கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 September, 2020

வெண்தாடி வேந்தரே....

 


அக்னி குஞ்சு என்ற பழுதுபடாத பகுத்தறிவு நெருப்பு ஒன்றை இந்த சமூகத்தில் விதைத்தாய்  அது இளமையோடு இன்னும் கொழுந்துவிட்டு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது….

மத சாயம் பூசிக்கொண்டு நீ பகுத்தறிவு பேசி இருந்தால் அதை வதம் என்று வர்ணனை செய்திருப்பார்கள்

உன் பகுத்தறிவுக்கு கருப்பு வண்ணம் ஏற்றி அதை கணைகளால் கொடுத்ததால் என்னவோ  அது கொலையாக கருதப்படுகிறது….

சமூக மாற்றம் வேண்டி காத்திருந்தவர்கள் பகுத்தறிவு தீயில் வெந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்து கொண்டார்கள் . அதை சகித்துக் கொள்ளாத சிலர்தான் சிறகுவெந்து இன்னும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் உன்னை சபித்துக் கொண்டிருக்கிறார்கள்

சுயமரியாதை என்று சூடு பட்டவுடன்தான்  சமூகம்  பல நூற்றாண்டுகளாய் தன்மேல் படிந்திருந்த தூசியை தட்டி கொஞ்சம் தன்மானத்தோடு வாழ பழகிக் கொண்டது…. சுயமரியாதை என்பது கோட்டை கொத்தளத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தானா குடிசைகளுக்கு ஒத்துவராத என்ன…?

ஒரு நூற்றாண்டு கழிந்தும் அதே பழமையை எதிர்த்து ஒரு சிலர் மட்டும்  அவர் மீது கல்லெறிந்து கொண்டிருப்பது இன்னும் வேதனையாகத்தான் இருக்கிறது

வேரறுந்த வெறும் வெற்று வார்த்தைகளை விதைத்து இருந்தால் அது மண்ணோடு மண்ணாகிருக்கும்விதைத்த வார்த்தையில் வீரியம் இருந்ததால்தான் இன்னும் விதைத்தவனை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

இன்னும் நூறு ஆண்டு கழித்தும் கல்லெறிபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்பகுத்தறிவைப் பயன்படுத்தி சுயமரியாதையோடு வாழ்ந்து முடித்தவர்களுக்குதான் தெரியும் அதன் உண்மையான உணர்வு


பகுத்தறிவு பகலவனை நினைவுகூர்ந்தவாறு....

கவிதைவீதி சௌந்தர்….

17-09-2020.

 

08 June, 2020

இப்படியும் சில... ஓஷோ -நகைச்சுவை கதைகள்....




தியானம்

ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன். இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

”தோழி சொன்னாள், ’விபரம் தெரியாமல் பேசாதே. தியானம் என்பதே சும்மா இருப்பதுதான். உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’ 

**********************




தையல்காரன். 

தையல்காரன் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சம்பாச்சு. அவனிடம் மேல் சட்டை தைக்கக் கொடுத்திருந்த ஒருவன் வந்து சட்டையைப் போட்டுப் பார்த்ததில் ஒரு கை  குட்டையாக இருந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்று அவன் சொன்னபோது சம்பாச்சு சொன்னான், 

”இந்த துணி கலை நயம்வாய்ந்த துணி. இதைத் திரும்பத் தைத்தால் அதன் நயம் கெட்டுவிடும். கையைக் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ”சரியென்று பார்த்தால் முதுகுப் பக்கம் துணி அதிகமாக இருந்ததால் மிக லூசாக இருந்தது. இதற்கென்ன செய்வது என்று கேட்டதற்கு, ”கொஞ்சம் கூனிக் கொள்ளுங்கள். சரியாக இருக்கும். இவ்வளவு நல்ல துணியை மீண்டும் பிரித்து அதன் அழகைக் கெடுக்க விரும்பவில்லை.” என்றான் சம்பாச்சு. 

வேறு வழியின்றி அவன் சொன்ன மாதிரியே அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு சற்றுக் கூனியவாறு நடந்து கொண்டு கடையை விட்டு வெளியேறினான். வழியில் ஒருவன் அவனைப் பார்த்து, ’இந்த சட்டைமிக அழகாக இருக்கிறது. இதை சம்பாச்சு தான் தைத்திருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்கிறேன் என்றான். சட்டைக்காரனுக்கோ மிக ஆச்சரியம். ”எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னாய்?” என்று கேட்டான். வந்தவன் சொன்னான், 

”எனக்கு எப்படித் தெரியும் என்றா கேட்கிறீர்கள்? சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.”


