19 January, 2015

இந்த வாழ்க்கை யாருக்கும் வேண்டாம்


 
கோயிலுக்குச் சென்று
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
 
அங்கிருந்த படையலையும்
ஆரத்திதட்டில் இருந்த 
சில்லரைகளையும்...!

*************************************

யாசகம் கேட்டவனிடம்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...

தனிமையில் 
புலப்பிக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையோடு...!
*************************************

 
 தென்றல் வருடியது...
பட்டாம்பூச்சிகள் 
தொட்டுசென்றது...
கூடவே குயில்களின் கானம்..

ஆனால் தீரவில்லை
பசி....!

*************************************
 
 
ஒவ்வொரு வேளையும்
ஒரு கடவுளின் அவதாரம்
என் வழிப்பாட்டில்....

பசியை மறைக்க
விரதங்களென்று...!
 
*************************************
 
#‎வறுமை_வரிகள்‬

16 January, 2015

ஏமாற்றிவிட்ட ஐ படம்... சாத்தியமாகுமா என்னை அறிந்தால்


தமிழகத்தில் படித்தவர் படிக்காதவர், கிராமத்தான் நகரவாசி, அந்த ஜாதி இந்த ஜாதி, சிறியவர் பெரியர் என அனைவரும் ஒத்துப்போகக்கூடிய ஒரே விஷயம் சினிமா... சினிமா..!  ஏதாவது ஒரு வயதில் சினிமாவை ரசிக்கவில்லையென்றால் பூர்த்திபெறாது இந்த ஜென்மம் என்ற அளவுக்கு 100 ஆண்டுகளாய் மக்களோடு மக்களாக  கலந்துக்கிடக்கிறது இந்த சினிமா...!

எனக்கு சின்னவயசில் இருந்தே சினிமா செய்திகள் படிப்பது, சினிமாக்களை ரசித்துப்பார்ப்பது, தொலைக்காட்சிகளில் அதிகமாக சினிமா சம்மந்தமான நிகழ்ச்சிகள் பார்ப்பது, நண்பர்களுடன் சினிமாவைப்பற்றி பேசுவது... சினிமாவை விமர்சனம் செய்வது (நண்பர்களுடன்) என்பது எனக்குமிகவும் பிடித்தமான ஒன்றுதான்...

85-90-களில் தினத்தந்தி செய்திதாளில் சினிமா படப்போஸ்டர்கள் வெளிவரும்... அது தற்போது வரும் அளவுகளில் இல்லாமல் முழுபக்க அளவில் கருப்புவெள்ளையில் போடுவார்கள் அந்தப்பக்கத்தை அப்படியே எடுத்து சேமித்துவைத்துவிடுவேன்... பொழுது போகாதபோது இந்தமாதம் என்னன்னபடம் வெளியாகிறது என்று வீடுமுழுவதும் பரப்பிவைத்து பார்த்து ரசித்துக்கொண்டிருப்போன்.


அப்போது சினிமா பார்ப்பதற்கென்று எங்களுக்கு கிடைத்த ஒரே ஒரு வரப்பிரசாதம் டென்ட் கொட்டகைமட்டுமே..... அதுதான் எங்கள் சினிமா தாகத்தை போக்கும்... அதுவும் புதுப்படம் என்பது மிகவும் அபூர்வம் தான் எம்.ஜி.ஆர். மற்றும் ரஜினிப் படங்கள் என்றால் இரண்டு முறைக்கூடப்பார்ப்பேன்.. டென்ட் கொட்‌டகையில் மாலை மற்றும் இரவுக்காட்சிகள் என இரண்டு காட்சிகள்தான்... ஒருபடம் வந்தால் அதிகபட்சமாக ஒருவாரம் மட்டுமே ஓடும்... அந்த ஒருவாரம் கூட பொறுக்காமல் அடுத்தப்படம் எப்படாமாத்துவான் என்று காலை எழுந்ததும் போஸ்டர் மாறியிருக்கிறதா என்று பார்ப்பதுதான் வேலை....!

1993-களில் கேபிள் டிவி வந்தது... அதற்கு முன் எங்கள்  புதுப்படத்தாகத்தை தீர்த்துவைத்தது விசேஷ நாட்களில் தெருவில் போடும் வீடியோ படங்கள்தான்...! எங்கள் பகுதியில் திருமணம் அல்லது ஈமச்சடங்கு நிகழ்வு போன்றவற்றுக்கு இரவு கண்விழிப்பதற்காக வீடியோ போட்டுவிடுவார்கள் இரவு முழுவதும் நான்கு படங்களுக்குமேல் ஓடும்....

