30 November, 2013

இரண்டாம் உலகம் மகிழ்ச்சியே




மெல்லியதாய் இருந்த காற்று
இனிய தென்றலாகிறது...!

மரங்களில் பூத்த மலர்கள்
சாலைகளில் கோலம் போடுகிறது...!

சூரியனுக்கு வலப்புறத்தில் வண்ணமயமாய்
ஒரு வானவில் காட்சியளிக்கிறது...!

பட்டாம்பூச்சிகள் பறக்கும் திசையில் பார்க்கையில்
அட... நீ தான் வந்துக்கொண்டிருக்கிறாய்...!



*******************************


எல்லாம் தெரிந்தவள் போல்
மௌனித்திருக்கிறாய்...!

எதுவும் தெரியாதவள்போல்
பாவனை செய்கிறாய்...!

உனக்கு எது தெரியும் எது தெரியது
என்று புரியவைத்துவிட்டு போகிறது உன் புன்னகை...!


*******************************

என்னுடைய இரண்டாம் உலகத்தில்
நான் எடுத்து வைக்கும்
அத்தனை அடியையும்
அழுத்தமாய் பதியவைக்கிறேன்

உன் நினைவுகளை
இருக்கமாய் பற்றிக்கொண்டு....!


*******************************

மணித் துளிகள் மறந்து
நிறைய பேசுதால் வேண்டாம்...

மௌனத்தில் விழிகள் மாறி
பார்வைகள் பறிமாறவோண்டாம்...

தோள்கள் உரசி என்னருகே அமர்ந்திருக்கும்
அத்தனை நிமிடங்களும்தான் எனக்கு நிம்மதி...!
 

 *******************************

என் நினைவுகளை
எங்கே சென்று நிறுத்தினாலும்

அது தண்ணீரை தேடி பயணிக்கும்
வேர்களைப்போல ...

நித்தம் நித்தம் மறவாது
உன் திசையை தேடியே பயணிக்கிறது
 
 


29 November, 2013

நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம் - Naveena Saraswathi Sabatham review


சினிமா ஆசையில் எப்படியாவது திரையில் கதாநாயகனாக நடித்துவிடவேண்டும் என்ற துடிப்போடு... கஷ்டப்பட்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.. இன்னும் பத்து நாட்களில் படம் தொடங்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஜ்குமார் (அதாங்க நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் நடத்தில நடிச்சாரே அவரு...)

அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வின் மகனாக சத்யன்.. சதாரணமாக இருந்து கோடிஸ்வராக உயர்ந்த இவரது தந்தை (ஒரு நகைச்சுவை நடிகர்தாங்க) அடுத்து எப்படியவது தன்னுடைய மகனான சத்யனை MLA வாக ஆக்கிவிடவேண்டும் என்ற முடிவில் தற்போதுவரும் தேர்தலில் தனக்குபதிலாக சத்யனை களமிறக்குகிறார் அவர்... இன்னும் 10 நாட்களில் வேட்புமனு தாக்கல்...

மிகப்பெரிய ரவுடியான சொர்ணக்காவுக்கு வேலைக்கார கணவராக இருக்கிறார் விடிவி கணேஷ்.... வெளியில புலி ஆனா வீட்டுல எலி... இவருக்கு மகிழ்ச்சி வீட்டைவிட நண்பர்களோடுதான்... பால்புட்டியில் சரக்கடிப்பது இவரது ஸ்டைல்...


கடைசியா நம்ம ஹீரோ... ஆண்கள் கில்மாவுக்கு மருந்து தயாரிக்கும் சித்தவைத்திய சாலை நடத்திவரும் 14 தலைமுறை வம்சம்.... அதில் பாரம்பரிய தொழில் நடத்தும் தன் தந்தைக்கு அடுத்து தானும் அந்த தொழிலை செய்துவரும் ஜெய்...  ஆனாலும் டாக்டர் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்...

சரி படத்தில இருக்கும் நான்கு நபர்களைப்பத்தி சொல்லியாச்சி.. (ஆமாங்க இது இந்த நான்கு நபர்களைப் பத்தின கதைதான்..) கதைஎன்னன்னு கேக்குறீங்களா...

