31 October, 2013

ஆரம்பம் சினிமா விமர்சனம் / aarambam tamil movies review


ஒரு நடிகர் தன்னுடைய ரசிகர்களை விட்டுவிடாமல் அவர்களின் ரசனைக்கு ஏற்பவும், பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரகூடியதாகவும், ‌மேலும் புதுவித பரிமாணத்தில் தன்னுடைய இமேஜை உயர்த்துவதாகவும் இருக்க வேண்டும்... அப்போதுதான் தமிழ் சினிமா அந்த நடிகருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும்... இந்த மூன்று நிலையிலும் நான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்த ஆரம்பம் படம் மூலம் நிறுபித்திருக்கிறார் அஜீத்.

மும்பையில் ரானாவும்,  (தெலுங்கு நடிகர்) அஜீத்தும் சிறந்த நண்பர்கள்... இவர்கள் இருவரும் சேர்ந்து மும்பை காவல் துறையில் பாம் ஸ்கோடாக பணியாற்றுகிறார்கள். ஒரு தீவிரவாத கும்பல் ஒரு கட்டிடத்தில் வெளிநாட்டவரை பிடித்து வைத்துக்கொண்டு மிரட்ட அதை அஜீத்தும் ரானாவும் மிகவும் திறமையாக முறியடித்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்.


ஆனால் இந்த தீவிரவாதிகளின் வேட்டையில் ரானா இறந்துவிடுகிறார். இதை அஜீத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகே அஜீத்துக்கு தோன்றுகிறது. குண்டு துளைக்காத புல்லட் புருப் ஜாக்கெட் அணிந்தும் எப்படி அவரை குண்டு துளைத்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கும் போதுதான் தெரிகிறது. கமிஷ்னர் முதல் உள்துறை அமைச்சர் வரை இந்த உடைத்தயாரிப்பில் பலகோடி சுருட்டியது அம்பலமாகிறது...

காவல்துறையும், ராணுவமும் தன் உயிரை பணயம் வைத்து நாட்டைக்காக்கும் வீரர்களின் உயிரில் விளையாடிய அத்தனைப்போரையும் பழிவாங்க கிளம்பும்... அஜீத் அவர்களை விரட்டி விரட்டி பழிவாங்கியும், அவர்கள் தவறாக சம்பாதித்த பணத்தை மீட்டு நாட்டுக்கு திருப்பி அளித்தும்.. என தன் அதிரடியான ஆட்டத்தின் மூலம் என்னுடைய வெற்றிக்கு எப்போதும் ஆரம்பம் தான் என்று மீண்டும் நிறுபித்திருக்கிறார் விஷ்ணுவர்தன் கூட்டணியில் அஜீத்.

படம் முதலில் மும்பையில் ஆரம்பிக்கிறது... மும்பையில் சில பிரபங்களின் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வெடிகுண்டு வைப்பதில் ஆரம்பிக்கும் அஜீத்... இடைவேளை வரை செய்யும் வில்லத்தனம் ரசிகர்களை ஆர்பரிக்க வைக்கிறது...


மும்பைக்கு ஒரு இன்டர்வியூக்கு வரும் ஆர்யாவை தன்னுடைய உதவிக்கு வைத்துக்கொள்ள...  அஜீத் செய்யும் டிராமா சூப்பர்... ஆர்யாவின் காதலியான தாப்ஸியை கொன்று விடுவதாக மிரட்டி மிரட்டியே அவரிடமிருந்து தொழிநுட்ப தகவல் சார்ந்த வேலைகளை வாங்கிக்கொள்கிறார் அஜீத். 


தன்னுடைய காதலியான தாப்ஸியை காப்பாற்ற ஒரு செய்தி தொலைக்காட்சி சேனலை ‌ஹேக் செய்வது, வங்கி கணக்குகளை முடக்குவது என அஜீத் சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கிறார் ஆர்யா. மும்பையில் பல இடங்களில் குண்டு வைத்தது அஜீத்தான் என்று தெரியவருகிறபோதும் மேலும் அதிர்ச்சியாகிறார்.

