கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 March, 2012

“மதுச் சிதைவு” விளைவு விதி


பிரிட்டிஷ் அரசு சி.வி.இராமனுக்கு 1929-ஆம் ஆண்டு சர் பட்டம் வழங்கி ‌கௌரவித்தது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் இருந்த புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விருதுபெற்ற விஞ்ஞானி இராமனை சிறப்பிக்கும் விதத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள். விருந்தின் போது மது தாராளமாக வழங்கப்பட்டது.


விஞ்ஞானி இராமனிடம் மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால் அவர் மது எதையும் தொட்டுக்கூடப்பார்க்க வில்லை. சில விஞ்ஞானிகள் இராமனிடம் வந்து தலைமை விருந்தினரான தாங்கள் மதுவை அருந்தாவிட்டால் எப்படி? என்று குறைப்பட்டுக் கொண்டார்கள்.


அதற்கு இராமன் எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்று பதில் அளித்தார்.


இதுவரை பழக்கமில்லாமல் இருக்கலாம். இன்றே அப்பழக்க‌த்தை ஆரம்பியுங்களேன். மது குடித்தால் உடலின் என்ன விளைவு ஏற்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று விஞ்ஞானிகள் இராமனை வற்புறுத்தினார்கள்.


அதற்கு இராமன் ஒளிச் சிதைவு விளைவுகளைப் பற்றித்தான் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டுமே தவிர, மது குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டாமே என்றார்.

இவரின் சிறப்புகள் :

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது

இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.

மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.

பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.

1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

26 March, 2012

கோச்சடையான் -க்கு போட்டியாக, பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை...எதிர்பார்ப்பில் பதிவுலகம்..!


தமிழ் திரைவுலகமும், தமிழ் பதிவுலகமும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பவர்  ஸ்டாரின் ஆனந்த தொல்லை திரைப்படம் வெளியாகாமல் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. (இதற்காக மிகவும் வருத்தப்படுபவர்கள் சிபி செந்திலும், பன்னிக்குட்டி ராமசாமியும் தான்) பதிவுலகில் பலபேர் எப்படியாவது பவர்ஸ்டார் படத்துக்கு திரைவிமர்சனம் எழுதி மிகப்பெரிய ஹிட் எடுத்துவிட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க இப்படம் ஏன் இந்த தாமதம் என்று தனிப்பிரிவு புலனாய்வு அமைப்பை சார்ந்த சிலரை விசாரிக்க வைத்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

21 March, 2012

முதல்வர் ஜெயலலிதா-வுக்கும், மின்சார வாரியத்துக்கும் என் நன்றிகள்..!


கடந்த நாட்கள் திரும்புவதில்லை
முடிந்த நிமிடங்கள் முளைப்பதில்லை
தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு...
 

எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
பசுமையோடு மாறாமலிருக்கிறது அந்த நாட்கள...

எத்தனை மண்போட்டு மூடினாலும்
முளைத்துவிடும் விதைப்போல் - அவை
காலவோட்டத்தையும் மீறி என்னை பரவசப்படுத்துகிறது..
 

இழந்து விட்ட சில அதிசயங்கள்
மறைந்துவிட்ட சில ஆச்சரியங்கள்
தற்போது வாய்த்திருக்கிறது எனக்கு...!
 

அவைகள் என்னவென்று பட்டியலிடுகிறேன்
கொஞ்சம் அமைதியாகத்தான்
படித்துக்கொள்ளுங்கள்..!

தற்‌போது கயிற்றுகட்டிலை வாசலில்போட்டு
தென்றலில் ஆடும் தென்னை கீற்றுவழியே

அண்டத்தின் அதிசயத்தை ரசித்துக்கொண்டே உறங்குகிறேன்...! 

எழிப்பி விட யாரும் தேவையில்லை
விடியப்போவதை கர்ஜனையோடு சொல்லியது
வீட்டுக்கூரையில் அமர்ந்துக்கொண்டு சேவல்..!
 

உள்ளாடைகளில் மணல் புகுந்து இம்சிக்க
உச்சிமுதல் பாதம் வரை புத்துணர்வுகிட்ட
ஆனந்தத்தில் மூழ்கினேன் ஆற்றுக்குளியலில்...!
 