படத்தின் கதை அளர்க்களமா துவங்குமிடம் சிவலோகம்... சிவன், நாரதரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார்.. (சிவன் வேடத்தில் சுப்பு பஞ்சு.. அதாங்க. பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யாவின் அண்ணன்) திருவிளையாடல் ஆடி ரொம்ப நாளாகுது ஒரு நாலுபேர தேர்வு செய்து கொண்டு வாங்கன்னு சொல்லி அனுப்புறாரு... நாரதர் தேர்ந்தெடுத்த அந்த நாலுபேர்தான் இவங்க...

சரி எதுக்கு இவங்களை தேர்ந்தெடுத்தாருன்னு பார்க்கிறீங்களா... அது ஒண்ணுமில்லிங்க... இந்த நாலுபேரும் நண்பர்கள்... ரொம்ப நல்லவங்கதான்.. ஆனா குடிச்சாமட்டும் இவங்க பண்ற ராவடி கடவுளுக்கே அடுக்கல... அதனால இவங்களை வச்சி குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு புரியவைக்க ஒரு சின்ன திருவிளையாடலை சிவன் நிகழ்த்துகிறார்... இதுதான் கதை....



டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் பாடி பரிசுபெரும் நிவேதா தாமஸை காதலிக்கிறார், ஜெய்... இரண்டுவருடம் காத்திருங்கள் என்று கூறும் அவரிடம் அப்படி காத்திருந்து பின்பு காதல் கனிந்து நிச்சயதார்த்தம் முடிகிறது ஒருமாதத்தில் திருமணம் என்று முடிவாகிறது...

ஒருமாதத்தில் திருமணம் என்பதால் ஒரு பேச்சுலர் பார்ட்டி வேண்டும் என்று நண்பர்கள் கேட்க... அதற்காக இந்த நான்குபேரும் சேர்ந்து குடித்து கும்மாளம் அடிக்க ஒருவாரம் சுற்றுலாவாக பாங்காங் ‌செல்கிறார்கள்.... அங்கு குடித்து கும்மாளம் அடிக்கும் இவர்களை கடவுள் சிவன் ஒரு தனித்தீவில் விட்டுவிடுகிறார்...

குடியை மறந்தால் இவர்களுக்கு தப்பிக்க ஒரு வாரத்தில் ஒருவாய்ப்பும்.. அதை சரியாக பயன்படுத்தவில்லையென்றால் அடுத்த 6 மாதத்தில் தான் இன்னொரு வாய்ப்பும் வழங்கப்படும் அதுவே இறுதியான வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்...

அதன்படி பாங்காங் செல்லும் இவர்கள் திடிரென ஒரு தனித்தீவில் கடவுள் சக்தியால் கொண்டுவிடப்படுகிறார்கள்...

அதன்பிறகு இவர்கள் குடியால் எப்படி கிடைக்கும் வாய்ப்புகளை கைவிடுகிறார்கள்... பிறகு அங்கிருந்து எப்படி தப்புகிறார்கள்.... இப்படி குடிப்பதற்கு கூட வெளி‌நாடு சென்று நேரத்தை வீணடிக்கும் இவர்கள் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது... குடி வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கவைக்கிறது என்று நல்லதொரு திரைக்கதையுடன் நல்லதொரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.சந்துரு

நகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமில்லை.. விடிவி கணேஷ்.. ஜெய்யுடன் இந்த நால்வரும் செய்யும் அலப்பறைகள் அசத்தல்... ப‌ழைய சரஸ்வதி படத்தைப்பார்த்து அதுபோல ஆக நினைக்கும் கணேஷ்... ஒரு தேங்காய் தலையில் விழ மூளைக்குழம்பி சரஸ்வதி சபதம் வசனங்களை பேசி திரியும் காட்சிகள் அழகு... 

குபீர் சிரிப்பை வரவைக்கும் வசனங்கள் சூப்பர்... சில வசனங்கள்... சில நகைச்சுவைகள் காட்சிகள் கொஞ்சம் முகம்சுளிப்பதாக இருந்தாலும் ரசிக்கும்படி வைக்கிறது...