பழையப்படங்கள் போட்டால் பார்க்கமாட்டோம் புதுப்படங்கள் போட்டால் நான் கண்டிப்பாக மூன்று படங்கள் பார்த்துவிடுவேன்... (மறுநாள் முழுவதும் படுக்கைவிட்டு எழுந்துக்கொள்ள மாட்டேன்) பார்த்திபனின் புதியபாதை வந்த புதிதில் எங்கு வீடியோ ஓடினாலும் முதலில் அந்தப்படத்தையே போடச்சொல்வோம் அவ்வளவு ரசிகராகிவிட்டேன் அந்தப்படத்துக்கு. ஆனால் காலங்கள் மாறிவிட்டது காட்சிகள் மாறிவிட்டது... (1993-க்குபிறகு கேபிள் டிவி சேட்டிலைட் தெலைக்காட்சிகள் வந்தப்பிறகு சினிமா கொட்டகையையும், வீடியோ ஒளிப்பரப்பும் மறைந்தேவிட்டது எங்களைவிட்டு)


திருவள்ளூர் நகரத்துக்கு வேலைக்கு வந்துவிட்டப்பிறகு (1996-க்பிறகு) புதுப்படங்கள் பார்ப்பது என்பது இயல்பாக  மாறிவிட்டது.... பொதுவாக படம் வெளிவந்து ஒருவாரத்திற்குபிறகுதான் திரையரங்கம் செல்வேன் ஏன்னென்றால் அப்போதுதான் ரசிகர்கள் ஆரவாரமின்றி ரசித்துப்பார்க்கமுடியும் என்பதற்காக... எனக்கு ஒவ்வொரு காட்சியும்... ஒவ்வொரு வசனத்தையும் ரசித்துப்பார்க்கவேண்டும்... இதுவரையில் படம் ஆரம்பித்துவிட்டதுக்குபின் படத்துக்கு போனதில்லை அப்படி ஆரம்பித்திருந்தால் திரும்பிவந்துவிடுவேன்... முதல் நாள் முதல் காட்சி என்பது அரிது அப்படி நான்பார்த்த முதல் படம் விஜய்-யின் தமிழன் மட்டும்தான் (பிளாக் எழுதுவதற்கு முன்புவரை)


என் சினிமா ஆர்வம் இப்படியிருக்க பிளாக் எழுதுவதற்கு பின் கவிதை வீதிதளத்தை பிரபலப்படுத்துவதற்காக ஒருசில சினிமா செய்திகளை பகிர்ந்துவந்தேன். அதன்பிறகு சில பிரபல பதிவர்களைப்பார்த்து விமர்சனம் எழுதும் எண்ணம் வந்தது. அப்படி விமர்சனம் எழுதுவதற்காக நான் பார்த்த முதல்படம் கமல் நடித்த மன்மதன் அம்பு படம்தான்... 10-30 மணிக்கு படம்பார்த்துவிட்டு 2.30 மணிக்கு விமர்சனம் எழுதிவிட்டேன் நல்லதொரு ஹிட்டாகிவிட்டது அப்படித்தொடர்ந்ததுதான் சினிமாவிமர்சனம் எழுதும் பழக்கம்.



அட என்னடா... ஐ படத்ததைப்பற்றி ஏதாவது சொல்லுவான்னு வந்தா பழைய புராணத்தை பாடிகிட்டு இருக்கானே- அப்படின்னு நீங்கள் நினைக்கிறது எனக்கு கேட்குது.... சரி விஷயத்துக்கு வருகிறேன்... விமர்சனம் எழுத தொடங்கியப்பிறகு சிலப்படங்களை தேர்ந்தெடுத்து அவைகளைப்பார்த்து அவைகளுக்குமட்டும்தான் விமர்சனம் எழுதிவந்தேன். (உதா.. ஆடுகளம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அவன்-இவன், கோலி-சோடா, மைனா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமார போன்றப்படங்கள்..)


கடந்த வருடம் வேலை பளு, மற்றும் என் திருமணம் போன்ற நிகழ்வுகளால் பதிவுகளும், விமர்சனங்களும் சரியாக எழுதமுடியவில்லை..  இந்த வருடம் பதிவுகள் இடவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறேன்... கூடவே  சினிமா விமர்சனங்களும் பதிவிடவேண்டும் என்று நான் பார்க்க காத்திருந்த படங்கள் தான் ஐ, மற்றும் அஜீத்தின் என்னை அறிந்தால்...  இரண்டுப்படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்ததால் இரண்டுப்படத்துக்கும் விமர்சனம் எழுதவேண்டும் என்ற முடிவில் இருந்தேன்...


இந்நிலையில்... அஜீத்தின் என்னை அறிந்தால் தள்ளிபோனது... ஐ படத்தைபார்த்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன்... திருவள்ளூர் நகரில் துளசி, மீரா என இரண்டு திரையரங்குகளில் இப்படம் வெளியானது. சரி துளசிக்கு போவோம் என்று முடிவெடுத்தேன். பொதுவாக நான் ‌முதல்நாள் முதல் காட்சி படங்களுக்கு கூடவே வேடந்தாங்கல் கரண் வந்துவிடுவார். ஆனால் இந்தப்படத்துக்கு அவர்வரவில்லை. சரியென்று 10 மணிக்கு திரையரங்கம் சென்றால். ஆச்சரியம் காத்திருந்தது.... ஒரு சிறப்பு காட்சி 8 மணிக்கே  ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பொதுவாக விஜய், அஜீத், ரஜினி கமல் இவர்கள் படம் மட்டும்தான் சிறப்பு காட்சி போடுவார்கள். ஐ படம் சிறப்புகாட்சி போட்டிருந்தது ஆச்சரியத்தை அளித்தது.


