25 March, 2024

இந்தபதிவை படித்தால் புரிந்துவிடும்... அவ்வளவுதான்....




இதை படித்தால் புரிந்துவிடும்... அவ்வளவுதான்.... இந்த நூலைப்பற்றி சுருங்கச் சொல்ல... ஐயா விமலன் அவர்களுக்கு என் நன்றிகள்

எனது நூல் பற்றிய திறனாய்வு பதிவு...!

படித்து முடித்தவுடன் அல்ல சற்று தாமதம் கொண்டே எழுதுகிறேன். கவிதை வீதி சௌந்தர் அவர்களின் 

"சிதறிய மனசின் சில்லுகள்"

"என் இரவுகளின் அரிதாரங்கள்" இரண்டு கவிதைதொகுப்புகளையும் பற்றி!

முதலாவது சமூக நடப்புகள் சுமந்தும், இரண்டாமாவது முழுக்க காதல் சுமந்துமாய் நம்மை கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது.

காதலற்று சமூகமும்,சமூகத்தில் காதலற்று இருப்பதும் சாத்தியமற்றது தானே,,,? ஆகவே இரண்டையும் பிசைந்து நேர்த்தி கொண்டு தந்திருக்கிறார்.

விழி இடறச்செய்யா எழுத்தும், மனம் தடுமாறச்செய்யா நடையும், இவை இரண்டுடன் கைகோர்த்து புத்தகம் முழுக்க நிறைந்திருக்கிற படங்களும் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாகவே!

மனம் முழுக்கபாரம் சுமந்தலைபவனின் ஒற்றை தினத்து நகர்வையும் , அவனின் துயரத்தையும், அன்றைய தூக்க நேர இரவின் தலையணைகள் உள் வாங்கிக் கொள்கின்றன என்பதை.... //படுத்து முகம் புதைத்து கண்ணீர் வடித்து எத்தனை சோகத்தையும் சொல்லி அழுதாலும் ரக்சியமாய் வைத்துக்கொள்கின்றன தலையணைகள் //என்பதை "தலையணை ரகசியம்" கவிதையில் கோடிட்டுக்காட்டிவிட்டு...

"புரிதலின் இடைவெளியில்" கவிதையில் ஆடுகளை மேய்த்தே  அறிவு வளர்த்தோன் நம் முன்னோர் என ஆரம்பித்து...

//புரிந்தும் புரியாத இடைவெளியில் ஐந்தறிவும், ஆறறிவும்//எனமுடிக்கிறார்.  உடல் நலமில்லாததால் தன் ஆடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச்செல்லாத மேய்ப்பவனின் நிலையைச்சொல்லி...!

வேலையில்லா பட்டதாரியை இச்சமூகம் பார்க்கிற பார்வையையும்  மதிப்பிடுகிற நிலையையும், அவனின் மன வேதனைகளையும்...

//முயன்று பார்த்து தோற்றேதான் போகிறது என் தற்கொலை. என்னை மலை போல் மனதில் வைத்து நம்பிகையோடு தவம் கிடக்கும் என் அம்மாவுக்காக// என பொறுமுகிறார். "தள்ளிப்போகிறது தற்கொலை" கவிதையில்!

பெயருக்கும் நடத்தைக்கும் காத தூரமிருப்பதை "பெயரில் என்ன இருக்கிறது" கவிதையில் //அழைக்கவும் அடையாளப்படுத்தவும் என்பதைத்தவிர்த்து// என அழுந்த ஞாபகப்படுத்துகிறார்.

கட்டப்பட்டிருக்கிற வாழைமரங்களுக்கும் இசைத்துக் கொண்டிருந்த மங்கள நாதஸ்வர இசைக்கும், அலங்கரிக்கரிக்கப்பட்டிருந்த மணடபத்திற்கும் இடையே சட்டென்று சத்தமில்லாது காணாது போய்விடுகிற மணப்பெண்ணின் தனிமையை //சட்டென கதவு தட்டிய சத்தம் கேட்டு அறை முழுவதும் தறிகெட்டு ஓடியது மணப்பெண்ணின் கடைசித்தனிமை//என பெண்ணின் நிலைபற்றிச் சொல்கிறார்  "கடைசித்தனிமை" கவிதையில்.

அலைபேசி  வந்து விட்ட பின் மனிதன் சந்திக்கிற இடர் பற்றியும் அடைகிற துயர் பற்றியும்.... "இப்படியாய் நடந்த விபரீதம்" கவிதையில் சிட்டுக்குருவி பாஷையில் வருத்தம் தெரிவிக்கிறார் //கதிர் வீச்சால் வம்சத்தை இழந்த சிட்டுக்குருவி ஒன்று//என.

புது வாசம் பூசிக்கொண்ட புத்தம் புது வீட்டின் மஞ்சத்தில் தம்பதிகள் சங்கமிக்கிற அதே வேளையில் தான் வசித்த மரங்களைத்தேடி அலைகிற பறவைகளின் நிலையை //இருந்த இடம் தெரியாமல் போன நெடும் மரங்கள் தேடி வீட்டைச்சுற்றி சோகமாய் சிறகடித்துக்கொண்டிருக்கி _றது கூட்டை இழந்த ஒரு பறவைக் குடும்பம்// என கவலை கொள்கிறார் "தேடித்திணரும் சிறகுகள்" கவிதையில்

இப்படி உயிர்ப்பாயும் தன் முனைப்புடனுமாய் "சிதறிய மனசின் சில்லுகளில்" சமூகம் பற்றியும்,

"என் இரவுகளின் அரிதாரங்களில் தொகுப்பு முழுக்க காதல் பற்றியுமாய் எழுதியிருக்கிறார்.