போலீஸிடம் அஜீத்தை சிக்கவைக்கும் ஆர்யா.. அதன் பிறகு அஜீத் யார் எதற்காக இப்படி செய்கிறார் என்ற உண்மை தெரியவர... அதன்பின் இருவரும் சேர்ந்து அடித்து ஆடியிருக்கிறார்கள். 


இருவரும் சேர்ந்து நாட்டுக்கு எதிராக ஊழலையும், பணத்துக்காக தீவிரவாதிகளை விடுவிக்கவும் செய்யும் அரசியல்வாதிகளை எப்படி பழிவாங்கினார்கள், அந்த அரசியல்வாதிகள் சுருட்டிய ஊழல் பணத்தை எப்படி எடுத்து மீண்டும் அரசாங்கத்துக்கு திருப்பிகொடுத்தார்கள் என பரபரப்பு சண்டைக்காட்சிகள்... அதிரடி திருப்பங்களோடு பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு சிறந்தப்படம் தான். ஒரு கம்யூட்டர் ஜீனியர்சான இவர்... தன்னுடைய துடிப்பான நடிப்பால் அசத்தியிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது மிகவும் குண்டாக இருக்கும் ஆர்யா... டாப்சியை காதலிப்பதற்காக பல்வேறு முயற்சிக்குப்பிறகு தன்னுடைய உடலை நார்மல் லெவலுக்கு கொண்டுவருகிறார். குண்டு கதாபாத்திரத்தில் நன்றாகவே செய்திருக்கிறார்.


ஆர்யாவுக்கு ஜோடியாக தாப்ஸி. எப்படியாவது சிறந்த தொகுப்பாளினியாக ஆகவேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய துருதுரு நடிப்பில் அசத்தியிருக்கிறார். அஜீத்திடம் தான் மாட்டியிருப்பது கூட தெரியாமல் இவர் செய்யும் வெகுளித்தனம் சூப்பர். அதுதெரியவரும்போதும் காட்டும் முகபாவனைகளும் அழகு.

என்னடா இன்னும் நயன்தாரவை பற்றி சொல்லவில்லை என்று பார்க்கிறீர்களா.. அஜீத்தின் நண்பரான ரானாவின் தங்கைதான் நயன்தாரா... தன்னுடைய அண்ணனின் மரணத்துக்கு பழிவாங்க துடிக்கும் அஜீத்துடன் கைகோர்க்கிறார்... (காதல் இல்லை.. டூயட்டும் இல்லை)

தயன்தாரா அஜீத்துடன் சேர்ந்து செய்யும் அத்தனை காட்சிகளும் அழகு... சென்னை ஏர்போட்டில் இருந்து மும்பைவரை ஆர்யாவுடன் வந்து பின் வில்லன்களான அஜீத்திடம் மாட்டுவது போலும் பின்பு அந்த கூட்டத்தை சார்ந்தவர் என்று ஆர்யாவுக்கு தெரியவரவும்... நல்லதொரு டுவீஸ்ட்... சில சண்டைகாட்சிகள் துப்பாக்கி சுடுதல் என பில்லாவுக்கு பிறகு மீண்டும் ஒரு புதிய விஜயசாந்தியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
 

மும்பை போலீஸ் ஆபிஷராக கிஷோர் கச்சித நடிப்பு... இவருக்கும் இன்னும் நல்ல வெயி்டான காட்சிகள் ஒதுக்கியிருக்கலாம்... இன்னும் நிறைய நடிகர் பட்டாளம் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்... டிரம்ஸ் வைத்துக்கொண்டும் அஜீத் ஆடும் ஆட்டத்தில் தியோட்டர் கதிகலங்குகிறது. (ஆனால் பாடல்தான் புரியவில்லை..).

ஆர்யாவுக்கும் தாப்ஸிக்கு ஒரு டூயட்.. சூப்பர்... அந்த பாடலில் இருவருக்கும் சிறகு முளைத்ததுபோல் கிராப்பிக்ஸ் செய்திருக்கும் காட்சி அழகு. அஜீத் நயன்தாரா ரானா ஒரு ஹோலி பாடல் வண்ணமயத்துடன்....

