காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு; காதலிக்க மறுத்த பெண்ணை
கோடாரியால் வெட்டி கொலை செய்த மாணவன்; காதலுக்கு மறுப்பு தெரிவித்த
சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்.... இவை எல்லாம் இந்தவார
ஊடகங்களில் வெளியான செய்திகள்.
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு.
இருவருக்கும் அதே உணர்வு ஏற்பட்டால் மட்டுமே அது மலர்ந்து மணம் வீசும்.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஒருதலையாக தோன்றும் காதலுக்கு எதிராளி யாரும்
பொறுப்பாக முடியாது. மாய்ந்து மாய்ந்து காதலித்து விட்டு அந்த காதல்
மறுக்கப்படும்போது காதலியை குரூமாக இம்சிப்பதும் அதையும் தாண்டி கொலை
செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும்
இதுபோன்ற மூன்று சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
கண் இழந்த காரைக்கால் பெண்
காரைக்கால் நகரில் வசித்து வரும் வினோதினி சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரை ஒரு தலையாக காதலித்த சுரேஷ் தனது காதலை பலமுறை வினோதினியிடம் தெரிவித்தும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், தீபாவளி கொண்டாடுவதற்காக காரைக்கால் வந்த வினோதினியின் மேல் ஆசிட் வீசியுள்ளான். இதில் வினோதியின் முகம் சிதைந்து போய்விட்டது. கண் பார்வை முற்றிலும் பறிபோனது.
கோடாரியால் வெட்டிய குரூரம்
அரியானா மாநிலம் ஹிசாரில் குரு ஜம்பேஸ்வரர் பல்கலைக் கழகத்தில் பிடெக் படித்து வந்த மாணவி கீதிகா மேதாவும் அதே பல்கலை கழகத்தில் படிக்கும் பிரதீப் என்ற மாணவரும் நண்பர்களாக பழகியுள்ளனர். திடீரென கீதிகா மீது பிரதீப்புக்கு காதல் ஏற்பட்டது. இதனை கீதிகாவிடம் கூறியபோது அதற்கு கீதிகா மறுத்து விட்டார். இதன்பின்னர் பிரதீபிடம் பேசுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்திலேயே கீதிகாவை கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார். இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரதீப்.
பெங்களூரு சிறுமிக்கு கத்தி குத்து
பெங்களூர் தாவணகெரே தாவணகெரே பகுதியை சேர்ந்த 19 வயதான ஹைதர் அதே பகுதியை சேர்ந்த 13 வயதான செல்வியை ஒருதலையாக காதலித்துள்ளார். தனது காதலை பலமுறை தெரிவித்தும் அதனை ஏற்க செல்வி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹைதர் செல்வியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார் ஹைதர். இப்போது கொலை செய்த குற்றத்திற்காக கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
கழுத்தறுத்த காதலன்
இதேபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் அதிகம் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு வேலூரைச் சேர்ந்த லோகநாதன் இருங்காட்டுக் கோட்டையைச் சேர்ந்த சுமதியை காதலித்தார். இந்த காதலை சுமதி ஏற்கவில்லை. இதனால் கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்தார் லோகநாதன். ரத்த வெள்ளத்தில் துடித்த சுமதியை மருத்துவமனைக்கும் கழுத்தறுத்த லோகநாதனை சிறைக்கும் அனுப்பிவைத்தனர் பொதுமக்கள்.
தனக்கு கிடைக்காத ஒன்று
தனக்கு
கிடைத்த ஒன்று யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்குவதுதான்
இதுபோன்ற குரூரத்தை செய்யத்தூண்டுகிறது. தன்னால் நேசிக்கப்படும் நபர்
எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்று நினைத்த காலம் படிப்படியாக
மலையேறி வருகிறது. நமக்கு இல்லாத ஒன்று இல்லாமலேயே போகட்டுமே என்ற
எண்ணத்தில்தான் கொலை செய்யும் அளவிற்கு மனதில் குரூர எண்ணங்களை
தோற்றுவிக்கிறது.
மனரீதியான பாதிப்புதான்
இது போன்ற கொலைக்கும், ஆசிட் வீச்சுக்கும் காரணம் மனரீதியான சிக்கல்கள்தான் காரணமாகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். நான் உன்னை காதலிக்கிறேன்... நீ என்னை காதலித்தால் சந்தோசம்... அதேசமயம் நீ என்னை காதலிக்காவிட்டாலும் வருத்தமில்லை. அதற்காக என்னுடைய காதல் பொய்யாகிவிடாது. நான் தொடர்ந்து காதலித்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறும் காதலர்களும் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்களுக்கு காதல் மீதான பார்வையே வேறாக இருக்கும். இதுபோன்ற பழிவாங்கல்களும், கொலை செய்யும் எண்ணமும் ஏற்படாது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். (தொகுப்பு நன்றி தட்ஸ் தமிழ்)
காதலில் உள்ள ஆழமும் அழுத்தமும் தான் அவர்களை இப்படி செய்ய தோன்றுகிறது. இதுஇப்படி இருக்க இன்னும் கள்ளக்காதல்கள் கொளைகளை தொகுத்தால் அவ்வளவுதான். காலை செய்திதாள்களை கள்ளக்காதல் கொளைகளும் காதல் தற்கொலைகள், பழிவாங்கள்கள் என பங்கங்களை எல்லாம் நிரப்பி வருகிறது. (இது ஒரு விழிப்புணர்வுக்காக)
புனிதமான காதலை நம் மண்ணைவிட்டு போகாமல் காப்போம். காதலில் மெண்மையை கையாள்வோம்...