08 August, 2018

கலைஞர் கருணாநிதி நினைவலைகள்.... அறிய தகவல்கள்... புகைப்படங்கள்....



உடன் பிறப்பே... ஒவ்வொரு திமுக தொண்டனின் நாடி நரம்புகளையும் புடைக்கச் செய்யும், புத்தெழுச்சியுடன் உந்தித் தள்ளும் இந்த ஒற்றைச் சொல்லை தன்னுடைய உடன் பிறவாச் சகோதரர் அண்ணாவிடமிருந்து வாங்கி, அதை ஒவ்வொரு திமுக தொண்டனின் வாழ்க்கை மந்திரமாக மாற்றிய பெருமைக்குரியவர் - கலைஞர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் கருணாநிதி


திராவிட இயக்கப் பெருந்தலைவர்களில் தவிர்க்க முடியாத தனிப் பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி. பெரியார், அண்ணா வழியில் பீடு நடை போட்டு வந்த கருணாநிதியின் வாழ்க்கைப் பாதையில் ரோஜாப் பூக்களை விட முட் புதர்களே அதிகம்.. அதையும் தாண்டி சாதனை படைத்த பெருந்தகையாளர் கருணாநிதி. அவரது வாழ்க்கை வரலாற்றின் மிக முக்கிய துளிகளில் சில உங்களது பார்வைக்கு.



நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.




கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.




முக தொடங்கப்பட்டபோது, கருணாநிதி 25 வயது இளைஞர். திமுக நிறுவப்பட்ட போது அதன் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி இல்லை என்பது உண்மை. ஆனால், 1959-ல் அவர் கட்சியின் பொருளாளர் ஆகிவிட்டார். 1967-ல் அண்ணா, நாவலருக்கு அடுத்தபடியாக மூன்றாவது அந்தஸ்தில், பொதுப்பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. இவ்வளவு வேக வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், அவரது அயராத உழைப்பும் சமயோசிதமான முடிவுகளும்!




கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.




கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து. எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.



கடுமையான உழைப்பாளி கருணாநிதி என்பதும் தீவிரமான வாசகர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாப் பணிகளுக்கு இடையிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். 10 நாவல்கள், 21 நாடகங்கள், 8 கவிதை நூல்கள், 37 சிறுகதைகள், 6 உரை நூல்கள், ஒரு பயண நூல், தன் வரலாறு என்று ஏராளமாக எழுதியவர். தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் மட்டும் 12 தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. சட்ட மன்ற உரைகள், மேடைப் பேச்சுகளைத் தொகுத்தால் அவை பல லட்சம் பக்கங்களுக்கு விரியும்!



கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.




கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13 வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார்.



தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட கால முதல்வர் கருணாநிதிதான். நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவரேதான். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச இடங்களில் வென்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது அவருடைய தலைமையின் கீழ்தான் - 1971 தேர்தலில் 182 இடங்கள்; அதிகபட்ச இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியானதும் அவருடைய தலைமையின் கீழ்தான் - 2016 தேர்தலில் 89 இடங்கள்


ஆண்டு தொகுதி வாக்கு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்கு வாக்கு வேறுபாடு

1957 குளித்தலை 22785 கே. எ. தர்மலிங்கம் காங்கிரசு 14489 8296
1962 தஞ்சாவூர் 32145 பரிசுத்த நாடார் காங்கிரசு 30217 1928
1967 சைதாப்பேட்டை 53401 எஸ். ஜி. வினாயகமூர்த்தி காங்கிரசு 32919 20482
1971 சைதாப்பேட்டை 63334 என். காமலிங்கம் காங்கிரசு 50823 12511
1977 அண்ணா நகர் 43076 ஜி. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 16438 16438
1980 அண்ணா நகர் 51290 எச். வி. ஹண்டே அதிமுக 50591 699
1989 துறைமுகம் 41632 கே. எ. வகாப் முஸ்லீம் லீக் 9641 31991
1991 துறைமுகம் 30932 கே. சுப்பு காங்கிரசு 30042 890
1996 சேப்பாக்கம் 46097 S. S. நெல்லை கண்ணன் காங்கிரசு 10313 35784
2001 சேப்பாக்கம் 29836 தாமோதரன் காங்கிரசு 25002 4834
2006 சேப்பாக்கம் 34188 தாவுத் மியாகான் சுயேச்சை 25662 8526



நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.




தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.


தி.மு.க. தேர்தல் செலவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்ததைப் பாராட்டி, அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்தைக் இதுவரை கருணாநிதி கழற்றியதே இல்லையாம். ஆனால், இதுவரை அவர் ஒரு முறை கூட , தங்க சங்கிலியை தனது உடலில் அணிந்ததில்லையாம்.




எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.


இவருக்கு யோகா கற்றுக் கொடுத்தவர் டி.கே.வி.தேசிகாச்சார் .யோகா செய்யும்போது, நாராயண நமஹ என்பதற்குப் பதிலாக, `ஞாயிறு போற்றுதும்' என்று கருணாநிதி கூறுகின்றாராம். ஆனால், இரண்டும் ஒன்று தான் என்று தேசிகாச்சாரி கூறியுள்ளார். 



மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.



கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.




50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .


கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.



1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார்.



பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.



கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.



கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.


21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.


இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.



கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த 
படங்களின் எண்ணிக்கை 9.



கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார். 


கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.


கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.


இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.



சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.



1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.


33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார்
கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.


கருணாநிதியின் சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.


தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.


முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.


இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.


இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.


1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.


1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.


1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.


எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.


ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.



'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.


தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.


தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.



2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.



சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.


கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.



1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.


மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.



1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.


அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.


கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.


உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.


`சங்கத்தமிழ்', `தொல்காப்பிய உரை', `இனியவை இருபது', `கலைஞரின் கவிதை மழை',உட்பட 150-க்கும் மேலான நூல்களை கருணாநிதி எழுதியிருக்கிறார்.


உடன்பிறப்புகளுக்கு இவர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.


முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.


 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில் எழுதினார் கருணாநிதி.



ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான். இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.


கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.




இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.


சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.


தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.


சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.


சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.


1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.


தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.


எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.


சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.


நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.


1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.


1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.


நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.


உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.


கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.


கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.


கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.


கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.


தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.


தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.


தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.


உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.


2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.


பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.



நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.


கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.


ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி என 12 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.


கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.


உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.


விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.


ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு எழுதி கொடுத்தார் கருணாநிதி.


2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.


எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.


அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.







கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

ராஜகுமாரி  (1947)
அபிமன்யு (1948)
மந்திரி குமாரி (1950)
மருதநாட்டு இளவரசி(1950)
பராசக்தி (1952)
பணம் (1952)
மணமகள் (1952)
திரும்பிப்பார் (1953)
மனோகரா (1954)
அம்மையப்பன் (1954)
ராஜா ராணி (1956)
புதுமைப்பித்தன் (1957)
ரங்கோன் ராதா (1956)
புதுமைப்பித்தன் (1957)
தாயில்லா பிள்ளை (1961)
காஞ்சித்தலைவன் (1963)
பூம்புகார் (1964)
பூமாலை (1965)
அவன் பித்தனா? (1966)
கண்ணம்மா (1972)
பிள்ளையோ பிள்ளை (1972)
காலம் பதில் சொல்லும் (1980)
பாலைவன ரோஜாக்கள் (1985)
நியாய தாராசு (1989)
மதுரை மீனாட்சி (1993)
புதிய பரவசம் (1996)
பெண் சிங்கம் (2010)
உளியின் ஒசை(2010)
இளைஞன் (2011)
பாச கிளிகள்(2016)
மண்ணின் மைந்தன்
புதிய பராசக்தி
நீதிக்கு தண்டனை
பாசப் பறவைகள்
பாடாத தேனீக்கள்
பாலைவனப்பூக்கள்
உளியின் ஓசை
பொன்னர் சங்கர்


திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

பணம் (1952)
எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

வசனம் எழுதிய திரைப்படங்கள்

ராஜகுமாரி (1947)
மலைக்கள்ளன் (1954)
அரசிளங்குமரி (1961)

திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள்


ஊருக்கு உழைப்பவண்டி - மந்திரிகுமாரி
இல்வாழ்வினிலே ஒளி.. - பராசக்தி
பூமாலை நீயே - பராசக்தி
பேசும் யாழே பெண்மானே - நாம்
மணிப்புறா புது மணிப்புறா - ராஜா ராணி
பூனை கண்ணை மூடி - ராஜா ராணி
ஆயர்பாடி கண்ணா நீ - ரங்கோன் ராதா
பொதுநலம் என்றம் - ரங்கோன் ராதா
அலையிருக்குது கடலிலே - குறவஞ்சி
வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சித்தலைவன்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற - பூம்புகார்
கன்னம் கன்னம் - பூமாலை
காகித ஓடம் - மறக்கமுடியுமா
ஒண்ணு கொடுத்தா - மறக்கமுடியுமா
நெஞ்சுக்கு நீதியும் - நெஞ்சுக்கு நீதி

திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள்

பொன்னர் சங்கர் எனும் பெயரில் கருணாநிதி எழுதிய கதை நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.


நாடகத் துறைக்கான பங்களிப்புகள்

சிலப்பதிகாரம்
மணிமகுடம்
ஒரே ரத்தம்
பழனியப்பன்
தூக்கு மேடை
காகிதப்பூ
நானே அறிவாளி
வெள்ளிக்கிழமை
உதயசூரியன்
நச்சுக் கோப்பை

இலக்கியப் பங்களிப்புகள்
குறளோவியம்
நெஞ்சுக்கு நீதி
தொல்காப்பிய உரை
சங்கத் தமிழ்
‎பாயும் புலி பண்டாரக வன்னியன்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
வெள்ளிக்கிழமை
இனியவை இருபது
சங்கத் தமிழ்
பொன்னர் சங்கர்
திருக்குறள் உரை
‎மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று


#HbdKalaignar95 #DMK

4 comments:

  1. வாசிக்க வாசிக்க பிரமிக்க வைக்கிறது... என்னே ஒரு சகாப்தம்...!

    ReplyDelete
    Replies
    1. புகைப்படங்களையும் செய்திகளையும் ஒரு வாரமாக தொகுத்துக் கொண்டிருந்தேன்...

      கண்ணீரோடு....

      Delete
  2. அரிய புகைப்படங்களும் செய்திகளும் வியக்க வைக்கின்றன
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!