இதுவரை இல்லாத சுவை இன்று இருந்தது
உப்பும் புளியும் சேர்த்து அம்மியில் அரைத்த
செலவே இல்லாத புளிமிளகாய் துவையல்..!

பச்சைமிளகாய் பெரிய வெங்காயத்துடன்
காலை சிற்றுண்டி‌அமிர்தமாய் இனித்தது
கொஞ்சமாய் ‌மோர் கலந்த பழைய கஞ்சி..!

குழவியோடு அம்மியும் அதனுடன் ஆட்டுக்கல்லும்
ஓலை கைவிசிறியும் கூடவே மரநாற்காலியும்
தன்இருப்பை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது...!
 

நீங்காத நினைவுகளாய் மறந்தோடிப்போனவை
தற்போது திரும்ப வந்தது எப்படி...?
எப்போதும் மின்தடை வந்தது அதனால் அப்படி..!
 

என் பழைய வாழ்க்கையை திரும்ப தந்த
தமிழக முதல்வருக்கும்...!
மின்சார வாரியத்திற்க்கும்...!
நான்... நன்றி சொல்லிக் கொள்கிறேன்...!
(அப்பா... நானும் மின்தடை குறித்த பதிவு போட்டுவிட்டேன்.)

(என் அலுவலக நேரமான காலை 9 - 6 மணிவரையிலான நேரத்தில் பகல் 12 முதல் 3 மணிவரை மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தில் நான் எதைச்செய்ய..? )

19 March, 2012

உங்களுக்கு என்ன வேண்டும்..! வெள்ளைக்காரனின் புத்திசாலிதனம்...!


ஒரு சமயம் சில வெள்ளைக்காரர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்தார்கள். அவர்கள் வந்த விலை உயர்ந்த கார் ஒன்று, ஒரு சேற்றுப்பாதையை கடக்கும் போது அதில் சிக்கிக்கொண்டது.

அவர்கள் எவ்வளவு முயன்றும் அதை வெளியில் ‌எடுக்க முடியவில்லை.

அங்கு வயல்வெளியில் வேலைசெய்துக்கொண்டிருந்த நம்மவூர் மக்களை உதவிக்கு அழைத்தார்கள்.

உடனே நம்ம மக்களும் அவர்களுக்கு உதவி செய்தார்கள். காரை சேற்றில் இருந்து வெளியில் ‌எடுத்துவிட்டு பின்பு அந்த காரில் படிந்திருந்த சேற்றை சுத்தம் செய்து கொடுத்தார்கள்.

மிகவும் மகிழ்ந்துபோன வெள்ளைக்காரர்கள். அவர்களிடம் எங்களுக்கு மிகவும் சரியான நேரத்தில் உதவி புரிந்தீர்கள். அதற்காக நாங்கள் ஏதாவது செய்ய நினைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்..? பணமாக வேண்டுமா..?, வெள்ளியாக வேண்டுமா..? தங்கமாக வேண்டுமா..? அல்லது தேங்ஸ்-ஆகா வேண்டுமா..? என்றார்களாம்.

அதற்கு நம்மவர்கள், வெள்ளைக்காரன் ஏதோ கொடுக்க நினைக்கிறான் நமக்கு நல்ல அதிர்ஷ்டம்தான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் எதை கேட்பது என்று இவர்களுக்கு விவாதம்.

என்ன கேட்கலாம் என்று விவாதித்தபின். தேங்க்ஸ் கேட்கலாம் என்று முடிவு எடுத்தார்கள்.... ஏன்னென்றால் பணத்தை விட வெள்ளி விலை உயர்ந்தது, வெள்ளியை விட தங்கம் விலை உயர்ந்தது.... அப்படியென்றால் தேங்ஸ் தங்கத்தை வி்ட விலை உயர்ந்ததாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்கள்...


அனைவரும் என்று சேர்ந்து “ஐயா எங்களுக்கு தேங்ஸ் கொடுங்கள்” என்றார்களாம்...!

உடனே வெள்ளைக்காரர்கள் அனைவருக்கும் தேங்ஸ் (thanks) என்று கூறி கைகொடுத்துவிட்டு சென்றார்களாம்...

