வேலிகளே பயிரை மேய்வது என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அதுபோன்ற பயிரை மேயும் வேலிகள் நம்நாட்டில் அதிகம் உண்டு. காவல் துறை மக்களை சுரண்டுவது, அரசியல்வாதிகள் ஊழல் செய்வது என்று எத்தனையோ வேலிகள் பயிரை மேயும் பணியை செம்மையாக செய்துக்கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை என்பதுபோல் தமிழக சர்வீஸ் கமிஷன் செய்திருப்பது இளைஞர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
படித்து எதாவது வேலை கிடைக்காதா என்று ஏங்கித்தவிக்கும் இளைஞர்களின் வாழ்வில் இவர்கள் செய்திருப்பது சாதாரண துரோகம் அல்ல... பணம் வாங்கிக்கொண்டும், சிபாரிசு என்ற பெயரில் தகுதியற்றவர்களுக்கு வேலையை வழங்கியுள்ளார்கள். இதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு என்னவாகும்.
தமிழக சர்வீஸ் கமிஷன் தலைவரும், உறுப்பினர்களும், விஜிலென்ஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டியுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேர்வுக்கு வருபவர்களின் அறிவைச் சோதித்துப் பார்க்கும் இவர்களது வீட்டிலா, விஜிலென்ஸ் சோதனை? யாரைத்தான் நம்புவதோ? தேர்வில் பாஸ்மார்க் போடும் இவர்கள் வீட்டிலா, டாஸ்மாக் பாட்டில்கள்? சிபாரிசு எடுபடாத இடங்களான இவர்களது வீட்டிலா, சிபாரிசு கடிதங்கள் சிக்கின?
சிவப்பு விளக்கு சுழல் கார், சொகுசான பங்களா, பணம், பதவி என, மடி நிறைய பொருள் இருந்தும், மனம் நிறைய இருள் இருந்துள்ளதே! இவர்கள் வசதிக்காக எத்தனைப்பேர் வாழ்வில் விளையாடி உள்ளனரே! மானமும், ஈனமுமில்லையே! படிக்காத மேதை காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஆகியோரால் நியமிக்கப்பட்ட தேர்வாணைய குழுவினர், நீதி நெறியாளர்களாக, வேலையற்றோருக்கு ஒளிவிளக்காக திகழ்ந்தனரே!
ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்வாணைய ஊழலும், அதன் கிளையாக முளைத்துள்ளதே! சர்வீஸ் கமிஷன் என ஆங்கில பெயர் வைத்துக் கொண்டு, அதை கமிஷன் மண்டியாக்கி விட்டனரே!
இதனால் லஞ்சம் சிபாரிசு பெற்று வேலைக்குசேர்ந்த தரமற்ற ஆட்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். தமிழக சர்வீஸ் கமிஷனை புதியதாக மாற்றி அமைக்க வேண்டும் இப்படிப்பட்ட குற்றங்கள் தமிழகத்தில் மீண்டும் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வணையத்தின் மீது மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்ப்படும்.