லாஜிக்கோடு பார்த்தால் பல்வேறு ஓட்டைகள் படத்தில் இருக்கிறது.  கடைசி அரைமணிநேரப்படம் காட்சிகள் எப்படியும் ஒட்டாமல் வருகிறது... ஆனால் முடித்திருக்கும் விதத்தில் அந்த லாஜிக் ஓட்டைகளை மறக்கடித்துவிட்டு ஒரு ரசிகனின் படமாக வந்திருக்கிறது. (இது ஒரு கமர்சியல் படம் மட்டுமே... கவலை மறந்து ஒரு முறை பார்க்கலாம்)

அதிரடி சண்டைக்காட்சிகள்.. பரபரப்பான கார், பைக் சேசிங், சில நாட்டுப்பற்று வசனங்கள்... பொய்த்தான் பயப்படும்.. உண்மை பயப்படாது.. போன்ற பஞ்ச் வசனங்கள்... என படம் முழுக்க தன்னுடைய பாணியில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

30 October, 2013

அஜீத்தின் ஆரம்பம் - விமர்சனத்திற்கு முன் 20 - 20...


ஆரம்பம் ரிலீஸ் பரபரப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போதே மனசுக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கிறது அவர்களுக்கு. அல்டிமேட் ஸ்டாரின் வருகைக்காக தியேட்டர்களில் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். 


மக்கள் தியேட்டர் ரிசர்வேஷனுக்காக கவுண்டர் முன்னாலும், கம்ப்யூட்டர் முன்னாலும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக இதோ ஆரம்பத்தின் இருபது முத்தான தகவல்கள்.

1. ஆரம்பம், அஜீத்திற்காக எழுதப்பட்ட கதை அல்ல. விஷ்ணுவர்த்தன் பொதுவாக எழுதிய ஆக்ஷன் ஸ்கிரிப்ட். அஜீத்தின் இமேஜுக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே உருவாகி இருக்கிறது.

2. 'ஆரம்பம்' படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி கடந்த வாரம் சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கினர்.

3. படத்துக்கு 200 தலைப்புகள் எழுதி வைத்திருந்தார் விஷ்ணுவர்த்தன். அத்தனையும் அஜீத்தின் இமேஜுக்கு ஏற்ற மாதிரியான பில்டப் தலைப்புகள். அதைப் படித்து பார்த்த அஜீத். இந்த பில்டப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம். கதைக்கு ஏற்ற மாதிரி ஒரு தலைப்பு கொண்டு வாங்க என்றார். 

4. அதன் பிறகு உருவான தலைப்புதான் ஆரம்பம். அதற்கு அஜீத் ஓகே சொல்ல தலைப்பை டிசைன் செய்தார் நீல் ராய். பில்லா டைட்டில் டிசைன் செய்தவர். தலைப்பில் இருக்கும் பவர் பட்டனை வடிவமைத்தவர் நீல்ராய். தலைப்பு தாமதமானதால் ரசிகர்கள் எழுதிய அனுப்பிய தலைப்பே ஆயிரத்துக்கும் கூடுதலாம்.



5. ஒவ்வொரு பைட்டுக்கும் தனி தனி ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொரு பாட்டுக்கு தனித்தனி டான்ஸ் மாஸ்டர்கள் பணிபுரிந்திருக்கறார்கள். தினேஷ் மாஸ்டருக்கு மட்டும் இரண்டு பாடல்.

6. படத்தின் பைக் சேஸ் இல்லை. ஆனால் அஜீத் வேகமாக பைக் ஓட்டும் சீன் இருக்கிறது. பவர்புல்லான போட் சேசிங் இருக்கிறது. இது துபாயில் படமாக்கப்பட்டது. அஜீத்துடன் இதில் நடித்திருப்பவர் இந்தி நடிகை அக்ஷரா கவுடா.

7. ஆக்ஷன் ஏரியா அஜீத்துக்கு, ரொமான்ஸ் ஏரியா ஆர்யாவுக்கு என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். இரண்டும் சந்திக்கும் இடத்திலிருந்து பொறி பறக்க ஆரம்பிக்கும். நயன்தாரா கிளமார் குயினாகவும் வருகிறார். நடிப்பிலும் தனி முத்திரை பதிக்கிறார்.

8. அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், ஒரு வி.ஐ-.பி கொலை தொடர்பாக வரும் ஒரு இமெயிலை வைத்து ஒரு சர்தேச நெட்வொர்க்கை பிடிக்கும் ஹாலிவுட் பாணியிலான கதை. "இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான கதை. அந்த சம்பவம் எல்லோருக்கும் தெரிந்த சம்பவம்தான் என்கிறார் டைக்டர் விஷ்ணுவர்த்தன்.

9. மங்காத்தாவில் வரும் அதே சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் வருகிறார் அஜீத். படம் முழுக்க மேக்-அப் போடாமல் நடித்திருக்கிறார். ஒரே கேரக்டரில் நெகட்டிவாகவும் நடித்திருக்கிறார். பாசிட்டிவாகவும் நடித்திருக்கிறார்.




10. அஜீத்துக்கு ஆரம்பத்தில் கோட்-சூட் காஸ்டியூம் கிடையாது. படம் முழுக்க சாதாரண இளைஞர்கள் அணியும் உடைதான். பெரும்பாலும் வி நெக் மற்றம் காலர்டு டீ சர்ட் அணிந்து வருகிறார். அதிலும் கம்பீரமாக இருப்பார். கோட்-சூட் காஸ்ட்டியூமை வேண்டுமென்றே அவாய்ட் பண்ணினார் அஜீத்.

11. ஏற்கெனவே காலில் எலும்பு முறிவுடன் உள்ள அஜீத் இந்தப் படத்திலும் ஒரு பெரிய விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் அஜீத்தை காரின் முன்னால் பேலட்டில் கட்டி வைத்திருப்பார்கள்.


12. ஆர்யா காரை ஓட்டுவது மாதிரி சீன். ஆர்யா காரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்ட காலை தூக்கியபடி நடித்த அஜீத்தின் கால்கள் தரையை உரச அஜீத் வலியால் துடிக்க ஆர்யா சடன் பிரேக் போட்டதால் தலயின் கால்கள் அன்று தப்பியது.

13. வெளியாகவிருக்கிறது ஆரம்பம். இந்தப் படம் வெளியாகும்போது அஜீத் ஊரில் இருக்கமாட்டார். காரணம் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை 'வீரம்' படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்கிறார். எனவே முன்கூட்டியே படத்தைப் பார்க்க விரும்பினார் அஜீத். அவரது விருப்பப்படி தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்தியேகக் காட்சியை போர்பிரேம்ஸில் திரையிட்டனர்.



14. மங்காத்தா படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் விநாயக் மகாதேவ். அதுபோல ஆரம்பம் படத்தில் அவரது பெயர் அசோக்.

15. டிரைலர் வெளியான 1 நாளில் மட்டும் சுமார் 8லட்சம் பேர் பார்த்துள்ளனர். தொடர்ந்து ஏராளமான பேர் ரசித்து வருகின்றனர்

16. படத்துக்காக அஜீத் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்ற உடனே பல ஆபரேஷன் செய்துள்ள அவரது உடல் நிலையையும் மீறி ஒரு தினத்துக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை அயராமல் உடல் பயிற்சி செய்த அவரது கடமை உணர்ச்சி தான், அவரை இந்த உயரத்துக்கு கூட்டி சென்று இருக்கும் என தெளிவாக புரிந்தது.

17. ஆர்யாவும், அஜீத் சாருக்கும் உள்ள பரஸ்பர மரியாதை, சிநேகம் ஆகியவை தமிழில் இனிமேல் பல நட்சத்திரங்கள் இணைந்தது நடிக்கும் காலம் வரும் என நம்பிக்கை தருகிறது. அந்த காலத்துக்கு இதுதான் ஆரம்பம் என்கிறார்கள்.

18. தீம் மியூசிக் என்பது படத்தின் கதைக்கு ஏற்ப பின்னணி இசைக் கோர்ப்பு பண்ணும்போது உருவாவது. அதனால் தீம் மியூசிக், இசை ஆல்பத்தில் இடம்பெறவில்லை.  

19. ஆரம்பத்தின் வரவை தமிழ் ரசிகர்கள் வரவேற்க ஆவலாக இருக்கிறார்கள். ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டார்கள். மீடியாக்கள் போட்டி போட்டு செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இது எதையுமே தலையில் ஏற்றிக் கொள்ளாமல் கூலாக இருக்கிறார் அஜீத். அதுதான் தல ஸ்டைல்!!


