கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

09 October, 2023

சரியான முதல் பாடம் ...




 நம்மால் முடியாதது எது, நமக்கு எல்லாம் தெரியும், நாம் எல்லாம் கற்று விட்டோம், நமக்குள் எல்லா திறனும்  இருக்கிறது என்ற ஒரு ஆணவம் ஒவ்வொருகுள்ளும் ஒளிந்திருக்கும்...


அது அவர்களை விட்டு எளிதில் அகன்று விடாது. ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் அந்த ஆணவம் தலைக்கு ஏறிக்கொண்டு இருக்கும். "இது நம்மால் மட்டும் தான் சாத்தியம்" நான் கை வைத்தால் போதும் அது வெற்றி தான் என்கிற மனநிலை...

முதல் அடி விழும். அந்த அடி எப்பொழுது, எங்கு, எப்படி விழுகிறது என்றே தெரியாது. அந்த முதல் சறுக்கல் அல்லது அந்த முதல் ஒரு பயணத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த அடி விழும். அந்த அடி தான் அவர்களுக்கு ஒரு சரியான பாடத்தை சொல்லித் தரும்.

அந்தப் பாடம் அடுத்த நகர்வை எப்படி சரியாய் நகர்த்துவது என்பதுதான். ஆணவத்தை அழிக்கும் அந்த முதல் பாடம் தான் இனி ஒவ்வொரு முறையும் நாம் சரியாக செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும்.

இது நம் வாழ்வில்  செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இது பொருந்தி போகும் ஒரு சருக்களுக்குப் பின் நாம் எடுத்து வைக்க ஒவ்வொரு அடியும் அவ்வளவு அற்புதமாக இருக்கும். என்னவென்றால் சிலர் இதை ஆரம்பத்திலேயே கற்றுகொள்வார்கள், பலர் பாதியில், சிலர் இறுதியில் எது எப்படியோ நான் சரியாக கடந்து போக வேண்டும் தவறுகளை களைய வேண்டும் என்பதை அந்த ஒரு சறுக்கல் உறுதியாய் சொல்லிக் கொடுக்கும்.

இந்திய உலகக்கோப்பை போட்டியில் நேற்றைய ஆஸ்திரேலியா உடனான போட்டி அதைத்தான் இந்திய அணிக்கு சொல்லிக் கொடுக்கிறது.

ஆரம்பத்தில் இருந்த மனநிலை என்பது நாம் 20-20 போட்டியிலேயே 200 அடிக்கிற ஆட்கள்... 50 ஓவர் உள்ள இந்தப் போட்டிக்கு வெறும் 200 ரன்கள் என்பது இந்திய அணிக்கு ஒரு சாதாரண விஷயம் என்று கருதிக் கொண்டிருந்தனர். 

ஆனால் அந்த ஆணவத்தை உடைக்க இரண்டு ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற நிலை வருகிற போது, எப்படி பந்துகளை எதிர்கொள்ள வேண்டும், எவ்வாறு பொறுமையாக ஆட வேண்டும், எவ்வாறு வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற பாடத்தை இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலே தெரிந்து கொண்டு விட்டது.

என்னுடைய கணிப்பின்படி இனி ஒவ்வொரு ஆட்டங்களிலும்  அனைத்து வீரர்களும் வெற்றிக்கான நகர்வை  கண்டிப்பாக உணர்ந்து இருப்பார்கள். எப்படி பொறுமையாக ஆட வேண்டும், என்ற போராட்ட குணம் அனைவருக்குள்ளும் வந்திருக்கும். 

இந்த முதல் அடி தான் ஒவ்வொரு வெற்றியையும், அனைவரும் ஒன்று சேர்ந்து, பொறுமை காத்து  போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மையை இந்திய அணிக்கு  எடுத்துரைத்திருக்கிறது.

விளையாட்டில் வெற்றி  தோல்வி என்பது சகஜம்தான். அதை எப்படி அடைகிறோம் என்பதில் தான் நமக்கான மதிப்பின் பங்கு இருக்கிறது. 

இந்தப் பாடத்தை களத்தில் நின்று எழுதிட முடியாத வரிகளில் அனைவருக்கும்  சொல்லிக் கொடுத்திருந்தார்கள் வீரட் கோலியும்... கே எல் ராகுலும்...

