கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 July, 2015

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் - மலரும் நினைவுகள்


87 வயதான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வாரத்திற்கு முன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உடல், சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்குகள் நாலை காலை 10 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மாயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன் வாழ்க்கை குறிப்பு...

எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஜூன் 24 ஆம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன், 1945 முதல் 2015 வரை 60 ஆண்டு காலம் திரைத்துறையில் கோலோச்சியவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 1,200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1953ல் வெளிவந்த 'ஜெனோவா' படத்துக்கு முதன் முதலாக இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களில் இசை அமைத்துள்ளார். 500 படங்களுக்கு மேல் தனியாக இசை அமைத்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு 'மெல்லிசை மன்னர்' என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். 'நீராரும் கடலுடுத்த' என்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மோகன ராகத்தில் இசை கோர்த்துள்ளார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, கங்கை அமரன் பாடல்களில் பாடிய எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் பாடல்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர்.





இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ்.வி-யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள். மனதைத் தொடும் மெல்லிசை மன்னரின் இசை வரலாற்றின் பெர்சனல் பக்கங்கள் இதோ.....

எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்த வருடம் 1928 ஜீன் 17.

அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள், கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் சேர்த்து 1,200 படங்கள் மேல் இசை அமைத்திருக்கிறார். கிட்டத்தட்ட, 1951-ல் ஆரம்பித்து 1981 வரை 30 வருடங்கள் எம்.எஸ்.வி-யின் இசை ராஜ்யம்தான்!.

நடிக்கவும் ஆர்வம், `கண்ணகி’ படத்தில் நடிக்க ஆரம்பித்த எம்.எஸ்.வி, `காதல் மன்னன்,’ `காதலா.... காதலா’ உட்பட 10 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். நகைச்சுவையில் கொடி கட்டுவார் எம்.எஸ்.வி.


இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை!. 


மெல்லிசை மன்னருக்கு கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்தன. ஆனால், பேரதிர்ச்சி... தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ இவருக்குக் கிடைக்கவில்லை! 

குரு நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்! 

இஷ்ட தெய்வம் முருகன், எந்தக் கணமும், பேச்சுக்கு நடுவிலும் உச்சரிக்கும் வார்த்தையும் `முருகா முருகா’தான்! 

மிக அதிகமாக, பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ.சி.திருலோசந்தர், கே.பாலசந்தர் என இந்த நான்கு டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறார், அது தமிழ் சினிமாவின் பொற்காலம்! 

சொந்தக் குரலில் பாடுவதில் பெரும் பிரபலம் அடைந்தார் மெல்லிசை மன்னர். குறிப்பாக, உச்சஸ் தாயில் பாடின பாடல்கள் பெரும்புகழ் பெற்றவை,`பாசமலர்’ படத்தில் ஆரம்பித்தது இந்தப் பாட்டுக் கச்சேரி! 

எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் ராமமூர்த்தியோடு இணைந்து 10 வருடங்களுக்கு மேல் கொடிகட்டிப் பறந்தார். அந்த நாட்களில் விஸ்வநாதன் –ராமமூர்த்தி இணை பெரிதாகப் பேசப்பட்டது. பிறகு, அவர்கள் பிரிந்தார்கள்! 

மெல்லிசை மன்னர், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.இப்பவும் நடிகர்களுக்கு காபி,டீ கொடுத்த விவரங்களை நகைச்சுவைளோடு நண்பர்களிடம் சொல்லி மகிழ்வார்! 

இளையராஜவோடு சேர்ந்து, `மெல்லத் திறந்தது கதவு’, `செந்தமிழ்ப் பாட்டு’, `செந்தமிழ் செல்வன்’, என மூன்று படங்களுக்கு இசை அமைந்தார். ஒரு காலத்தில் தனக்குப் போட்டியாளராகக் கருதப்பட்ட ராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம்! 

`புதிய பறவை’ படத்தில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக்கொண்டு `எங்கே நிம்மதி’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்தார். `பாகப்பிரிவினை’ படத்தில் `தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளைக்கொண்டு இசைக்கோர்ப்பு செய்தார்! 

தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்! 

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு! 

தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது! 

உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமையும் இவருக்குத்தான். எகிப்திய இசையைப் `பட்டத்து ராணி’ பாடலும், பெர்சியன் இசையை `நினைத்தேன் வந்தாய் நூறு வயது’விலும், ஜப்பான் இசையைப் `பன்சாயி காதல் பறவை’களிலும், லத்தீன் இசையை `யார் அந்த நிலவிலும்’, ரஷ்ய இசையைக் `கண் போன போக்கிலே கால் போகலாமா’விலும், மெக்சிகன் இசையை `முத்தமிடும் நேரமெப்போ’ பாடலிலும் கொண்டுவந்தார்! 

`நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற `முத்தான முத்தல்லவோ’ பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல், `நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது! 

இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை மேடையில் ஏற்றி நிகழ்ச்சியை நடத்திக் காட்டியவரும் எம்.எஸ்.வி.தான் சேலத்தில் நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சி அந்த நாளில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது! 

கொஞ்ச வருடங்களுக்கு முன்பு இதய ஆபரேஷன் செய்து கொண்டார். அதற்குப் பின்பு இன்னும் இளமை திரும்பி சுறு சுறுப்பாக இருக்கிறார்! 

பியானோ, ஹார்மோனியம், கீ-போர்டு மூன்றையும் பிரமாதமாக வாசிப்பார். சற்று ஓய்வாக இருக்கும் பொழுதுகளில் வீட்டில் பியானோவின் இசை பெருகி நிரம்பி வழியும்! 

சினிமா இசையில் இருந்து அதிகமாக ஒதுங்கி இருந்த எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் மெல்லிசை மன்னரின் இசைக்குக் கட்டுப்பட்டுப் பாடி இருக்கிறார்கள்! 

வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது! 

`அத்தான்..... என்னத்தான்....’ பாடலைக் கேட்டுவிட்டு, இந்த மாதிரி பாடலைப்பாட வாய்ப்பு கிடைத்தால், சென்னையிலேயே வந்து தங்கிவிடுவேன்’ என்று ஒரு முறை மேடையில் லதா மங்கேஷ்கர் சொன்னார். கைதட்டலில் அதிரிந்தது அரங்கம்!

8 comments:

  1. இசைக்கோலங்கள் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...

    சிறப்பான தொகுப்பிற்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்ல தொகுப்பு

    ReplyDelete
  3. வணக்கம்
    அறிய முடியாத தகவல் சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள். த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆனந்த விகடனுக்கு நன்றி! எனவும் போட்டிருந்தால், பதிவுலகுக்கும் அது மரியாதையைத் தரும்.

    ReplyDelete
  5. காற்றோடு கலந்துவிட்ட
    சங்கீதம்
    தம+1

    ReplyDelete
  6. எனக்கு எஸ்பிபியின் பழைய பாடல்கள் அனைத்தும் பிடிக்கும், அவற்றுள் பெரும்பாலனவை எம்எஸ்வியின் இசை. மிகச் சிறந்த இசை கலைஞர், ராசா ரஹ்மான் ரசிக சண்டையில் தமிழர்கள் எம்எஸ்வியை மறந்தே போய்விட்டு இப்பொழுது ஒப்பாறி வைக்கின்றனர்

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...