கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label Tamil Kavithai. Show all posts
Showing posts with label Tamil Kavithai. Show all posts

26 March, 2018

நிசப்தங்களற்ற மௌனங்கள்....


அலமாரி முழுவதும்
நிரம்பி வழிந்தது
கவிதை புத்தகங்கள்....

மனமோ கனகனத்தது
அடிவயிற்றில் 
இருவேளை பசி...

தூரத்தில் தெரிந்தது
சந்திரோதயம்....

நீரின்றி
வாடிக்கொண்டிருந்தது
அல்லி மலர்...

காலையில் 
உயிர்களை கொல்வது 
பாவம் என்றான்...

மாலையில் 
தூண்டிலுடன்
அஹிம்சைவாதி...

கேட்போருக்கு சொல்கிறேன்
சமுத்திரத்தின் ஆழம் 
இவன் சோகம்...

வானத்தின் அகலம் 
இவன் துயரம்...

இயற்கையே....

உறவுகளை 
மரணிக்கச்சொல்
உணர்வுகளை வேண்டாம்...

வறுமையை 
மரணிக்கச்சொல்
வயிறுகளை வேண்டாம்...

காலமே....
எங்களை மன்னித்து விடு
நாங்கள் மனிதர்கள் அல்ல
மண் பொம்மைகள்...

பூமியின் சுழற்சியை 
புரிந்துக் கொள்ள
முடியவில்லை..

வாழ்க்கையே... 
நீ எதில் உயிர்வாழ்கிறாய்
விடியலிலா....
அஸ்தமனத்திலா...

உலகம் 
இவ்வளவுதான் 

நிலவே 
நீ பூமிக்கு 
ஒளி கொடுக்கிறாய்....

பூமியோ 
உனக்கு இருள் கொடுக்கிறது...

பகைமையை 
மறந்துவிடு முற்செடியே
உன்னை அலங்கரிக்கவே
காத்திருக்கிறது  ரோஜா...

உலகம் 
மனிதர்களால்
நிறைந்திருக்கிறது...

மனிதர்கள்
சப்தங்களால் 
நிறைந்திருக்கிறார்கள்....

அதனால்தான்
யாருக்கும் கேட்பதில்லை...
என் மௌனங்கள்....


★★★★★★★★

வறுமை கால
 நினைவுகளோடு....

கவிதை வீதி சௌந்தர்...
(2002 டைரியிலிருந்து....)

12 March, 2018

இப்படியும் ஒரு இம்சை





தோற்கும்போதெல்லாம்
தோழனாய் தோளில்
தட்டிக்கொடுத்துக்கொண்டும்...!


நிமிரும் போதெல்லாம்
எதிரியாய் தடைக்கல்லோடு
தள்ளிவிட்டுக்கொண்டும்...!


தேடும் போதெல்லாம்
கண்ணுக்கெட்டாத தூரத்தி
ஒளிந்துக்கொண்டும்...!


விரட்டும்போதெல்லாம்
போகால் நிழல்போல்
ஒட்டிக்கொண்டும்..!


வாழ்க்கை பயணத்தின்
பள்ளமேடுகளை சமன்படுத்தி 
உடன் நடந்துவரும் முரண்...!

காதல்...! 

****************************************



ன்னை 
காக்கவைத்துவிட்டு
சந்திக்க முடியாமல் தவறும்
தருணங்களில்...


நீ வருவதாய் சொல்லி
முடியாமல் போன 
நிமிடங்களில்... 


இருவரிடத்திலும் 
வாடிப்போய் விடுகிறது
காதல்...!

****************************************



மீன் முள்ளாய்
தொண்டையில் 
சிக்கினாலும்...


தூசி துகளாய்
கண்களில் 
உறுத்தினாலும்....


நெருஞ்சி பழமாய்
பாதங்களை 
பதம்பார்த்தாலும்....


முன்னறிவிப்பின்றி
மூளையில் 
முகாமிட்டாலும்....


இதயச்சிறைகளில்
இறங்கிக்கொண்டு 
இம்சித்தாலும்....


