22 January, 2016

மரணத்திலிருந்து தப்பிய மனோபாலா...! ஒரு உண்மை சம்பவம்

 

மூங்கில் ஒன்று புல்லாங்குழலானதுபோல், வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் வித்தகன் மனோபாலா. மனோபலம் கூடிய மனோபாலா, 13 வருடங்களுக்கு முன்பு செத்துப் பிழைத்தவர் என்றால், நம்ப முடிகிறதா?

''யப்பா... அந்த நாட்களை இப்ப நினைச்சாலும் கசப்பா இருக்கு தம்பி. வழக்கமா எல்லோருக்கும் நண்பர்களாலதான் சிகரெட் பழக்கம் வரும். வலியப்போய், அந்தப் பழக்கத்துக்கு அடிமையான ஆளு நானாத்தான் இருப்பேன். 17 வயசுல, காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப, முதன் முதலா சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன். 

அந்த டேஸ்ட்டும் ஸ்மெல்லும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு ரெண்டு, மூணு சிகரெட் பிடிச்சிட்டிருந்த நான், நாளாக நாளாக அதிகமாப் புகைக்க ஆரம்பிச்சேன். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனப்ப, நான் ஒரு செயின் ஸ்மோக்கர். அப்பவே சுதாரிச்சிருந்தா, பெரிய பாதிப்புலேர்ந்து மீண்டு இருந்திருப்பேன்'' என்று மூச்சை இழுத்துவிட்டபடியே, பாதிப்பின் வீரியத்தைச் சொன்னார்.

''கை நடுக்கம் வர ஆரம்பிச்சது. எப்பவும் சோர்வா இருக்கும். அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். சாப்பாடு எறங்காது. முகமெல்லாம் கறுத்துப்போச்சு. டாக்டர்கிட்ட போய் செக்-அப் பண்ணேன். அதிகமா சிகரெட் பிடிச்சதால், நுரையீரல் முழுக்க சிகரெட் புகை அடைஞ்சு இருக்குன்னு சொன்னார். டெஸ்ட் ரிசல்ட்லகூட, எலும்புகள் அரிச்சுப்போயிருக்கிறதா வந்துச்சு. 
'சிகரெட் பிடிச்சா இவ்வளவு பாதிப்பு வருமா டாக்டர்?’னு அப்பாவியாக் கேட்க, அதுக்கு டாக்டர், 'புகையோட இயல்பான பண்பே படிதல்தான். வீட்டு அடுக்களைக்குள் நுழைஞ்சிருக்கீங்களா? சுவர் முழுக்கப் புகை படிஞ்சு இருக்கும். அது மாதிரிதான் தம்பி நம்ம உடம்பும். நீங்க உள்ள இழுத்த புகை, உங்க உடம்பு முழுக்கப் படிஞ்சுகிடக்கு. அதனால் நுரையீரல், நரம்பு, எலும்பு எல்லாம் பாதிச்சிருக்கு. இன்னும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிச்சீங்க, நீங்க உயிரோட இருக்க மாட்டீங்க, அப்புறம் உங்க இஷ்டம்’னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டார். நான் அப்படியே ஆடிப்போயிட்டேன்.

ஒரு நிமிஷம் என் மனைவி, குழந்தைகளை நினைச்சுப் பார்த்தேன்.

குடும்ப எதிர்காலத்தைவிட கருமம் பிடிச்ச இந்த சிகரெட் முக்கியமா? பலரது சிரிப்புக்குக் காரணமாயிட்டு, என் குடும்பத்தைச் சோகத்துல தள்ளலாமா?’ அப்படினு என் மனசாட்சி கேள்வி கேட்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனேன். எக்கச்சக்கமா செலவு செஞ்சு, புது மனோபாலாவா வீட்டுக்குத் திரும்பினேன். 