**********************



சந்தர்ப்பம் 

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான். எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான். ”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன். அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன். நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள். ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள், ”என்று சொன்னான். 

அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு, ”ஆமாம், எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அப்புறம் சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன், ”நல்லது, இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். 

**********************



ரொம்ப நல்லது 


மாக்கி என்பவள் தன பழைய சினேகிதி டோரவைக் காண மிக ஆவலுடன் வந்தாள். 

மாக்கி: ஹே டோரா, என்ன ஆச்சரியம்! உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! என்ன சமாச்சாரங்கள்? 

டோரா: ஒன்றுமில்லை, உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன். 

மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா! ரொம்ப நல்ல செய்தி தான்! 

டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை. அவன் மிகவும் மோசமானவன். 

மாக்கி: என்ன மோசமானவனா? நான் மிகவும் வருத்தப்படுகிறேன். 

டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை. அவனிடம் நிறைய பணம் இருந்தது. 

மாக்கி : பரவாயில்லையே, பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல். ரொம்ப நல்லது. 

டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை. அவன் ஒரு கஞ்சன். 

மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய். வருத்தமாக இருக்கிறது. 

டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை. அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான். 

மாக்கி: சொந்தமாக வீடா! ரொம்ப நல்ல செய்தி தான். 

டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை. அந்த வீடு எரிந்து விட்டது. 

மாக்கி: என்ன எரிந்து விட்டதா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதே? 

டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை. அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!


**********************

03 June, 2020

உன்னோடு சேர்ந்து சுற்ற...


ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் முதல் வாரம் என்றால் அவ்வளவு பரபரப்பான நாட்களாக இருக்கும்....

நான் படித்த காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ பள்ளிக்கு செல்ல தயாராகும் பரபரப்பு இருக்கிறதே... அது ஒரு தனி அனுபவம்....

நோட்டு புத்தகங்கள் வாங்குவது... சீருடைகள்.. என பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் 50 நாட்கள் பிரிந்து இருக்கும் நண்பர்களை பார்க்கும் அனுபவம் இருக்கிறதே அப்பப்பா... அது அப்படி இருக்கும்....

தற்போது ஆசிரியராக இருந்தாலும் தன்னிடம் பயின்று திரும்ப பள்ளிக்கு வரும் மாணவ செல்வங்களை பார்க்க மனசு பதபதைக்கும்....

இந்த ஆண்டு எந்த பரபரப்பையும், ஏற்படும் அனுபவத்தையும் தனக்குள்ளே வைத்து புதைத்துக்கொண்டது இந்த ஜூன் முதல் வாரம்...

ஜூன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற இலக்கணத்தை மாற்றி எப்போது பள்ளிக்கு செல்வோம் என்பதே தெரியாமல் மனதுக்குள் சிறகடித்துக்கொண்டிருக்கிறது கற்கும் கற்பிக்கும் பறவைகள்...

சொன்ன காலத்திலும் சரி... கேட்கும் காலத்திலும் சரி கோடை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் சுகம் இருக்கிறதே அது எந்த பாடபுத்தகத்திலும் அச்சேற்றிவிட முடியாத தனி படிப்பு....

உலக வரலாற்றில் கற்றல் கற்பிக்கும் பணியில் இப்படி ஒரு நீண்ட இடைவெளியை நான், அறிந்ததும் இல்லை... கேள்வி பட்டதும் இல்லை....

உலகம் நலம்பெற்று திரும்பவும் சகஜநிலையை அடையவும்... ஒன்பது மணிக்கு கேட்கும் பள்ளி மணிஓசையை கேட்கவும் நம்மால் வேறென்ன செய்து விடமுடியும் ஏக்கத்தோடு காத்துக்கிடப்பதைவிட...

உலகே மீண்டு வா...
நீயும் நானும் ஒன்றாய் சுழல....

காத்திருப்புகளோடு....
#கவிதைவீதி சௌந்தர்
03-06-2020
Related Posts Plugin for WordPress, Blogger...