சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையில் பூத்துவிடும் அத்தனை மலர்களும் மனம் வீசுவதில்லை. கடந்த ஆண்டு 200-த் தாண்டி தமிழ் திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சிலப்படங்கள் தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்ற படமாக மாறியிருக்கிறது.... அப்படி இடம் பிடிக்கும் படத்தின் கதாபாத்திரங்களையும் அந்த இயக்குனரையும் நாம் பாராட்டாமல் இருப்பதில்லை.
ஒரு சாதாரண கடைநிலை ரசிகனை திருப்திப்படுத்தும் எந்த கதையானாலும் அதை கோபுரத்தில் வைக்கும் குணம் தமிழ் ரசிகர்களுக்கு கட்டாயம் உண்டு... அப்படி எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் அதை புறந்தள்ளிவிட்டு போகவும் துணியமாட்டார்கள்.
ஒரு இயக்குனர் மட்டுமே ஒரு படத்தின் உயிர் நாடி. அவர் அசைக்கிறபடி மட்டும் மற்றக்கலைஞர்கள் அசைகிறார்கள்... ஒற்றை உத்தரவுக்கு கட்டுப்பட்டு அத்தனை கதாபாத்திரங்களும் அசைந்தால் அதுதான் ஒரு உயிரோட்டமான திரைப்படமாக ஏற்றுக்கொள்ளபடுகிறது...
ஒரு படத்தின் தோல்வி என்பதை முழுக்க முழுக்க இயக்குனர் மட்டுமே ஏற்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து... ஒரு இயக்குனர் வைத்துள்ள கதைக்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் அந்த இயக்குனர் மட்டுமே உயிர்கொடுக்க முடியும் மாறாக மற்றவர்கள் தன்னுடைய ஹீரோயிஷத்தை காட்ட நினைத்தால் அது உயிரற்ற கதையாக மாறிவிடுகிறது...
கோடம்பாக்கத்தில் கண்டிப்பான இயக்குனர் என்ற பெயர் எடுத்திருக்கும் இயக்குனர் யார் என்றால் அது பாலா தான்... எப்போதும் என்னால் உயிரோட்டாமன கதைகளை இந்த தமிழ் சினிமாவுக்கும் கொடுக்க முடியும் என்று மறுபடியும் ஒருமுறை நிறுபித்திருக்கிறார். எதார்த்தம், காதல், நகைச்சுவை, கொடுமை, பாசம், வலி, சோகம் என அத்தனையையும் ஒருசேர ஒற்றைக்கோட்டில் நிறுத்தும் திறமை பாலாவிடம் மட்டுமே உள்ளது... அந்தவகையில் தாரை தப்பட்டை என்ற ஒரு சிறப்பான படத்தை கொடுத்ததற்கு பாலா அவர்களுக்கு ஒரு சபாஷ்...
கதைக்குள்...!
தஞ்சாவூரில் “சன்னாசி தாரை தப்பட்டை குழு“ என்ற ஒரு தப்பாட்ட நடனக்குழுவை நடத்தி வருபவர் சன்னாசி என்ற சசிக்குமார்... தன்னுடைய தந்தையான சாமி புலவரிடம் (ஜி.எம்.குமார் ஐயா) அனைத்து வித்தையையும் கற்றுக்கொண்டு இந்த நடனக்குழுவை நடத்திவருகிறார்.
அதில் பிரதான நடனக் நாட்டியக்காரியாக சூறாவளி. (சூறாவளி கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார்) சிறந்த தாரை தப்பட்டை குழுவாக இருக்கும் இவர்கள் பல்வேறு நடன நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள்...
சசிக்குமாரை உயிருக்கு உயிராக விரும்பும் வரலட்சுமி... அவருக்காக எதையும் செய்யும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார்.. நடனக்குழுவில் அப்படிஒரு ஆட்டம்... இவரை ரசிக்கவே குவிகிறது ஆர்டர்கள்...
பெண்களை வைத்து விபச்சாரம், வாடகைத்தாய் என தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் கொடுர வில்லனான சுரேஷ்.. நான் அரசு ஊழியன் என்றும் கூறி. ரொம்ப நல்லவன் போல் நாடகமாடி அனைவரையும் ஏமாற்றி வரலட்சுமியை மணந்துக்கொள்கிறார்...
