22 March, 2013

வெரி வெரி குட்... "மை லார்ட்"

 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு, சமீபத்தில், பணிநிறைவு பெற்றிருக்கிறார். அவர், நீதியரசராக பதவியில் இருந்த காலத்தில், 93 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது, குறிப்பிடத்தக்க பெரும் சாதனை. அதுமட்டுமல்ல, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து, நீதிமன்றத்தில், நீதிபதியை, "மை லார்ட்' என்று கூறும் வழக்கம் இருந்து வருகிறது. 
 
அந்நிலையை மாற்றி, நீதிபதியான தன்னை, "சார்' என்று எளிமையாக அழைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் இவர். கோவில்களில், பெண் தெய்வங்கள் இருக்க, பெண்களும் பூஜை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது, இவரது புரட்சிகரமான தீர்ப்பு. 
 
அரசு உணவு தயாரித்து வழங்கும், அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், ஒதுக்கீடு வழங்கி, சமத்துவம் நிலவ தீர்ப்பு வழங்கியவரும் இவர் தான். இடுகாட்டை சமரசம் காணும் இடமாக, சமத்துவம் உலவும் இடமாக மாற்றியவரும் இவர் தான். இப்படி, எத்தனையோ சாதனைகள். 
 
நீதிபதியாக பதவியேற்ற போதும், பணிநிறைவு பெற்ற போதும், தன் சொத்து பட்டியலை தவறாமல் சமர்ப்பித்த நேர்மையான நீதிபதி இவர். அரசு அளித்த காரை, பணி நிறைவு நாளன்றே, தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்து விட்ட இவரை, வீட்டுக்கு போக தன் காரில் வர அழைத்ததைக் கூட ஏற்காமல், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ரயில் சீசன் டிக்கெட்டுடன், சாதாரண மனிதர் போல, வேட்டி சட்டை அணிந்து பயணித்தது, வியப்பில் ஆழ்த்துகிறது. 
 
ஆனால், நீதியரசராக இருந்து தீர்ப்புகள் வழங்கியவர், மீண்டும், அங்கே மூத்த வழக்கறிஞராக பணிபுரிய இருப்பதாக அறியும் போது சற்று நெருடுகிறது.

அவர், இளம் வழக்கறிஞர்களுக்கு, தன் அனுபவங்களைக் கூறி, வழிகாட்டுபவராக இருப்பதே வரவேற்கத்தக்கது. மீண்டும் வழக்கறிஞர் உடை அணிந்து, நீதிபதியிடம் நியாயம் வழங்க வாதாட வேண்டுமா என்பது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
 
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நீதிபதியாக இருந்த வீராசாமி தற்போது கர்நாடகா, சிக்கிம் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, பி.டி.தினகரன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கே.ஜி.பாலகிருஷ்ணன் (இப்போது டில்லி மனித உரிமை கமிஷன் தலைவர்) இவர்கள் மீது, வருமானத்துக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக வழக்குகள் இருக்கும் சமயத்தில், சந்துரு போன்ற நேர்மையான நீதிபதிகளும் இருக்கின்றனர் என்பது வியப்பைத் தருகிறது. அரசு அளிக்கும் எந்த பதவியையும், ஏற்கப் போவதில்லை என்ற அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
 
இவர்களே உண்மையான பாரத ரத்னாக்கள்...! வாழ்க இவர் பல்லாண்டு...!

6 comments:

  1. நல்லதொரு மனிதரைப் பற்றிய நல்ல செய்திகள்! மனதுக்கு மகிழ்ச்சியைத்தந்தன! நன்றி!

    ReplyDelete
  2. ஏன் மறுபடியும் வாதாட வேண்டும் என்பது யோசிக்க வேண்டிய விசயம்...

    உண்மையான மனிதருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //அரசு அளிக்கும் எந்த பதவியையும், ஏற்கப் போவதில்லை என்ற அவரது அறிவிப்பு வரவேற்கத்தக்கது//
    பலர் ஒரு நபர் கமிட்டி. என்ற பெயரில் ஒய்வு பெற்றபின் உட்கார்ந்து அரசாங்கப் பணத்தை வீணடிக்கிறார்கள்.

    ReplyDelete
  4. அட இப்படியும் நல்லவங்க இருக்காங்களா சரிதான் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  5. நீதிபதி சந்துரு வக்கீலாக பணியாற்ற போவதில்லை, சமூக சேவையில் ஈடு பட போகிறார் என்றும் இந்தியன் எக்ஸ்பிரசில் படித்த ஞாபகம்..இவர் வக்கீலாக தொடர்வது சரியல்ல என்று நீங்க நினைப்பதற்கு என்ன காரணம்? பணத்திற்காக அல்லாமல் நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் தொழில் செய்யக்கூடிய சந்துரு போன்றவர்கள் இருந்தால் எளிய மக்களுக்கு நீதி கிடைக்க நல்வாய்ப்பாக இருக்குமே?

    ReplyDelete
  6. நீதியரசர் சந்துரு பற்றிய பதிவு அருமை - எளீமைக்கும் தீர்ப்புக்கும் பெயர் போனவர். வழக்கறிஞராகத் தொடரவது தவறில்லை, பதிவு நன்று சௌந்தர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!