18 March, 2018

அட்மின் அரசியல்வாதிகளுக்கு...


தன் ஆட்சியில் கீழ் இருக்கும் மக்களுக்கு எவ்வாறு தானம் தர்மம் செய்வது என்பது மகாபாரத காலத்திலே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது...  அதில் வரும் சம்பவத்தை முதலில் படியுங்கள்...

வெகு நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் மிக சிறந்தவர் தான்.


இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.


தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, "இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,'' என்று கூறினார்.


பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.


மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், "எங்களால் முடியாது கண்ணா!'' என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.


உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.





"கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,'' என்று கூறினார்.


உடனே கர்ணன், "இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,'' என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, "இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.


பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.


நம் சமூகத்தில் கூட நிறையபேர் இப்படியிருக்கிறார்கள்.... லட்சலட்சமாக தானம் செய்பவர்கள்கூட வெளியில் தெரியாமல் இருக்கிறார்கள்.. ஆனால் ஒரு 100 ரூபாயை பத்து பத்துரூபாயாக மாற்றிக்கொண்டு  நான் தானம் செய்கிறேன் தர்மம் செய்கிறேன் என்று விளம்பரப்படுத்திக்கொள்கிறார்கள்...






இன்னும் சில அரசியல்வாதிகள் 5000 ரூபாய் நன்கொடை தர 50 000, ரூபாயில் விழாக்கள் நடத்துகிறார்கள்... இதை என்னவென்று சொல்லுவது... என்ன செய்ய இது அட்மின் அரசியல்வாதி காலமாகிவிட்டது..

தானம் என்பது இடக்கை செய்வது வலக்கைக்கு தெரியாமல் இருப்பதுதான்... இந்த மனசு தற்போது யாருக்கும் இருப்பதில்லை....

1 comment:

  1. உண்மைதான்
    இதுபோன்ற மனது இப்போது வெகுவாகக் குறைந்துதான் போய்விட்டது

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!