என்றென்றும் 
காதல் ‌
அழகிய இம்சைதான்..!

****************************************

வருகைக்கும்.... வாசித்தமைக்கும்...
நன்றி..!


11 July, 2016

பகல் கனவு பலிக்காதா..?




உற்சாகமாய்
உன்னை வரைந்து 
முடித்தப்பின்பு...

உயிரோட்டமாய் சிரித்த
உன் அழகைப்பார்த்து...

வெட்கப்பட்டு 
சிரித்துக்கொண்டன
அத்தனை தூரிகைகளும்...!

************************************


என்னவளை கட்டியணைத்து
முத்தமிடுவதுபோல்
கனவு வந்ததென கூறினேன்
நண்பர்களிடம்...

பகல் கனவெல்லாம்
பலிக்காது என்று 
கேலிப்பேசினார்கள்...!

உன்மைதான் 
பகலில் எப்படி
நிலவை 
முத்தமிடமுடியும்...!

************************************

வார்த்தைகளை கொண்டு
நான் எழுதி வைத்த
அத்தனை கவிதைகளையும்...

எனக்கு பிடிக்கவில்லை என்று
நிராகரித்து விட்டுப் போகிறாய்...

தற்போது
குழம்பிக்கொண்டிருக்கிறேன்....

சொற்களை தவிர்த்து
பூக்களை வைத்து
எப்படி கவிதை எழுதுவது
என்று...
******************************


இளையராஜா ஓவியங்களும்...
எனது முகநூல் பதிவுகளும்....!

15 February, 2016

இது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...!



அப்புறம் என்ன சாப்பிட்ட
இன்னைக்கும் அதே தயிர்சாதம் தானா....?

உங்க வீட்டுல பூச்சொடிகளுக்கு
தண்ணி ஊத்தியாச்சா...?

டிவி-ல நேத்து போட்ட புதுப்படம்
செம மொக்க இல்ல...?

நீ டைரியில வச்ச மயிலிறகு
குட்டிப்போட்டுச்சா...?


இப்ப இருக்கிற மாணவர்கள்
சின்ன வயசிலே கெட்டுப்போதுங்கல்ல...?


உங்க அப்பா அந்த கொடுவா மீசைக்கு
என்ன உரம்‌ போறாரு...?

ஆமா... இப்பவர தேர்தல்ல
நீ யாருக்கு ஓட்டுப்போடபோற..?


இப்பெல்லாம் ‌பேப்பர்ல வரும்
செய்திகளை பார்த்தா கோவமா வருதுல்ல...?


விஜய் தெறி படம் வந்தா
முதல் நாள் காட்சி பார்க்கலாமா...?


கவிதை தொகுப்பு ஒன்னு கொடுத்தேனே
படிச்சி முடிச்சிட்டியா...?


இப்படியாய் 
அவளிடத்தில்
 சம்மந்தமின்றி உளறினேன்...

காதலை சொல்ல நினைத்து

இதயம் படபடத்த தைரியமற்ற 
அந்த நிமிடங்களில்....!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

24 January, 2016

இப்படியாய் சில அனுபவங்கள்...!


வான் எழுதும் 
தண்ணீர் கவிதை மழை...

அவைகளை தன் இலைகளில் சுமந்து
நிதானமாய் வாசித்து வழியனுப்பி
மண்ணையும் மகிழ்விக்கும் 
மரங்கள்...!

நாமும் மரம்போலாவோம்
வாழ்வை மகிழ்வோடு எதிர்கொண்டு...

மகிழ்ச்சியை மற்றவரோடும்
பகிர்வோம்...!



ஆரவாரமாய் மழைப்பெய்து அடங்கியது
முகில் ஒழிந்து வானம் தெரிந்தது...

எல்லாம் ஓய்ந்தப்பின்
மறுநாள் சத்தமின்றி
எட்டிப்பார்த்தது காளான்...

பிரச்சனைகளை அப்போதே
நேருக்கு நோராய் சந்தியுங்கள்....
முடிந்தபிறகு எதற்கு 
தீர்வுகள்..!



சேற்றில் வேர்பதித்து
நீர்கிழித்து வெளியில் வந்தது 
தாமரை...

