08 September, 2018

பாகற்காயும்... பகுத்தறிவும்...



ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, 

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே , நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும், எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்.... எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

மாற்றங்கள்....!!

மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!!!!!


*************************



சுந்தர்  வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

கண்ணன்  சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?


சுந்தர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

கண்ணன் : இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

சுந்தர் : இப்படி வைங்க. நான் என்ன செய்றேன்னு கவனிங்க. இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

கண்ணன் : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சுந்தர் : சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

கணணன்  : எப்படிச் சொல்றீங்க?

சுந்தர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை. நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க. இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

கண்ணன் : நான் மறுக்கலே. இருந்தாலும் ஒண்ணுசொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

******************************



அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8-ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.



யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப்பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். 

அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

****************************** 

4 comments:

  1. உண்மையான கருத்துக்கள். சுவாரசியமாக இருந்தது.

    //சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

    கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!// பலரின் நிலைமை இதுதான்

    உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...

    https://sigaram6.blogspot.com/2018/09/blog-post_8.html

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!