31 March, 2018

பாம்பை நடுங்க வைக்கும் பெண்... அதிர்ச்சி செய்தி



பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. எவ்வளவு துணிச்சல் உள்ள ஆண்களும், பாம்பைக் கண்டவுடன் சிறிதுதூரம் பின்வாங்குவார்கள்.

காரணம், பாம்பு சிறிய உயிரினம் என்ற போதிலும், அதில் உள்ள கொடிய விஷம் மனிதர்களின் உயிரை சில மணிநேரங்களில் மாய்த்துவிடும் என்பதாலயே அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.


ஆனால், இதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், பாம்புகளை அனாசயமாகப் பிடித்து வருகிறார். இதை மக்களுக்கு சேவையாகச் செய்து, பாம்புகளை மக்கள் கொல்வதில் இருந்து காத்து வருகிறார். மக்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வருகிறார்.

திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு வனப்பகுதிக்குள் இருக்கும் சிறிய கிராமமே பாலோடு. இங்குள்ள பச்சா எனும் மலைப்பகுதியில் வசிப்பவர் ஜே.ஆர். ராஜி(வயது 34). இவர்தான் பாம்புகளின் தோழியாக இருந்து துணிச்சலாக பாம்புகளை பிடித்து வருகிறார். திருமணமான ராஜிக்கு அனாமியா, அபிராமி என பெண் குழந்தைகள் உள்ளனர்.

பயிற்சியாளரிடம் ஒருநாள் மட்டுமே முறையான பயிற்சி பெற்ற ராஜி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 483 பாம்புகளைப்ப பிடித்து காடுகளில் பத்திரமாக விட்டுள்ளார்.

தனது பாம்பு பிடிக்கும் அனுபவம் குறித்து ராஜி நம்மிடம் கூறியதாவது:

''பாம்பு பிடிக்கும் கலையை நான் தொழிலாகச் செய்யவில்லை. இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்து வருகிறேன். மக்களுக்கு பாம்புகளைப் பற்றி விழிப்புணர்வும், அதேசமயம், பாம்புகளையும், மக்களையும் அழிவில் இருந்து காத்தும் வருகிறேன்.

என் தந்தை ஒரு ரப்பர் மரத்தொழிலாளி. நான் காடுகளில் வாழ்ந்து பழகியவள். இதனால், சிறுவயதில் இருந்தே பாம்புகளைப் பார்த்துப் பழகிவிட்டேன். சிறுவயதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து பாம்புகளை பிடித்து வந்தேன்.

பலநேரங்களில் பாம்புகளைத் தொட்டு விளையாடி இருக்கிறேன், ஆனால், ஒருபோதும் என்னை சீண்டியது இல்லை. இதையடுத்து, யுடியூப்பில் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பதைக் கற்றுக்கொண்டேன். அதன்பின் சிறிய அளவிலான பாம்புகளை மட்டும் பிடித்துவந்தேன்.

அதன்பின் கேரளாவில் உள்ள பாம்பு பிடிக்கும் வல்லுநரான பாபு பாலலயம் என்பவரிடம் என்னைப் பற்றிக்கூறி அவரிடம் முறைப்படி பாம்பு பிடிக்கும் நுனுக்கங்களை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருநாள் மட்டுமே முறைப்படி பயிற்சி அளித்து, பாம்புகளின் வகைகளையும், அதன் குணங்கள், தன்மைகள், விஷம் தாக்கும் முறை ஆகியவற்றை கூறினார்.

இந்த பயிற்சிக்குபின் நான் முதன் முதலில் ஒரு கருநாகப் பாம்பு தான் பிடித்தேன். அதன்பின் நான் வீடுகளில், நகர்ப்புறங்களில் பிடிக்கும் பலவகையான பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்து அதை காடுகளில் விட்டுவிடுவோம்.

நான் பாம்பு பிடிக்கும் விஷயத்தை மக்கள் அறிந்து வீடுகளில் எந்தவகையான பாம்புகள் இருந்தாலும் உடனடியாக எனக்கு போன் செய்து அழைக்கிறார்கள். இதற்காக நான் யாரிடமும் பணம் கேட்பதில்லை. சிலர் அன்பின் காரணமாக பணம் கொடுத்தாலும்கூட அதை மற்ற சேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

என்னுடைய கணவர் அனில்குமார் டிரைவராக பணிபுரிகிறார். அவரின் உதவியால் இருசக்கர வாகனம், நான்கு சக்கரவாகனம், லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்ட கற்றுக்கொண்டேன்.

நான் முதலில் பாம்பு பிடிப்பதைப் பார்த்து எனது கணவர் மிகவும் அச்சப்பட்டார். ஆனால், இப்போது என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை.

பாம்புகளைப் பிடிக்கும் போது கையுறை ஏதும் போடமாட்டேன் வெறும் கைகளை மட்டும் பயன்படுத்துவேன். பாம்பு பிடிக்கும் கருவிகளை வைத்து பாம்பு பிடிப்பது எப்போதும் சிறிது ஆபத்தானது. சிறிது தவறாக பிடித்துவிட்டாலும், அல்லது எந்திரக் கோளாறு ஏற்பட்டாலும் நாம் கடுமையான விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆனால், நான் செய்யும் பணி நல்ல சேவையாக இருக்கிறது. எனக்கு எந்த சிக்கலும் வராமல் கடவுள் பாதுகாப்பார் என்று நம்புகிறேன்.''

இவ்வாறு ராஜி தெரிவித்தார்.

பாராட்டுகள் சகோதரி...
தி இந்து சொய்திகளில்....

4 comments:

  1. பாம்பை கண்டால் பயமில்லை எனக்கு. ஆனா, கையில் பிடிக்குமளவுக்கு தைரியமுமில்ல.

    ராஜியின் சேவை பாராட்டுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. பாம்பை கண்டால் பயமில்லையா...

      அம்மாடி.....

      Delete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!