தடம் பதித்த தடாகத்தை
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தன 
இலைகள்..!

வளர்த்தவர்களிடத்தில்
ஏன் வேறுபாடுகள்...

ஒன்றியே வாழ்வோம்..!



வேற்றினத்து முட்‌டைகளை
அடைக்காத்து பொறிக்கும் 
அற்புதங்கள்..

கிடைத்ததை பகிர்ந்துண்ணும்
பெருங்குணம் கொண்டவை 
காக்கைகள்..!


இயன்ற‌வரை உதவிடுவோம்
இயலாதவர்களுக்கு...

வாழ்க்கை என்பது 
ஒருமுறைதானே..!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

01 October, 2015

மூத்தவர்களை ஒதுக்கி வைப்பதா...?



அணுவணுவாய் 
அனுபவித்து எழுதிவைத்த
திறந்தவெளி  பல்கலைக்கழகங்கள்...!

வாழ்வியல் 

நிஜங்களை எடுத்துரைக்கும்
வாழ்க்கை சக்கரத்தின் ஆதாரங்கள்...

அனைத்தும் 

அறிந்தும்... தெரிந்தும்...
அமைதி காக்கும் ஆலயங்கள்...!

பாரங்களை 

சுமக்க பழகிக்கொண்டு
பரிதவிக்கும் பழுத்த மரங்கள்..!

விழுதுகளுக்கு 

வேர்பிடிக்க வழிவிட்டு
ஒதுங்கிக்கொள்ளும் ஆணிவேர்கள்..!

மகரந்தங்களை 

பூமியெங்கும் தூவிவிட்டு
வாடிப்போய்கிடக்கும் வாடாமலர்கள்...!


நினைவலைகளை
அசைப்போட்டு அசைப்போட்டு

ஆதரவற்றுக்கிடக்கும் சுமைதாங்கிகள்...!

இவர்களின் 
சுறுக்கங்கள் காட்டும்
வாழ்க்கையில் கடந்துவந்த பாதைகளை...!


இவர்களின் 
நரைகள் சொல்லும்
ஏறிவந்த கரைகளின் சுவடுகளை...!


காலக்கடலில் 
முத்தெடுத்த ரகசியம் பற்றி
முதுமைச் சொல்லும் ஆயிரம் கதைகள்...!

முதியோர்களை
ஒதுக்கிவிட்டு நடக்கும் சமூகம்
ஒருபோதும் முன்னேறி விடாது..!

இவர்கள்...!
முதுமை என்கிற பெயரில்
நடமாடும் அதிசயங்கள்...


முதுமைக்கு மதிப்பளிப்போம்
முதுமைகளை ஆதரிப்போம்...
!

 


உலக முதியோர் தினம் (அக்-1)
International Day of Older Persons


வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

28 October, 2013

நீங்களே பாருங்கள் இந்த காதல் எப்படியாகிவிட்டது என்று...!



மூளை முதிராத 
என் இளமைக் காலங்களில்
உனக்கு கடிதம் எழுதினால்
என்ன புத்தகம் எழுகிறாயா
என்று கிண்டலடிப்பார்கள்....

 கிண்டல்களை குறைப்பதற்காக
குறைத்துக்கொண்டேன் பக்கங்களை..
அதை என்ன கட்டுரையா 

என்று கலாய்த்தார்கள்...

குறையாத காதலை வைத்துக்கொண்டு
குறைக்கவேண்டியதாயிற்று

உனக்கும் எனக்குமான காதலை
ஒரு இன்லேண்ட் கடிதத்திற்குள்...!


தற்போது அதற்கும் வழியில்லாமல்
அறைகுறை ஆங்கிலத்தில்

குறுஞ்செய்தியாக நம் காதலை
கைபேசியில் படிக்கவைத்துவிட்டது காலம்...

காதலுக்குள் நெருக்கம் நேர்கையில்
இருவருக்குள் பாறிமாறிக்கொள்ளும் 

காதல் வார்த்தைகளுக்கும் 
சுருக்கம் வந்துவிடும்போல...