நம்மவர்கள் அசடு வழிய கையசைத்தார்களாம்..!

மொழி தெரியாததால் எவ்வளவு பிரச்சனைப்பாருங்க... (காது வழி செய்தி)

15 March, 2012

தள்ளிப்போகிறது என் தற்கொலை...!


ட்டம் வாங்கி பல நாளாகியும்
இன்னுமொறு வேலை இல்லையென...

சாப்பிட உட்காரும் போதெல்லாம்
சித்தி பரிமாறுகிறார்
சாதத்தோடு சில சவுக்கடிகள்...!

சாயங்காலம் வீடு திரும்புகையில்
என்மீது அப்பா பொழியும்
அமிலத்தில் நனைத்த வார்த்தைகளை
தவிர்த்துவிடவும்...!

திர்பார்த்தே நடத்தும் சமூகம்
எப்போதும் ஏமாற்றத்தையே
திருப்பிக்கொடுக்கும் போதும்...!

லிகொண்டு மனம்துடிக்கும்
ஒவ்‌வொறு சந்தர்ப்பங்களில் முயற்சித்தும் 
தோற்றுதான் போகிறது
என் தற்கொலை...

தரவற்று தனித்திருக்கும்
என் அம்மாவுக்காக....!


கவிதை கரு : சமூகம்
படங்கள் : கூகுள்


05 March, 2012

நாம் மனிதர்கள் என்பது உண்மைதானா...? (புதிய வாழ்க்கைத் தொடர்)இரண்டு ஜென் துறவியின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அகிரா என்ற சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

“எங்கள் குரு மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் குரு என்ன செய்வார்?', என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

ஜிங்ஜு எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்', என்றான்.

அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் குருவிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டேன்.

அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்'' என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு. (இது ஒரு ஜென் கதை)


நாம் ஒவ்வொறு நாளும் நம்மை வித்தியாசப்படுத்தி காட்ட, அதற்காக முயற்சித்துக்கோண்ட இந்த வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருக்கிறோம். நாம் மற்றவர்களை விட வித்தியாசமானர்களாக காட்டுவதற்காக இன்றைய மகிழ்ச்சிகளை விட்டு விட்டு எதிர்காலம் நோக்கி ‌ஓட வேண்டியிருக்கிறது.

‌ஐம்பூதங்களோடு இணைந்து வாழும் வா‌ழ்க்கை இருக்கிறதே. அடடா... அதுதான் உண்மையான பேரானந்தம். கொஞ்சம் படித்துவிட்டு பணம் வந்துவிட்டால் போதும் அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே. ஒரு நண்பர் என்னார் “செருப்பு இல்லாம் நான் ஒரு அடிக்கூட நடக்க மாட்டேன்” எதில் என்ன பெருமையிருக்கிறது. நம்வாழும் இந்த பூமியில் நாம் பாதம் பட்டு நடக்கவேண்டும். அப்போதுதான் தெரியும் இந்த பூமியை நாம் எவ்வாறு பாழ்படுத்தியிருக்கிறோம் என்று. செருப்பு அணியாமல் நடக்க வேண்டிய தருணம் ஏற்பட்டால் என்னதான் செய்வார் அவர் என்று எனக்கு தெரியவில்லை.

மழையில் நனைந்தால் நம்முடைய உடலுக்கு ஆகாதுதான். அதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மழையில் நனையாமலே முடிந்துவிட்டால் எப்படி, நாம்... இயற்கையின் கொடையான மழை என்ற ஒரு அதிசயத்தை கொண்டிருக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கே அர்த்தமில்லை.

எங்கள் வீட்டுக்கு சென்னையில் இருந்து எங்கள் உறவினர்கள் வருவார்கள். அவர்களின் பிள்ளைகளை ஊரைச்சுற்றி காட்ட சென்றால் அவர்கள் அங்கு பார்க்கும் அத்தனையும் அருவறுப்பாகத்தான் பார்க்கிறார்களே தவிர அதையாரும் ரசிக்க வில்லை. வரப்பில் நடப்பது, ஆற்றில், கிணற்றில் குளிப்பது, வயலில் இறங்கி நண்டுகளை தேடுவது, மரத்தில் ஏறி நுங்கு சாப்பிடுவது, குளத்தில் இறங்கி தாமரைப்பறிப்பது என அத்தனையும் எங்களுக்கு இன்பமாய் பட்டது. அவர்கள் அதை தூரத்தில் இருந்து பார்த்ததோடு சரி.


