கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 September, 2018

விஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...


இரண்டு நாட்களாக டிரெண்டிங்கில் இருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படத்தின் சிங்கள் டிராக் பாடல் தான்...

பாடல் என்ன மொழி என்று புரியாத அளவுக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்க துவங்கிவிட்டார்கள்... மீம்ஸ்ம் டப்ஸ்மேசும் அலரிக்கொண்டு இருக்கிறது...

அந்த பாடலுக்கு எழுதப்பட்ட விளக்கம் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காக இருக்கிறது....

சர்கார் படத்தின் பாடல் வரிகள்
------------—------------------+++

சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை

பாடகர்கள் :
பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
படம்: சர்கார்

ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து...

#வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பல்டி அடிக்கறதைப் பார்த்து

மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்
உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

#பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பெரளவிடனும்

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.
உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்
போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

#முன்னாடி சொன்னதே தான்.

ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)


#கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்
என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.

ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

#கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.
அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.
இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..
இந்தா நா… தா ….
ஓ..ஓ..ஓ..ஓ (4)

#அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

பெண் வேறு தேசம் போலிருக்கு.

தமிழ் மொழியில் பாடுகிறார்.
அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.

பெண் : மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)


ஆண் : குபீலு பிஸ்து பல்து
குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!


குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….
விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.

ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு
ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.
ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் பால்.

ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

#நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு
சுணுங்காம குத்தாட்டம் போடு!
சுணுங்காம குத்தாட்டம் போடு!

நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்ட புரிஞ்சிடும்!!

14 September, 2018

மூடநம்பிக்கையின் வில்லன்.. எம்.ஆர்.ராதா



போர்வாள் நாடகத்தில் ஒரு காட்சி. பெரியாரின் படம் வைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒருபுறம் ராதா. மறுபுறம் அவரது நண்பர். அவர் கேட்பார்.


'பெரியார் படத்தை வீட்ல மாட்டி வெச்சிருக்கியே, அப்படி அவர் என்னதான் செஞ்சுட்டாரு?'

'என்ன செஞ்சாரா? உன் நெத்தியையும், என் நெத்தியையும் பாரு.'

'ஏன்? அதுல ஒண்ணுமில்லையா!'

'அதை யார்ரா செஞ்சாங்க? ஐயா தான் செஞ்சார். இல்லேன்னா உன் நெத்தியில நீளமா ஒரு மார்க். என் நெத்தியில குறுக்க ஒரு மார்க் இருந்திருக்கும். மார்க் டிபரன்ஸ் வந்தாலே பிரச்சனை தாண்டா...'


'நீ சொல்றதும் சரிதான்.'

'இன்னொரு விஷயம். ஹோட்டல்ல போய் உக்காந்துகிட்டு நம்ம காஸைக் குடுத்துட்டு சாமி ஒரு காபி குடுங்கன்னு கேட்டுக் கிட்டிருந்தோமே, இப்ப என்ன பண்ணுறோம்? ஓய் அய்யர், ஒரு காபி குடுங்கன்னு கேக்குறோம். இந்த சவுண்டு யார்ரா குடுத்தது? பெரியார் ஐயா தானே...'

மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட இந்த நாடகம், அரசால் தடை செய்யப்பட்டது. 'சர்வாதிகாரி' என்று பெயர் மாற்றி அதே நாடகத்தைத் தொடர்ந்து பல ஊர்களில் நடத்தி வெற்றிக்கொண்டார் ராதா.


*****************************



பொதுவாக ராதா தன் நாடகங்களில் வரும் வேலைக்கார கதாபாத்திரங்களின் பெயர்களை ராமன் அல்லது முருகன் என்றே வைத்துக் கொண்டார். லட்சுமி காந்தனில் வேலைக்காரன் ராமனோடு ஒரு காட்சி.அவன் தன் நெற்றியில் பெரிய நாமம் ஒன்றைப் போட்டிருக்கிறான்.

'டேய் என்னடா இது?'

'பேங்கு.'

'இங்க யாருடா வருவாங்க?'


'பணம் போடுறவங்க.'