என் அன்பே... 
வார்த்தைக் குறைப்பால் 
நம் காதல் குறைந்துவிட்டது 
என்று எண்ணிவிடாதே.....
 

கடுகு சிறுத்தாலும்
கொஞ்சமும் குறையாது காரம்...

சுண்ட காய்ச்சியப்பால் 
எப்போதும் சுகம்தானே...!
 
காதல் நீளும்... கவிதைகளில்.....

21 October, 2013

உலகை பயமுறுத்தும் ஒரே பறவை...!



சிறகு முளைத்ததும் 
தாய் பறவைக்குத் தெரியாமல்
கூண்டை விட்டு பறக்கும்
இளம்பறவைப்போல்...

எப்போது வேண்டுமானாலும் 
சிறகு முளைத்துவிடும்
நமக்கே தெரியாமல் நமக்குள் இருக்கும்
நம் உயிர் பறவைக்கு...

ஆதி எது அந்தம் எது அறியவில்லை
இந்த உலகில் பிறந்த யாரும்
வந்தது தெரியும் போவது எங்கே
புரியாத புதிர்தானே இதுவரையில்...

 மாற்றங்களே மாற்றிவிடுகிறது
மனிதர்களின் உருவங்களை
எப்போது மாறாமல் வாழ்கிறது
உடலில் ஒட்டியிருக்கும் ஜீவன்....

பயமும் பக்தியும் இருப்பதற்கு
காரணம் ஏன்னவென்றுத் தெரியுமா
அவைகள்தான் உள்ளிருக்கும் உயிரை
வதைக்காமல் காக்கும் கேடயங்கள்...!

உயிர் பறக்கும் என்ற பயத்தில் தான்
நிற்காமல் ஓடுகிறது இந்த உலகம்
உயிருக்கு பாதகம் இல்லை என்றால்
என்னவாகும் எண்ணிப்பாருங்கள்...

மணிக்கும் நெடிக்கும் பயந்து ஓடி
காலத்தை கடக்கையில்
நிறமாறிப்போகிறோம் நாம்
நீர்க்காமல் உயிர்வாழ்கிறது உயிர்...!

வாழ்க்கையை வாழாதவர்களுக்கு
மரணம் என்பது வேதனை....!
வாழ்க்கையில் பக்குவப்பட்டவனுக்கு
மரணம் என்பது விடுதலை...!



தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

15 October, 2013

நீங்கள் இதை வீட்டில் சொல்லும் தைரியம் உண்டா..?


ண் குழந்தை ஒன்று...
‌அடுத்து பெண் குழந்தை ஒன்று...
போதும் என்று முடிவெடுத்தாகிவிட்டது..!


நம் குழந்தைகளுக்கு
தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்

பலமுறை பரிசீலித்து தேர்வுசெய்துவிட்டோம்..!

ஒவ்வொறு பிள்ளையும்
எதிர்காலத்தில் என்னவாகவேண்டும்
கற்பனை குதிரையை பறக்கவிட்டுள்ளோம்...!


நம் உருவங்களை வடித்தெடுத்து
வளர்ந்துவிட்ட குழந்தைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு மகிழ்ந்திருக்கிறோம்..!


பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து
பேரன் பேத்தியை கொஞ்சிக்கொண்டிருக்கிறோம்
தாத்தா பாட்டியாகிவிட்ட நீயும் நானும்...!


இப்படியாய் சென்றுக்கொண்டிருந்த
கனவுகளை கொஞ்சம் நிறுத்திவிட்டு

மௌனத்தால் பேசிக்கொள்கிறோம்..!
 

எப்போதுதான் சொல்லப்போகிறேமோ...!
என் வீட்டிலும் உன் வீட்டிலும்

நம் காதலை...!

ரசித்த அனைவருக்கும் நன்றி....!

25 September, 2013

அனைத்தையும் துறப்போம் வா...!


வா.. நண்பனே...
ஒற்றுமைக்கான ஒப்பந்தத்தை
பரிசீலனை செய்வோம்...
 