இனி வரும் ஆட்டங்களில்  இந்தியா ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக பொறுமையாக முன்னேறும்  என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஏனென்றால் கல்வியும் பாடமும் தான் ஒருவரை வாழ்க்கையில் மென்மேலும் உயர்த்துகிறது. சிலர் ஏட்டு பாடத்தை கற்காமல் வாழ்க்கை பாடத்தை படித்து உயர்ந்திருப்பார்கள். அதுவும் ஒரு வகையில் கல்வி தானே.

#கற்பது_முக்கியம்..
கவிதைவீதி சௌந்தர் 
09-10-2023.

07 January, 2019

அவிழ்த்து விட்டு விடுங்கள்...!



வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நாம் கற்றுக்கெள்ளும் பாடம் தான்... வாழ்க்கையை நகர்த்துவதற்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. நமக்கு ஏற்படும் மனகசப்பு, துயரங்கள் கேள்விகள் போன்றவற்றுக்கு விடை தருவது காலமும்.. அதனோடு இனைந்து வரும் இந்த உலகமும்தான்

நாம் சில சம்பவங்கள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கவிதைகள் படிக்கும்போது அல்லது கேட்கும் போதோ நம்மனதில் சில உறுத்தலையோ அல்லது சிறு தாக்கத்தையோ விடடுச்செல்லும்... இதுசரிதானே என்று நம்மிலே நம்மை கேட்டு நச்சரிக்கும். அவற்றில் ஒளிந்திருக்கும் உண்மையை நாம் உணர்வோம்..

அப்படி சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் இருந்து ஒரு கதையைத்தான் தற்போது தங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்... படித்த நேரம் முதல் என் மூளையில் அமர்ந்துக்கொண்டு என்னை ஏதோ செய்துக்கொண்டு இருக்கிறது... அவற்றை தங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்..


துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்.  பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். I

இளைஞன் ஒருவன் வந்தான்

"சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.  ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்......??? என்று கேட்டான்.

துறவி அவனிடம் சொன்னார்....

தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய்.

"ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும்.

தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு" என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.

மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.

அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.

இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.

அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் துறவி.

இன்று சுத்தப்படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்.......??? என்று கேட்டார்.

அதற்கு அவன், என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கரீங்க.....???

திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா....???

இதை கேட்ட துறவி அப்போது சொன்னார் "தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.

நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் , அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதர்களை நல்வழி படுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.

இளைஞன் கேட்டான்” சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன....???

அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார், பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்

“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா......???

ஆகாது சாமி. என்றான்

துறவி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில்.

நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ, அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும், அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்........!!

உண்மைதானே... நாம் இன்னும் பலகோடி ஆண்டுகளாய் பல்வேறு அழுக்குகளை மனதிலே தேக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம்... அதை விடமறுத்துவிட்டு கலாச்சாரம், பாரம்பரியம், என்று வியாக்ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறோம்..

சிலர் அதை தனித்தன்மை, பிடித்தவை, கொள்கை, என் தனிவழி என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் வாழ்க்கையில் முன்னேற எது நமக்கு தடையாக இருக்கிறதோ அதை அப்படியே காலில் போட்டு மிதித்து முன்னேற பழகிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் அதுவே நம் காலில் கட்டப்பட்டுள்ள சங்கிலிப்போல் நம்மை நகரவே விடாது.


09 March, 2018

நாமும் ஒரு காரணம் தான்.....







நிகழ்காலத்தோடு 
ஒட்டமறுத்து
எதிர்காலத்திற்குள் புகுந்து
சிறகிழந்து சிதைகிறது
மனசு...!


பயணிக்கும் வழிகளிலே 
வடிய வைத்துவிட்டோம்
உயிரணுவில் ஒட்டியிருந்த
வாழ்வை ரசிக்கும் 
தன்மையை...!


கோடி ஆண்டுகள் 
வாழப்போவதில்லை
தெரிந்தும் தெளிய மறுக்கிறோம்
இது நிச்சயமில்லாத 
வாழ்க்கை...!

 
 இனத்தை இனமழிக்கும் 
ஈன வரலாறு....
எந்த விலங்கிலும் இல்லை
இதில் விதிவிலக்காய்
மனிதன்...!


ஓடிமுடித்து 
திரும்பிப் பார்த்தால்
நம்மைப்பார்த்து சிரித்துவைக்கிறது
வீணாய் விட்டுவந்த 
தடங்கள்...!

 
சாய்ந்து ஓடும் 
இந்த புவியின் அச்சில்
எதையும் பொறுமையாய் கையாள
கைக்கொடுப்பதில்லை 
காலமும் நேரமும்...!