இதில் ஹைலைட்டே சிவலோகம் தான்... சிவன் வேடத்தில் சுப்புபஞ்சு.. பார்வதியாக தேவதர்சினி... நாரதராக மனோபாலா... சிவலோகமே ஒரே டிஜிட்டல் மயத்தில் அமைத்திருப்பது அழகு... சிவன் ஆப்பிள் கம்யூட்டர் இந்த தீவில் நடக்கும் காட்சிகளை பார்ப்பது... முருகன் கையில் ஐ பேட்... என தற்போதைய நாகரீகமடைந்த சிவலோகம் எப்படியிருக்குமோ அப்படி உறுவாக்கி அசத்தியிருக்கிறார்கள்...

இதுஒரு காதல் கதையல்ல அதனால்தான் நிவேதா தாமஸ்-க்கு அதிகம் வேலையில்லை... ஹீரோயின் படல்களுக்கு மட்‌டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்....

இவர்கள் தனித்தீவில் மாட்டிக்கொள்ளும்போது வரும் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் சிவலோகத்தை அடிக்கடி காட்டி அந்த இழுவையை சரிசெய்கிறார் இயக்குனர்...

இசை பரவாயில்லை.. பாடல்கள் சுமார்... கானாபாலா பாடல் அழகு...

பொதுவான இந்தபடத்துக்கு நவீன திருவிளையாடல் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.. ஆனால் திருவிளையாடல் என்று தலைப்பை தனுஷ் பயன்படுத்திவிட்டதால் இதற்கு நவீன சரஸ்வதி சபதம் என்று மாறியிருக்கிறது...

10 ரூபாய்க்கு ஒரு கர்சீப் வாங்கினால் கூட 1000 ரூபாய்க்கு பார்ட்டிக்கொடுக்கிறார்கள்... குடியானது இப்போது பேஷனாகவே மாறிவருகிறது... இப்படி குடித்துகுடித்து நமக்கு கிடைக்கும் பல அறிய வாயப்புகளையும் நல்ல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிடுகிறோம்... குடியை விட்டுவிட்டால் வாழ்க்கையானது எப்போதும் நல்ல சக்சஸ் தரும் என்கிறது இந்த நவீன சரஸ்வதி சபதம்....

படம் ஒருமுறைபார்க்கலாம்...

இவைகளை பார்த்தும் சிரிக்கலாம்.. படித்தும் சிரிக்கலாம்...

 
நீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'
**********************************

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியாருங்க எல்லாம் தப்பிச்சிட்டாங்க

**********************************

நா‌ன் எழு‌தின கதை எ‌ப்படி இரு‌க்கு?
 
ரொம்ப சுமாராத்தான் இருக்கு உப்பு சப்பே இல்ல!
 
கதைய படிக்கக் கொடுத்தா உங்கள யாரு தின்னு பார்க்கச் சொன்னது
**********************************

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்

அப்பா: ஓன்னுமில்லை

மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
 
அப்பா:...............

**********************************
 
நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"

"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

**********************************
 
ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
**********************************
ரசித்ததின் தொகுப்பு...

28 November, 2013

இதெல்லாம் கூடவா மூளையை பாதிக்கும்..!


1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.


6.தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

பார்த்து நடந்துக்கங்க...

26 November, 2013

என்னச் சொல்லி தேற்றிக்கொள்வது...!



வேலை தேடி அலுத்தபின்
பேருந்துக்காக காத்திருக்கிறேன்
ஒரு பேருந்து நிறுத்தத்தில்...

அய்யா கொய்யா வேண்டுமா
என்று எதுகையோடு கேட்டவனிடம்
நான் சாப்பிடுவதில்லை என்று மறுத்தேன்...!


மதுர மல்லி.. மதுர மல்லி...
என்று கேட்டுவந்த சிறுமியிடம்
தலையாட்டி  வேண்டாம் என்றேன்..!


தம்பி...  டவுன் பஸ் 57 போய்விட்டதா 

என்று கேட்ட பெரியவருக்கு
இன்னும் இல்லை என்று ஆற்றுப்படுத்தினேன்...!


 ஐயா... சாமி...  என்று
பிச்சைக்காரன் கை நீட்ட
பக்கத்தில் இருந்தவன்
தர்மம்  செய்தான்...

இல்லையென்று 
தலையாட்டவுமில்லை...
எடுத்துக்கொடுக்க
கையில் காசுகளும் இல்லை...