'ஏண்டா பணம் போடுறவங்க உள்ளாரா வரும்போதே வாசல்ல நீ இப்படி இருந்தா, எவண்டா நம்பி பணத்தைப் போடுவான். எதுக்காகடா இதை போட்டுக்கிட்டுஇருக்க?''


'பாதம், எம்பெருமான் பாதம்.'


'ஓ...எம்பெருமான் பாதத்தை நீங்க நெத்தியில போட்டுக் கிட்டுருக்கீங்களா. ஆமா அந்த எம்பெருமான் நெத்தியில போட்டிருக்கே அது யார் பாதம்டா? தெரிஞ்சுக்க. தெரிஞ்சிக்கிட்டு வந்து அப்புறம் போடு.' 

********************************



தூக்குமேடையில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

'யாருண்ணே இது?'

'அண்ணிடா.'

'அண்ணி காலைப் பாருங்க'

'என்ன?'

'யானைக்கால் மாதிரி இருக்கு.'

'போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்குறதைச் சொல்ல வந்துட்டான்.'

*****************************



ராதா ஒரு புதிய நாடகத்தைத் தயாரித்தார் அதன் பெயர் விமலா அல்லது விதவையின் கண்ணீர்.விதவைகள் பிரச்சனையைக் கூறி மறுமணத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதை. சும்மா இருப்பார்களா பெரிசுகள்? அவனா, அவன் தாலியறுத்தவளுக்குக் கூட மேடையிலேயே தாலி கட்டி வைப்பான் என்று எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். எப்படி நீ நாடகத்தை நடத்துறேன்னு நாங்களும் பார்க்கறோம் என்று மிரட்டினார்கள்.


நாடகத்துக்கான தேதி குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.


'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நமது சாஸ்திரத்துக்கு சம்பிரதாயத்துக்கும் எதிரான நாடகம். அதை நடத்தினால் சமூக அமைதி குலையும். அதனைத் தடை செய்ய வேண்டும்' என்று நாகப்பட்டினம் கோர்ட்டில் பெட்டிஷன் போட்டார்கள். ஜட்ஜ் கணேசய்யர், அந்தப் பெட்டிசனைப் பார்வையிட்டார். அவருக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உண்டு. ஆனால் நேர்மையானவர்.


'நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்' என்று சொன்ன கணேசய்யர், அன்று மாலையே அரங்கில் வந்து உட்கார்ந்தார். விதவையின் கண்ணீர் ஆரம்பமானது. எந்தவிதப் பிரச்னையும் இன்றி முடிந்தது.


கணேசய்யர் மேடையேறினார். ராதாவின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்.


'இந்த மாதிரி நாடகங்கள் இங்கு நடந்தால் மட்டும் போதாது. இந்தியா முழுவதும் நடைபெறவேண்டும். இப்படி நாடகத்தைத் துணிந்து தயாரித்து, மேடையேற்றிய நண்பர் ராதாவை மனமார வாழ்த்துகிறேன். அவருடைய இந்த நாடகம் எல்லா வகையிலும் வெற்றி பெற என் ஆசிகள்.'


ஒவ்வொரு ஊரிலும் இந்த நாடகம் வெற்றிபெற ஆரம்பித்தது. திராவிடர் கழகத்தினரின் பரிபூரண ஆதரவு ராதாவுக்குக் கிடைத்தது. பெரியாருக்கும் ராதாவின் மேல் தனி மதிப்பு தோன்றியது அந்தச் சமயத்தில் பாரதிதாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'ராதா எங்கள் கழக நடிகர். அவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்.'

- எம். ஆர். ராதா - கலகக்காரனின் கதையிலிருந்து...

12 September, 2018

எல்லோர் மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களோ...!


ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.

அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,

"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான்.

"சரி", என்று அவனுடன் நடந்தான்.

வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.

அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் நண்பன்.

"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!

*******************************


மனைவி: "என்னங்க! உங்க பொறந்த நாளைக்கு நான் ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க."

கணவன்: "வாவ்! சூப்பர். எங்கே எடுத்துட்டு வந்து காமி"

மனைவி: "கொஞ்சம் பொறுங்க! போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்."

கணவன்: ???!!!!