வரலட்சுமி போனப்பிறகு நடன நிகழ்ச்சிகள் ஏதும் வராததால் வறுமையில் தள்ளப்படுகிறது சன்னாசி நடன குழு... வறுமையை போக்க துக்க வீட்டில் ஆடும் அளவுக்கு இவர்கள் தள்ளப்படுகிறார்கள்...
அரசுவேலை மாப்பிள்ளை.. இவளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் சசிக்குமார் தன்னுடைய காதலை மறைத்து இந்த திருமணத்தை நடத்திவைக்கிறார். ஆனால் வரலட்சுமியை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறார் என்று சசிக்குமாருக்கு தெரியவரும்போது அவளை கொடுமைப்படுத்திய அனைவரையும் துவம்சம் செய்கிறார்...
வரலட்சுமி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் அவர் அனுபவிக்கும் கொடுமைகள் என்ன...? இறுதியில் என்னவாயிற்று என்று.... சோகமும், நெருடலும் மட்டுமே என்னுடைய படத்தின் கிளைமாக்ஸ் என்பதை மீண்டும் ஒருமுறை நிறுபித்து படத்தை நிறைவு செய்கிறார் பாலா...!
படம் முழுவதும் நடன கலைஞர்களின் வாழ்க்கை முறை அவர்களின் பேச்சுவழக்கு.... ஆடை அணிகலன்கள்... அவர்களுடைய துயரங்கள் அனைத்தையும் அழகாக நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் பாலா...
சசிக்குமார் ஒரு தாரை தப்பட்டை நடன கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறார்... சன்னாசி கதாபாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கதைக்கு வலுசேர்க்கிறது சசிக்குமாரின் நடிப்பு....
அனைத்துக்கும் சிகரம் வைத்தார்போல் சூறாவளி கதாபாத்திரத்தில் தன்னை நடிப்பின் சூறாவளி என்று நிறுபித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்... அப்படி ஒரு நடிப்பு... மாமா என்று சசிக்குமாரை சுற்றிவரும்போதும்... நாட்டியக்காரியாக குட்டைப்பாவடை அணிந்து நடனம் ஆடும்போதும், காதலுக்காக எதையும் செய்ய துணியும்போதும்... குடித்துவிட்டு குமார் ஜயாவிடம் அலப்பரை செய்யும்போதும் இறுதி காட்சிகளில்... என அத்தனை இடத்திலும் நல்லதொரு ஸ்கோர்... சபாஷ் வரலட்சுமி... (போடா போடி படத்தை பார்த்து எதற்கு இதற்கு சினிமாவெல்லாம் என்று திட்டியிருந்தேன்...)
ஜி.எம்.குமார் ஜயா அவன் இவன் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சிறப்பாக பயன்படுத்திருக்கிறார் பாலா. சாமி புலவன் என்ற கதாபாத்திரத்தில் நல்லதொரு நடிப்பு.. மேலும் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் தங்களுக்காக பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்....
இசைசார்ந்த கதை என்பதால் இசைஞானி சரியான தேர்வு... இளையராஜா தன்னால் எப்போதும் எந்தகாலத்துக்கும் நின்று நிலைக்கமுடியும் என்று 1000-மாவது படத்திலும் நிறுபித்திருக்கிறார்.. பாடல்கள் பிண்ணனி என அத்தனையும் அற்புதம்...
வரலட்சுமி அடிக்கடி தண்ணியடிக்கும் காட்சிகளைத்தவிர குறைஎன்று கூற வேறுஎதுவும் தெரியவில்லை...
ஹீரோ ஹீரோயினை ஒன்று சேர்த்து படம்முடிக்கும் தமிழ் சினிமாவின் பார்முலாவுக்கு விதிவிலக்கு பாலா... எப்போதும் இவர் படத்தில் கடைசியில் சுபம் எதிர்பார்க்கமுடியாது.. இதிலும் அப்படித்தான்... சுபம் இல்லை என்றாலும் பாலாவின் முடிவுகள் அனைவரையும் கனத்த இயதத்துடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுகிறது...
தாரை தப்பட்டை - அமர்க்களம்...