தனக்கு வராத கடிதத்தை தராத தபால் தபால்க்காரர் தன்னைக்கடந்து செல்கையில் காதலியை நினைத்து  //அடிப்பெண்ணே நீ கடித்தைக்கூடவா மௌளனத்தில் போடுவாய்// எனக்கேட்கிறார் மௌனத்தை மட்டுமே பாஷையாய் சுமந்து கொண்டிருக்கிற காதலியை நோக்கி! "வார்த்தைகளின் வஞ்சனைக்காரி" கவிதையில்!

மனம் தேக்கி வைத்திருந்த காதலை  அன்பும் ஆசையுமாய் சொல்ல செல்கையில் மற்றதெல்லாம் பேசிவிட்டு அவசியமானதை பேசாது விட்ட சோகத்தை //இப்படியாய் அவளிடத்தில் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தேன். இதயத்தில் தேக்கி வைத்த காதலை சொல்ல நினைத்து// என ஆதங்கம் கொள்கிறார்.

பேருந்துப்பயணத்தில் பார்த்தவளிடம் ஆசை கொண்டுஅவளின் செய்கைகள் அனைத்தையும் ரசித்தவாறே செல்கிறவன் தான் இறங்கவேண்டிய நிறுத்தம் மறந்து இயக்கமற்றுப் போனதை //என் இயக்கத்தை கொண்டு செல்கிற அவளை புள்ளியாய் மறையும்வரை பார்த்தவாறே// என்கிறார் "இறங்குமிடம் மறந்து போகிறேன்" கவிதையில்.

புவி வெப்பமயமாவதும், ஓசோனில் விழுந்து விட்ட ஓட்டையும் மங்கல்யான் பற்றியும் செய்திகள் ஆயிரம் வந்து கொண்டேயிருந்தாலும் அன்றாட நகர்வுகளில் உன் நினைப்பு தவிர்த்து வேறென்றும் கிடையாது என்னிடத்தில் என்பதை //இதையெல்லாம் விடுத்து அன்பே உன்னைப்பற்றிய கவலைதான் எனக்கு// என ஆதங்கம் கொள்கிறார். "என்னின் கவலையெல்லாம்" கவிதையில்.

வருகிறேன் எனச்சொல்லிவிட்டு வராமல் போன நாட்களில் வெறுமையாய் வெற்றாய் கடற்கரை மணலையும், ஒற்றைப்படகையும் வெற்று வெளியையும் அலைகலையும் அங்கு ரசித்து விட்டு வருகிறேன். //வருகிறேன் என்று சொல்லி அவள் வராத நாட்களில்//என வருத்தம் கொள்கிறார்  "அவள் வராத நாட்களில்" கவிதையில்.

இப்படி சொற்களாய், எழுத்துக்களாய் பரிமாறிக்கொள்ளப்பட்ட வார்த்தைகளாய்  இப்புத்தகம் முழுமைக்குமாய் பயணப்பட்டிருக்கிற கவிதை வீதி சௌந்தர் அவர்களின் கவிதைகள்...

// படர்ந்து கிடக்கும் நிசப்தப் பெருவெளியில் என் கரம் பிடித்து கரை சேர்க்கிறது உன் ஒற்றைப் புன்னகை // என முடிகிறது.

ஆரம்பத்தின் திருப்தி முடிவிலும்!

தமிழ் இலக்கியப்பரப்பில் இவ்விரு கவிதைத்தொகுப்புகளும்  பேசப்படவும், வெகுதூரம் பயணப் படவும் தமிழ் இலக்கிய வாசகனாய் வாழ்த்துகிறேன்.

அன்புடன்

விமலன்.

http://vimalann.blogspot.com/

 

நன்றி ஐயா தங்களின் விமர்சனத்திற்கு.....

13 March, 2024

இன்னும் ஒரு அடி முன்னே...


வணக்கம் நண்பர்களே...

2004 ஆம் ஆண்டில் தூங்காத விழிகளோடு.... என்ற கவிதை நூலும், 2006-ஆம் ஆண்டு என் பேர் பிரம்மன்... என்ற கவிதை நூலும் வெளியிட்டு மகிழ்ந்த நான் 2010 முதல் இத்தளத்தில் எழுதி வருகிறேன்... நீண்ட நாட்களுக்கு பிறகு என் கவிதை தொகுப்பை வெளிவர முயற்சித்ததின் விளைவாக....

 "சிதறிய மனசின் சில்லுகள்"

"என் இரவுகளின் அரிதாரங்கள்"
என்ற இரு கவிதை நூல்களை கடந்தஆண்டு 2024 டிசம்பர் 3-ம் தேதியன்று திருவள்ளுர் மைய நூலகத்தில் சான்றோர் பெருமக்களால் வெளியிடப்பட்டது.
அன்று முதல் ஆன்றோர் மற்றும் சான்றோர் பெருமக்களாலும் , நண்பர்கள் மற்றும் ஆசிரிய சகோதர சகோதரிகளாலும் அளித்த வரும் ஆதரவில், அவர்களால் வழங்கி வரும் பாராட்டு மழையில் நெகிழ்ந்துக்கொண்டு இருக்கிறேன்.
மாவட்டம் தாண்டி என் நூல் பயணித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. முன்பின் தெரியாத வாசகர்களின் பாராட்டு தான் எனக்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய வெகுமதியாய் கருதுகிறேன்.
மகிழ்வுடன்... நன்றிகள்...

நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க...


இலக்கிய உலகில் இன்னும் ஒரு அடி முன்னோக்கிய நகர காலம் கொடுத்த இந்த ஆசீர்வாதத்திற்கு தலைவணங்குகிறேன்...

நன்றி வணக்கம்...