இன்று நாம் யாதார்த்த உலகில் வாழ மறந்து வருகிறோம். இனறைய சூழலில் மின்தடை ஏற்பட்டால் வாழ்க்கை‌யே சூனிமாக இருப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். தன்னுடைய உடல் மனம் அத்தனையையும் விஞ்ஞானத்துக்கு பறிகொடுத்து விடடோம். அதிலிருந்து விடுபடுவது இனி முடியாத காரியமாகத்தான் இருக்கிறது.

நான் வசதி வாய்ப்புகளை குறைச்சொல்லவில்லை. அதற்காக எதார்த்த வாழ்க்கையை மறந்துவிடுவது எந்தவிதத்தில் நியாயம். ஒரு கைபேசி வேலைசெய்ய வில்லையென்றால் அதற்காக படும்வேதனை இருக்கிறதே. தெலைக்காட்சி பெட்டி ஒரு நாள் இல்லையென்றால் அதற்காக படும் அவஸ்த்தை இருக்கிறதே... உண்மையில் இந்த இரண்டும் நம் மகிழ்ச்சிக்கு நாமே வைத்துக்கொண்ட சூன்யங்கள்.

உண்மையான மனிதன், உண்மையான மனம் அனைத்தையும் சமம் என்று கருதும். யாதார்த்தமான உலகத்தில் யார்த்தமாக வாழ பழகிவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றியாளராக திகழலாம். 120 கோடி உள்ள நம் தேசத்தில் அனைவருமே அற்புதமானவர்களாக திகழ நினைப்பது அசாதாரணமானதுதானே.

அன்பு காட்ட, ஆசையோடு அரவணைக்க, மற்றவர்மேல் பரிவு கொள்ள, எளியோர்மேல் இரக்கம் காட்ட, நேர்மையோடு இந்த உலகில் வாழ, உண்மையை உண்மையென்று சொல்ல, தன தர்ங்கள் செய்ய, வாடிய மனங்களை விசாரித்து ஆற்ற, மனிதனால் மட்டுமே முடியும். இந்த அற்புதங்களை நிகழ்த்தி நாம் மனிதர்கள் என்பதை நிருபித்துக்கொண்டே இருப்போம்.

02 March, 2012

அரவான் சினிமா விமர்சனம் / Aravan Cinema Vimarsanam


வெகு நாட்களுக்கு பிறகு விமர்சனம் எழுதஆர்வம் வந்தது அதற்காக இன்று என்னுடைய வேலைகளை ஓரம் தள்ளிவைத்துவிட்டு திருவள்ளூர் கிருஷ்ணா திரையரங்குக்கு சென்றேன். எப்போதும் படம் 10.30 க்கு படம் ஆரப்பிப்பார்கள் ஆனால் இன்று 10-50 க்கு தான் ஆரம்பித்தார்கள். கூட்டம் சாதாரணமாகத்தான் இருந்தது. டிக்கெட் விலை 50 மட்டுமே.

யதார்த்தமான அண்ணன் தம்பி பாசத்தை அழகாக “வெயில்“ படத்திலும்,‌  ‌ஒரு துணிக்கடையில் நடக்கும் அவலம் அதில் ஒரு காதலையும் “அங்காடித் தெரு“ வில் அழகாய் சொன்ன வசந்தபாலன். தற்போது கையில் எடுத்திருக்கும் கதை 18-ம் நூற்றாண்டில் நடக்ககூடியதாக இருக்கிறது. சாகத்மிய அகடமி விருது பெற்ற நூலான சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய ”காவல் கோட்டம்” என்ற கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் வசந்தபாலன்.


