16 January, 2015

ஏமாற்றிவிட்ட ஐ படம்... சாத்தியமாகுமா என்னை அறிந்தால்


தமிழகத்தில் படித்தவர் படிக்காதவர், கிராமத்தான் நகரவாசி, அந்த ஜாதி இந்த ஜாதி, சிறியவர் பெரியர் என அனைவரும் ஒத்துப்போகக்கூடிய ஒரே விஷயம் சினிமா... சினிமா..!  ஏதாவது ஒரு வயதில் சினிமாவை ரசிக்கவில்லையென்றால் பூர்த்திபெறாது இந்த ஜென்மம் என்ற அளவுக்கு 100 ஆண்டுகளாய் மக்களோடு மக்களாக  கலந்துக்கிடக்கிறது இந்த சினிமா...!

எனக்கு சின்னவயசில் இருந்தே சினிமா செய்திகள் படிப்பது, சினிமாக்களை ரசித்துப்பார்ப்பது, தொலைக்காட்சிகளில் அதிகமாக சினிமா சம்மந்தமான நிகழ்ச்சிகள் பார்ப்பது, நண்பர்களுடன் சினிமாவைப்பற்றி பேசுவது... சினிமாவை விமர்சனம் செய்வது (நண்பர்களுடன்) என்பது எனக்குமிகவும் பிடித்தமான ஒன்றுதான்...

85-90-களில் தினத்தந்தி செய்திதாளில் சினிமா படப்போஸ்டர்கள் வெளிவரும்... அது தற்போது வரும் அளவுகளில் இல்லாமல் முழுபக்க அளவில் கருப்புவெள்ளையில் போடுவார்கள் அந்தப்பக்கத்தை அப்படியே எடுத்து சேமித்துவைத்துவிடுவேன்... பொழுது போகாதபோது இந்தமாதம் என்னன்னபடம் வெளியாகிறது என்று வீடுமுழுவதும் பரப்பிவைத்து பார்த்து ரசித்துக்கொண்டிருப்போன்.


அப்போது சினிமா பார்ப்பதற்கென்று எங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வரப்பிரசாதம் டென்ட் கொட்டகைமட்டுமே..... அதுதான் எங்கள் சினிமா தாகத்தை போக்கும்... அதுவும் புதுப்படம் என்பது மிகவும் அபூர்வம் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ரஜினிப் படங்கள் என்றால் இரண்டு முறைக்கூடப்பார்ப்பேன்.. டென்ட் கொட்‌டகையில் மாலை மற்றும் இரவுக்காட்சிகள் என இரண்டு காட்சிகள்தான்... ஒருபடம் வந்தால் அதிகபட்சமாக ஒருவாரம் மட்டுமே ஓடும்... அந்த ஒருவாரம் கூட பொறுக்காமல் அடுத்தப்படம் எப்படாமாத்துவான் என்று காலை எழுந்ததும் போஸ்டர் மாறியிருக்கிறதா என்று பார்ப்பதுதான் வேலை....!

1993-களில் கேபிள் டிவி வந்தது... அதற்கு முன் எங்கள்  புதுப்படத்தாகத்தை தீர்த்துவைத்தது விசேஷ நாட்களில் தெருவில் போடும் வீடியோ படங்கள்தான்...! எங்கள் பகுதியில் திருமணம் அல்லது ஈமச்சடங்கு நிகழ்வு போன்றவற்றுக்கு இரவு கண்விழிப்பதற்காக வீடியோ போட்டுவிடுவார்கள் இரவு முழுவதும் நான்கு படங்களுக்குமேல் ஓடும்....

பழையப்படங்கள் போட்டால் பார்க்கமாட்டோம் புதுப்படங்கள் போட்டால் நான் கண்டிப்பாக மூன்று படங்கள் பார்த்துவிடுவேன்... (மறுநாள் முழுவதும் படுக்கைவிட்டு எழுந்துக்கொள்ள மாட்டேன்) பார்த்திபனின் புதியபாதை வந்த புதிதில் எங்கு வீடியோ ஓடினாலும் முதலில் அந்தப்படத்தையே போடச்சொல்வோம் அவ்வளவு ரசிகராகிவிட்டேன் அந்தப்படத்துக்கு. ஆனால் காலங்கள் மாறிவிட்டது காட்சிகள் மாறிவிட்டது... (1993-க்குபிறகு கேபிள் டிவி சேட்டிலைட் தெலைக்காட்சிகள் வந்தப்பிறகு சினிமா கொட்டகையையும், வீடியோ ஒளிப்பரப்பும் மறைந்தேவிட்டது எங்களைவிட்டு)


திருவள்ளூர் நகரத்துக்கு வேலைக்கு வந்துவிட்டப்பிறகு (1996-க்பிறகு) புதுப்படங்கள் பார்ப்பது என்பது இயல்பாக  மாறிவிட்டது.... பொதுவாக படம் வெளிவந்து ஒருவாரத்திற்குபிறகுதான் திரையரங்கம் செல்வேன் ஏன்னென்றால் அப்போதுதான் ரசிகர்கள் ஆரவாரமின்றி ரசித்துப்பார்க்கமுடியும் என்பதற்காக... எனக்கு ஒவ்வொரு காட்சியும்... ஒவ்வொரு வசனத்தையும் ரசித்துப்பார்க்கவேண்டும்... இதுவரையில் படம் ஆரம்பித்துவிட்டதுக்குபின் படத்துக்கு போனதில்லை அப்படி ஆரம்பித்திருந்தால் திரும்பிவந்துவிடுவேன்... முதல் நாள் முதல் காட்சி என்பது அரிது அப்படி நான்பார்த்த முதல் படம் விஜய்-யின் தமிழன் மட்டும்தான் (பிளாக் எழுதுவதற்கு முன்புவரை)


