09 December, 2010

தூதுவளை


தூதுவளை தீர்க்கும் நோய்கள்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

தூதுவளையை பயன்படுத்தும் முறை

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

 
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

No comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!