27 April, 2013

கண்டிப்பாக மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!


பொதுவாக மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்க கூடாது என்று சொல்வார்கள். அதிலும், மருத்துவர்களிடம் நம்மைப் பற்றி எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையைச் சொல்வது மிகவும் அவசியம். ஏனெனில் அவ்வாறு உண்மையைச் சொன்னால் தான், சரியான மருத்துவத்தை அவர்கள் செய்ய முடியும். 

இல்லையெனில் அவர்களால் எந்த ஒரு மருத்துவத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே நமக்கு சிறப்பான மருத்துவ உதவியைச் செய்ய எந்த விஷயத்தையெல்லாம் மறைக்கக் கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம். அவற்றையெல்லாம் மறைக்காமல் இருந்தால், மருத்துவர்கள் மருத்துவத்தை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

தவறான பழக்கவழக்கங்கள்

புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அவற்றை மருத்துவ ஆலோசனையின் போது தயக்கமின்றி சொல்வது அவசியம். துள்ளியமாக மருத்துவம் செய்ய இது போன்ற தகவல்கள் இன்றியமையாதவையாகும்.
முந்தைய அறுவை சிகிச்சைகள்


முந்தைய காலகட்டத்தில் ஏதாவது அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருந்தால், அது குறித்த விளக்கங்கள் மற்றும் சிகிச்சைத் தொடர்பான ஆவணங்கள் இருப்பின், அவற்றை மருத்துவரிடம் கொடுக்க வேண்டும். இது மருத்துவர்கள் நமது உடல் நிலையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு, சிறப்பாக மருத்துவம் செய்ய ஏதுவாக அமையும்.
உணவுப் பழக்கவழக்கங்கள் 

எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுகள் நம்மைச் சுற்றி இருந்தாலும், சுவை மற்றும் ஆசையின் காரணமாக ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதில் நம்மில் பலருக்கு ஆர்வமுண்டு. அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுப் வழக்கங்களை மருத்துவரிடத்தில் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஒரு சிலர் டயட் என்று சொல்லி சரியாக சாப்பிடவே மாட்டார்கள். அப்படிபட்டவர்களும் மருத்துவரிடம் தெளிவாக தங்கள் உணவுப் பழக்கத்தைச் சொல்ல வேண்டும்.


மன அழுத்தம் 

இப்பொழுதிருக்கும் காலக்கட்டத்தில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள், தமக்குள்ள கஷ்ட நஷ்டங்களை வெளியில் சொல்லாமல், மனதிலேயே வைத்திருப்பார்கள். உடல் சம்பந்தப்ப்ட்ட பல பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆகையால், இதையும் ஒளிவு மறைவு இல்லாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உட்கொள்ளும் மருந்துகள் 

பெரும்பாலும், இப்போது அனைத்து வீடுகளிலும் ஒரு குட்டி மருந்து கடையே இருக்கிறது என்று கூறும் அளவிற்கு, மருந்துகள் மனிதனின் அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. அப்படி தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை மருத்துவரிடம் சொல்வது மிகவும் அவசியம். இதனைக் கணக்கில் கொண்டு, நம்முடைய உடல் ஏற்றுகொள்ளும் அளவினை அறிந்து மருந்துகளை பரிந்துரை செய்ய, இந்தத் தகவல்கள் பெரிதும் உதவும்.

அலர்ஜி 

ஒரு சில மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் நம்மில் பலருக்கு அலர்ஜி ஏற்படும். இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.
மலத்தில் இரத்தம் கலந்திருத்தல் 

மலம் பற்றி பேசவே இன்னும் நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். மலம் கழிக்கும் போது சிலருக்கு மலத்தோடு, இரத்தம் கலந்தவாறு வெளியேறும். இதனை அவசியம் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் அது மலக்குடல் சார்ந்த புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்த முடியும். 

இவ்வாறு நாம் அனைத்திலும் திறந்த மனதோடு, பயமோ கூச்சமோ இல்லாமல், மருத்துவரிடம் உண்மையை உரைப்பது நம் உடல் நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். (நன்றி மருத்துவ உலகம்)

5 comments:

  1. சரியாகச்சொன்னீர்கள் நீங்கள் கூறிய அனைத்துமே குறிபிடத்தக்கவை. இதை மனதில் கொண்டு எல்லோரும் உண்மையை மருத்துவரிடம் கூற வேண்டும்.நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு கண்டிபாய் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் இவை அதுவும் இந்த அலர்ஜி இருப்பத கண்டிபாய் சொல்ல வேண்டும்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!