07 April, 2015

வெற்றியை கண்டடையும் வழி



உழைப்பின்றி எந்த ஒரு சமூகமும் முன்னேற்றம் அடைந்ததில்லை. அதிர்ஷ்டத்தை நம்பியோ, ராசியை நம்பியோ, நேரத்தை நம்பியோ ஒரு காலமும் வெற்றியின் உச்சியை அடைந்துவிடியாது. வெற்றி என்ற சொல்லின் அடிநாதமாய் அமைந்திருப்பது உழைப்பு... உழைப்பு... என்ற உறுதியில் மட்டுமே. லட்சத்தில் யாரோ ஒருவருக்கு அதிர்ஷ்டத்தில் வெற்றி கிடைத்ததே என்று அனைவரும் முயற்சிப்பது புலியை பார்த்து பூனை சூடுப்போட்டுக்கொண்ட ‌கதைப்போல்தான் ஆகிவிடும். 
 
இக்கறைக்கு அக்கறை பச்சை என்று சொல்லுவார்கள்... ஆனால் அங்கு சென்று பார்த்தால்தான் அங்குள்ள நி‌லைமை நமக்கு விளங்கும். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்‌கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே” என்ற பழைய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது... எப்போதும் நம்மிடத்தில் நாமே நம்பிக்கை வைப்பதை மறந்துவிடுகிறோம். நம்முடைய நம்பிக்கை, நம்முடைய உழைப்பு நமக்கு உதவாத போது அடுத்தவர் உழைப்பு நமக்கு உதவப்போவதில்லை... அடுத்தவர் நம்மீது வைக்கிற நம்பிக்கையை கூட நாம் நம்மீது வைப்பதில்லை...!

இன்றை வேகமான உலகில் வேகமாக சம்பாதிக்க வேண்டும் என்று நேர்மை, தர்மம், ஒழுக்கம் போன்றவற்றை குழிதோண்டி புதைத்துவிடுகிறார்கள்... குறுக்குவழியில் விரைவாக சம்பாதிப்பது என்பது கைதேர்ந்த சமூகத்தின்மீது அக்கரையில்லாத ஒருசிலருக்குமட்டுமே சாத்தியம் அதை பார்த்து அனைவரும் முயற்சிப்பதுதான் காலக்கொடுமை.


அதிர்ஷ்டம், வெற்றி, எங்கிருக்கிறது என்ற உண்மையைச்சொல்லும் அழகிய ஜென் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது....


ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் பொக்கிஷம் இருப்பதாக பேசிக்கொண்டனர்.


இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்று, தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.


அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் பொக்கிஷத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் "இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது. அதுவும் அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை, உன்னுள் தான் உள்ளது" என்று சொல்லிச் சென்றார்.

பொக்கிஷங்களும், செல்வங்களும் வரவைக்கிற திறமை ஒவ்வொறு மனிதருக்குள்ளும் இருக்கிறது ஆனால் நாம்தான் அதை பயன்படுத்துவது இல்லை. தூண்டிகளோடு ஒரு நாள் வீணடித்து ஒரு கிலோ மீன்பிடிக்கும் நபர் வேலைக்குச் சென்றால் இரண்டு கிலோ மீன்களை வாங்கலாம் என்று நம்பிக்கைவைப்பதில்லை. எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை விட்டுவிட்டு எதிர்காலத்தையே அதிர்ஷ்டமாக மாற்றுங்கள்

2 comments:

  1. நமக்குள் இருக்கும் பலவீனத்தை அறிந்தால்... பலம் தானே வெளிவரும்...!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!