 
நாகரீகமும் பேராசையும் 
கைகோர்த்து கொண்டு
இன்னும் வேகமாய் 
இயக்குகிறது
இந்த உலகை...!


நினைவில் 
கொள்ளுங்கள்...


இழந்துவிட்டோமென 
கண்ணீர்வடிக்கும்
ஒவ்வொறு தருணங்களும்
நாம்  
உதாசினப்படுத்தியவையே...!

24 January, 2016

இப்படியாய் சில அனுபவங்கள்...!


வான் எழுதும் 
தண்ணீர் கவிதை மழை...

அவைகளை தன் இலைகளில் சுமந்து
நிதானமாய் வாசித்து வழியனுப்பி
மண்ணையும் மகிழ்விக்கும் 
மரங்கள்...!

நாமும் மரம்போலாவோம்
வாழ்வை மகிழ்வோடு எதிர்கொண்டு...

மகிழ்ச்சியை மற்றவரோடும்
பகிர்வோம்...!



ஆரவாரமாய் மழைப்பெய்து அடங்கியது
முகில் ஒழிந்து வானம் தெரிந்தது...

எல்லாம் ஓய்ந்தப்பின்
மறுநாள் சத்தமின்றி
எட்டிப்பார்த்தது காளான்...

பிரச்சனைகளை அப்போதே
நேருக்கு நோராய் சந்தியுங்கள்....
முடிந்தபிறகு எதற்கு 
தீர்வுகள்..!



சேற்றில் வேர்பதித்து
நீர்கிழித்து வெளியில் வந்தது 
தாமரை...

தடம் பதித்த தடாகத்தை
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தன 
இலைகள்..!

வளர்த்தவர்களிடத்தில்
ஏன் வேறுபாடுகள்...

ஒன்றியே வாழ்வோம்..!



வேற்றினத்து முட்‌டைகளை
அடைக்காத்து பொறிக்கும் 
அற்புதங்கள்..

கிடைத்ததை பகிர்ந்துண்ணும்
பெருங்குணம் கொண்டவை 
காக்கைகள்..!


இயன்ற‌வரை உதவிடுவோம்
இயலாதவர்களுக்கு...

வாழ்க்கை என்பது 
ஒருமுறைதானே..!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

02 February, 2015

இதற்கான விடை உங்களிடம்தான் இருக்கிறது...!

பாட்ஷா படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு வசனம் “நம் வாழ்க்கை நம் கையில்”.... இன்றைக்கு அதிகமான ஆட்டோக்களில் அதை நாம் பார்க்கிறோம்... படிக்கிறோம்... ஆனால் நம்வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்று உணர்ந்தவர்கள் மிகமிகக்குறைவுதான்...!
உழைப்பு, தன்னபிக்கை, முயற்சி, ஊக்கம்,  புத்துணர்வு, முடியும் என்கிற அத்தனை நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் இவைகளை அடுத்தவர் நமக்கு அறிவுறுத்தவோ அல்லது அடுத்தவர் உதவியாலோ கிடைக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம்...

அடுத்தவர் எடுத்துரைக்கும் போது நம்மிடத்தில் இருக்கும் பலம் நமக்கு தெரியும் போது நமக்கே என்  நம்முடைய பலம் தெரிய மறுக்கிறது அது ஏன்... அனுமனுக்கு வேண்டுமானால் அவருடைய பலம் அவருக்கு தெரியாமல் இருக்கலாம் அது அவருடைய சாபம்... அவரை புகழும் போது மட்டும் அவருடைய பலம் பண்மடங்காகலாம்... நாம் என்ன அனுமன்களா அடுத்தவர் சொன்ன பிறகு பலம் அதிகரிக்க...

இந்த உலகம் தானகவே முன்னேறிக்கொண்டிருப்பது இதில் அடுத்தவரை மேலேத்தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகபடியான மக்களுக்கு இருப்பதில்லை.... சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை கீழே தள்ளிவிட்டு முதுகின்மீது ஏறிசெல்கிற மக்கள்தான் அதிகம்... இதில் விதிவிலக்கானவர்கள்தான் தற்போதைய வேகமான உலகத்தில் காணாமல் போய்விட்டார்கள்..
ஆகையால் தன்கையை நம்பி உழையுங்கள்... விடாமுயிற்சியை கைவிடாதிர்கள்... தன்னால் முடியும் என்று நம்புங்கள்... இதை தன்னுடைய சந்ததிக்கு எடுத்துரையுங்கள்... அதில்தான் அவர்களில் ஒளி‌மய‌மான எதிர்காலம் அடங்கியிருக்கிறது... இரண்டு வயதில் கைதொலைப்போசியை கையால்வதினாலோ, எடக்குமடக்காக  பேசுவதினாலோ உங்கள் கு‌ழந்தை வெற்றியாளனாக வந்துவிடமுடியாது... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்... அதை ஆணித்தரமான நம்புவோம் நம்ப வைப்போம்....