அடுத்த பதிவு... ஆரம்பம் சினிமா விமர்சனம் 
20. டிரைலர்.

28 October, 2013

நீங்களே பாருங்கள் இந்த காதல் எப்படியாகிவிட்டது என்று...!



மூளை முதிராத 
என் இளமைக் காலங்களில்
உனக்கு கடிதம் எழுதினால்
என்ன புத்தகம் எழுகிறாயா
என்று கிண்டலடிப்பார்கள்....

 கிண்டல்களை குறைப்பதற்காக
குறைத்துக்கொண்டேன் பக்கங்களை..
அதை என்ன கட்டுரையா 

என்று கலாய்த்தார்கள்...

குறையாத காதலை வைத்துக்கொண்டு
குறைக்கவேண்டியதாயிற்று

உனக்கும் எனக்குமான காதலை
ஒரு இன்லேண்ட் கடிதத்திற்குள்...!


தற்போது அதற்கும் வழியில்லாமல்
அறைகுறை ஆங்கிலத்தில்

குறுஞ்செய்தியாக நம் காதலை
கைபேசியில் படிக்கவைத்துவிட்டது காலம்...

காதலுக்குள் நெருக்கம் நேர்கையில்
இருவருக்குள் பாறிமாறிக்கொள்ளும் 

காதல் வார்த்தைகளுக்கும் 
சுருக்கம் வந்துவிடும்போல...

என் அன்பே... 
வார்த்தைக் குறைப்பால் 
நம் காதல் குறைந்துவிட்டது 
என்று எண்ணிவிடாதே.....
 

கடுகு சிறுத்தாலும்
கொஞ்சமும் குறையாது காரம்...

சுண்ட காய்ச்சியப்பால் 
எப்போதும் சுகம்தானே...!
 
காதல் நீளும்... கவிதைகளில்.....

27 October, 2013

கண்டிப்பாக இதை உங்களால் நம்பமுடியாது... ஆனால் உண்மை





உலகிலேயே மிக விசாலமான விமான நிலையம் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையமாகும். இந்நிலையம் அடங்கியுள்ள நிலப்பரப்பு 55040 ஏக்கர்(225 சதுர கிலோமீட்டர்) ஆகும்.
***************************



முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். 
***************************


 
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

*************************** 


 
மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
*************************** 


 
அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

*************************** 


 
காட்டு நாய்களிடமிருந்து கம்பளி ஆடுகளை காப்பாற்றுவதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 3 ஆயிரத்து 437 மைல் நீளமுள்ள வேலியை அமைத்துள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய வேலியாகும். 

*************************** 



கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.


*************************** 



கனவாய் மீனின் ரத்தத்தில் காப்பர் அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் நிறம் பச்சையும் நீலமும் கலந்த நிறமாக தோன்றும். இதன் காரணமாகவே இதை ராஜா மீன் என்கின்றனர்.

*************************** 



சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*************************** 



கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

***************************



உலகத்திலே மிகவும் வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்டஸ் (Eucalyptus) தான். இது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. காடுகளின் 8 சதவீதம் இம்மரமே உள்ளது. பிரேசில் நாட்டில் மட்டுமே 3.5 மில்லியன் ஏக்கரில் யூக்கலிப்டஸ் மரம் இருக்கிறது. 

***************************


மிகப்பெரிய கோதுமைக் களம் கனடாவில் உள்ள அல்பர்டா என்ற இடத்தில், சுமார் 142 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது

*************************** 


*************************** 

சாலைகளில் வரையப்பட்ட பார்க்கவே வியப்பூட்டும் அழகிய முப்பரிமாண  ஓவியங்களுடன்... சில பொது அறிவு துணுக்குகள்...!

ரசித்தமைக்கு மிக்க நன்றி...

25 October, 2013

இந்த தகவல் தெரியுமா உங்களுக்கு... மேலும் பார்க்க.. ரசிக்க.... சிரிக்க...


உன் பிரிவுதான் உணர்த்துகிறது
ஒரு ந‌ாளைக்கு எத்தனை
நிமிடங்கள் என்று..!
 