செய்தித்தாளில் ஆழ்ந்தவன்  போல்
குனிந்த தலை நிமிராது இருந்தேன்
என்ன சொல்லி தேற்ற
என் இயலாமையை...!
வாசித்தமைக்கு நன்றி

23 November, 2013

பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் இரண்டு விஷயங்கள்..


சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக்காவில் மட்டும் தான்.


காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.


நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.


  பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.


பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.


நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.


  நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.



குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..



நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.


கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.


சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.



வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.


குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6 வயதில் தான் வளர்கிறது.



15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable


லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும் செய்வார்.


நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.


பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

பொதுவாக பெண்களுக்கு தன்னுடைய நகங்களை அழகுப்படுத்தி கொள்வதிலும்... பொது விஷயங்கள் பொதுஅறிவு தகவல்களை படிப்பதிலும் அதிகம் ஆர்வம் படைத்தவர்கள்... தலைப்பு புரிந்ததா..!

22 November, 2013

இரண்டாம் உலகம் சினிமா விமர்சனம் / irandam ulagam movie review



முதலாம் உலகம் (நம் உலகம்)


அனுஷ்கா ஒரு மருத்துவர்... அவர் பணியாற்றும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகள் செய்யும் ஒரு நல்ல உள்ளம் படைத்தவராக ஆர்யா...

ஆர்யாவின் குணம் அனுஷ்காவுக்கு பிடித்துப்போக தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். காதல், திருமணம், போன்றவற்றில் ஆர்வமில்லாத ஆர்யா... அனுஷ்காவின் காதலை நிராகரிக்கிறார்... மேலும்... உடல்நலம் சரியில்லாத தனது தந்தைக்காக திருமணம் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார்.

இதற்கிடையில் அனுஷ்காவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து விடுகிறது. 

இதற்கிடையில் அனுஷ்காவை பார்க்க பார்க்க ஆர்யாவுக்கு காதல் மலர்கிறது. தன்னுடைய திருமண விருப்பத்தை ஆர்யா சொல்ல இப்போது அவர் மறுத்து விடுகிறார்..... ஒரு மருத்துவ கேம்புக்காக கோவா செல்லும் அனுஷ்காவை தொடர்ந்து செல்லும் ஆர்யா எப்படியோ முயன்று அனுஷ்காவை காதலிக்க வைக்கிறார்.


ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்க தொடங்கும்போது ஒரு இரவு தனியாக வெட்டவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்... அங்கு மகிழ்ச்சியாக இருக்கும் இருவரும்... நான் கிளம்புகிறேன் என்று கிளம்பும் அனுஷ்காவை விரட்ட... ஓடிக்கொண்டிருந்த அனுஷ்கா கால் இடறி கீழே விழந்து எதிர்பாராத விதமாய் தலையில் அடிப்பட்டு இறந்துவிடுகிறார்... அப்போது இடைவேளை..!



உலகம் 2 (கற்பனை உலகம் அல்ல... இன்னொரு உலகம்)

அங்கு வீரம் நிறைந்த அனுஷ்கா... (வெறிபிடித்த ஒரு ஓநாயைக்கூட அசால்டாக தூக்கி வீசுகிறார் என்றால் பாருங்களேன்...) பார்ப்பதற்கு அவதார் மாதிரி ஒரு வித்தியாசமான உலகம் ஆனால் உண்மையில் பழைய ஹாலிவுட் படங்கள் போல் இருக்கிறது...

அங்கு ‌இருக்கும் ஆர்யா அனுஷ்காவை ஒருதலையாக காதலிக்கிறார். பலமுறை தன்னுடைய காதலை சொல்லி அனுஷ்காவிடம் நல்ல அடிவாங்குகிறார். இதற்கிடையில் அந்தப்பகுதி ராஜா அனுஷ்காவை தன்னுடைய அரண்மனைக்கு தூக்கிச்செல்கிறார்.. கோவம்கொண்ட ஆர்யா அனுஷ்காவை தன்னுடன் ஒப்படைக்கும்படி கேட்கிறார்.

அதற்கு தனக்கு ஒரு சிங்கத்தில் தோல் வேண்டும் என்றும்.... ஒரு சிங்கத்தை கொன்று அதன்தோலுடன் வந்தால் இவளை நான் ஒப்படைக்கிறேன் என்று சொல்ல உடனே காட்டுக்கு புறப்படுகிறார்.. ஆர்யா...