நெருப்‌பை கக்கும் சூரியனைக்கும்
பொருப்போடு சுற்றிவரும் பூமிக்கும்
இடையில் வாழும்
நீயும் நானும் எத்தனை வேற்றுமைகளோடு...

நமக்குள் ஏன் வெறுப்பு...
உறவாடி களியாமல் ஏன்இந்த பகை
நீயும் நானும் சகோதரன் என்றால்..?

இதை அறிந்தோமா?
தாய்பூமி சுமந்த அமைதி கர்ப்பம்
கலைந்துக்கொண்டிருப்பதை...

நம் அனைவரும் சகோதரர்கள்...
நம்மை சுற்றிய அனைவரும் சகோதரிகள்...
நாட்டை எரிக்கும் நெருப்பிலா
நாம் குளிர்காய்வது...?

சாதிக்கென்றும்....
மதத்துக்கென்றும்...
மொழிக்கென்றும்...
இன்னும் எப்படி‌எப்படியோ
மாறிவிட்டது நம் முகங்கள்..?

செத்துக்கொண்டிருக்கும் மனிதநேயத்துக்காக
உன் இயலாமையின் தடுமாற்றமும்
என் எதிர்பார்ப்பும் என்ன..?

என்னையும் உன்னையும்
குறிவைத்து தாக்கிக்கொண்டிருக்கிறது
இந்த ஜாதியும் மதமும்..!

பொறுத்தது போதும்... 
இனியும் எதற்கு வேறுபாடு
வா..! நீயும் நானும் வேற்றுமை துறப்போம்.. 
“தூங்காத விழிகளோடு..” 
என்ற என் கவிதை நூலிலிருந்து..!

23 September, 2013

என்னை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்..?



நீ அதிகாலையில் போட்ட கோலத்தில்
பூக்களாய் பூக்கிறேன் நான்...

குடம் சுமக்கும் இடையில் சிக்கி
உன் பாரங்களை சுமக்கிறேன் நான்...

புத்தகங்கள் சுமந்து நீ கல்லூரி செல்கையில்
படிக்கும்ஆசையோடு பயணிக்கிறது மனசு...

நீ வேண்டுதலுக்காய் ஆலயம் செல்கையில்
திருநீர் பூசி பக்தனாய் பின்தொடர்கிறேன் நான்...

உன் மாலைநேர வருகைக்காக பூங்காவில் காத்திருப்பது
புல்வெளியும் பூக்களோடும் சேர்ந்து நானும்...

நீ விரும்பி வாங்கிய வண்ணங்களைதான்
கொண்டாடிக்கொண்டிருக்கிறேன் நான்..

உனக்கு பிடித்த உணவுகளைத்தான்
என் விருப்ப பட்டியலில் பதிவேற்றியிருக்கிறேன்...

தூங்கநினைத்து  இமைகளை மூடும் நிமிடங்களில் இருந்து
என் கனவுகளை ஆக்கிரமிப்பது நீதான்

இப்படியாய்...!
காலை முதல் இரவு வரை 
உன்னோடே பயணிக்கிறேன் நான்
இதை எப்போது உணரப்போகிறாயோ நீ...!


18 September, 2013

என் பேர் பிரம்மன்..!


சூரியனின் வெப்பத்தில் தேகம் சுருங்கும்..
நிலவின் வெளிச்சத்தில் தாகம் பெருகும்..
விண்மீன் ஆரவாரத்தில் கைகோர்பேன்..
மழையின் சில்லீரத்தில் மெய்நனைப்பேன்..

பனியின் துளிப்பட்டு 
என் பாதம் நடுங்கும்...!
வானவில் நிறம் பார்த்து 
என் ஆத்மா அடங்கும்...!

வைகரை மேகங்களை 
என் வானம் சுமக்கும்...!
சூரியக்கதிர் சொல்லெடுத்து 
என் கவிதை மணக்கும்...!

நான் கவிஞன்

அதை
வானம் முன்மொழிகிறது...
மேகம் வழி மொழிகிறது...
செம்பருத்திச் சிகப்பிலே சிவந்துப்போவேன்...
செவ்வந்தி முகப்பிலே செம்மையாவேன்...
புல்வெளிக் காட்டில் முகம்புதைப்பேன்...
வயல்வெளி ‌மேட்டில் அகம் குளிர்வேன்...