என்னைப்பொருத்தவரை நான் இதுநாள் வரையில் அடுத்தவரை நம்பிஇருந்ததில்லை நட்புக்காக தவிர.... என் வெற்றி என் உழைப்பில்... இதுநாள்வரை அப்படித்தான்...! அடுத்தவரை நம்புவதைவிட நம்மை நம்புவதற்கு நாம் தயாராக வேண்டும்... அதற்கான பரிசுதான் வெற்றி...!
சமீபத்தில் நான்படித்த ஒரு ஜென் கதையில் சுருக்கம்...!
ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் துறவியிடம் வந்தான்....


"குருவே...! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா...? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றாகிறார்...

பறவை உயிருடன் இருக்கிறது என்று குரு கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அல்லது அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த குருவுக்கா இது தெரியாது?


அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

தற்போதைக்கு... இந்த சமூகம் உள்ளங்கையை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது... என்று கொஞ்சம் மனதை ஓடவிட்டுப்பாருங்கள்... அழகான பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது... வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள்... அந்த வாய்ப்பை உருவாக்குங்கள்.. என்பதுதான் அது...
உண்மையில் தான்... அந்த பறவையின் உயிர்மட்டுமல்ல அனைவருடைய உயிரும்... அவரவர் உயர்வும்.... அவரவர் உள்ளங்கையில்தான் இருக்கிறது....

தன்னுடைய உழைப்பின்றி உயர்ந்தவர் இங்கு யாராவது இருக்கீறிர்களா...?

17 February, 2014

நம் பலத்தை தீர்மானிப்பது யார்?



குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன் தொடர்ந்து அவரை வந்து சந்திக்கிறான். தன் பலத்தால் நூறு பேரை வீழ்த்தும் சக்தியுடைய அவனை குரு பயிற்சிக்கு சேர்த்துக்கொள்கிறார்.

மாதங்கள் கழிகின்றன. பலமாத பயிற்சிக்குபிறகு குரு எதேச்சையாக சீடனை அழைத்து “இப்போது உன் சக்தியை சோதிக்கிறேன்.. எத்தனை பேரை நீ வீழ்த்த முடியும்“ என்று கேட்கிறார்.

பயிற்சிக்கு முன்பு நூறு பேரை வீழ்த்துவேன் என்று கூறிய அவன் பயிற்சிக்குப்பிறகு ‌ஐம்பது பேரை மட்டுமே வீழ்த்த முடியும் என்கிறான்..

பிறகும் சில மாதங்கள் கழிகின்றன. மறுபடியும் குரு சீடனை அழைத்து சக்தியை சோதனை நடத்த, அதே கேள்வியைக் கேட்கிறார். இப்போது உன்னால் எத்தனை பேரை வீழ்த்த முடியும்?

சீடன் பணிந்த கண்களோடு சொன்னான்.. “குருவே, இதை நானெப்படி சொல்ல முடியும்..? என் பலத்தை எதிரிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்“ என்கிறான்.

புன்னகைத்த குரு, சீடனை ஆசீர்வதித்து பயிற்சி முடிந்தது. வீட்டுக்கு போகலாம் என்று வழியனுப்பி வைக்கிறார்.

இக்கதை ‌போல்தான் நமது வாழ்வும், சாதாரணமான தேவைகளை தீர்மானிக்கும் போது கூட அது சராசரி நடைமுறைக்கு ஒத்துவருகிறதா எனப்பார்க்க வேண்டும். ஏனெனில், நம்முடைய பலம் எதிரே இருப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. பலம் பட்டுமல்ல பயனும்கூட.

நாம் என்னிவிடலாம் அனைவரையும் விட நாம் மேலானவன் என்று நமக்கு மேலே கோடிபேர் என்பதை உணராதவரை இந்த மயக்கம்தான் பலரை ஆட்கொண்டுவருகிறது. உண்மையான வீரம் மற்றவர்களை துன்புறுத்துவதிலோ அல்லது பிறரை இழிவுபடுத்துவதிலோ இல்லை. உண்மையான வீரம் ஆழமான அன்பைபே பொழியும்.