வெறிகொண்ட ஒரு கிராப்பிக்ஸ் சிங்கத்தை சண்டையிட்டு அதனுடைய தோலை ராஜாவுக்கு அளிக்கிறார்... தன்னுடன் அனுப்பும் அனுஷ்காவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் தயாராகிறது... காதல் என்னவென்று அறியாத அந்த உலகத்தில் நான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்று ராஜாவை கொல்ல துணியும் அனுஷ்கா... ஆர்யாவை வெறுத்து தன்னையே மாய்த்துக்கொள்கிறார்...


திருமணம் நடக்க வேண்டிய இடத்தில் அனுஷ்கா இறந்து போகிறார்... அப்போது இடைவேளை...

இடைவேளை வரை இந்த இருகதைகளும் மாறிமாறி வருகிறது..

இப்படி இரண்டு உலகத்திலும் தன்னுடைய காதலியான அனுஷ்கா இறந்துபோக என்னசெய்வதென்று தெரியாமல் பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா..

அதன்பிறகுதான் செல்வராகவனின் கொலைவெறி ஆரம்பிக்கிறது...

என்ன செய்வதென்று தெரியாமல்... இரண்டு உலகத்திலும் தனித்தனியே பைத்தியமாக சுற்றுகிறார் ஆர்யா....  இரண்டாம் உலகத்தில் உள்ள ஆர்யா ஒரு சவால் விட்டு... அங்குள்ள ஒரு சாமி மலையில் ஏறுகிறார்...


அதே நேரத்தில் நம்முடைய உலகத்தில் இருக்கும் ஆர்யா என்ன செய்வதென்று புரியாது... தன்னை அழைப்பது போன்ற ஒரு காரில்ஏறி மலைமேல் போகிறார்... கடைசியில் இரண்டு ஆர்யாக்களும் ஏறுவது ஒரே மலைதான் என்று தெரிய வருகிறது...

மலைமேல் ஏறிய காரில் இருந்து கீழே விழ நினைக்கும் ஆர்யாவை இரண்டாம் உலக ஆர்யா காப்பாற்றி அந்த உலகத்திற்கு கொண்டு செல்கிறார்... (இரண்டாம் உலக ஆர்யாவின் அம்மாதான் இந்த இருவருரை தன்னுடைய தெய்வசக்தியால் சந்திக்க வைக்கிறார் என்று பின்னர் புரிய வைக்கிறார் இயக்குனர்)

அடப்பாவிகளா....

இதுவரை பொறுமையா படத்தை பார்த்தது பத்தாதுன்னு..  படம் தொடர்ந்தது... இரண்டாம் உலக ஆர்யா-அனுஷ்கா ஜோ்டியை காதல் வயப்படுத்தவே இந்த உலக ஆர்யாவை பயன்படுத்திக்கொள்கிறார் என்று புரியவருகிறது..


நம் ஆர்யா எப்படி அந்த ஜோடி சேர காரணமாகிறார்... என்று மீதிக்கதையை அப்படி இப்படி இழுத்து என முடித்திருக்கிறார்... மாபெரும் இயக்குனர் செல்வராகவன்...

படம்பார்த்த நான் விமர்சனம் எழுதலாமா இல்லை வேணாமா என்று பல்வேறு யோசனைகளுக்கிடையே சரி கொஞ்சம்பேரை காப்பாற்றிய பெருமையாவது நமக்கு இருக்கட்டும் என்று முடிவெடுத்து இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்...

இடைவேளை வரை வரும் கதையை முழுதாக நீட்டித்து முடித்திருந்தால் கூட படம் கொஞ்சம் பிக்கப் ஆயிருக்கும்.. ஆனால் தேவையில்லால் இரண்டு கதையும் ஒன்றாக்கி குழப்பியிருக்கிறார்..

வித்தியாசமான இரண்டாம் உலகத்தை காட்டப்போகிறேன் என்று சொன்னதால் நான் உள்பட அனைவரும் ஆர்வமாக இருந்தோம் ஆனால் அந்த உலகம் சாதாரண லைட்டிங் எப்பைக்ட் மற்றும் கொஞ்சம் சுமாரான கிராப்பிக்ஸ் கொண்டு செய்யப்பட்டுள்ளது என்று பார்க்கும் அனைவருக்கும் தெரிந்துப்போகிறது.


