகான். பணக்காரன் அதிர்ந்து போனான். ஆனாலும் அவருடைய கட்டளைப்படி கங்கைக் கரைக்குச் சென்றவன் மிகுந்த துயரத்துடன் ஒவ்வொரு பொற்காசாக எடுத்து நீரில் எறிந்தபடி நின்றான்.

அரை மணி நேரம் கடந்தும் அவன் திரும்பாததால் ராமகிருஷ்ணர் கரைக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொறு காசாக நீரில் எறிந்து கொண்டிருந்தவனிடம், “என்ன முட்டாள்தனம் இது? ஒரே முறையில், ஒரு கணப்பொழுதில் வீசியெறிந்து விட்டு, விரைவாகத் திரும்பாமல் ஏன் ஒவ்வொன்றாக எண்ணி எறிகிறாய்?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக நான் சேமித்த நாணயங்களை ஒரே கணத்தில் வீசி எறிந்து விட மனம் வரவில்லை”. அதனால்தான் ஒவ்வொன்றாக நீரில் எறிந்தபடி நிற்கிறேன் என்றான் செல்வந்தன்.

அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட பரமஹம்சர், “இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்” என்றார்.

ஆனால், இன்று பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பணம் எவ்வளவு சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமென்ற மனமே இருப்பதில்லை. தனக்கு மட்டுமில்லாமல், தன் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், தனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளுக்கும் தானே பணத்தைச் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற தவறான நோக்கத்தில் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பணம் அவர்கள் கடைசிக் காலத்தில் நிம்மதியைத் தந்து விடாது. ஆன்மிகம், தர்மமும், மனித ஒழுக்கமுமே உண்மையான மன நிம்மதியைத் தரும்.

5 comments:

  1. உண்மை தான்... தவறான நோக்கம் உண்மை தான்...

    "இழப்பதற்கு முடிவெடுத்து விட்டால், ஒரே கணத்தில் இழந்துவிட வேண்டும்" - பேராசைகளையும், துன்பங்களையும்...

    ReplyDelete
  2. நல்லதொரு நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நல்லதொரு நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!