18 September, 2013

என் பேர் பிரம்மன்..!


சூரியனின் வெப்பத்தில் தேகம் சுருங்கும்..
நிலவின் வெளிச்சத்தில் தாகம் பெருகும்..
விண்மீன் ஆரவாரத்தில் கைகோர்பேன்..
மழையின் சில்லீரத்தில் மெய்நனைப்பேன்..

பனியின் துளிப்பட்டு 
என் பாதம் நடுங்கும்...!
வானவில் நிறம் பார்த்து 
என் ஆத்மா அடங்கும்...!

வைகரை மேகங்களை 
என் வானம் சுமக்கும்...!
சூரியக்கதிர் சொல்லெடுத்து 
என் கவிதை மணக்கும்...!

நான் கவிஞன்

அதை
வானம் முன்மொழிகிறது...
மேகம் வழி மொழிகிறது...
செம்பருத்திச் சிகப்பிலே சிவந்துப்போவேன்...
செவ்வந்தி முகப்பிலே செம்மையாவேன்...
புல்வெளிக் காட்டில் முகம்புதைப்பேன்...
வயல்வெளி ‌மேட்டில் அகம் குளிர்வேன்...

வண்ணத்துப்பூச்சி வண்ணம்கண்டு
என் ஞானம் மறப்பேன்...!
சிட்டுக்குருவி சிறகில் ஏறி
என் வானம் அளப்பேன்...!

மல்லிகை இதழ் விரிக்கும்
நான் குடை விரிப்பேன்...!
மாலை கருக்கையில்
என் சோகம் எரிப்பேன்...!

நான் கவிஞன்

அதை..
 மலர்கள் முன் மொழிகிறது...
மொட்டுக்கள் வழி மொழிகிறது...


 

வானம்பாடி பறவைகளோடு ஓடிப்போவேன்....
கானம்பாடி குயில்களோடு கூடிப்போவேன்...
காக்கைக் கருப்புகளோடு கரைந்துப்போவேன்...
கானகத்து மயிலோடு காலம் கழிப்பேன்...

மைனாக்களின் சிணுங்கள்கண்டு
என் சினங்கள் ஆறும்...!
புறாக்களின் முனகல் கேட்டு
என் ரணங்கள் மாறும்...!

பஞ்சவர்ணப் பறவைக்கு
நான் பாடம் நடத்துவேன்...!
நெருப்புக்கோழி வெப்பம் தணிய
நான் பாட்டுச் சொல்லுவேன்...!

நான் கவிஞன்

அதை
மீன்கொத்தி முன்மொழிகிறது...
மரம்கொத்தி வழிமொழிகிறது...




ஆற்றில் நீந்தியாடி அயிரைப் பிடிப்பேன்...
குளத்தில் குதித்துஆடி தாமரைப்பறிப்பேன்...
ஏரியில் இறங்கிப்போய் அல்லி முகர்வேன்...
கிணற்று தவளையொன்றுக்கு சுதந்திரம் கொடுப்பேன்...

ஓடைகள்தான் காவியமென்று
என் கற்பனை மூழ்கும்...!
தண்ணீர்தான் உலகமென்று
என் ஜீவன் மிதக்கும்...!

அலைகளோடு மோதி
நான் சக்தி பெருவேன்...!
மழைகளோடு வீழ்ந்து
நான் முக்தி பெருவேன்...!

நான் கவிஞன்..

அதை
தூறல் முன்மொழிகிறது...
சாரல் வ‌ழிமொழிகிறது...

வீசுகின்றபுயலில் கவிதைக்கு காற்றெடுப்பேன்...
பொங்கும் எரிமலையில் கவிதைக்கு கனலெடுப்பேன்...
பனித்துளியின் குளிரில் கவிதைக்கு சுகமெடுப்பேன்...
விரிந்திருக்கும் அண்டத்தில் கவிதைக்கு கருவெடுப்பேன்..

தீயாய் சுட்டுவிடும்
என் கவிதை மருந்தாகவும் இருக்கும்...!
நோயாய் தொட்டுவிடும்
என் கவிதை தாயாகவும் இருக்கும்...!

தனிமை எனக்கில்லை
நான் கவிதைக் கூட்டத்தில்...!
மரணம் எனக்கில்லை
நான் கவிதை முற்றத்தில்...!

நான் கவிஞன்...
இல்லை இல்லை நான் பிரம்மன்..

ஏன்னென்றால்
என்னாலும் உயிர்கொடுக்கமுடியும்
கற்பனைக்கும்.. கவிதைக்கும்..
நாளை காலத்திற்கும்...
ஆம்.. நான் கவிஞன்... 

வாசித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல.. பல...!

(என்னுடைய... “என் பேர் பிரம்மன்” என்ற கவிதை நூலிலிருந்து...!)

11 comments:

  1. அருமையோ அருமை..கவிங்கனைப் பற்றி அழகான சித்தரிப்பு.

    ReplyDelete
  2. நானும் வழிமொழிகிறேன்
    :D

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வழிமொழிதலுக்கு மிக்க நன்றி இந்திரா...

      Delete
  3. முன் மொழிதலும், வழி மொழிதலும் மற்றும் தேர்வு செய்திருந்த படங்களும் கவிதையை மேலும் மெருகூட்டி ரசிக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சாய்ரோஸ்...

      Delete
  4. அருமையான படைப்பு. ரசித்தேன்.,

    ReplyDelete
  5. சொல்ல வார்த்தைகளே இல்லை கவிதை அத்தனை அருமை... கவிதைக்கும் கண் படும் இத்தனை அழகாய் இருந்தால்... வாசிக்க வாசிக்க கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளிளுத்து செல்கிறது முற்றிலுமாய்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தை கேட்டு நானும் மிகவும் மகிழ்ந்தேன்...
      மிக்க நன்றி பிரியா...

      Delete
  6. அன்பின் சௌந்தர் - கவிதை - பதிவு அனைத்தும் அருமை - நான் பிரம்மன் என்பதற்கான ஆதார்ஙகளை அள்ளித்தெளித்து கவிதையாக்கியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!