ஆர்யாவின் நடிப்பு அப்படியொன்றும் பிரமாதமாய் இல்லை.. கொஞ்சம் எதார்த்தம் தெரிகிறது... அதை கடைசி வரை தக்கவைத்துக்கொள்ள தவறியிருக்கிறார்.. இரண்டாம் உலக ஆர்யா பரவாயில்லை கொஞ்சம் மெனக்கிட்டு இருக்கிறார்...

அனுஷ்கா டாக்டர் கதாபாத்திரத்தில் எதார்த்தமாய் வந்திருக்கிறார்... இரண்டாம் உலக அனுஷ்கா கலக்கியிருக்கிறார்.. வீரமான பெண்ணாக தைரியமாக சண்டைக்காட்சிகள்... என அசத்தியிருக்கிறார்...

நகைச்சுவைக்கு என்று யாரும் இல்லை படத்தில் நகைச்சுவையும் இல்லை...

நம் காதலி இறந்துவிட்டால் என்பதற்காக கவலை அடைய வேண்டாம் நம் மனதுக்குள் உண்மையான காதல் இருந்தால் நம் காதலியை எந்த உலகத்திலாவது காண்டறிந்துவிடலாம் என்று கதையில் சாரம் சொ்லலியிருக்கிறது.

ஆனால் எந்த ஒரு வித்தியாசமான கதைகளமோ.. காட்சி அமைப்போ புதுமைகளை படத்தில் என் கண்ணுக்கு புலப்படவில்லை...

படம் பார்த்துவிட்டு கிளம்பும் அனைவரும் அப்பா முடிஞ்சதா என்ற மனநிலையோடு கிளம்புகிறார்கள்..

இந்த படத்தை எதற்கு இரண்டு வருடங்கள் எடுத்தார்கள் என்று புரியவில்லை...


ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார்... பாடல்கள் சுமார் ரகம்தான்... பின்னணி இசை அனிருத் இதுவும் பரவாயில்லை... சுமார் ரகம்தான்...

இந்த இரண்டாம் உலகம் படத்தை கண்டிப்பாக திரையில் பாருங்கள்... (யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)... (சாவுங்கடா...)

விஜயகாந்தின் குடி பழக்கம் அவர் சொந்த விஷயமா..?



'விஜயகாந்த், மதுப் பழக்கம் உடையவர்' என்று, ஆளும் கட்சியினர் கூறுவது, சிலருக்கு, எரிச்சலைக் கிளப்புகிறது. 'அவருடைய தனிப்பட்ட பழக்கம் எதுவும், தமிழர்களைப் பாதிக்காது' என்கின்றனர்.

இப்படிச் சொல்வது அபத்தம்; அறிவீனம். ஏனெனில், விஜயகாந்த், டாஸ்மாக்கே கதி என்று விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் 'குடிமகன்' அல்ல. அவர், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் கூட.

முதல்வர் நாற்காலி மீது, தீரா மோகம் கொண்டிருப்பவர். அவர் கனவு காண்பதைப் போல, 2016-ல், முதல்வராகி விட்டால் (தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்!), முக்கியமான முடிவுகளை எடுக்கையில், நிதானத்தில்' தான் இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அவர், நிதானம் இழந்து நடந்து கொண்டதால் தான், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ.,க்கள், அதிருப்தியாளர்களாக மாறி விட்டனரா என்பது தெரியவில்லை.

ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், சி.என்.அண்ணா துரை மற்றும் (எனக்குத் தெரிந்த வரையில்) கருணாநிதிக்கு, இந்தப் பழக்கம் இருந்ததாக, யாருமே சொன்னதில்லை. சில மாதங்களுக்கு முன், திருமதி விஜயகாந்த் தலைமையில், தே.மு.தி.க.,வினர், மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சியின் தலைவருக்கே, 'பழக்கம்' உண்டு என்பது, பகிரங்க ரகசியம். ஆகையால், மக்கள், அதை ஒரு வேடிக்கையாகத் தான் பார்த்தனர்.