என்வாழ்க்கையில் இதுவரை சந்தித்தவர்களில் நிறையபேர் ரவுடி‌ப்போலவும், மிகப்பெரிய கோவக்காரர் போலவும் காட்டிக்கொள்கிறார்கள்... நான் அவர்களை பார்ப்பது இயலாதவர்களாகத்தான்... ஆம் சிலர் தன்னுடைய இயலாமையை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே கோவம், ரவுடிபோன்று பாவனை, அழுகை, வெறுப்பு என ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்...

கோவமோ, வீரமோ, அன்போ நாம் எவ்வளவு காட்டவேண்டும் என்பதை நாம் முடிவெடுக்க வேண்டாம் நம் எதிரில் இருக்கும் அடுத்தவர் காட்டும் அளவைப்பார்த்து முடிவெடுப்போம்.. அப்போதுதான் வாழ்க்கை தன்பயணத்தை எளிமையாக நகர்த்திக்கொண்டே இருக்கும்.

30 December, 2013

இப்படி சொன்னால் விரல்கள் கூட சிரிக்கும்



வெறுங்கையை வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய..!

என்னிடம் எதுவும் இல்லை
உருப்படியாய் பயன்படுத்த..!

ஏதாவது என்னிடம் இருந்திருந்தால்
கண்டிப்பாய் முன்னேறியிருப்பேன்...!

நம்ம கையில ஒன்னுமில்லை
எல்லாம் அவன் கையில்...!

இப்படியாய்..
கையை பிசைந்துக்கொண்டிருந்தவனை
பார்த்து சிரித்தன விரல்கள்...!


*****************************



வயிற்றில் கவ்விய தன்குட்டியை
பவ்வியமாக பற்றிக்கொண்டிருக்கிறது குரங்கு...!

ஈன்றெடுத்த ஆறு குட்டிகளுக்கு
படுத்து பாலுட்டிக்கொண்டிருக்கிறது நாய் ஒன்று..!

தேடிபிடித்த சில புழுக்களை அலகால்
குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது குருவி..!

ஆனந்தாய் முட்டி முட்டி பால்குடிக்கிறது
தன் தாயிடம் பசுங்கன்று...!

இவைகளையெல்லாம் ஏக்கமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறது தெருவோர குழந்தை...!

*****************************
 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

25 September, 2013

அனைத்தையும் துறப்போம் வா...!


வா.. நண்பனே...
ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தை
பரிசீலனை செய்வோம்...
 
நெருப்‌பை கக்கும் சூரியனைக்கும்
பொருப்போடு சுற்றிவரும் பூமிக்கும்
இடையில் வாழும்
நீயும் நானும் எத்தனை வேற்றுமைகளோடு...

நமக்குள் ஏன் வெறுப்பு...
உறவாடி களியாமல் ஏன்இந்த பகை
நீயும் நானும் சகோதரன் என்றால்..?

இதை அறிந்தோமா?
தாய்பூமி சுமந்த அமைதி கர்ப்பம்
கலைந்துக்கொண்டிருப்பதை...

நம் அனைவரும் சகோதரர்கள்...
நம்மை சுற்றிய அனைவரும் சகோதரிகள்...
நாட்டை எரிக்கும் நெருப்பிலா
நாம் குளிர்காய்வது...?

சாதிக்கென்றும்....
மதத்துக்கென்றும்...
மொழிக்கென்றும்...
இன்னும் எப்படி‌எப்படியோ
மாறிவிட்டது நம் முகங்கள்..?

செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயத்துக்காக
உன் இயலாமையின் தடுமாற்றமும்
என் எதிர்பார்ப்பும் என்ன..?

என்னையும் உன்னையும்
குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கிறது
இந்த ஜாதியும் மதமும்..!

பொறுத்தது போதும்... 
இனியும் எதற்கு வேறுபாடு
வா..! நீயும் நானும் வேற்றுமை துறப்போம்.. 
“தூங்காத விழிகளோடு..” 
என்ற என் கவிதை நூலிலிருந்து..!

29 August, 2013

உஷார்...! இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது...!

 
 ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.  (ரசித்தது)

21 August, 2013

இப்படிகூடவா வியாபாரம் செய்வாங்க...!

