12 December, 2013

கேமராவுக்கு பின்னால் நடிக்க தெரியாத நடிகர் - ரஜினியின் நினைவுகள்....


ரஜினி... அவருக்கே அவரின் வாழ்க்கை புதிரானது. மற்றவர்களுக்குப் புதிதானது. ஆறு வயதில் புகழுக்கு ஆசைப் பட்ட சிறுவன் சிவாஜிராவ், அமைதி தேடும் 60 வயது ரஜினி யானது வரை நடந்தவை எல்லாம் அவரே திட்டமிடாதது... எதிர்பார்க்காதது. 

சூப்பர் ஸ்டார், இரண்டு பெண்களுக்குத் தந்தை, கோடம்பாக்கத்தின் மனசாட்சி என்று பல முகங்கள் இருந்தாலும், அவர் அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாத ஒரு முகம்... 'மகன்'! தனது தாய் ஜக்குபாய்க்கு ஒரு மகனாக நிறைவேற்ற வேண்டிய கடமையை 60-வது வயது வரை பரிசுத்தமாகப் பாதுகாத்து நிறைவேற்றியிருக்கிறார் ரஜினி. அதன் ஏரியல் வியூ... 

சிவாஜி ராவ்-வயது 6 

சத்தியநாராயண ராவ் கெய்க்வாட் (ரஜினியின் சகோதரர்): ''எங்க அப்பா ரானோஜி ராவ் கட் அண்ட் ரைட் ஆளு. சிவாஜி ராவ் அப்படியே அப்பா மாதிரி. ஆனா, அம்மா ஜக்குபாய் செல்லம். பிரைமரி ஸ்கூல்ல சேர்க்குறதுக்கு முன்னாடி, சிவாஜி ராவ் கையில சிலேட்டைக் கொடுத்து எழுதச் சொன்னாங்க அம்மா. புத்தகத்துல இருந்த எழுத்துக்களை உன்னிப்பா பார்த்துட்டு, உடனே வளைச்சு நெளிச்சு கடகடன்னு எழுத ஆரம்பிச்சிட்டான் சிவாஜி. அப்பவே அந்த வேகம். 

சிவாஜிக்கு ஒன்பது வயசு இருக்குறப்ப அம்மா இறந்துட்டாங்க. விஷயத்தைச் சொல்ல சிவாஜியைத் தேடினப்போ, தெருவில் சைக்கிள்ல ரவுண்ட் அடிச்சுட்டு இருந்தான். வீட்டுக்கு அழைச்சுட்டு வந்ததும் இறந்திருந்த அம்மாவைச் சலனமே இல்லாமப் பார்த்தான். அவ்வளவுதான். அழுகையோ, ஆர்ப்பாட்டமோ இல்லை. ஆனா, அந்த நாள்ல இருந்து தனிமையில் இருக்கும் சமயங்களில் எல்லாம் அம்மா குறித்து நினைப்பான். என்னை அம்மா குறித்த நினைவு களைத் திரும்பத் திரும்பப் பேசச் சொல்லிக் கேட்டுக்கிட்டே இருப்பான்!'' 

சிவாஜி ராவ் - வயது 20 

ராஜ்பகதூர் (ரஜினியின் ஆப்த நண்பர்): ''40 வருஷமா ரஜினி எனக்கு நண்பன். டிரைவர்-கண்டக்டரா மூணு வருஷம் ஒண்ணா வேலை பார்த்தோம். அப்பவே அவன் ஸ்டைலுக்குப் பயணிகளிடம் ரசிகர்கள் அதிகம். சினிமாவில் நடிக்கச் சொல்லி நான்தான் அவனை மெட்ராசுக்கு அனுப்பினேன். ஃபிலிம் இன்ஸ் டிட்யூட்டில் படிக்கும்போது காசு இல்லாம சிரமப்பட்டவனுக்கு செலவுக்குப் பணம் அனுப்பிவைப்பேன். அதெல்லாம் மறக்காம, அவன் சூப்பர் ஸ்டார் ஆனதும், என்னையும் மெட்ராசுக்குக் கூப்பிட்டான். ஆனா, நான் வரலை. 

அவன் பெங்களூர்ல என் வீட்டுக்கு வர்றப்பலாம், மட்டன் கைமாதான் சமைக்கச் சொல்லுவான். ஒரு வாரம் தங்கியிருந்தாலும் தினமும் மட்டன் கைமாதான். 'ஏன்டா, வேற எதுவும் சாப்பிட மாட்டியா?'ன்னு கேட்டா டென்ஷனாகி, 'அதைப்பத்தி உனக்கு என்ன? அது என் இஷ்டம்'னு சண்டை போடுவான். அவன் சின்ன வயசுல குடியிருந்த அனுமந்த் நகருக்கு மாறுவேஷத்தில் போவான். அந்த ரோட்ல மேலேயும் கீழேயும் நடந்துட்டே இருப்பான். அம்மா, அப்பா பத்தின நினைவுகளைப் பேசிட்டே இருப்பான்!'' 

