19 July, 2013

கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர்., நண்பரா? அரங்கேரும் புதிய நாடகம்...!



"நண்பர் எம்.ஜி.ஆர்., விரும்பிய திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்குகிறார் என்றால், எம்.ஜி.ஆரையே ஒதுக்குகிறார் என்று தான் அர்த்தம்' என்று, கருணாநிதி கூறுகிறார். 
 
திடீரென்று எம்.ஜி.ஆரின் விருப்பத்தின் மீது, இவருக்கு, இவ்வளவு அக்கறை எப்படி வந்தது?
 
ஒழுங்கீனம் நடப்பதை அறிந்து, கணக்கு கேட்டதால், வெறுத்து ஒதுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., மீது, தற்போது, "நண்பர்' என்ற இனமான பாசமும், அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதே, தன் குறிக்கோள் என்பது போலவும் கூறியுள்ளார், கருணாநிதி. சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற, கருணாநிதி இப்படி பேசுகிறார்.
 
எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் மனதில், அ.தி.மு.க.,வில், அவர்களுக்குள்ள நம்பிக்கையை கலைத்து, தன்வசப்படுத்தும், "கலை' முயற்சியோ இது? ஒரு காலக்கட்டத்தில், ஒரு கருத்தை விரும்பி, அதை அடைவதே வாழ்வில் லட்சியம்; அடைந்தே தீருவோம் என்று வீரவசனம் பேசி, பிறகு அதை கைவிடுவதும்; அதற்காக "கொள்கை' விளக்கக் கூட்டம் போட்டு நிதி வசூலிப்பதும்; அந்தத் தொகை கோடிக்கணக்கில் இருந்தாலும், அது கட்சித் தொண்டர்களின், டீ செலவுக்குத் தான் பயன்பட்டது என்பது போல பேசுவதும், கருணாநிதிக்கு கை வந்த கலை. 
 
ஒரு காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரோ, இன்றைய முதல்வர் ஜெயலலிதாவோ, சேது கால்வாய் திட்டத்தை ஆதரித்தாலும் கூட, தற்போது உள்ள நிலையில், வல்லுனர்கள் அறிக்கை மற்றும் நடைமுறை சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, இத்திட்டத்தின் அடக்கச் செலவுக்கு ஏற்ப, நன்மையோ பயனோ ஏற்படாது என்ற கருத்தின் காரணமாக, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
இத்திட்டத்தால், கப்பல் போக்குவரத்து மூலம் வரும் பண்டங்களின் விலைவாசியில், போக்குவரத்து செலவினத்தில், எந்த அளவு குறையும், மக்களுக்கு நன்மை ஏற்படும் போன்ற பல கோணங்களில் சிந்தித்து, ஒரு வெள்ளை அறிக்கை விட வேண்டியது தானே? அதை விடுத்து, மத்திய அமைச்சர் வாசனும், "சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும்' என்று கூறுவது, வேடிக்கை தான்!
 
இத்திட்டத்தில், இதுவரை செலவழித்து நடந்த செயல்கள் என்ற அது, ஒழுங்கான முறையில் நடந்ததா என்பது போன்ற பிரச்னைக்குரிய கேள்விகள், பிற்காலத்தில் எழக் கூடாது.
 
கடிதம் : என்.குப்புசாமி, சென்னை

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!