09 October, 2023

சரியான முதல் பாடம் ...




 நம்மால் முடியாதது எது, நமக்கு எல்லாம் தெரியும், நாம் எல்லாம் கற்று விட்டோம், நமக்குள் எல்லா திறனும்  இருக்கிறது என்ற ஒரு ஆணவம் ஒவ்வொருகுள்ளும் ஒளிந்திருக்கும்...


அது அவர்களை விட்டு எளிதில் அகன்று விடாது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் அந்த ஆணவம் தலைக்கு ஏறிக்கொண்டு இருக்கும். "இது நம்மால் மட்டும் தான் சாத்தியம்" நான் கை வைத்தால் போதும் அது வெற்றி தான் என்கிற மனநிலை...

முதல் அடி விழும். அந்த அடி எப்பொழுது, எங்கு, எப்படி விழுகிறது என்றே தெரியாது. அந்த முதல் சறுக்கல் அல்லது அந்த முதல் ஒரு பயணத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த அடி விழும். அந்த அடி தான் அவர்களுக்கு ஒரு சரியான பாடத்தை சொல்லித் தரும்.

அந்தப் பாடம் அடுத்த நகர்வை எப்படி சரியாய் நகர்த்துவது என்பதுதான். ஆணவத்தை அழிக்கும் அந்த முதல் பாடம் தான் இனி ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்.

இது நம் வாழ்வில்  செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இது பொருந்தி போகும் ஒரு சருக்களுக்குப் பின் நாம் எடுத்து வைக்க ஒவ்வொரு அடியும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். என்னவென்றால் சிலர் இதை ஆரம்பத்திலேயே கற்றுகொள்வார்கள், பலர் பாதியில், சிலர் இறுதியில் எது எப்படியோ நான் சரியாக கடந்து போக வேண்டும் தவறுகளை களைய வேண்டும் என்பதை அந்த ஒரு சறுக்கல் உறுதியாய் சொல்லிக் கொடுக்கும்.

இந்திய உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய ஆஸ்திரேலியா உடனான போட்டி அதைத்தான் இந்திய அணிக்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆரம்பத்தில் இருந்த மனநிலை என்பது நாம் 20-20 போட்டியிலேயே 200 அடிக்கிற ஆட்கள்... 50 ஓவர் உள்ள இந்தப் போட்டிக்கு வெறும் 200 ரன்கள் என்பது இந்திய அணிக்கு ஒரு சாதாரண விஷயம் என்று கருதிக் கொண்டிருந்தனர். 

ஆனால் அந்த ஆணவத்தை உடைக்க இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற நிலை வருகிற போது, எப்படி பந்துகளை எதிர்கொள்ள வேண்டும், எவ்வாறு பொறுமையாக ஆட வேண்டும், எவ்வாறு வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற பாடத்தை இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலே தெரிந்து கொண்டு விட்டது.

என்னுடைய கணிப்பின்படி இனி ஒவ்வொரு ஆட்டங்களிலும்  அனைத்து வீரர்களும் வெற்றிக்கான நகர்வை  கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். எப்படி பொறுமையாக ஆட வேண்டும், என்ற போராட்ட குணம் அனைவருக்குள்ளும் வந்திருக்கும். 

இந்த முதல் அடி தான் ஒவ்வொரு வெற்றியையும், அனைவரும் ஒன்று சேர்ந்து, பொறுமை காத்து  போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையை இந்திய அணிக்கு  எடுத்துரைத்திருக்கிறது.

விளையாட்டில் வெற்றி  தோல்வி என்பது சகஜம்தான். அதை எப்படி அடைகிறோம் என்பதில் தான் நமக்கான மதிப்பின் பங்கு இருக்கிறது. 

இந்தப் பாடத்தை களத்தில் நின்று எழுதிட முடியாத வரிகளில் அனைவருக்கும்  சொல்லிக் கொடுத்திருந்தார்கள் வீரட் கோலியும்... கே எல் ராகுலும்...

இனி வரும் ஆட்டங்களில்  இந்தியா ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக பொறுமையாக முன்னேறும்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏனென்றால் கல்வியும் பாடமும் தான் ஒருவரை வாழ்க்கையில் மென்மேலும் உயர்த்துகிறது. சிலர் ஏட்டு பாடத்தை கற்காமல் வாழ்க்கை பாடத்தை படித்து உயர்ந்திருப்பார்கள். அதுவும் ஒரு வகையில் கல்வி தானே.

#கற்பது_முக்கியம்..
கவிதைவீதி சௌந்தர் 
09-10-2023.

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!