சிவாஜி ராவ்- வயது 30 

விட்டல் (ரஜினியின் நண்பர்): ''நானும் ரஜினியும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல ஒண்ணாதான் படிச்சோம். ரஜினி எங்க வீட்லதான் தங்கியிருந்தார். எங்கம்மா சின்னையம்மா மேல ரஜினிக்குப் பாசம் ஜாஸ்தி. எங்கம்மாவும் ரஜினியைச் சொந்த மகனைப் போலவே கவனிப்பாங்க. ரஜினி எப்பவும் லேட்டாதான் சாப்பிட வருவார். அதுக்குத் தண்டனையா ரஜினியை நிக்கவெச்சு அம்மா கொம்பால அடிப்பாங்க. அந்தச் செல்ல அடியைச் சிரிச்சுகிட்டே வாங்கிக்குவார் ரஜினி. 'அம்மா கையால அடி வாங்குறதும் ஒரு சுகம்ல'ன்னு சொல்லிக்குவார்!'' 

ரஜினிகாந்த்- வயது 40 

சந்திரகாந்தா (கர்நாடக ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்): ''ரஜினிக்கு ரசிகனா அறிமுகமாகி, அவரோட அண்ணனுக்கு மாப்பிள்ளை ஆனவன் நான். பல ரசிகர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுற அளவுக்கு ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணுவார். தன் அம்மாவோட யார்தன்னைப் பார்க்க வந்தாலும், என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி வெச்சுட்டு வந்து சந்திப்பார். தன் ரசிகர்களின் அம்மாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா முடிஞ்ச வரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார். இல்லைன்னா, போன்ல அடிக்கொரு தரம் விசாரிச்சுட்டே இருப்பார்!'' 

ரஜினிகாந்த் - வயது 50 

எஸ்.பி.முத்துராமன் (இயக்குநர்): ''ஏவி.எம். ஸ்டுடியோவில் ரஜினி வழக்கமா மேக்கப் போடும் அறைக்கு 'ரஜினி ரூம்' என்றே பெயர். அதுபோல ரிஷிகேஷில் கங்கைக் கரை ஓரமாக தயானந்த சரஸ்வதி சுவாமிகளுக்குச் சொந்தமான காட்டேஜ் உண்டு. அதில் ரஜினி வழக்கமாகத் தங்கும் அறைக்கு 'ரஜினி காட்டேஜ்'னு பெயர். இந்தியா முழுக்க ரஜினிங்றது பிராண்ட் நேம். 

ரஜினி ஆசைப்பட்ட எல்லாமே அவருக்குக் கிடைச்சிருக்கு. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அம்மா பாசம்! அந்த அன்புக்காக இந்த நிமிஷம் கூட அவர் ஏங்கிட்டுதான் இருக் கார். 'அம்மாவுக்கு ஏதாச்சும் செய்யணும் சார்'னு சொல்லிட்டே இருப்பார். நிச்சயம் செய்வார்!'' 

ரஜினி-வயது 60..? 

'எந்திரன்' ஷூட்டிங் முடிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக் குப்பத்தில் அம்மா ஜக்குபாய்க்கு பிரமாண்டமாக ஒரு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி. அடிக்கல்நாட்டு விழா எல்லாம் முடிந்துவிட்டது. அந்தக் கிராமத்து மக்களுக்காக இலவச கல்யாண மண்டபம், குடிநீர் வசதிகள் செய்திருக்கிறார். அந்த நினைவு மண்டபப் பணிகள் முடிந்ததும் செயல்படுத்த வேண்டிய திட்டமும் தயார். ரிஷிகேஷ் செல்லும் வழியில் சொந்த ஆசிரமம் அமைக்க இடம் வாங்கியிருக்கிறார் ரஜினி. என்னமோ திட்டமிருக்கு!

12-12-13 சூப்பர் ஸ்டார் ரஜினியின் 64-வது பிறந்தநாள்!


சுருண்ட கேசம்... அகலமான கண்கள்... சிவந்த நிறம்.. புடைத்த புஜம்... தெளிவான தமிழ் உச்சரிப்பு இந்த தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக ஜெயிக்க முடியும் என்று எழுதப்படாத, போர்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சிய காலம்...


கோரை முடி, சின்னக் கண்கள், கருப்பு நிறம், உடற்பயிற்சி செய்யாத உடம்பு, பார்வையாளன் உள்வாங்கிக் கொள்வதற்குள் வேகவேகமாக பேசும் தமிழ் என்று ஒட்டுமொத்த மைனஸ்களையும் உள்ளடக்கிய உருவம்தான் சிவாஜிராவ் (எ) ரஜினிகாந்த்!


வானத்திலிருந்து குதித்த தேவகுமார தோற்றம் கொண்டவர்கள் மாத்திரம்தான் கதாநாயகர்களாக உலா வரமுடியும் என்ற கோட்பாடுகள் கோடம்பாக்கத்தில் கும்மியடித்த காலமது.... அன்றாடம் கஷ்டப்படுகிற குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் 'சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை அடைந்துவிடமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ரஜினி. இது தினசரி சாப்பாட்டுக்கே போராடும் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் தகர்க்க முடியாத தன்னம்பிக்கை விதையை விதைத்தது வைத்தது.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., என்ற இரு துருவங்கள் கோலிவுட்டில் தனி ராஜாங்கங்கள் நடத்திக்கொண்டிருந்த காலம். அப்போது, இயக்குநர்களின் பெயர்கள் எடுபடாது 'இது எம்.ஜி.ஆர் படம்... இது சிவாஜி படம்..’ என்று ஹீரோக்களின் அந்தஸ்து, புகழினாலேயே படங்கள் ஓடின.