அதன்பின்பு 11.00 மணிக்குதான் அடுத்தகாட்சி அதற்குள் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிவிட்டது... மேலும் 2.00 மணிக்கு ஒரு முக்கியமான வேலைவேறு இருந்தது... இதனால் என்னால் படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை காலம் சதிசெய்து கெடுத்துவிட்டது... மேலும் என்கூடவும் யாரும் இல்லை.... அதனால் சரி இது சரிப்படாது என்று வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.... அதற்கு பிரிதிபலனாகத்தான்  அடுத்தபடமான ஆம்பள படத்துக்கு சென்று விமர்சனம் செய்தேன்...

அடுத்து வெளிவரயிருக்கும் என்னை அறிந்தால் படமாவது எந்த வித குழப்பமும் இல்லாமல் பார்க்க சாத்தியமாகுமா என்று பார்க்கலாம்...  இம்புட்டுத்தாங்க வேறெதுவும் இல்லை பராபரமே...!

நன்றி...! வணக்கம்... 

எழுத்து போட்டாச்சி கிளம்புங்க...!

15 January, 2015

ஆம்பள சினிமா விமர்சனம் - Aambala Cinema Review-2015


தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக நுழைந்தவர்கள் தங்களுக்கென்று தனிப்பாதையை அமைத்துக்கொண்டால் தான் நிலைத்து நிற்கமுடியும் என்ற உண்மையை புரிந்துக்கொண்டு தன்னுடைய படங்கள் என்றாலே இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் மனதில் அமர்ந்துவிடுகிறார்கள்.. 

அது குடும்பப் பாங்கான படமாக இருந்தாலும் சரி, ஆக்ஷ்ன் படமாக இருந்தாலும் சரி, திகில் படமாக இருந்தாலும் சரி அதில் தனது முத்திரை பதித்துவிடுவார்கள் அந்த வரிசையில் அரண்மனை படத்தில் நகைச்சுவையான திகில் படத்தை தந்த சுந்தர்.சி... தற்போது கொஞ்சம் ஆக்ஷ்ன் கலந்த குடும்பாங்கான ஒரு நகைச்சுவை கதையை எடுத்து “ஆம்பள”-யாக உலவவிட்டிருக்கிறார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகமான கதாபாத்திரங்களை கொண்டு சிரித்துவிட்டு வரும்படியான கதையை தன்னால் மட்டுமே தரமுடியும் என்று மறுபடியும் நிருபித்திருக்கிறார் சுந்தர்.சி. பாதுகாப்பான கதையை தேர்ந்தெடுத்து அதை நாமே நடித்து தயாரித்தால் போட்டபணத்துக்கு உத்திரவாதம் என்ற உண்மையை தெரிந்துக்கொண்டு அதுமாதிரியான கதையை தேர்ந்தெடுக்கிறார் விஷால்...!

படத்துக்குள் வருகிறேன்....!  முதல் சீனில் அரசியல் மற்றும் அனைத்துவிதமான கூட்டங்களுக்கு ஆட்களை சப்ளே செய்யும் அதிரடி நாயகனாக அறிமுகமாகிறார் விஷால்.  அடுத்த சீனி‌லேயே அறிமுகமாகும் ஹன்சிகாவை பார்த்த மாத்திரத்திலே காதலிக்க ஆரம்பிக்கிறார்... ‌‌‌‌



அவருக்கு போட்டியாக போலீஸ் இன்ஸ்பெக்டாராக வரும் சந்தானமும் காதலை சொல்ல வருகையில் அது ஹை-ஸ்டெயில் பெண்ணு உனக்கு சரிப்பட்டு வராது என்று ஓரம்கட்டிவிடுகிறார். விஷால்-ஹன்சிகா  காதலிப்பதும், சந்தானத்திற்கு போலீஸ் வேலையை பறிக்கொடுப்பதும் முதல் அரைமணி நேரப்படத்தை காமெடியில் அரளிபுரளியாக்குகிறது...!

என்னடா சுந்தர்.சி படம்-னா ஏராளமான நடிகர்கள் வருவார்களே இன்னும் காணலையேன்னு பார்த்தா...! விஷால் அம்மாவிடம் இருந்து கதைநீள்கிறது... விஷால் பிறக்கும் முன்னே அவருடைய அப்பாவான பிரபுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது என்ற உண்மையை அறிந்து வீட்டைவிட்டு வெளியேறிய உண்மையை விஷாலிடும் கூறுகிறார். தற்போது மனம்திருந்தி பிரபுவையும் அவரது இன்னொரு குடும்பத்தில் பிறந்த குழந்தைகளையும் கண்டுபிடிக்கும்படியான வேண்டுகோளை ஏற்று கிளம்புகிறார் விஷால்.

