அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே வெளிவந்தன. அன்றைய ரசிகர்கள் திரைப்படங்களை பகுத்துப் பார்க்கத்தெரியாமல் அல்லது படத்தைப்பற்றிய போதிய தொழிற்நுட்பம் பற்றிய தகவலும் அதிகம் அறியாமல் இருந்தனர். அதனால் அன்றைய படங்களுககு அதிகமான விமர்சனங்கள் எழவில்லை..!
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சாதாரண ரசிகன் வரை படம் எப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அந்த கடைசி ரசிகனையும் திருப்பிப்படுத்துகிற திரைப்படங்கள் மட்டுமே இந்த தமிழ் சினிமாவை அலங்கரிக்கிறது.
பல்வேறு விமர்சகர்கள் வந்துவிட்டப்பிறகு (இணையம், செய்திதாள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சி, போன்றவை) படம் வந்த அன்றைய தினமே படங்களை பிரித்து மேய்ந்துவிடுகிறார்கள். ஒரு படம் சரியில்லையென்றால் அதை தூக்கிகுப்பையில் போடவும்.. ஒரு படம் சரியாக இருந்தால் அதை மகுடத்தில் வைத்து கொண்டாடவும் தயங்குவதில்லை.
முகமூடி படம் மூலம் மிகவும் விமர்சிக்கப்பட்ட மிஸ்கின்... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் மூலம் மீண்டும் கொண்டாடப்பட வேண்டியவராகிவிட்டார்.
படம் துவங்கியவுடன் டைட்டலில் படத்தின் பெயர் மற்றும் இசைக்காக இளையராஜா பெயர் மட்டுமே போடப்படுகிறது. (நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள்.. ஏன் மிஸ்கின் பெயர் கூட இடம்பெயரவில்லை)
சந்துரு... ஒரு மருத்துவகல்லூரி மாணவர் (சந்துருவாக ஸ்ரீ) இரவில் தான்வரும் வழியில் குண்டடிப்பட்டு விழுந்து கிடக்கும் ஒருவரை காப்பாற்ற பல்வேறு மருத்துவமனைகளை அனுகுகிறார்... ஆனால் அவர்கள் போலீஸ்... கேஸ்... என்று பயமுறுத்த மருத்துவ உபகரணங்களை வாங்கி தானே வீட்டில் அவருடைய HOD-யின் ஆலோசைனையின் பேரில் தானே ஆபரேஷன் செய்து அவரை காப்பாற்றுகிறார். (முதல் 40 நிமிட படம் இதுதான்... சுவாரஸ்யமும் கூட)
காப்பாற்றிய நபர் விடிந்துப்பார்த்தால் காணவில்லை. அதன்பிறகுதான் தெரிகிறது அவர் 14 கொலைகள் செய்து... போலீஸ் என்கவுண்டருக்கு ஆளான “உல்ப்” என்று தெரியவருகிறது. உல்ப் கதாபாத்திரத்தில் மிஸ்கின்.
பின்பு ஸ்ரீ கைதுசெய்யப்பட்டு ஸ்ரீவை வைத்தே மிஸ்கினை சுட்டுத்தள்ள காவல்துறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீயை கூட வைத்துக்கொண்டு மிஸ்கின் எப்படி போலீஸ் படையை ஏமாற்றுகிறார் என்று படம் நீள்கிறது...
குருடாக இருக்கும் ஒருகுடும்பத்தை மூன்று நபர்களை காப்பாற்ற படம் முழுக்க அவர்செய்யும் அதிரடிகள்... யார் அந்த குருடர்கள் ஏன் காப்பாற்ற வேண்டும்... இறுதியாக ஸ்ரீ-யோ உல்ப்-க்கு எதனால் உதவுகிறான் என்று ஒரே இரவுக்குள் விவரிக்கப்பட்டிருக்கும் கதைதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
படத்தைப்பற்றி இன்னும் நிறைய சொல்லவேண்டும் போல் இருக்கிறது. அப்படி மீதிக்கதையும் சொல்லிவிட்டால் படிக்கும் உங்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிடும்.