வண்ணத்துப்பூச்சி வண்ணம்கண்டு
என் ஞானம் மறப்பேன்...!
சிட்டுக்குருவி சிறகில் ஏறி
என் வானம் அளப்பேன்...!

மல்லிகை இதழ் விரிக்கும்
நான் குடை விரிப்பேன்...!
மாலை கருக்கையில்
என் சோகம் எரிப்பேன்...!

நான் கவிஞன்

அதை..
 மலர்கள் முன் மொழிகிறது...
மொட்டுக்கள் வழி மொழிகிறது...


 

வானம்பாடி பறவைகளோடு ஓடிப்போவேன்....
கானம்பாடி குயில்களோடு கூடிப்போவேன்...
காக்கைக் கருப்புகளோடு கரைந்துப்போவேன்...
கானகத்து மயிலோடு காலம் கழிப்பேன்...

மைனாக்களின் சிணுங்கள்கண்டு
என் சினங்கள் ஆறும்...!
புறாக்களின் முனகல் கேட்டு
என் ரணங்கள் மாறும்...!

பஞ்சவர்ணப் பறவைக்கு
நான் பாடம் நடத்துவேன்...!
நெருப்புக்கோழி வெப்பம் தணிய
நான் பாட்டுச் சொல்லுவேன்...!

நான் கவிஞன்

அதை
மீன்கொத்தி முன்மொழிகிறது...
மரம்கொத்தி வழிமொழிகிறது...




ஆற்றில் நீந்தியாடி அயிரைப் பிடிப்பேன்...
குளத்தில் குதித்துஆடி தாமரைப்பறிப்பேன்...
ஏரியில் இறங்கிப்போய் அல்லி முகர்வேன்...
கிணற்று தவளையொன்றுக்கு சுதந்திரம் கொடுப்பேன்...

ஓடைகள்தான் காவியமென்று
என் கற்பனை மூழ்கும்...!
தண்ணீர்தான் உலகமென்று
என் ஜீவன் மிதக்கும்...!

அலைகளோடு மோதி
நான் சக்தி பெருவேன்...!
மழைகளோடு வீழ்ந்து
நான் முக்தி பெருவேன்...!

நான் கவிஞன்..

அதை
தூறல் முன்மொழிகிறது...
சாரல் வ‌ழிமொழிகிறது...

வீசுகின்றபுயலில் கவிதைக்கு காற்றெடுப்பேன்...
பொங்கும் எரிமலையில் கவிதைக்கு கனலெடுப்பேன்...
பனித்துளியின் குளிரில் கவிதைக்கு சுகமெடுப்பேன்...
விரிந்திருக்கும் அண்டத்தில் கவிதைக்கு கருவெடுப்பேன்..

தீயாய் சுட்டுவிடும்
என் கவிதை மருந்தாகவும் இருக்கும்...!
நோயாய் தொட்டுவிடும்
என் கவிதை தாயாகவும் இருக்கும்...!

தனிமை எனக்கில்லை
நான் கவிதைக் கூட்டத்தில்...!
மரணம் எனக்கில்லை
நான் கவிதை முற்றத்தில்...!

நான் கவிஞன்...
இல்லை இல்லை நான் பிரம்மன்..

ஏன்னென்றால்
என்னாலும் உயிர்கொடுக்கமுடியும்
கற்பனைக்கும்.. கவிதைக்கும்..
நாளை காலத்திற்கும்...
ஆம்.. நான் கவிஞன்... 

வாசித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல.. பல...!

(என்னுடைய... “என் பேர் பிரம்மன்” என்ற கவிதை நூலிலிருந்து...!)

10 September, 2013

ஒருபோதும் உடன்பாடில்லை எனக்கு...!



 ஒவ்வொறு சந்திப்பிலும் 
முழுதாய் பேசிவிட முடியவில்லை
நினைத்த அத்தனையையும்...!