அதுக்கு அப்புறம் சிகரெட் பக்கமே போகலை. எத்தனையோ படங்கள்ல சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிச்சேன். ஆனால், திரும்ப அந்த கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகலை. அந்த அளவுக்குக் கண்டிப்பா இருந்தேன். சிகரெட் பிடிச்சப்ப 42 கிலோவா இருந்த நான், இப்போ 62 கிலோ இருக்கேன். இப்ப என் உடம்பும் ரொம்ப நல்லா இருக்கு. சந்தோஷமா இருக்கேன்.'' - சிரித்தபடியே சொன்ன மனோபாலா, சிகரெட் பழக்கத்தில் இருந்து மீண்டுவருவருவதற்கான சீக்ரெட் டிப்ஸ்களையும் தந்தார். 


பெரும்பாலும், சாப்பாடு, டீ சாப்பிட்ட பிறகுதான் அதிகமா சிகரெட் அடிப்பாங்க. அந்த நினைப்பு வந்தால், உடனே திசை திருப்ப முயற்சி பண்ணுங்க. ஒரு டம்ளர் தண்ணி குடிங்க. எழுந்து ஒரு ரவுண்ட் நடந்துட்டு வாங்க.

சாப்பாடு சாப்பிட்டதும், சும்மா உட்கார்ந்து இருக்காமல், ஏதாவது ஒரு வேலையில் உங்க கவனத்தைச் செலுத்துங்க. கொஞ்ச நேரத்தில் சிகரெட் புகைக்கணும்கிற எண்ணம் போயிடும்.

சிலருக்கு சிகரெட் பிடித்தால்தான் டாய்லட் போக முடியும் என்ற நிலை இருக்கும், இதைக் காரணமாககொண்டே சிலர் சிகரெட் பிடிப்பார்கள். அவர்கள் முந்தைய நாள் இரவே நன்கு கனிந்த பூவன்பழம் மாதிரியான மலமிளக்கிகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். மறுநாள் சிகரெட்டின் தேவை இருக்காது.

சிகரெட் தரும் பாதிப்புகளை உங்க வீட்டிலோ, தனி அறையிலோ கண்ணில் படும் இடத்தில் பெரிதாக எழுதிப் படங்களுடன் ஒட்டிவைக்கலாம்.

பெட்டிக் கடைப் பக்கம் தயவுசெஞ்சு போகாதீங்க.

உங்க கண் எதிர்ல ஒருத்தர் சிகரெட் பிடிக்கிறார்னா, அவர் நிக்கிற திசைக்கு எதிர்த் திசையில் நடக்க ஆரம்பிச்சிடுங்க.

'ரொம்ப நாளாச்சே... ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிப்போமே...’ அப்படிங்கிற வேலையே கூடாது. ஒண்ணு நூறாயிடும். ஜாக்கிரதை!

சிகரெட் பிடிக்கத் தூண்டும் நண்பர்களின் சகவாசத்தையே துண்டிச்சிருங்க.

சிகரெட் பிடிக்கத் தோணுச்சுன்னா, பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்க. இது உடம்புக்கும் நல்லது. சிகரெட் பிடிக்கணும்கிற எண்ணத்தையும் மறக்க வெச்சிடும்.

தியானம், யோகா போன்ற நல்ல பழக்கங்கள்ல கவனத்தைத் திருப்புங்க. மனசை ஒருமுகப்படுத்தி, நீங்க எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு பக்க பலமா இது இருக்கும்.

சிகரெட் பழக்கம், வாழ்க்கையைச் சீரழிச்சிடும் கண்ணுங்களா! விட்டுடுங்க!

விழிப்புணர்வு பதிவாக விகடனிலிருந்து...!

3 comments:

  1. மனசாட்சி கேள்விக்கு மதிப்பளிக்க தொடங்கினாலே திருந்தி விடுவோம் என்பது 100% உண்மை...

    ReplyDelete
  2. 41 வருஷம் சிகரெட் பிடித்த நான் வேலையில் இருந்து ஒய்வு பெற்றபின் கடந்த 5 வருடங்களாக சிகரெட் பிடிக்கவில்லை. ஆனாலும் தற்போது ஆஸ்த்மா தொந்தரவு உண்டு.COPD என்று சொல்கிறார்கள்.

    ஜெயகுமார்

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!