 
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர். (தன்னம்பிக்கை கதைகளிலிருந்து...)

05 June, 2013

இவற்றை பின்பற்றினால் 'அதில்' நீங்க கில்லாடிதான்...!

தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்’ என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும் வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே தரப்படுகின்றன.

நம்பிக்கை:

நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகான வ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகுபடுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.

நேர்த்தியான உடை:

‘நான் நல்ல நிறமாக இல்லை. எலும்புப் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த உடை போட்டாலும் நன்றாக இருக்காது’ என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும் பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடைதான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித்தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:

வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடைபோடலாம்.

நட்பை தேர்வு செய்யுங்கள்:

வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல நட்பும் தான். யாருடன் சிநேகிதம் கெள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள் உடன் பணிப்புரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:

நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.


விலக்க வேண்டியவை:

வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறு இருந்தால் வெற்றி உங்களைச் சேரும். மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.
புகழும் பேச்சில் மயங்காதீர்கள்; 
விமர்சனத்தில் கலங்காமல் இருங்கள்! 
கண்டிப்பாக வெற்றி உங்களை தேடிவரும்...

28 November, 2012

என்னுடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்புமா..?



லைக்கணம் கொண்டோரெல்லாம்
தரணியில் நிலையாது

அழிந்துத்தான் போகவேண்டும்
“ஒரு தீக்குச்சியைப்போல...”

சித்த வயிற்றுக்கு ஈயாமல்
பதுக்கப்பட்ட செல்வங்கள் யாவும்
கொள்ளைத்தான் போகும்
“ஒரு தேன் கூடு போல...”


லகின் ஒவ்வொறு நொடியிலும்
வாழ்க்கையை ரசித்து வாழாத யாவரும்
சிதைந்துத்தான் போக வேண்டும்
“ஒரு நீர்குமிழி போல...”
 

ன் மனமென்ற தோட்டத்தில்
சுயநல விதையை விதைத்தோரெல்லாம்
கலைந்து தான் போகவேண்டும்
“ஒரு வெண்மேகம் போல...”


பிறருக்கு தீதென்று அறிந்தும்
கூடாத ஒரு செயலை செய்வோரெல்லாம்
நாளை பொசுங்கித்தான் போக வேண்டும்
“ஒரு விட்டில்பூச்சி போல...”


னிதத்தில் இருந்து தெய்வத்திற்கு

மாறவேண்டிய பரபரப்பெல்லாம் ‌வேண்டாம்
மனித குணத்தோடு வாழ்வோம்....
“ஒன்றும் அறியாத ஒரு குழந்தை போல...”



07 August, 2012

இது இல்லாமல் மனிதனா...? வாழ்வது வீண்தானே...!



மூடிவைத்த உள்ளங்களில்
புதிய புதிய சிந்தனைகள்
முளைக்க மறுக்கும்...

காய்ச்சிய இரும்பில் தானே
பாயும் அம்பின் கூர்மையை
அறிய முடிகிறது...!

டிவரும் காற்றினத்தை
திசைத்திருப்புங்கள்
உலர்ந்துப்போன மூங்கில் கூட
ராகம் இசைக்கும்...!

நாம் என்று முயல்கிறோமோ 

அன்றைய நாளில் தான்
சகதியாய் இருக்கும் நம் மனதில்
செந்தாமரைகள் முளைக்கும்..!

வீழ்கின்றபோதெல்லாம்
எழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!

ழைப்பின்றி ஓய்வெடுத்தால்
நாம் சிதைய வேண்டியிருக்கும்..

புதியதாய் வியர்வைகள் மலரும்போது
இதயத்தை ஊடுருவும் குருதியின் வாசனையை
நம் நாசி உணரும்...

வறில்லா உறுதியோடு 
ஒவ்வொறு நாளும் உழைப்போம்
நாளை வெற்றியின் மகுடங்கள்
நம் தலையை அழகுப்படுத்தும்...

பூமியில் நாம் சிந்திய வியர்வை
கண்டிப்பாக ஒருநாள் முளைத்து எழும்...
 
துவரை முடியாமல் தொடரட்டும்
நம் உழைப்பு பயணம்....




(1996 ம் ஆண்டு +2  படிக்கும்போது நடந்த கவிதைப்போட்டியில்
உழைப்பு என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை...
நீண்ட நாட்களுக்குபிறகு... அடிமாறாமல்...)


Related Posts Plugin for WordPress, Blogger...