இயக்குநர் ஸ்ரீதர் வந்த பிறகுதான் தமிழ்ரசிகன் ஒவ்வொரு இயக்குநர்களுக்கும் இருக்கும் தனித்தன்மை, திரைக்கதை திறமை, படக்காட்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் என அனைத்தையும் தனித்தனியாக பிரித்து பாகுபடுத்திப் பார்க்க ஆரம்பித்தான். கே.பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் போன்ற ட்ரென்ட்செட் ஜாம்பவான்கள் வந்தனர். அடுத்து நிவாஸ், பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் என்று ஒளி ஒவியர்களின் திறமைகளும் பளிச்சிட்டன.


இசையின் உச்சானிக் கொம்பில் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் நாற்காலி போட்டு அமர்ந்தனர்!

காலப்போக்கில் டைரக்டர்களுக்கு, ஒளிப்பதிவாளர்களுக்கு, இசையமைப்பாளர்களுக்கு, பின்னணிப் பாடகர்களுக்கு என தனித்தனியே ரசிகர் கூட்டம் உருவானது.

அதுமட்டுமல்ல பொதுமக்களுக்கு பொழுதுப்போக்குவதற்கென்றே ஏகப்பட்ட மீடியாக்கள் சுற்றி நிற்கிற காலம் இது... அத்தனைப் போட்டியாளர்களையும் தாண்டி இன்றும் இப்போதும் ரஜினி ஃபீவர்தான் ஆறுகோடி மக்களையும் ஆட்டிபடைக்கிறது!




அன்றாடம் வியர்வையில் குளித்து, கஷ்டப்பட்டு போராடி, அவமானப்பட்டு, அங்குலம் அங்குலமாக ஒருமனிதன், எப்படி உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தார் என்பதை இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற மனித ஜீவன்தான் ரஜினிகாந்த்.

ரஜினி திடீரென்று ஓர் இரவில் சூப்பர் ஸ்டார் ஆகிவிடவில்லை. இந்த 'சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்குப் பின்னால் அவருடைய கடுமையான உழைப்பு வேராக இருந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

"நான் உழைப்பாளி படத்துக்காக உடுப்பிக்குச் சென்றபோது என் அசிஸ்டென்ட் டைரக்டர் மாற்று உடை எடுத்துவரவில்லை. அப்போது ரஜினி அவரை தன் அறையிலேயே தங்கவைத்து தனது டிரஸ்ஸான வெள்ளை குர்தாவையும் பேன்டையும் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னார்! " என்று புல்லரிக்கிறார் பி.வாசு. அடையாளம் பெற்ற பெரிய மனிதர்கள் மட்டுமல்ல.. முகவரியே இல்லாத சாமான்யர்களின் மீதும் அதீத அன்பு செலுத்தி வருகிற மனிதன் ரஜினி.

'மற்றவர்கள் செய்த டிஸ்கரேஜ்தான் என்னை உயரம் நோக்கி ஓட வைத்தது. ஓடிஓடி உயரவைத்தது’ என்கிற ரஜினியிடம், "நீங்கள் நினைத்த இடத்தை அடைந்துவிட்டீர்கள். இனி ரிலாக்ஸ்தானே?" என்ற கேள்வியை முன்வைத்தால், "இல்லையில்லை.... இப்பவும் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில், இந்த அந்தஸ்தை அடைவதற்காக போராடினேன். இப்போது அந்த புகழுக்கு களங்கம் வராமல் காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்கிறேன். அப்பவும் போராட்டம்தான். இப்பவும் போராட்டம்தான்!" என்று பதில் சொல்கிறார் ரஜினி.

அறிவுரைகளை ஃபேன் காற்றில் பேப்பர் மாதிரி பறக்கவிட்டுவிடுவது கோலிவுட்டில் சில நடிகர்களின் இயல்பு. ஆனால், ஆரம்பத்தில் தன் குருநாதர் கே.பாலசந்தர், "காமிரா முன்னால் நடி.. பின்னால் நடிக்காதே..!" என்று ரஜினியிடம் சொன்ன அறிவுரையை இன்றுவரை கடைப்பிடிக்கிறார் அவர். அதனால்தான் இப்போதும் திரைவானில் சூப்பர் ஸ்டாராக ரஜினி ஒளிர்கிறார்.

4 comments:

  1. பல விசயங்களில் குருவை மிஞ்சியவர்... நல்லதொகு சிறந்த தொகுப்பு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ம்ம்ம்... சூப்பர் பாஸ்...

    ReplyDelete
  3. ம்ம்ம்... சூப்பர் பாஸ்...

    ReplyDelete
  4. நேரம் பார்த்து நச்சென்று ஒரு பதிவு...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!