இன்று புனித வெள்ளி என்பதைக்கூட மறந்து வடிவேலுவின் படத்தை
பார்க்கப்போகிறோம் என்ற பரவசம்தான் மனதில் நிறைந்திருந்தது.. கடந்த
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு காணாமல்போன வடிவேலு இன்றைய
பாராளுமன்ற தேர்தலின்போது கொஞ்சம் துளிர்க்க துவங்குகிறார் என்று
நினைக்கும்போது மகிழ்வாகவே இருக்கிறது...
கொஞ்சநாள் காணாமல் இருந்த திரையுலகின் நகைச்சுவை சாம்ராஜ்ஜியம் இன்று புறப்பட்டு விட்டது...
அதன் வருகையை உறுதிசெய்தும் திரைப்படம்தான் தெனாலிராமன்.. ஆளும்
கட்சியிடம் இரகசியமாக உத்தரவு வாங்கி... அந்த நம்பிக்கைப்பேரில் படத்தை
துவங்கி நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து... தெலுங்கு அமைப்புகளிடம் ஏதே
சில சிக்கல்கள் ஏற்பட்டு இன்று வெற்றிகரமாக திரையை தொட்டுவிட்டது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன்...
இன்று
தேர்தல் சம்மந்தமான பணிகள் ஏதும் இல்லை, பத்தாம் வகுப்பு விடைத்தாள்
திருத்தும் பணிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது... ஆகையால்
இன்று முதல் காட்சி பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு நானும்
வேடந்தாங்கல் கரணும் காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் துளசி திரையங்கிற்கு
சொன்றோம்.
கடந்த வாரம் வெளியான மான் கராத்தே படம்
திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இரண்டு திரையரங்குகளில்
வெளியானது. நாங்கள் லட்சுமி திரையரங்கிற்கு சென்றோம் முதல் நாள் முதல்
காட்சிக்கு வெறும் 30 பேர்தான் அரங்கில் இருந்தனர்... ஆனால் இன்று
வடிவேலுவின் படத்தை பார்ப்பதற்கு 500 க்கும் மேற்பட்ட கூட்டம்
இருந்தது.....
வழக்கம்போல் டிக்கெட் வாங்க வரிசையில்
நிற்கும் ஒருவரிடம் காசு கொடுத்து தூரமிருந்தே டிக்கெட் வாங்கி
அரங்கில் வசதியான இடமாகப்பார்த்து அமைந்தோம்... (டிக்கெட் விலை ரூ.50)
அதன் பிறகே ஆரம்பித்தது வில்லங்கம்...!
ஓரளவுக்கு
திரையரங்கம் நிறைந்திருந்திருந்தது.... 10.25-க்கு வாக்காளர் விழிப்புணர்வு
குறும்படமும்.. அதைத் தொடர்ந்து புகைக்கு எதிராக விழிப்புணர்வு படமும்
ஓடத் தொடங்கியது இந்த காட்சிகள் ஓடும் போதே திரையில் ஒரு வித்தியாசம்
தெரிந்தது... அது என்ன வென்றால் படம் பெரியதாகி... அதாவது 200 % அளவில் Zoom-ஆகி படம் ஓடியது... சரி விளம்பரப்படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகையில்.....?
தெனாலிராமன் படமும் இப்படியே ஓடத்துவங்கியது... படத்தின் பாதிஅளவு மட்டுமே திரையில் தெரிந்தது அதனால் யார் நடிகர்கள் என்றுகூட பெயர்கள் வாசிக்க முடிவில்லை முகங்களும் மறைந்து வந்தது... அரங்கில் சத்தமும்... கூச்சலும் போட்டார்கள்... சரியாகிவிடும் என்று நினைத்ததால்.. அடி வாயாடி.. பாடல் வரை அப்படியே ஓடியது.... ரசிகர்கள் எழுந்து அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர்... சரி செய்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லியே அரைமணி நேரப்படத்தை ஓட்டிவிட்டார்கள்....
அதன் பிறகும் சரியாக வில்லை என்பதால் பொருமையிழந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால்... சரி செய்கிறோம் என கோ படத்தில் இருந்து பாடல்களை ஓடவிட்டனர்.... அதற்குள் பலரும் பணத்தை திருப்பிகொடு்ங்கள் என வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்...
இறுதியாக 11.30 மணிக்கு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.... ஆனால் மீதமிருந்த கொஞ்சப்பேருக்காக படம் போடமுடியாது என்றும்... அடுத்த காட்சிக்கான நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் முதல் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள்...!
வெகு நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும்... அதேபோல் வெகுநாளுக்கு பிறகு விமர்சன பதிவு எழுதப்போகிற ஆர்வமும் தடைப்பட்டுவிட்டது... இனி அடுத்த காட்சி நேரம் பகல் 2.00 மணிக்கு பார்ப்போம்.... அதற்குள் என்ன வேலை வரப்போகிறதே... முடிந்தால் படம் பார்த்துவிட்டு மாலை விமர்சனம் எழுதுகிறேன்....