படம் முழுக்க முழுக்க இரவிலே படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னை வீதிகளை.. சாலைகளை.. சந்துபொந்து என அத்தனையையும் இரவில் எப்படியிருக்கும் என்று காட்டிவிட்டார்.
மிகநீளமான கதையாக இல்லாவிட்டாலும் மிகச்சிறியக்கதையை எங்கும் தோய்வில்லாமல் கொண்டுசென்ற விதம் மிரமிக்கவைக்கிறது. கேமரா ஆங்கிள்.. காட்சி அமைப்பு.. லைட்டிங் என எதையும் குறைசொல்ல முடியவில்லை... நிறைய காட்சிகள் ஒரே டேக்கில் படமாக்கியிருப்பது சிறப்பு.
மிகப்பெரிய நடிகர் பட்டாளமோ.. ஆடல் பாடல்களோ நகைச்சுவையோ இந்த படத்தில் இல்லை அதற்காக படத்தை தரமற்றதாக உள்ளது என்று சொல்லிவிட முடியாது. இருக்கும் களத்தில் இருந்துக்கொண்டு போராடுவதில்தான் வெற்றி இருக்கிறது.
இரவு முழுவதும் போலீஸ்... ரவுடி கும்பல்... கூட இருக்கும் ஸ்ரீ என அனைவரும் மிஸ்கினை கொல்ல தீவிரமாக தேடுகிறார்கள். ஏன் அவரை கொலை செய்ய துடிக்கிறார்கள்... அவற்றில் இருந்து எப்படி அவர் தப்பிக்கிறார் என்பது சுவாரஸ்யம். (காட்சிக்கு காட்சி சுட்டுத்தள்ளுதல்... கழுத்தை அறுத்தல் என படம் செல்வதால் குழந்தைகள் இப்படத்தை தவிர்க்கவும்).
இடைவேளைக்கு பிறகு ஒரு பெரிய பிளாஸ்பேக் கதைவரும் என்று நினைத்து படம்பார்க்கையில்... எதற்காக இப்படி நடந்துக்கொள்கிறேன் என்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அதுவும் ஒரே ஷாட்டில் கதையை சுருக்கமாக சொல்லி முடித்து கண்கலங்க வைக்கிறார் மிஸ்கின். (அந்த காட்சியை பார்க்க வில்லையென்றால்.. சரியாக புரிந்துக்கொள்ள வில்லையென்றால் படம் புரியாது)
இசை...! பட டைட்டலில் முன்னணி இசை இளையராஜா என போடுகிறார்கள்... உண்மையில் பின்னணி இசையில் தான்தான் முன்னணி இசையமைப்பாளர் என்று நிருபித்துவிட்டார். இசைதவிர்த்து படத்தை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை.
படம்பார்த்துவிட்டு வெளியில் வரும்போதும்கூட இசை நம்மை பின்தொடர்கிற அளவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்துவிடுகிறது. படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதுதான் உணரமுடிகிறது. (என்னை தூங்க விடாமல் செய்த அன்பே சிவம், எவனோ ஒருவன், நந்தலாலா, சேது போன்ற ஒருசில படவரிசையில் இந்த படத்தையும் இணைத்துக்கொள்கிறேன்.)
தயவு செய்து பொழுதுபோக்குவதற்காக இந்தபடத்தை காண செல்லாதீர்கள். சினிமாவை ரசிப்பவர்கள், வித்தியாசமான சினிமாவை காண விரும்புபவர்கள், விமர்சகர்கள், எதிர்கால சினிமா ஆசைஉள்ளவர்கள் மட்டும் இந்த படத்தை பார்க்கலாம்...
ஒவ்வொறு மிருகத்திற்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது அந்த ஈரத்தின் பிரிதிபலிப்புதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.