உன் அமைதிதான் உணர்த்துகிறது
ஒரு மௌனத்திற்கு எத்தனை
அர்த்தங்கள் என்று...!

உன் கண்கள்தான் உணர்த்துகிறது
ஒரு பார்வைக்கு எத்தனை
சுகங்கள் என்று...!

உன் இதயம்தான் உணர்த்துகிறது
உன் மனதுக்கு எத்தனை
அழுத்தங்கள் என்று...!

******************************


(தெரிந்துக்கொள்ளுங்கள்)

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005-ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. 

அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.


தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி எதையும் குறிப்பிடத் தேவையில்லை. 

விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. 

பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. 

இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது. 
**************************
 ""ஹலோ, டாக்டர் 
நான் உங்களப் பார்க்க வரணும். நீங்க எப்ப ஃப்ரீ''

""எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது. 
ஃபீஸ் வாங்குவேன்''
**************************


 
(பார்க்க சிரிக்க)
**************************

23 October, 2013

மருமகன்களை மாமியார்கள் கவனிப்பது ஏன் தெரியுமா....?



(கவிதை)

 நேற்று
கடற்கரையோரம்
நடந்து சென்றாய‌ாமே...
இனி வேண்டாம்
இந்த விபரீதம்...
 நேற்று முழுவதும்
இன்று பௌர்ணமியோ என்று
அலைகள் குழம்பிக்கொண்டிருந்தது...

கடல் தேவதை எப்படி 
கடலுக்கு வெளியில் என்று
கலங்கிக் கொண்டிருந்தது
கடல்...! 

**********************************

(நகைச்சுவை)

ஒரு மருமகன்,

எந்த வயதில் மாமியார் வீட்டிற்கு சென்றாலும், அவனது மாமியார் உயிரோடு இருக்கும் வரையில் சிறப்பாக சமைத்து விருந்து பரிமாறுவார்கள்.

அது மகளின் கணவர் இவர் என்பதற்காக இல்லையாம்…

”அடேய் மருமகனே… நீ இப்போ விதவிதமா ருசிச்சு சாப்பிடுறியே… அப்படி சாப்பிட்டுத்தான் என் மகள் என் வீட்டில் வளர்ந்தாள்… உங்கள் வீட்டுக்கு என் மகள் வந்திருக்கிறாள்… உங்கள் வீட்டிலும் என் மகளை அப்படி கவனியுங்கள்” என்று அர்த்தமாம்

 ***************************************


(சிந்தனை)

ஒருவனுக்கு வெற்றி மயக்கம் ஏற ஏற தடுமாறி முட்டாள்தனமான தைரியம் தோன்றி எல்லாம் நாமே என்ற எண்ணம் பிறந்து தடுமாறி காரியம் செய்யத் தொடங்கியதும்...

ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து அந்த ஆவணக்காரனைக் கூனிக் குறுகச் செய்கிறது...

அதனால் ஆணவம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

-கண்ணதாசன்...


**************************************


(தெரிந்துக் கொள்ளுங்கள் - இன்று)

1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்த விமானத்தை இத்தாலியின் போர் வீரர் லிபியாவில் இருந்து துருக்க ராணுவ நிலைகளுக்கு ஓட்டிச் சென்றார்.

******************************************************8


பார்க்க சிரிக்க...



22 October, 2013

பெண்களை எந்த கண்னோட்டத்தோடு பார்க்க வேண்டும்... இதை நீங்கள் ஏற்பீர்களா..?

 


ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் போதித்துக் கொண்டிருந்தார்.

“பிறப்பைப் பொறுத்தவரை எல்லா உயிர்களும் சமமே. பசி, தாகம், தூக்கம், மரணபயம் இவை எல்லா உயிர்களுக்கும் உண்டு. கவலைகள் என்பவை எல்லோருக்கும் பொதுவானவை. இரவும், பகவும் மாறி மாறி வருவது போலவே இன்பமும், துன்பமும் ஒருவரது வாழ்வில் மாறிமாறி வரும். அதே போல் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும்”

சீடர்கள் குரு சொல்வதைக் கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

“இரவு வருகிறது. மெல்ல அது கலைந்து பொழுது புலர ஆரம்பிக்கிறது. அந்த சமயத்தில் எந்த நொடியில் பொழுது விடிந்து விட்டது என்பதை நீ அறிவாய்..?” குரு ஒரு கேள்வியுயுடன் தன் போதனையை நிறுத்தினார்.