என் சினிமா ஆர்வம் இப்படியிருக்க பிளாக் எழுதுவதற்கு பின் கவிதை வீதிதளத்தை பிரபலப்படுத்துவதற்காக ஒருசில சினிமா செய்திகளை பகிர்ந்துவந்தேன். அதன்பிறகு சில பிரபல பதிவர்களைப்பார்த்து விமர்சனம் எழுதும் எண்ணம் வந்தது. அப்படி விமர்சனம் எழுதுவதற்காக நான் பார்த்த முதல்படம் கமல் நடித்த மன்மதன் அம்பு படம்தான்... 10-30 மணிக்கு படம்பார்த்துவிட்டு 2.30 மணிக்கு விமர்சனம் எழுதிவிட்டேன் நல்லதொரு ஹிட்டாகிவிட்டது அப்படித்தொடர்ந்ததுதான் சினிமாவிமர்சனம் எழுதும் பழக்கம்.



அட என்னடா... ஐ படத்ததைப்பற்றி ஏதாவது சொல்லுவான்னு வந்தா பழைய புராணத்தை பாடிகிட்டு இருக்கானே- அப்படின்னு நீங்கள் நினைக்கிறது எனக்கு கேட்குது.... சரி விஷயத்துக்கு வருகிறேன்... விமர்சனம் எழுத தொடங்கியப்பிறகு சிலப்படங்களை தேர்ந்தெடுத்து அவைகளைப்பார்த்து அவைகளுக்குமட்டும்தான் விமர்சனம் எழுதிவந்தேன். (உதா.. ஆடுகளம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அவன்-இவன், கோலி-சோடா, மைனா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமார போன்றப்படங்கள்..)


கடந்த வருடம் வேலை பளு, மற்றும் என் திருமணம் போன்ற நிகழ்வுகளால் பதிவுகளும், விமர்சனங்களும் சரியாக எழுதமுடியவில்லை..  இந்த வருடம் பதிவுகள் இடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்... கூடவே  சினிமா விமர்சனங்களும் பதிவிடவேண்டும் என்று நான் பார்க்க காத்திருந்த படங்கள் தான் ஐ, மற்றும் அஜீத்தின் என்னை அறிந்தால்...  இரண்டுப்படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்ததால் இரண்டுப்படத்துக்கும் விமர்சனம் எழுதவேண்டும் என்ற முடிவில் இருந்தேன்...


இந்நிலையில்... அஜீத்தின் என்னை அறிந்தால் தள்ளிபோனது... ஐ படத்தைபார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன்... திருவள்ளூர் நகரில் துளசி, மீரா என இரண்டு திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சரி துளசிக்கு போவோம் என்று முடிவெடுத்தேன். பொதுவாக நான் ‌முதல்நாள் முதல் காட்சி படங்களுக்கு கூடவே வேடந்தாங்கல் கரண் வந்துவிடுவார். ஆனால் இந்தப்படத்துக்கு அவர்வரவில்லை. சரியென்று 10 மணிக்கு திரையரங்கம் சென்றால். ஆச்சரியம் காத்திருந்தது.... ஒரு சிறப்பு காட்சி 8 மணிக்கே  ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பொதுவாக விஜய், அஜீத், ரஜினி கமல் இவர்கள் படம் மட்டும்தான் சிறப்பு காட்சி போடுவார்கள். ஐ படம் சிறப்புகாட்சி போட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது.


அதன்பின்பு 11.00 மணிக்குதான் அடுத்தகாட்சி அதற்குள் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது... மேலும் 2.00 மணிக்கு ஒரு முக்கியமான வேலைவேறு இருந்தது... இதனால் என்னால் படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை காலம் சதிசெய்து கெடுத்துவிட்டது... மேலும் என்கூடவும் யாரும் இல்லை.... அதனால் சரி இது சரிப்படாது என்று வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.... அதற்கு பிரிதிபலனாகத்தான்  அடுத்தபடமான ஆம்பள படத்துக்கு சென்று விமர்சனம் செய்தேன்...

அடுத்து வெளிவரயிருக்கும் என்னை அறிந்தால் படமாவது எந்த வித குழப்பமும் இல்லாமல் பார்க்க சாத்தியமாகுமா என்று பார்க்கலாம்...  இம்புட்டுத்தாங்க வேறெதுவும் இல்லை பராபரமே...!

நன்றி...! வணக்கம்... 

எழுத்து போட்டாச்சி கிளம்புங்க...!

5 comments:

  1. ஹா... ஹா...
    நீண்ட நேரம் பேசி கடைசியில் ஐ பாக்கவில்லை என்பதைச் சொல்லி எழுத்துப் போட்டுட்டீங்க...

    ReplyDelete
  2. அருமை ஆகா
    ........................................
    .......................................
    படமல்ல........................
    உங்கள் விமர்சனம்..
    இதுவரை பார்க்காத காதலைத்தான் கேட்டிருக்கிறோம். முதல்முறையாக படம்பார்க்காமல் விமர்சனமா..
    ஷங்கர் பாய்ஸின்
    high profile படை
    உங்களை தேடி வரவுள்ளதாக தகவல்
    உஷாராய்யா உஷாரு..

    ReplyDelete
  3. அருமையான சினிமா பதிவு. பழைய நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. ஷ‌ங்க‌ர் ப‌ட‌த்தில் வ‌ரும் திருப்ப‌த்தை காட்டிலும், எதிர்பாரா திருப்பத்தை கிளைமாக்ஸில் வைத்துள்ளீர்க‌ள். ஹ‌ஹா.. அருமை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!