களவு மட்டுமே தொழிலாக கொண்ட பசுபதி வசிப்பது வேம்பூர் என்னும் ஒரு சிற்றூர். மலைஅடிவாரத்தில் இருக்கும் இவர்கள் களவு கொண்டு அதில் வரும் வருவாயில் வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் பசுபதி தன் கூட்டாளிகளோடு களவு செய்ய புறப்பட்டு வெற்றிகரமாக களவு செய்துவிட்டு வரும் காட்சிகள் பிரமிப்பாக இருக்கிறது.

அப்பகுதி ராணியின் வைர அட்டிகை களவு போக அதை வேமபூர்காரர்கள் தான் எடுத்திருக்கலாம் என்று கருதி அரண்மனையாளர்கள் அங்கு சென்று அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். அதற்கு பசுபதி நாங்கள் யாரும் எடுக்கவில்லை என்றும், அப்படி யார் எடுத்தது என்று கண்டுபிடித்து தருவதாகவும் சவால் விடுகிறார். அப்படி கண்டுபிடித்து கெர்டுத்தால் அவர்களுக்கு அரண்மனை சார்பில் 100 கோட்டம் நெல் தருவதாக வாக்குறுதியும் தருகிறார்கள். தன்னுடைய கிராமத்தின் நலன் கருதி பல இடங்களுக்கு சென்று தேடுகிறார். அப்படி ஒருவரை வேறுபார்த்து அவனை களவு செய்யும்போது பிடிக்கிறார்...  அவர் தான் ஆதி. காட்டில் தனியாளாக இருந்து ஆதி கொள்ளையடித்து தெரிந்து... அவரிடம் அந்த வைர அட்டிகையை வாங்கிக்கொண்டு.., அப்படியே ஆதியையும் தங்களுடைய சொந்த ஊருக்கு கொண்டு வருகிறார் பசுபதி.
அதன்பிறகு இருவரும் இணைந்து களவுக்கு போகிறார்கள். மிகவும் பலமான ஊரான மாத்தூருக்கு களவு சொன்று அங்கும் கொள்ளையடித்து திரும்பும் வழியில் பசுபதி மாட்டிக் கொள்ள ஆதி அவரை காப்பாற்றி ஊருக்கு திரும்பி வருகிறார். களவில் மாட்டி யாரும் திரும்பியதில்லை காப்பாற்றிய ஆதிக்கு நன்றி சொல்கிறார்கள்.

வேம்பூருக்கு எதிராக வரும் ஒரு மாடுபிடி போட்டியில் பசுபதி கலந்துக் கொண்டு போராட அவருக்கு துணையாக ஆதியும் களத்தில் இறங்கி போட்டியில் வெல்கிறார். அந்த இடத்தில் மாத்தூர்காரர்கள் வந்து ஆதிதை மடக்கி பிடித்து கொண்டு செல்கிறார்கள். அப்போது ஏன் என்று கேட்க ஆதி ஒரு பலியாள் என்றும், அவரை பலியிடபோவதாகவும் கூறுகிறார்கள். இந்த பரபரப்பில் இடை வேளை வருகிறது...

ஆதி பலியாடாக ஆக காரணம் என்ன..? ஆதியின் உண்மையான பிண்ணனி என்ன என்பதை மீதி கதை விளக்குகிறது..


குறைஎதுக்குங்க மீதிக்கதையையும் சொல்றேன்....

காவல் கோட்டமாக திகழ்கிறது ஆதி வசிக்கும் ஊரான சின்னவீரம்பட்டி என்ற சிற்றூர். அங்கு பரத்தை  மர்மமான முறையில் கொலை செய்து போட்டு விடுகிறர்கள். அவர் எந்த ஊரை சார்ந்தவர் என்று ஆராயும் போது அவர் மாத்தூரை சார்ந்தவர் என்று தெரிய வருகிறது. இந்த படுகொலைக்கு பழிவாங்க மாத்தூர்காரர்கள் பொங்கி எழுகிறார்கள்.

இதற்கிடையில் மதுரை பாளையக்காரர் தலையிட்டு ஒரு உயிருக்கு பல உயிர்கள் இறப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. ஆகையால் உங்கள் ஊரில் இருந்து ஒருவரை பலிகொடுத்து விடுங்கள் என்று கட்டளையில் அந்த பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் ஆதி.