“ஒரு மிருகம் தொலைவில் நிற்கும் போதே அது கழுதையா, குதிரையா என்று அடையாளம் காண முடியும் என்றால் அதை வைத்து வெளிச்சம் வந்து விட்டது என்று புரிந்து கொள்ளலாம்” என்றான் ஒரு சீடன்.

குரு இல்லை என்று தலையசைத்தார்...

“ஒரு மரம் தூ‌ரத்திலிருக்கும்போதே இங்கிருந்தபடி அது ஆல மரமா, அரச மரமா என்று சொல்ல முடியுமானால் அதுதான் வெளிச்சம்!” என்றான் வேறொருவன்.

அதற்கும் குரு மறுப்பாகத் தலையசைத்தார்...

சீடர்கள் விழித்தார்கள்...

கடைசியாக “சரியான விடையைத் தாங்கள் தான் கூறி அருளவேண்டும்!” என்றனர்.

“எந்த ஒரு மனிதரைக் கண்டாலும் இவன் என் சகோதரன் என்றும், எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும், எப்போது நீ  அறிகிறாயோ அப்போதுதான் உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள். அதுவரை உச்சி வெயில் கூட உமக்கு காரிருளே.”

 யாதும் ஊரே... யாரும் கேளிர்... அப்படித்தானே....

இப்படிப்பட்ட மனநிலை நம் மக்களிடையே வந்துவிட்டால் ஏன் தேவையில்லாத கற்பழிப்பும் கலவரங்களும் இங்கு நடக்கிறது.. தற்போது திருமணமாகிவிட்டப்பிறகு கூட அடுத்தப்பெண்களை கண்டு வழிவது குறையாமல் இருக்கிறது. இதனால் தான் இவ்வளவு பிரச்சனைகள்...


21 October, 2013

உலகை பயமுறுத்தும் ஒரே பறவை...!



சிறகு முளைத்ததும் 
தாய் பறவைக்குத் தெரியாமல்
கூண்டை விட்டு பறக்கும்
இளம்பறவைப்போல்...

எப்போது வேண்டுமானாலும் 
சிறகு முளைத்துவிடும்
நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும்
நம் உயிர் பறவைக்கு...

ஆதி எது அந்தம் எது அறியவில்லை
இந்த உலகில் பிறந்த யாரும்
வந்தது தெரியும் போவது எங்கே
புரியாத புதிர்தானே இதுவரையில்...

 மாற்றங்களே மாற்றிவிடுகிறது
மனிதர்களின் உருவங்களை
எப்போது மாறாமல் வாழ்கிறது
உடலில் ஒட்டியிருக்கும் ஜீவன்....

பயமும் பக்தியும் இருப்பதற்கு
காரணம் ஏன்னவென்றுத் தெரியுமா
அவைகள்தான் உள்ளிருக்கும் உயிரை
வதைக்காமல் காக்கும் கேடயங்கள்...!

உயிர் பறக்கும் என்ற பயத்தில் தான்
நிற்காமல் ஓடுகிறது இந்த உலகம்
உயிருக்கு பாதகம் இல்லை என்றால்
என்னவாகும் எண்ணிப்பாருங்கள்...

மணிக்கும் நெடிக்கும் பயந்து ஓடி
காலத்தை கடக்கையில்
நிறமாறிப்போகிறோம் நாம்
நீர்க்காமல் உயிர்வாழ்கிறது உயிர்...!

வாழ்க்கையை வாழாதவர்களுக்கு
மரணம் என்பது வேதனை....!
வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு
மரணம் என்பது விடுதலை...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

17 October, 2013

இப்படியும் வாழ்பவர்களை என்ன செய்யலாம்..! பதில் கூற முடியுமா உங்களால்...!


வணிகன் ஒருவன் பெரும் பணம் சேர்த்தான். ஒருநாள் எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது கிட்டதட்ட எட்டு லட்சம் பொன் தன்னிடம் இருந்தது அவனுக்குத் தெரிந்தது.

