14 September, 2018

மூடநம்பிக்கையின் வில்லன்.. எம்.ஆர்.ராதா



போர்வாள் நாடகத்தில் ஒரு காட்சி. பெரியாரின் படம் வைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒருபுறம் ராதா. மறுபுறம் அவரது நண்பர். அவர் கேட்பார்.


'பெரியார் படத்தை வீட்ல மாட்டி வெச்சிருக்கியே, அப்படி அவர் என்னதான் செஞ்சுட்டாரு?'

'என்ன செஞ்சாரா? உன் நெத்தியையும், என் நெத்தியையும் பாரு.'

'ஏன்? அதுல ஒண்ணுமில்லையா!'

'அதை யார்ரா செஞ்சாங்க? ஐயா தான் செஞ்சார். இல்லேன்னா உன் நெத்தியில நீளமா ஒரு மார்க். என் நெத்தியில குறுக்க ஒரு மார்க் இருந்திருக்கும். மார்க் டிபரன்ஸ் வந்தாலே பிரச்சனை தாண்டா...'


'நீ சொல்றதும் சரிதான்.'

'இன்னொரு விஷயம். ஹோட்டல்ல போய் உக்காந்துகிட்டு நம்ம காஸைக் குடுத்துட்டு சாமி ஒரு காபி குடுங்கன்னு கேட்டுக் கிட்டிருந்தோமே, இப்ப என்ன பண்ணுறோம்? ஓய் அய்யர், ஒரு காபி குடுங்கன்னு கேக்குறோம். இந்த சவுண்டு யார்ரா குடுத்தது? பெரியார் ஐயா தானே...'

மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட இந்த நாடகம், அரசால் தடை செய்யப்பட்டது. 'சர்வாதிகாரி' என்று பெயர் மாற்றி அதே நாடகத்தைத் தொடர்ந்து பல ஊர்களில் நடத்தி வெற்றிக்கொண்டார் ராதா.


*****************************



பொதுவாக ராதா தன் நாடகங்களில் வரும் வேலைக்கார கதாபாத்திரங்களின் பெயர்களை ராமன் அல்லது முருகன் என்றே வைத்துக் கொண்டார். லட்சுமி காந்தனில் வேலைக்காரன் ராமனோடு ஒரு காட்சி.அவன் தன் நெற்றியில் பெரிய நாமம் ஒன்றைப் போட்டிருக்கிறான்.

'டேய் என்னடா இது?'

'பேங்கு.'

'இங்க யாருடா வருவாங்க?'


'பணம் போடுறவங்க.'


'ஏண்டா பணம் போடுறவங்க உள்ளாரா வரும்போதே வாசல்ல நீ இப்படி இருந்தா, எவண்டா நம்பி பணத்தைப் போடுவான். எதுக்காகடா இதை போட்டுக்கிட்டுஇருக்க?''


'பாதம், எம்பெருமான் பாதம்.'


'ஓ...எம்பெருமான் பாதத்தை நீங்க நெத்தியில போட்டுக் கிட்டுருக்கீங்களா. ஆமா அந்த எம்பெருமான் நெத்தியில போட்டிருக்கே அது யார் பாதம்டா? தெரிஞ்சுக்க. தெரிஞ்சிக்கிட்டு வந்து அப்புறம் போடு.' 

********************************



தூக்குமேடையில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

'யாருண்ணே இது?'

'அண்ணிடா.'

'அண்ணி காலைப் பாருங்க'

'என்ன?'

'யானைக்கால் மாதிரி இருக்கு.'

'போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்குறதைச் சொல்ல வந்துட்டான்.'

*****************************



ராதா ஒரு புதிய நாடகத்தைத் தயாரித்தார் அதன் பெயர் விமலா அல்லது விதவையின் கண்ணீர்.விதவைகள் பிரச்சனையைக் கூறி மறுமணத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதை. சும்மா இருப்பார்களா பெரிசுகள்? அவனா, அவன் தாலியறுத்தவளுக்குக் கூட மேடையிலேயே தாலி கட்டி வைப்பான் என்று எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். எப்படி நீ நாடகத்தை நடத்துறேன்னு நாங்களும் பார்க்கறோம் என்று மிரட்டினார்கள்.


நாடகத்துக்கான தேதி குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.


'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நமது சாஸ்திரத்துக்கு சம்பிரதாயத்துக்கும் எதிரான நாடகம். அதை நடத்தினால் சமூக அமைதி குலையும். அதனைத் தடை செய்ய வேண்டும்' என்று நாகப்பட்டினம் கோர்ட்டில் பெட்டிஷன் போட்டார்கள். ஜட்ஜ் கணேசய்யர், அந்தப் பெட்டிசனைப் பார்வையிட்டார். அவருக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உண்டு. ஆனால் நேர்மையானவர்.


'நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்' என்று சொன்ன கணேசய்யர், அன்று மாலையே அரங்கில் வந்து உட்கார்ந்தார். விதவையின் கண்ணீர் ஆரம்பமானது. எந்தவிதப் பிரச்னையும் இன்றி முடிந்தது.


கணேசய்யர் மேடையேறினார். ராதாவின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்.


'இந்த மாதிரி நாடகங்கள் இங்கு நடந்தால் மட்டும் போதாது. இந்தியா முழுவதும் நடைபெறவேண்டும். இப்படி நாடகத்தைத் துணிந்து தயாரித்து, மேடையேற்றிய நண்பர் ராதாவை மனமார வாழ்த்துகிறேன். அவருடைய இந்த நாடகம் எல்லா வகையிலும் வெற்றி பெற என் ஆசிகள்.'


ஒவ்வொரு ஊரிலும் இந்த நாடகம் வெற்றிபெற ஆரம்பித்தது. திராவிடர் கழகத்தினரின் பரிபூரண ஆதரவு ராதாவுக்குக் கிடைத்தது. பெரியாருக்கும் ராதாவின் மேல் தனி மதிப்பு தோன்றியது அந்தச் சமயத்தில் பாரதிதாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'ராதா எங்கள் கழக நடிகர். அவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்.'

- எம். ஆர். ராதா - கலகக்காரனின் கதையிலிருந்து...

1 comment:

  1. பட்டை நாமம் ... எம்பெருமான் பாதம் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் .. >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!