குளித்துமுடித்து
எண்ணெய் தேய்த்து படியவாரிய
தலைமுடியை கலைந்துவிட்டாலும்...
நெடிக்கொருமுறை புழுதிகிளப்பி
மரம்... கெடி... கிளை.... உரசி
கண்ணில் தூசி பட்டாலும்...
பின் இருப்பவர்களைபற்றி
கவலைப்படாத முன்னிருக்கைக்காரரின் எச்சில்
ஆடைகளில்பட்டு தெரித்தாலும்....
சில்லூட்டும் பனிப்படலமே
முகம் நனைக்கும் மழைத்துளியோ
சுட்டெரிக்கும் வெயில் கதிரோ....
உயரத்தில் பறந்துப்போகும்
பெயர் தெரியாத பறவையோ
இல்லை வித்தியாசமான எதுவோ....
விரையும் எதிர்பேருந்தில்
புன்னகைக்கும் அடையாளம்
தெரியாத எதோ ஒரு முகமோ...
கொய்யா வேண்டுமா அல்லது
வேர்கடலை வேண்டுமா
என பரிதாபக்குரல்கள் இம்சித்தாலும்...!
இப்படி எதாவது ஒன்று
ஒவ்வொரு பயணத்தின்போதும்
வாய்க்கிறது என்றாலும்.....
அந்த ஜன்னலோர பயணத்தைதான்
எதிர்பார்த்து சிறகடிக்கிறது
பேருந்துப் பயணங்களில் மனசு....