13 January, 2015

இனி எல்லாப் பாதங்களும் ஸ்ரீரங்கம் நோக்கியே...! இடைத் தேர்தல் அலப்பறைகள்...



2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத்தொகுதியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார் அ.தி.மு.க. பொதுச்செயலர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.... ஆனால் சனிபெயர்ச்சியானது கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து அம்மாவை இடபெயர்வு செய்த காரணத்தால்.... 18 வருடமாக நிலுவையில் இருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அம்மாவுக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தமது சட்டசபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியை இழந்து தற்போது முகம்கூட காட்டாது மௌனம் காத்துவருகிறார்....

ஸ்ரீரங்கத்தை காலி தொகுதி என்று அறிவியுங்கள் என்று போராடி பின்னர் அறிவிக்கப்பட்டது.... இடைத்தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்புக்கு தொடர்ச்சியாக தேர்தல் ‌தேதியும் தற்‌போது அறிவிக்கப்பட்டுள்ளது... இடைத்தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்ற விதி இருக்கையில் மற்றக்கட்சிகளும் தன்னுடைய பலத்தை காட்ட இடைத்தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும்...

ஒரு சில கட்சிகள் இதுபோன்ற இடைத்தேர்தல்களை சந்திக்க திராணியற்று... ஆளுக்கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து அல்லது ஆளும்கட்சியினர்கள் பணம் கொடுத்து ஓட்டுவாங்கி ஜெயித்துவிடுவார்கள் என்ற காரணத்தைக்காட்டி மேலும் ஏன் வீண் செலவு என்று கருதி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிக்கை விட்டு அழகாக ஒதுங்கிக்கொள்வார்கள்.

ஆளும் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தொகுதி என்ற அடிப்படையில் அந்த தொகுதியின் வெற்றி அவர்களின் மானப்பிரச்சனையாக அமைந்துவிட்டது. அதற்காக அவர்கள் கடுமையான முறையில் வியர்வை சிந்தி ஜ(பண)னநாயகமுறையில் தேர்தலை நடத்த எப்போதோ தயாராகிவிட்டு இருப்பார்கள்....  (என்னது கிளம்பிட்டாங்களா?)

திமுக தற்போது அனைத்து மாவட்டத்திலும் கட்சி தேர்தலை நடத்தி அப்படிஇப்படி என ஒருமுடிவுக்கு வந்துள்ளது... கட்சியை பலப்படுத்திய பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் தன்னுடைய புதிய வியூகத்தை அமைக்க அந்தக்கட்சியும் தயாராகும்.... (ஆனா கட்சியில நடக்குற கூத்த பார்த்தா வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை)

தேமுதிக சார்பில் போட்டியிடலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்று தேர்தல் நாள் வரை குழப்பத்தில் இருப்பார் கேப்டன் அவர்கள்... பிஜேபி சார்பில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அந்தகட்சியின் தமிழிசை அறிவித்திருக்கிறார்... காங்கிரஸ் தனித்து நிற்கும் என்ற கா‌மெடிக்கு இடையில் மற்ற கட்சிகளின் நிலையில் பெரிய மாற்றங்களை பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன்.......

இதெல்லாம் சரி அடுத்து நடக்கப்போவது என்ன...! சமீப காலங்கலாக இந்த இடைத்தேர்தல்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அப்பப்பா... சொல்லி மாளமுடியவில்லை... சமீபக்காலங்களில் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியினரின் பலத்தைக்காட்டும் ஒரு களமாகவே அமைந்துவிட்டது....

இனி இன்றிலிருந்து தேர்தல் நாள் வரை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கம்தொகுதியில் முகாமிட்டுவிடுவார்கள்... ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பகுதியென தொகுதிமுழுவதும் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிடும். அவர்கள் தங்கள் பொன்னான நாட்டுப்பணியை அங்கேயே ஆற்றவேண்டியிருக்கும். 


மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், பஞ்சாயத்து என கட்சிப்பொருப்பாளர்கள் அனைவரும் பல்வேறு காரணங்கள் காட்டி தொகுதியில் முகாமிட கிளம்பிவிடுவார்கள்... எப்படி பரிசுப்பொருட்கள் கொடுத்து வாக்காளர்களை கவர்வது என்று திட்டம்தீட்டி அந்த திட்டத்தை சிபிஐ-கூட கண்டுப்பிடிக்காத முறையில் நிறைவேற்றவும் செய்வார்கள்.... (ஆனால் செய்திகளில்... 100 புடவை பிடித்தோம்... 50 பிளாஸ்டிக்குடம் பிடித்தோம் என்றே வரும்). தேர்தல் சமயங்களில் ஒடிவந்து உதவுபவர்கள் தேர்தல் முடிந்து எங்கு போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. (ஆனா என்னதான் இருந்தாலும் ராணி தேனீ களத்தில எறங்குமா என்பதுதான் அடுத்த கேள்வி)

தேர்தல் முடியும்வரை... ஸ்ரீரங்கம் ரங்கநாதரில் ஆரம்பித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் அழகிய தோரணங்களால் அ‌ழகுப்‌பெரும்... வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் சாலைகளை மறைத்து நிற்கும்... கட்டை வண்டிகள் கூட ஓடாத சாலைகளில் ஆடியும், BMW-க்கள் சீறிப்பாயும்... வருடத்திற்கு ஒரு கால்ஷீட் கூட கிடைக்காத நடிகர்-நடிகைகள் தொகுதிமுழுவதும் விளக்கவுரையாற்ற வந்துவிடுவார்கள்... அழுக்குப்படிந்த 50, 100 ‌நோட்டுக்கள்போய் 500, 1000 ‌புதிய நோட்டுக்கள் தகதகக்கும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
சாதாரணமாகவே செலவுசெய்துதான் வெற்றிப்பெற வேண்டிய சூழ்நிலையில் தற்போதைய தேர்தலானது... முதலமைச்சர் மீது ‌வழக்கு... கைது... தண்டனை.. பதிவிபறிப்பு என பரபரப்புகள் நிகழ்ந்துள்ளது...  அதனால் இவர்களின் வெற்றிக்காக வாக்காளர்கள் இன்னும் நல்லமுறையான பலனை அடைந்துவிடுவார்கள் என்றே சமூக ஆர்வர்கள் கருதுவார்கள்... (ஐயா.. நான் அவன் இல்லை..)
இந்த நிதியாண்டுக்கு 20 ஆயிரம் கோடி நிதிச்சுமை என்று அறிக்கையிட்ட தற்போதைய மாநில முதல்வர் ஓ.எஸ். அவர்கள்  (மக்களுக்குகொன்று தனி) தேர்தல் முடிவுக்குபிறகு இந்த தொகையை மாற்றிச்சொல்லுவாரா என்று தெரியவில்லை...

எது எப்படியோ இன்னும் ஒருமாத காலத்திற்கு ஸ்ரீரங்கம் தொகுதி விழாக்கோலம் பூணும் என்பதில் துளிஅளவுக்கூட சந்தேகம் இல்லை...  ஆனால் ஜனநாயகமானது காக்கப்படுமா என்பதுதான் என்னுடைய கேள்வி..?


என்னதான் பணம் கொடுத்தாலும் சாமானியனியன் மனதில் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டிருக்கும்.. அந்த அனலில் ஆடிப்போவர்கள் யார் என்பதுதான் தற்போதைய கேள்வி... பணநாயகத்துக்கு மத்தியில் சிரிதேனும் ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதே என் ஆசை...!

3 comments:

  1. ராணி தேனீ ..........ஜெயலலிதா.....Super word.........i like very much....

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு...
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அன்புடையீர்!
    வணக்கம்!
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    நட்புடன்/நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!