20 April, 2018

கற்றாழை ஜூஸ் உடலுக்கு நல்லதா..?



கற்றாழை... `Aloe Vera' என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை... என இதில் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன.

பொதுவாக அலோயின் (Aloin), அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் இருக்கின்றன.



கற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...

இந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்றாழையை உணவுப் பொருளாகவும், மருத்துவத்துக்கும், அழகு சாதனப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டுக் கொல்லையிலோ அல்லது தோட்டத்தின் கிணற்றோர வரப்புகளிலோ கற்றாழைச் செடிகளை நட்டு வளர்ப்பது கிராமப் பாரம்பரியங்களில் ஒன்றாக இருந்து வந்தது. இன்றும் கூட பலர் வீடுகளில் கற்றாழையை தொட்டிச் செடியாக வளர்த்து வருகின்றனர்.

பெரும்பாலும் பெண்களுக்கு உடல்சூட்டினால் வயிற்று வலி ஏற்பட்டால் சோற்றுக் கற்றாழை இலையின் தோலை நீக்கி விட்டு உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பொருளை உண்ணத் தருவார்கள். அதற்கு உடல்சூட்டைக் குறைக்கும் தன்மை உண்டு. அதன் காரணமாகத் தான் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை ஜெல் பலவிதமாகப் பயன்படுத்தம் படுகிறது.


எகிப்திய சொல் அகராதியின் படி கற்றாழை 'ஏபெர்ஸ் பாப்பிரஸ்' என்ற பெயரில் 16 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப் பட்டமைக்கு சான்றுகள் உள்ளன. இந்தியா, எகிப்தில் மட்டுமல்ல சீனா, ஜப்பான், கிரேக்கம், மெக்ஸிகோ, ஜப்பான் என உலக நாடுகள் அனைத்துமே நூற்றாண்டுகளாக கற்றாழையின் அருமையான பலன்களைப் பற்றி அறிந்து மருத்துவத்துறையில் அதனை “இறவாத்தன்மை கொண்ட தாவரம்” எனும் பெயரில் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றன. கற்றாழை அப்படி என்னென்ன பலன்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனப் பார்த்தோமானால்;


பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழையின் பங்கு...

ஜெனரல் டென்ட்ஸ்டிரி என்று சொல்லப்படக் கூடிய பல் பொது மருத்துவ மலரில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி கற்றாழை ஜெல் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசைக்கு பற்குழி வராமல் தடுக்கும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வேறு சாதாரண பற்பசைகளுடன் ஒப்பிடுகையில் கற்றாழை ஜெல் கலந்த டூத் பேஸ்டுக்கு பற்குழியை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏனெனில் கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆந்த்ரோக்யூனோன் எனும் மூலப்பொருளுக்கு பற்கள் மற்றும் பல் ஈறுகளில் உண்டாகும் காயங்களை ஆற்றும் சக்தி இருப்பதால் பற்கள் மற்றும் பல் ஈறுகளின் ஆரோக்யத்தில் கற்றாழை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.


மலச்சிக்கலைத் தடுப்பதில் கற்றாழை ஜெல்லின் பங்கு... 

நாளொன்றுக்கு 50 கிராம் முதல் 200 கிராம் வரையிலான கற்றாழை ஜெல்லை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கேப்சூகல்களாகவோ அல்லது தண்ணீரில் கலந்து ஜூஸாகவோ அருந்தினோமென்றால் 10 நாட்களில் மலச்சிக்கல் பிரச்னை படிப்படியாகக் குறைந்து நிரந்தரமாக மலச்சிக்கல் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்து விடும் என்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த மூலிகை மருத்துவ ஆராய்ச்சி கமிஷன் ஒன்று.

ஜெர்மனி அப்படிச் சொன்னாலும் கூட அமெரிக்காவில் கற்றாழை ஜெல்லை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை மருத்துவப் பொருட்களின் நம்பகத்தன்மைக்கு போதுமான சான்றுகள் சமர்பிக்கப் படாத காரணத்தால் அமெரிக்காவில் இப்போதும் கற்றாழை ஜெல் கொண்டு தயாராகும் மூலிகைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது மலச்சிக்கலைத் தீர்க்கும் எனும் லேபிளின் கீழ் விற்பனை செய்யப்படும் கற்றாழை ஜெல்லுக்கு அங்கே தடை உண்டு என்கிறார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரை கற்றாழை மூலிகைப் பொருட்களுக்கு பெரிதாக ஆபத்து ஒன்றும் இருப்பதில்லை. ஏனெனில் இங்கே கற்றாழை ஜெல் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கென வீடுகளிலேயே வளர்த்துப் பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுவதால் கற்றாழை மூலிகைக்கு இங்கே அத்தனை எதிர்ப்பு எழ வாய்ப்பில்லை என்றே கூறலாம்.

நீரழிவு நோயினால் தூண்டப்பட்டு ஏற்படக்கூடிய வயிற்றுப் புண்ணை ஆற்ற கற்றாழை ஜெல் பயன்படுகிறது.

கற்றாழையில் இருக்கும் ஆண்ட்டி ஆக்சிடன்ட்டுகள் மற்றும் ஆண்ட்டி மைப்ரோபியல் பண்புகளுக்கு காயங்களை எளிதில் ஆற்றக்கூடிய திறன் உண்டு.


சூரியனிலிருந்து வரும் கடும் புற ஊதாக்கதிர்களை தடுக்கும் சக்தி உண்டு.

ரேடியேஷன் தெரபிக்குப் பிறகு நோயாளியின் சருமம் கடுமையான ரேடியேஷனின் தாக்குதலால் வாடிப் போய் பொல்விழந்த தோற்றம் பெறுவதைத் தடுக்க கற்றாழை ஜெல் உதவுகிறது.

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!