30 நாட்களுக்கு பிறகு வந்து பலியிடலாம் என்று கூறி சென்று விட பரத்தை உண்மையில் கொன்றது யார்..? எதற்காக கொன்றார்கள் என சின்னா என்ற ஆதி ஆராய்கிறார்...? அதன் பிண்ணனியில் பல்வேறு மர்மங்கள் இருப்பது தெரிய வருகிறது...?

இறுதியில் தன்னை நியாயப்படுத்தி தண்டனையில் இருந்து ஆதி தப்பித்தாரா அல்லது தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்று இறுதிக்காட்சிகள் விளக்குகிறது... (போதுங்க இதுக்கு மேல சொன்ன நல்லா இருக்காது..)

இனி விமர்சனம்...
 
முதல் பாதியில் வரிப்புலி என்ற களவானி கதாபாத்திரத்திலும், பிற்பாதியில் சின்னா என்ற  காவல் கோட்ட தலைவனாகவும் அற்புதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆதி. படம் முழுக்க சட்டையணியாமல் தன்னுடைய கம்பீரமான உடலை முருக்கேற்றி வலம் வருகிறார் ஆதி. வீரமான நடிப்பிலும், ஆதியிடம் பயப்படும் காட்சியிலும், காதலி தன்ஷிகாவிடம் காதல் காடசிகளில் கதையில் அளைவைவிட்டு சற்றும் விளகாமல் அற்புதாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தன்ஷிகாக அதிக வேலையில்லா விட்டாலும் ஒரு மலைவாழ் பெண்ணை அப்படியே கண்முன்னே நிறுத்துகிறார்.

பசுபதி வெகுநாளுக்கு பிறகு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ள படம். வீரமும், தன் பகுதி மக்களை காக்கவேண்டும் என்ற பொறுப்பும், தன்னுடைய நண்பனான ஆதியை காப்பாற்ற வேண்டும் என்ற வெறியும், தன்னுடைய நடிப்பில் வரிசைப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

பரத்திற்கு மிகுந்த காட்சிகள் இல்லை கதைக்கு ஏற்ப அவரை கௌரவ தோற்றத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர் கொலை செய்யப்படுவதுதான் கதையின் போக்கை மாற்றுகிறது அவருக்கு ஒரு சில காட்டிகளில் ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு இப்படத்தில் வேலையில்லை. இருந்தாலும் சிங்கம் புலியை பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

கதைகளம் மலையடிவாரத்தில் வாழும் ஒரு சிற்றூர் என்பதால் அவர்களின் சூழ்நிலை வாழும் முறைகள் அவர்களின் நடவடிக்கைகள் என அனைத்தும் தத்துருபமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். எந்த காட்சியில் மிகைப்படுத்தலோ நம்பமுடியாத காட்சிகளோ பார்க்க முடியவில்லை அந்த விதத்தில் வசந்தபாலைனை பாராட்டியே ஆகவேண்டும்.

இசை பாடகர் கார்த்திக் புதிய முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார். படத்துக்கு பாடல்கள் அவசியம் இல்லையென்பதால் அவைகள் கதையோடு ஒத்து போகும்படி செய்திருப்பது அற்புதம்.

படத்தில் வரும் அனைவரும் பாதி வேட்டியை கட்டிக்கொண்டு முழுக்க முழுக்க மலைவாழ் மக்களைப்போன்ற காட்சி அளிக்கிறார்கள். 18-ம் நூற்றாண்டில் கதை என்பதால் அனைத்து காட்சிகளிலும் அதை கவனித்து செய்திருக்கிறார் இயக்குனர்.

வெறும் மசாலாக்கள் பூசி கூவி... கூவி... தன்னுடைய படங்களை காசாக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு நாவலுக்கு உயிர் கொடுத்து தமிழ் திரைப்படங்களின் மைல் கல்லை இன்னும் கொஞ்சம் நகர்த்தி போட்டிருக்கிறார் வசந்தபாலன். நல்ல பொழுதுபோக்கு படம் இது இல்லையென்றாலும் சிறந்தஒரு படத்தை கொடுத்ததற்காக வசந்தபாலம் பேசப்படுவார்.
Related Posts Plugin for WordPress, Blogger...