செல்வந்தரான அப்பா பிரபுவை தில்லாங்கடி அப்பாவாக சந்திக்கிறார் விஷால் கூடவே அவர்களது சகோதரர்களாக வைபவ்வும், எதிர்நீச்சல் சதீஷ்-ம் கூட்டுச்சேர்கிறார்கள். மூன்று பேரும்சேர்ந்து செய்யும் அலப்பறைகள் அம்புட்டு மோசம்இல்லை....

பிளாஸ்பேக்கில்... ஊரில் நிரந்தர எம்.எல்.வாக இருக்கும் விஜயகுமார் தற்போது பிரபுவை நிற்கவைக்க முடிவெடுக்கிறார். ஆனால் தான் காதலித்த பெண்ணை விரட்டிவிட்ட அப்பாவை வெறுத்து ஒதுக்கிவிடுகிறார் பிரபு...  இதற்கிடையில் எம்.எல்.ஏ. பதவிக்கு ஆசைப்பட்டு அவருடைய கூலிக்காரனே
பிரபு அப்பாவை கொலை செய்து வில்லனாக உறுவெடுக்க.... அந்தபழி  பிரபு மீது வந்துவிடுகிறது... 


ஜெயிலில் இருந்து திரும்பிய பிரபு தன்னுடைய சொத்து எங்கும் போய்விடக்கூடாது என்பதற்காக தன்னுடைய மூன்று தங்கைகளுக்கு (ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா) வீட்டோட மாப்பிள்ளைகளாக பார்த்து திருமணம் செய்துவைத்துவிடுகிறார். மொத்த சொத்தையும் எழுதியும் வைத்துவிடுகிறார்.... ஆனால் தன் அப்பாவை கொன்றவர், தங்கள் வா‌ழ்க்கையை கெடுத்தவர்... என்று பிரபுவை வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறார்கள் அவரது தங்கைகள்......


இந்நிலையில்... மீண்டும் ஒன்றுசேரவேண்டும் என்றால் உங்கள் மூன்று அத்தைகளுக்கும் மூன்று பெண்கள் உள்ளனர்... அவர்களை எப்படியாவது நீங்கள் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று விஷால்& கோ-க்கு கட்டளையிடுகிறார் பிரபு..... இந்த சவாலை ஏற்றுக்கொண்டது அங்கு சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. ஹன்சிகாதான் அத்தைபெண் என்று... கூடவே மற்ற இருவருக்கும் இரு நாயகிகள்...


போலீஸ் போல் வேடமிட்டு அந்த குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிப்பதுபோல் அந்த குடும்பத்துடன் சேர்கிறார்கள். அதே வேளையில் எம்.எல்.ஏ., தேர்தலும் வருகிறது. இந்த முறை அந்த தேர்தலில் வில்லனை எதிர்த்து ரம்யாகிருஷ்ணன் போட்டியில் குதிக்கிறார். பக்கபலமாக விஷால் இருக்கிறார்.




ஒரு கட்டத்தில் விஷாலும் கூட இருப்பவர்களும் தன்னுடைய அண்ணனுடைய பையன்கள்தான்  என்று தெரியவர இவர்களையும் வீட்டைவிட்டு விரட்டுகிறார் ரம்யாகிருஷ்ணன்....? இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேர்தலில் வெற்றிபெற வில்லன் செய்யும் சோதனைகளை விஷால் எப்படிமுறியடிக்கிறார் என்றும்...? போட்டியில் யார் வெற்றி பெற்றது என்றும்? பிரபுவை மன்னித்து ஏற்றுக்கொண்டாரா? விஷால் உள்ளபட மூவருக்கும் திருமணம் நடந்ததா என்பதை இரண்டரை மணிநேரம் ஓடாய் ஓடவிட்டு கொஞ்சம் சிரிக்கவைத்து சுபம் போட்டிருக்கிறார் இயக்குனர். (இது கலகலப்பு பார்ட்-2 எனவும் கொள்ளலாம்)


படத்தில் மிஞ்சி நிற்பது நகைச்சுவைதான் விஷால், சந்தானம், சதீஷ், மனோபாலா, கனல்கண்ணன், பிரபு, ஸ்ரீமான், ராஜ்கபூர் என அத்தனைப்போரும் நகைச்சுவையில் வெலுத்து வாங்கியிருக்கிறார்கள்... சந்தானம் வரும் முதல் அரைமணிநேரப் படமும், கடைசி அரைமணிநேர படமும் சிரிப்பலையில் அரங்கம் அதிர்கிறது....