இது என்னங்க அநியாயம்... அவங்க பிறந்த நாளுக்கும் அவங்களே டிரஸ் எடுக்குக்குறாங்க... நமம்மோட பிறந்தநாளுன்னாலும் அவங்களே டிரஸ் எடுத்துக்கிறாங்க... இதுமட்டும் இல்லாமல் பண்டிகை, கல்யாண நாள், இப்படி எது வந்தாலும் அவங்களே டிரஸ் எடுத்துப்பாங்க... ஆனா ஆண்டு கடைசியிலே சொல்லுவாங்க பாருங்க... எனக்கு என்ன செஞ்சிங்க... ஒரு நகை இருக்கா... ஒரு டிரஸ் இருக்கா... இது எல்லா வீட்டிலும் நடக்கிற சகஜமான நிகழ்வாயிடிச்சி தானே...

*******************************


"ஆட்டோ வருமாப்பா?"

"வரும் சார். எங்க போகணும்?"

"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"

இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...

ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும்  தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....

*******************************


நண்பர் பதிவிலிருந்து.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

*******************************


"ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ப ஆத்ம திருப்திக்காக ஜோசியம் ஜாதகம் பார்க்கிறாரு!"

"சரி, அதுக்கு என்ன இப்ப?"

"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"

"என்னாச்சு?"

"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"

தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...

*******************************


கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

#கணவன்: "உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!"

#மனைவி: "பொய் சொல்லாதே! என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!

நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!!

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!"

#கணவன்: ??????

#மனைவி: "ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா! இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு..."


கணவன்: 😳!!!!!!!!!???????

#மனைவிடா....
*******************************

அடி சண்டாலி....

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

09 September, 2018

ரஜினியின் பேட்ட, முகம் சுளிக்க வைத்த பிற தலைப்புகள்...


புதுசா ஒரு ரஜினி படம்.. இன்னைக்கு பேப்பர்ல வந்திருக்கு.. என் சக நண்பர்கள் சொல்ல... ஆட அப்படியா... டேய்.. நான் பார்க்கலடா...... படம் பேரு என்ன வச்சியிருக்காங்க.. என்று நான் கேட்க அது என்னவோ வாயிலேயே நுழையல.. ஏதோ சாமியார்மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கார் என்று மழுப்ப...

போடா... ரஜினி போய் சாமியார் மாதிரியா... அவர்படமெல்லாம் செம ஸ்டைல் படமாத்தான் வரும்...  அவருபடம்போய் வாயில நுழையலையா..  நீ விஜயகாந்த் ரசிகன்ல அப்படித்தான் பேசுவ.. என்று அவனை திட்டிவிட்டு... பள்ளியில் இருந்து கூட ஒருவனை கூட்டிக்கிட்டு அந்த முனுசாமி சைக்கிள் ஸ்டாண்டுக்கு ஓடினேன்... அங்கேதான் செய்திதாள் இருக்கும்... பள்ளியில் இருந்து அதுதான் மிக அருகாமை... எனக்கு சித்தப்பா முறை...

டேய்... ஏன்டா ஸ்கூல்ல இருந்து திரும்பிவர்றீங்க என்று முனுசாமி சித்தப்பா அதட்ட.. இல்லப்பா.. பேப்பர் பார்க்க வந்தோம் இப்போ பார்த்துட்டு போயிடுவோம்... தேடி பிடித்து படத்தை படித்துபார்த்தால் அதில் ஸ்ரீராகவேந்திரா.. ரஜினியின் 100-வது படம் என இருந்தது... படம் வெளிவந்த வருடம் 1985.. நான் அப்போது 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.. அட என்னடா இது சாமி படத்தில நடிக்கிறாரு... சாமி மாதிரி நடிக்க ரஜினிக்கு நல்லா இருக்காதே என்று புலம்பலோடு பள்ளிக்கு வந்தேன்.. அன்று முழுவதும் படத்தைப்பற்றிதான் பேச்சு...