நல்லதொரு மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், சிகிச்சை பெற்று, இப்பழக்கத்தை விட்டொழிப்பது, அவருக்கும், கட்சிக்கும் நல்லது. அவருடைய ஆதரவாளர்கள், இதை அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆளுங்கட்சியினர், திட்டமிட்டு அவமானப்படுத்துவதால் தான், அவர், சட்டசபைக்கு வருவதில்லை என்று சொல்கின்றனர். நாக்கைத் துருத்தி, விரலை நீட்டி, ஆளுங்கட்சியினருக்கு, அவர் சவால் விட்டது தவறில்லையா? சரியான தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களுடன், கோர்வையாகப் பேச, அவரால் முடியவில்லை.

எனவே தான், அவைக்குப் போவதில்லை என்பது தான் பெரும்பாலானோரின் கருத்து. இதை எல்லாம் நினைவில் கொண்டு, தன்னை மாற்றிக் கொண்டால் தான், விஜயகாந்த், அரசியலில் நிலைக்க முடியும். இல்லையென்றால், அதோகதி தான்!

21 November, 2013

மழையில் கூடவா காதல் இப்படி செய்யும்...!





விலகி நடந்த உன்னை
நெருங்க வைத்தது...

சிலையாய் நடந்த உன்னை
சிலிர்க்க வைத்தது....

வேகமாய் நடந்த உன்னை
நளினப்பட வைத்தது....

ரம்மியமாய் நடந்த உன்னை
ரசிக்க வைத்தது...

 ஆகையால் மழை நல்லது...!


நீ நட்டு வைத்த பூச்செடி
என்னை சபித்துக்கொண்டிருக்கிறது...

மழையில் நனைகிறதே என்று
குடைபிடித்ததற்கு....!

ஒருவேளை
உன்னை எனக்கு பிடித்தது போல்
செடிகளுக்கு மழை பிடிக்குமோ..?

அழிக்கவும் அழகாக்கவும்
செய்கிறது மழை...!

நீ போட்ட கோலத்தை
அழித்துவிடுகிறது...

நனையும் உன் கோலத்தை
அழகாக்குகிறது...

எதை அழிக்க வேண்டும்
எதை அழகாக்க வேண்டும்
என்று தெரிந்த மழையை...

ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன்னோடு சேர்ந்து..!

 
#மழைக்_கால_கவிதைகள்

19 November, 2013

யுத்தமின்றி சப்தமின்றி ஒரு வன்முறை..!

Beautiful Girl

ன் நினைவு
எப்போதெல்லாம் பொழிகிறதோ!

அப்போதெல்லாம்
முளைத்த காளான்கள் தான்
இந்தக்கவிதைகள்..!

I Love You

னதோடு புதைந்த காதலை
விழிவழியாய் சொல்ல 
நினைக்கையில்...

முடியாமல் போகிறது
முன்பே சுரந்துவிட்ட 
கண்ணீரால்..!

I love you

த்தியின்றி ரத்தமின்றி
ஒரு மரணம்..!

யுத்தமின்றி சப்தமின்றி
ஒரு வன்முறை..!

உன் மௌனத்தால்..!

Beautiful Rose

காதல் தொடங்கியபோது
அரை கவிஞன் ஆனேன்..!

காதல் முடிந்த போது
முழு கவி‌ஞனாகிவிட்டேன்..!

A rose for you

மிழுக்கு அங்கீகாரம்
கிடைக்கவில்லையென்று
யார் சொன்னது...

அதோ ...!
அவளை உச்சரிக்க விடுங்கள்..!

Pink Rose

ந்தர்ப்ப சூழ்நிலைகளால்
பிடிக்காமல் போயிருக்கலாம்

ஆனால், 
காதலை யாரும்
சபித்தது கிடையாது..

எட்டவில்லையென்றாலும்
இது இனிக்கின்ற பழமே...!

Heart made of pink roses

சொல்லத் தெரிந்தாலும்
சொல்ல முடிவதில்லை...!

எழுதத் தெரிந்தாலும்
எழுத முடிவதில்லை..!

தொண்டையில் சிக்கிய முள்போல்
உள்ளே செல்ல முடியாமலும்
வெளியில் வரமுடியாமலும்
தவிக்கிறது என் காதல்..!

Yellow Flowers

வீசிய வலையில் சிக்கிய படங்களுடன்
என் காதல் கவிதைகள்...!
(மீள் பதிவு)