விஷால்-ஹன்சிகா காதல் காமினேஷன் நன்றாகவே வந்திருக்கிறது. மாடர்ன் கேளாக வந்து அனைவரின் மனதை கொள்ளையடிக்கிறார் ஹன்சிகா.. பாடல்கள் சுமார் ரகம்தான்  இரண்டுப்பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது...!


திரையரங்குக்கு வரும் ரசிகர்களை முகம் சுளிக்கவைக்காமல் கொஞ்சம் சிரிக்கவைத்து அனுப்பும்படியான கதையை கொடுத்தால் அந்தப்படம் வெற்றிதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுபித்திருக்கிறார சுந்தர்.சி. லாஜிக் பார்க்காமல் ரசித்து பொழுதைப்போக்க தகுந்தமாதிரியான படம்தான் இது...!


விரைத்துக்கொண்டு காமெடி செய்யும் அமர்களமான அட்டகாசம் தான் இந்த ஆம்பள

13 January, 2015

இனி எல்லாப் பாதங்களும் ஸ்ரீரங்கம் நோக்கியே...! இடைத் தேர்தல் அலப்பறைகள்...



2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத்தொகுதியில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார் அ.தி.மு.க. பொதுச்செயலர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.... ஆனால் சனிபெயர்ச்சியானது கொஞ்சம் சீக்கிரமாகவே வந்து அம்மாவை இடபெயர்வு செய்த காரணத்தால்.... 18 வருடமாக நிலுவையில் இருந்த வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் அம்மாவுக்கு 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் தமது சட்டசபை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவியை இழந்து தற்போது முகம்கூட காட்டாது மௌனம் காத்துவருகிறார்....

ஸ்ரீரங்கத்தை காலி தொகுதி என்று அறிவியுங்கள் என்று போராடி பின்னர் அறிவிக்கப்பட்டது.... இடைத்தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்புக்கு தொடர்ச்சியாக தேர்தல் ‌தேதியும் தற்‌போது அறிவிக்கப்பட்டுள்ளது... இடைத்தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்ற விதி இருக்கையில் மற்றக்கட்சிகளும் தன்னுடைய பலத்தை காட்ட இடைத்தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும்...

ஒரு சில கட்சிகள் இதுபோன்ற இடைத்தேர்தல்களை சந்திக்க திராணியற்று... ஆளுக்கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து அல்லது ஆளும்கட்சியினர்கள் பணம் கொடுத்து ஓட்டுவாங்கி ஜெயித்துவிடுவார்கள் என்ற காரணத்தைக்காட்டி மேலும் ஏன் வீண் செலவு என்று கருதி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிக்கை விட்டு அழகாக ஒதுங்கிக்கொள்வார்கள்.

ஆளும் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் தொகுதி என்ற அடிப்படையில் அந்த தொகுதியின் வெற்றி அவர்களின் மானப்பிரச்சனையாக அமைந்துவிட்டது. அதற்காக அவர்கள் கடுமையான முறையில் வியர்வை சிந்தி ஜ(பண)னநாயகமுறையில் தேர்தலை நடத்த எப்போதோ தயாராகிவிட்டு இருப்பார்கள்....  (என்னது கிளம்பிட்டாங்களா?)

திமுக தற்போது அனைத்து மாவட்டத்திலும் கட்சி தேர்தலை நடத்தி அப்படிஇப்படி என ஒருமுடிவுக்கு வந்துள்ளது... கட்சியை பலப்படுத்திய பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் தன்னுடைய புதிய வியூகத்தை அமைக்க அந்தக்கட்சியும் தயாராகும்.... (ஆனா கட்சியில நடக்குற கூத்த பார்த்தா வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை)

தேமுதிக சார்பில் போட்டியிடலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்று தேர்தல் நாள் வரை குழப்பத்தில் இருப்பார் கேப்டன் அவர்கள்... பிஜேபி சார்பில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அந்தகட்சியின் தமிழிசை அறிவித்திருக்கிறார்... காங்கிரஸ் தனித்து நிற்கும் என்ற கா‌மெடிக்கு இடையில் மற்ற கட்சிகளின் நிலையில் பெரிய மாற்றங்களை பார்க்கமுடியாது என்றே நினைக்கிறேன்.......

இதெல்லாம் சரி அடுத்து நடக்கப்போவது என்ன...! சமீப காலங்கலாக இந்த இடைத்தேர்தல்கள் படுத்தும்பாடு இருக்கிறதே... அப்பப்பா... சொல்லி மாளமுடியவில்லை... சமீபக்காலங்களில் இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சியினரின் பலத்தைக்காட்டும் ஒரு களமாகவே அமைந்துவிட்டது....

இனி இன்றிலிருந்து தேர்தல் நாள் வரை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீரங்கம்தொகுதியில் முகாமிட்டுவிடுவார்கள்... ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு பகுதியென தொகுதிமுழுவதும் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிடும். அவர்கள் தங்கள் பொன்னான நாட்டுப்பணியை அங்கேயே ஆற்றவேண்டியிருக்கும். 


மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டம், நகரம், பஞ்சாயத்து என கட்சிப்பொருப்பாளர்கள் அனைவரும் பல்வேறு காரணங்கள் காட்டி தொகுதியில் முகாமிட கிளம்பிவிடுவார்கள்... எப்படி பரிசுப்பொருட்கள் கொடுத்து வாக்காளர்களை கவர்வது என்று திட்டம்தீட்டி அந்த திட்டத்தை சிபிஐ-கூட கண்டுப்பிடிக்காத முறையில் நிறைவேற்றவும் செய்வார்கள்.... (ஆனால் செய்திகளில்... 100 புடவை பிடித்தோம்... 50 பிளாஸ்டிக்குடம் பிடித்தோம் என்றே வரும்). தேர்தல் சமயங்களில் ஒடிவந்து உதவுபவர்கள் தேர்தல் முடிந்து எங்கு போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. (ஆனா என்னதான் இருந்தாலும் ராணி தேனீ களத்தில எறங்குமா என்பதுதான் அடுத்த கேள்வி)

தேர்தல் முடியும்வரை... ஸ்ரீரங்கம் ரங்கநாதரில் ஆரம்பித்து அத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களும் அழகிய தோரணங்களால் அ‌ழகுப்‌பெரும்... வண்ண வண்ண டிஜிட்டல் பேனர்கள் சாலைகளை மறைத்து நிற்கும்... கட்டை வண்டிகள் கூட ஓடாத சாலைகளில் ஆடியும், BMW-க்கள் சீறிப்பாயும்... வருடத்திற்கு ஒரு கால்ஷீட் கூட கிடைக்காத நடிகர்-நடிகைகள் தொகுதிமுழுவதும் விளக்கவுரையாற்ற வந்துவிடுவார்கள்... அழுக்குப்படிந்த 50, 100 ‌நோட்டுக்கள்போய் 500, 1000 ‌புதிய நோட்டுக்கள் தகதகக்கும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
சாதாரணமாகவே செலவுசெய்துதான் வெற்றிப்பெற வேண்டிய சூழ்நிலையில் தற்போதைய தேர்தலானது... முதலமைச்சர் மீது ‌வழக்கு... கைது... தண்டனை.. பதிவிபறிப்பு என பரபரப்புகள் நிகழ்ந்துள்ளது...  அதனால் இவர்களின் வெற்றிக்காக வாக்காளர்கள் இன்னும் நல்லமுறையான பலனை அடைந்துவிடுவார்கள் என்றே சமூக ஆர்வர்கள் கருதுவார்கள்... (ஐயா.. நான் அவன் இல்லை..)
இந்த நிதியாண்டுக்கு 20 ஆயிரம் கோடி நிதிச்சுமை என்று அறிக்கையிட்ட தற்போதைய மாநில முதல்வர் ஓ.எஸ். அவர்கள்  (மக்களுக்குகொன்று தனி) தேர்தல் முடிவுக்குபிறகு இந்த தொகையை மாற்றிச்சொல்லுவாரா என்று தெரியவில்லை...

எது எப்படியோ இன்னும் ஒருமாத காலத்திற்கு ஸ்ரீரங்கம் தொகுதி விழாக்கோலம் பூணும் என்பதில் துளிஅளவுக்கூட சந்தேகம் இல்லை...  ஆனால் ஜனநாயகமானது காக்கப்படுமா என்பதுதான் என்னுடைய கேள்வி..?


என்னதான் பணம் கொடுத்தாலும் சாமானியனியன் மனதில் ஒரு நெருப்பு எரிந்துக்கொண்டிருக்கும்.. அந்த அனலில் ஆடிப்போவர்கள் யார் என்பதுதான் தற்போதைய கேள்வி... பணநாயகத்துக்கு மத்தியில் சிரிதேனும் ஜனநாயகம் காக்கப்படவேண்டும் என்பதே என் ஆசை...!

08 January, 2015

யாராவது இதை தட்டிக்கழிப்பார்களா?



பொறிந்த தன் இனத்திற்காக
தாலாட்டு பாடுகிறது
உச்சிக்கிளையில் அமர்ந்தபடி
குயில் ஒன்று...

புரியாமல் விழிக்கிறது...
முட்டை யாருடையது
என்று அரியாமல் அடைக்காத்த
காக்கை ஒன்று...

 
******************************************


இதுதான் சரியென்று
நம் மனதுக்கு தெரிந்தும்...!

செய்வதற்கான முயற்சிகள்
தம்மிடம் இருந்தும்...!

கிடைக்கும் வாய்ப்புகளை
திறமையாய் பயன்படுத்தாமல்..!

தட்டிக் கழிப்பதின் பெயரே
கோழைத்தனம் என கொள்க...!