அந்த காலக்கட்டத்தில் ஊர்பஞ்சாயத்து டிவியில் வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியமும்... ஞாயிற்றுக்கிழமையில் ஒரு படமுமே நம்முடைய பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வு... மேலும் எங்க ஊரில் இருக்கும் ஸ்ரீ கணேஷ் டென்ட் கொட்டாதான் எங்கள் சினிமா தாகத்தை போக்கும்... அப்போது புதுப்படமெல்லாம் அங்கு வருவது அரிது.. ரீல் எல்லாம் அருந்தநிலையில் படம் கொட்டாவுக்கே வந்துசேரும்... இதிலும் கண்டிப்பா ஒருபடம் பாத்துடுவேன்... என் குடும்பத்தில் இருந்து யார் படத்துக்கு போனாலும் நாட் ஒட்டிக்கொள்வேன்...

ரஜினி படங்கள் வரும் போது இந்த பெரியபஷங்க செய்யும்  பந்தாக்களை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னை போன்ற சிறார்களின் வேலை... கலர் காதிதம் கட்டுவது, மூங்கில்களை கொண்டு ஸ்டார் போன்று வடிவமைப்பு செய்து அதில் ரஜினி படங்களை ஒட்டி தொங்க விடவுவது என பந்தாக்கள் நீளுமு...  அதை தவிர்த்து  புதுப்படங்கள் என்றால் அதற்கு யாராவது மண்டைய போடவேண்டும்.. அப்போதுதான் 16-ஆம் சடங்கு அன்று இரவு கண்விழிப்பதற்காக வீடியோ போடுவாங்க... அப்போ கண்டிப்பா  4 புதுப்படம் கண்பார்ம்.... 



காலம் மாறுது... ஒவ்வொறு படத்திற்கும் எதிர்பார்ப்பு வரும் அதுபோலவே படங்களின் பங்களிப்பும் இருக்கும்.. அப்போது எங்களுக்கு விஜயகாந்தை ரசிக்கும் பசங்க கூடத்தான்போட்டி கமல்படத்தை அப்பவே நாங்க போர் என்று ஒதுக்கியதுன்டு...

காலம் ஓடுகிறது... மீண்டும் அதே ஒரு சம்பவம்... ஊரில் இருந்து திருவள்ளுருக்கு டவுன்பஸ் தடம் எண் டி57-ல் வரும் போது நண்பர்கள் பேசிக்கொண்டதில்... இன்னிக்கு ரஜினி படம் பேப்பர்ல வந்திருக்கு என்று சொல்ல எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது... நான் அப்போது அச்சகத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்... (வாசன் பிரிண்டர்ஸ்...ஆசூரித் தெரு திருவள்ளுர்..)

சரிடா... படம் பேர் என்ன... அதற்கு அவன் என்ன படம்பேரு வக்கிறாங்களோ என்று சலித்துக்கொண்டே ஏதோ படையப்பா-வாம்.. என்றான்... என்ன படையப்பா.. அப்படின்னா.. இல்ல நீ பொய்சொல்ற... என்று விவாதங்களை முடித்துக்கொண்டு நேராக பேருந்து நிலையம் வந்து பேப்பர் வாங்கி படத்தலைப்பை பார்த்ததும் எனக்கு சப்பென்று ஆகிவிட்டது...

ரஜினி, சிவாஜி நடிக்கிறாங்க... இந்த டைரக்டர் ஏன் இப்படி பெயர் வச்சிருக்கார்... என்று அவரை சபித்து விட்டு கடந்துப்போகிறோம்... ஏன் படத்தலைப்பு முக்கியம் என்று அப்போது விரும்பினோம் என்றால் அதை வைத்தே மற்ற நடிகர்கள் ரசிகர்களை கிண்டல் அடிப்போம்... இப்போது அவர்கள் முறை.. என்னடா படையப்பா சொறியப்பா என்று ஆரம்பித்து விட்டார்கள்... இது 1999-ஆம் வருடம்...  ஆனால் படம் வந்தபோது நல்லதொரு வெற்றியை பெற்றது...

