17 May, 2018

புட் டெக்கரேஷன் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

காய்ச்சல் வந்தால் கஞ்சியும் துவையலும், ஜலதோஷத்துக்கு மிளகு ரசம், வயிற்று வலிக்கு ஓமம் என உணவில் மருத்துவத்தை ஒளித்து வைத்திருந்தது நம் பாரம்பரியம். கூடவே, எந்த உணவை எதனுடன் சேர்க்க கூடாது என்றும் சொல்லித் தந்தனர். ஆனால், இன்று  ‘ஃபுட் காம்பினேஷன்’, ‘ஃபுட் டெக்கரேஷன்’ என்ற பெயரில் ஆரோக்கியமான உணவைக்கூட, பல நிறங்களைச் சேர்த்து, ஆரோக்கியமற்றதாக்குகிறோம்.

நம்முடைய உணவு, சுவை (ரச), தன்மை (குண), திறன் (வீரியம்), செரிமானம் (விபாக) மற்றும் செயல்பாடு (பிரபாவம்) ஆகிய குணங்களைக்கொண்டது. இத்தனை குணங்களும் சரியான அளவில் இருந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். இதனால்தான், எந்தெந்தக் காலத்தில் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறை செய்திருக்கிறது நம்முடைய பாரம்பரிய மருத்துவம்.

காலத்துக்கு ஏற்ற உணவுகள்
வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். இதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும்.
 கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம். குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

வேளைக்கேற்ற உணவு 

காலை எழுந்தவுடன் திரவ உணவுக்குப் பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் காலை உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். அன்றைய நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக் கும்படி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை போன்றவற்றில் செய்த இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

காலை உணவு முடிந்து, நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, மதிய உணவைச் சாப்பிடுவது நல்லது. கீரைகள், பருப்பு, கைக்குத்தல், சிறுதானியங்களை சாப்பிடலாம்.

எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள் இரவில்  சிறந்தவை. இரவு 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம். தூங்கும் முன், பாலில் பனங்கற்கண்டு, மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம். இரவில் கபத்தை அதிகரிக்கும் உணவுகளான தயிர், இனிப்புகள், கீரை உடலில் செரிமானப் பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் தவிர்க்கவும்.

இடத்துக்கு ஏற்ற உணவுகள் 

எந்த இடத்தில் வாழ்கிறோமோ, அந்த இடத்தைச் சுற்றி விளையும் உணவுகளே உடல்நலத்திற்கு ஏற்றவை. பழங்களில் கொய்யா, நெல்லி, மாதுளை, திராட்சை, வாழை, சாத்துக்குடி, சப்போட்டா, கமலா, போன்றவையும், காய்களில் கத்திரிக்காய், தக்காளி, பரங்கிக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் எனப் பயன்படுத்தலாம்.

எப்படி சாப்பிடக் கூடாது?
பிரியாணி சமைக்கும்போது, தயிர் அல்லது பால் சேர்க்கக் கூடாது. இதனால் தோல் பிரச்னைகள் வரக்கூடும். பிரியாணி சாப்பிட்டதும், குளிர்பானம் குடித்தால் உடனடியாகச் செரிமானம் ஆகும் என்பது தவறு. பிரியாணி சாப்பிட்ட பின்,  செரிமானமாக சூடாக இஞ்சி டீ குடிக்கலாம்.

புளிப்புச் சுவையுடன் பால் சேர்த்துக் குடிக்கக் கூடாது. வைட்டமின் சி பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் ஐஸ்கிரீமை சேர்க்கக் கூடாது.

மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி போன்ற பழங்களுடன் பால் சேர்த்து மில்க் ஷேக்காக சாப்பிடக் கூடாது.  அதிக செரிமான சக்திகொண்டவர்கள், ஆப்பிள் மற்றும் வாழைப்பழ மில்க் ஷேக் அருந்தலாம்.

பிரெட் டோஸ்ட் செய்யும்போது, பிரெட்டை பாலில் நனைத்து, முட்டையில் பிரட்டி டோஸ்ட்செய்து, அதில், காய்கறிக் கலவையை வைத்துக் கொடுக்கின்றனர். இது வயிற்றுக் கோளாறை உருவாக்கும்.
மஞ்சள், நல்லெண்ணெய், வெந்தயம், பூண்டு தட்டிப் போட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.

மது அருந்திய பிறகு அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது.  இரண்டு எதிர்வினைகள் உடலில் ஒன்றாக சேரும்போது வேதி மாற்றம் உடலில் நடைபெறும்.

‘ஜெனரல் டயட்’ எனப்படும் பொதுவான உணவுமுறை எல்லோருக்கும் பொருந்தாது. ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி தனக்கான உணவுமுறையை பின்பற்றலாம். 

1 comment:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!