******************************************


வார்த்தைகளின் நீளம்
குறையும்போது...


வாழ்க்கையின் நீளம்
அதிகரிக்கிறது...
 
******************************************
வணக்கம் மக்களே...!

03 January, 2015

ரஜினி மாதிரிஆத்திரப்படுவது சரிதானா..?

ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று ஆரம்பிக்கிறது ஒரு தமிழ் பழமொழி.... நிறைய விஷயங்களில் நாம் கோவத்தில் ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்யோசித்தால் இதை நாமா செய்தோம் என்று நம்மையே வியப்படையும் வெட்கப்படவும் செய்யும்.... அப்படிப்பட்ட ஆத்திரம் குறித்தே இது...!
 
வாழ்க்கையில் நீங்கள் விரைந்து முன்னேற விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு வார்த்தை.... ஆத்திரப்படுவதை அடியோடு விட்டுவிட்டால் ஒழிய முன்னேற்றம் என்பது முடியாது. ஏனென்றால் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக, இருக்கும் பல விஷயங்களில் ஆத்திரமும் ஒன்று எப்படி...?

ஆத்திரம் என்பது ஒரு திடீர் உணர்ச்சி. அதன் காரணங்களால், அநேக சமயங்களில் கடுகளவு கூட அதற்கு வலு இருக்காது. ஆத்திரம் ஆவேசமாகக் கிளம்பும் நேரங்களில், அறிவு அநேகமாக,  நடுங்கி பயந்து பதுங்கிக் கொள்கிறது.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லும்போது... புத்தி மட்டுபட்டுவிட்டால் சிந்திக்கும் ஆற்றல் சிதைந்து விடுகிறது. சிந்திப்பது என்பது தானே மனிதனையும் மிருகத்தையும் பகுத்துக்காட்டுகிறது... அனால்தான் ஆத்திரம் வந்த நேரங்களில் மனிதனும் மிருகத்துக்கு நிகராகவே நடந்து கொள்கிறான். கீழ்த்தரமான வார்த்தைகளைக் கொட்டித்தீர்கிறான். அப்படி அடிக்கடி மிருகமாக மாறிவிடுகிற மனிதன், எப்படி வளர்ச்சிபெற முடியும்.
 

ஒருவரிடத்தில் ஆத்திரம் வருகின்ற நேரங்களில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா...? அன்பு அணைந்து விடுகிறது. அதனால் சொற்களில் அனல் ஏறி விடுகிறது. இந்த அனல் அடுத்தவனைச் சுட, அவனிடமிருந்தும் சூடான சொற்களே வந்து விழுகின்றன. பகை ஒன்று உறுவாகிறது. அடுத்து வாய்ச்சண்டை, கைச்சண்டையாகி, கத்திச் சண்டையாகவும் மாறி விடுகிறது. ‘சண்டை என்றாலே, சம்பந்தப்பட்ட இருவருக்குமே ஏதோ ஒரு வகையில் இழப்பு என்பு நிச்சயம் தானே. 
 
உடல் ரீதியாகவும் ஆத்திரம் பல கெடுதல்களைச் செய்கிறது. மனிதனுக்கு ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவது இதுவே, அதுவில்லாமவ் அல்சர், இதயப் படபடப்பு, நரம்புத் தளர்ச்சி தலைவலி, இன்னும்பலபல.... இவையெல்லாம் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் உண்டு. வேதனை என்னவென்றால் ஆத்திரம், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களைக கூட, தூரத்தில் துரத்திவிடக கூடியது.

சரியானதற்காக இல்லாமல் தேவையில்லாமல் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப்படுகின்றவர்களின் காலமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?
 
எல்லாம் சரி, மற்றவர்கள் தொடர்ந்து தவறோ நமக்கு ஆகாததை செய்கிறபோதோ, நாம் எதிர்பார்க்காத விதமாக நடந்துகொள்கிறபோதே, நமக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்?

வரும்.  ஆத்திரம் என்பது இயற்கை... அது ஒரு மனித இயல்பு. ஆனால் அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி, சரியான முறையில் வெளிப்படுத்துவது என்பதில் தானே நமது புத்திசாலித்தனம் இருக்கிறது.

ஆத்திரம் என்பது யாருக்குமே வரக்கூடியது தான். ஆனால், யாரிடம் ஆத்திரப்படுவது? எதற்காக ஆத்திரப்படுவது? எந்த அளவுக்கு ஆத்திரப்படுவது? எந்த வகையில் வெளிப்படுத்துவது? என்பதில் சிலருக்கு மட்டுமே தெளிவு இருக்கும். அவர்கள் புத்திசாலிகள். அவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.

ஆறுகளில் தண்ணீர் சீராக ஓடிக் கொண்டிருக்கும். அதிக மழை காரணமாக திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த வெள்ளம் கட்டுக் கடங்காமல் ஓடி பாய்ந்து விட்டால் அது காட்டாறு. ஆகிவிடும். காட்டாற்று வெள்ளம் அழிவைத் தானே தரும்.