ரஜினி படத்தின் தலைப்பு என்பது கதாபாத்திரன் பெயரில்தான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது ஜானி, பில்லா, ஆரம்பித்து  கபாலி, காலா வரை நீள்கிறது.. அப்படி இல்லை வென்றால் கதாபாத்திரத்தின் தன்னைமையை பொறுத்தும், கதாநாயகனின் குணாதிசயத்தின் அடிப்படையிலும் தலைப்புகள் மாறும் உதாரணத்திற்கு மன்னன், பாயும் புலி, தளபதி, குசேலன் இப்படியாய்... ஒருதிரைப்படத்தின் பெயர் டக்கென மனதில் நின்று விடவேண்டும் அதுவே படத்திற்கான முதல் வெற்றி... அந்த வகையில் ரஜினியின் பலபடங்கள் மக்கள் மனதில் நின்றிருக்கிறது...

தற்போதைய காலத்தில் 6.00 மணிக்கு படத்தின் பெயர் டீசர் வெளியாகிறது என்றதும்... 5.30 மணிக்கே செய்தி தளங்களையும்.. சோசியல் மீடியாக்களையும் வேடிக்கைப்பார்த்து அறிந்துக்கொள்கிறோம்... அதுபோல்தான் வந்துடிச்சா.. வந்துடிச்சா... என வெறிக்கவெறிக்க மொபைலை நோண்டி ஒருவழியாய் பார்த்தால் #பேட்ட.. அப்படின்னு படத்தலைப்பை பார்த்து இது என்ன பேட்ட கோட்டன்னுகிட்டு அப்படின்னு சப்பென்று ஆகிவிட்டது...



சமீபத்தில் வந்த கபாலியும்.. சரி காலாவும் சரி... படத்தலைப்பார்த்தவுடன் இது என்ன தலைப்பு என்று கிண்டலடித்துவிடுகிறோம்... பிறகு ஊர் முழுக்க இதே பெயரை திரும்ப திரும்ப பார்த்து கேட்டு மிகவும் கம்பீரமான பெயராக மாறிவிடுகிறது... கபாலி என்ற அடிமட்டவில்லன் பெயர் தற்போது உயர்மட்ட மாஸ் பெயராக மாறிவிட்டது... அதே போல்தான் கரிகாலன் பெயரும்...

படத்தின் பெயர் ஏன்டா இப்படி வைக்கிறீங்க என்று சோஷியல் மீடியால் சத்தம்போட்டு கேட்கிறோம்... பிறகு படம்வந்தப்பிறகு அதன் கதையை அறிந்து படத்தலைப்பு சரிதான் என்ற முடிவுக்கு வருகிறோம்.. (உதாரணத்துக்கு என் ஆளோட செருப்ப காணோம்... ஏன்டா தலையில எண்ணை வைக்கல..)

சரி தலைவர் படம் தலைப்பு #பேட்ட... அப்படி என்றால் படத்தில் பகுதியையோ அல்லது கதையை சார்ந்ததாகவோத்தான் இருக்கும் அப்படி இந்தப்படமும் வந்தப்பிறகு இந்த தலைப்புக்கான நியதி புரிந்துவிடும்...

மேலும் இதில் சன்பிக்சர்ஸ்... கார்த்திக்சுப்புராஜ்... ரஜினி என வெற்றி பெற்றவர்களின் கூட்டணி என்பதால் வெற்றியின் இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடும்.. யாரும் இறுதில் பணத்தை திருப்பிகொடுங்கள் என்று கேட்க மாட்டார்கள் என்று நம்புவோம்...

பேட்ட டீசர்...

08 September, 2018

பாகற்காயும்... பகுத்தறிவும்...



ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, 

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே , நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும், எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்.... எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

மாற்றங்கள்....!!

மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!!!!!


*************************



சுந்தர்  வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

கண்ணன்  சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?


சுந்தர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

கண்ணன் : இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

சுந்தர் : இப்படி வைங்க. நான் என்ன செய்றேன்னு கவனிங்க. இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

கண்ணன் : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சுந்தர் : சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

கணணன்  : எப்படிச் சொல்றீங்க?

சுந்தர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை. நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க. இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

கண்ணன் : நான் மறுக்கலே. இருந்தாலும் ஒண்ணுசொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

******************************



அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8-ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.



யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப்பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். 

அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

****************************** 
Related Posts Plugin for WordPress, Blogger...