இதை எதில் முதலீடு செய்தால் ஓரிரண்டு வருடங்களில் அதை இரண்டு மடங்காக்க முடியும் என்று திட்டமிட்டு எழுதுவதற்காக ஓலையையும், தூரிகையையும் எடுத்தான். சுரீரென்று அவனுக்கு நடுமார்பு வலித்தது. அப்படியே பின்னுக்குச் சாய்ந்தான். அவன் கண்ணுக்கு எதிரே மரண தேவதை தோன்றி,

“புறப்படு என்னு‌டன்” என்று அழைப்பு விடுத்தது...

அம்மனிதன் கெஞ்சினான். அழுது முறையிட்டான். தேவதை சற்றும் மனம் இளகவில்லை. “கொஞ்ச காலம் வாழ அருள் செய்” என்று வேண்டிக் கொண்டான். அது அசைந்து கொடுக்கவில்லை.

“ஒரு நாலு நாளாவது அவகாசம் கொடு. என் சொத்தில் பாதி தருகிறேன்..!” என்று பேரம் பேசிப் பார்த்தான்.

அப்போதும் அது நகரவில்லை.....

“ஒருநாள் - ஒரே ஒருநாள் அவகாசம் கொடு” என்று அழுதான் அப்படியும் அது அசையவில்லை.

“எனது ‌எல்லாச் சொத்துக்களையும் தருகிறேன். ஒரு பகல் அவகாசம் கொடு. வீட்டில் என் பந்துக்கள் யாருமில்லை.”

அப்போதும் அது மசியவில்லை. “இதோபார். உன் சொத்துக்கள் எதுவுமே அங்கே பயன்படாது. உன் உறவுகளைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. உனக்கு இரண்டே இரண்டு விநாடிகள் அவகாசம் தருவேன் அவ்வளவுதான்.” என்றது மரணதேவதை கண்டிப்புடன்.

தன் வியாபாரத்தின் கொள்முதல், விற்பனை, வரவு, செலவு, லாபக்கணக்கு இவற்றைப்பற்றிப் பற்றி எழுதுவதற்காகத் தனது ஓலையை எடுத்தவன் அதில் அவகாசமாக இப்படி எழுதினான்....

“இதைப்படிக்கும் எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால் பொருள் சேர்ப்பதில் உங்களது வாழ்நாளை வீணடித்துவிடாதீர்கள். எட்டு லட்சம் பொன் இருந்தும் என்னால் ஒரு நாழிகையைக்கூட அதன் மூலம் வாங்க முடியவில்லை” என்று எழுதி முடித்தார்.

புத்தர் சொல்கிறார்... 

“இந்த நிலம் என்னுடையது... இவர்கள் என் பிள்ளைகள்... என்பதெல்லாம் தானே தனக்குச் சொந்தம் இல்லை என்றுணராத முட்டாள்களின் வார்த்தைகளாகும்...”

ஜென் கூறுகிறது... 

“அவன் எவ்வளவு விட்டுச்சென்றான் என்ற கேள்விக்கு ஒரே பதில் எல்லாவற்றையும் என்பது தான்... இரண்டாவது பதில், எதையும் விட்டுவிட்டு அவன் செல்லவில்லை... அவன் இவற்றிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டான் என்பதே...

நான் கூறுகிறேன்...

இந்த உலகம் பொருள்தேடி பொருள்தேடியே நிகழ்காலம் எனும் பொன்னான பொழுதுகளை ஒரு விநாடிகள் கூட அனுபவிக்காமல் கடந்துப்போய் வீணடித்துக் கொண்டுடிருக்கிறது... 

வாழ்க்கை நடத்துவதற்கு பொன்னும் பொருளும் அவசியம் தான் அதற்காக  வீடு, உறவு, சொந்தம் பந்தம் மட்டுமின்றி சிலர் தன்னுடைய குழந்தைகளையும் கூட மறந்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...

சம்பாதியுங்கள் கூடவே வாழ்க்கையை அனுபவியுங்கள்... சின்னசின்ன சந்தோசங்களை விட்டுவிட்டு அப்படிஎன்ன வாழ்க்கை நமக்கு...