அதேபோல ஆத்திர உணர்ச்சி மனதில் வெள்ளமாகப் பொங்கி வரும்போது, நிதானம், பொறுமை என்ற இரு கரைகளும் வலுவாக இருந்தால் தான் அழிவைத் தடுக்க ஆத்திரப்படுகிறவன்றவர்களின் நேரமும் சரி, சக்தியும் சரி, நிச்சயம் வீணாகத் தானே போகிறது. பிறகு குறிக்கோளை நோக்கிய சிந்தனைகளுக்கும், முயற்சிகளுக்கும் நேரம் எங்கே இருக்கும்? சக்தி எங்கே இருக்கும்?
 

ஆத்திரத்தை அடக்குவது நல்லது என்றாலும் அதனினும் நல்லது ஆற்றுப்படுத்துவது. அதாவது ஆறப்போடுவது. இரண்டுக்கும் நுண்ணிய வேறுபாடு உண்டு. அடக்கி வைப்பது ஒருநாள் வெடிக்கலாம். ஆறப் போடுவது சூட்டை மட்டுமே இழக்கும் சுவையை இழக்காது.

கொதிக்க கொதிக்க் கொடுப்பப்படும் காபியை, அப்படியே குடித்தால் நாக்கு வெந்துவிடும். தேவையான அளவுக்கு ஆற்றிய பிறகு அருந்தினால் ரசித்துப் பருக முடியும். அதனால் தான் அவ்வையும் அடக்குவது சினம் என்று பாடாமல், ஆறுவது சினம் என்று பாடினார். ‌
 
ஆத்திரத்தில் அறிவிழப்பது முறைப்பும் எதிர்ப்பும் கிளம்பும். பின்னது வருத்தத்தை வரவழைத்து, மன்னிப்பைக் கேடக வைக்கும். ஆரப்போட்டு பொருமைக்காப்பதில் வெப்பமில்லாத வெளிச்சம் கிடைக்கும். சம்பந்தப்பட்ட இருவர்க்கிடையேயும் ஒரு புரிதல் அங்கே நிகழ்கிறது. உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு அறிவு செயல்புரிகிறது. ஆக்கம் விளைகிறது.

நமக்கு வேண்டியது ஆக்கமா? அழிவா?

நம் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் போது, யார் என்ன சொன்னாலும் நம்காதில் விழுவதில்லை... யாராவது சரியான தீர்வையோ அல்லது நல்ல கருத்தை‌ சொன்னாலும் அது நம் காதில் விழாது... எதற்காக இன்று அவரிடம் ஆத்திரப்படுகிறோமோ அதே தவறை நாளை நாமே செய்ய நேரிடும் என்ற உணர்வோ, ஏதாவது ஒரு விஷயத்திற்காக அவரிடம் போய் நாளை நிற்க நேரிடலாம் என்ற உணர்வோ நமது அறிவுக்கு எட்டாது. விளைவு? சச்சரவு சண்டை, சங்கடங்கள்தான்.

தீக்குச்சிக்கு தலையும் உண்டு. உடலும் உண்டு. அது தீப்பெட்டியில் உரசும் போதெல்லாம், தான் முதலில் எரிந்து, முடிந்தால் பிறபொருளையும் எரிக்கிறது.

மனிதனுக்கும் உடலும் உண்டு. தலையும் உண்டு. அவனும் தினமும் பிறமனிதர்களோடு உரசிக்கொண்டு தான் இருக்கிறான். ஆனால், அவன் தலைக்குள் அறிவு என்னும் அற்புத விஷயம் இருக்கிறது. அந்த அறிவை அலட்சியப்படுத்தும் போது அவனும் தீக்குச்சியாகிறான். அழிகிறான்.

 
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்... (குறள் 301)

 
பொருள் : சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான் - தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளாள் தடுப்பானாவான்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? நடாது ஒழிந்தார் என்.... என்கிறார் வள்ளுவர்.
 
ஆத்திரத்தை கட்டுப்படுத்துவோம்... அதை சரியான முறையில் கையாள பழகுவோம்... ஆத்திரம் என்பது மனிதனை மனிதாக வைத்திருக்கும் ஒரு சிறந்த ஆயுதம்.. ஆனால் அது அதிகாகும்போதுதான் நம்மை மிருகமாக மாற்ற ‌வாய்ப்பிருக்கிறது..! சரியாக மற்றும் அளவோடு பயன்படுத்துங்கள் ஆத்திரமும் அழகுப்படும். முன்னேற்றமும்... வெற்றியும் கிட்டும்... விட்டுவிடுவோம் ஆத்திரத்தை...!

டிஸ்கி:(முன்னமாதிரியே தலைப்பில் ரஜினியின் பெயர் இக்கட்டுரை படிக்கவைக்கவே.... நன்றி ரஜினி சார்...)