ஒவ்வொறு கடிதத்தையும்
எழுதி முடிக்கும்போது மிச்சம் இருக்கிறது 
சொல்லவந்த வார்த்தைகள்...!

ஒவ்வொறு விடியலிலும்
என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய்
இன்னும் முடியாத கனவுகளில்...!

இதயம் சென்றுவிட்டு திரும்பும்
என் அத்தனை அணுக்களும்
உன்னைப்பற்றிய நினைவோடே திரும்புகிறது...!

இன்னும் எவ்வளவு முயன்றும் 
என்னால் தவிர்க்க முடிவில்லை
என் கவிதைகளில் உன் ஆக்கிரமிப்பை...!

காதலை சொல்லி விடுதலை கொடு...!
நான் நானாக இருந்துக்கொண்டு
நீயாக அலைவதில் உடன்பாடில்லை எனக்கு...!


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

30 August, 2013

இதைக்கூட அறியாமல் பெண்களா...? என் அனுபவம் பேசுகிறது...!



நான் அறிவேன் 
என் எழுத்தின் பிறப்பும்.. ஆயுளும்...

நான் அறிவேன் 
என் எழுத்தின் நிர்வாணமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வியப்பும்... வேதனையும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் உயர்வும்.... தாழ்வும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின் அரவணைப்பும்... எதிப்பும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வீரியமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  புகழ்ச்சியும்..  இகழ்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  அமைதியும்.. ஆர்ப்பரிப்பும்...


ஆனால் என் உயிரே....
இதை நீ அறிவாயா..?


நீதான் என் எழுத்தின்
உயிரும்... இயக்கமுமென்று...!


26 August, 2013

இப்படியிருப்பின் எப்படித்தான் முடிவெடுக்க...


சில நேரங்களில் இப்படித்தான்
அவள் சிந்திவிட்டு போகும்
சிரிப்புபொளிகளை ‌சேகரித்து
அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

தில் காதல் இருக்கிறதா
இல்லையா என்ற குழப்பத்தோடே
கலைந்து விடுகிறது அவைகள்...

நாம் கா‌தலை சொல்லி
அவளின் உதட்டோரத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்
உதிர்ந்து விடுமோ என்ற தயக்கத்தோடே
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது விநாடிகள்...

வீடும் நாடும்
காவியமும் ஓவியமும்
காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...

சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
என் உயிர் அணுக்கள்...

டிதம் கொடுக்க
கிழிந்த சாலைகளுக்கிடையே கடக்கும்
அ‌வளை எதிர்நோக்கும் போது
பூனையின் குறுக்கீடலால்
வீடு திரும்பி நாளை கொடுக்கலாம்
என்று தன்னோடே வைத்துக் கொள்கிறேன்...

ப்போது தரலாம் என்று
சரிவராத முடிவை யோசிக்கையில்
பல்லியின் சப்தத்தால் அதுவும் ஸ்தம்பித்தது..

ப்படியாக 
என் காதலுக்கு தடங்கலாய் இருக்க
காலையில் இன்னொன்றாய்
பக்கத்து வீட்டுக்காரனின் 
காதல் தோல்வி மரணமும்...
 நான் எப்படித்தான் முடிவெடுக்க....


மீள் பதிவு

22 August, 2013

எச்சரிக்கை..! இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...!



அவரோடு 
பேசினால்
இவருக்கு 
பிடிக்கவில்லை...

இவரோடு 

பேசினால்
அவருக்கு 

பிடிக்கவில்லை..

இந்த 
இருவரோடும் 
பேசுவது
அடுத்தவருக்கு பிடிக்கவில்லை...


என்னசெய்வது...?

ஒவ்‌வோரிடமும் 
பேசிவிட்டு 
பேசாதவன்‌போல் 
நடித்துக்கொண்டு 
இருப்பதால்

இப்போதெல்லாம்
என்னையே 
பிடிக்கவில்லை 
எனக்கு..!


13 August, 2013

இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்திருக்கிறதா?




நண்பரோடு பேசிக்கொண்டே நடக்கையில்
எதிர்படுகிறது ஒரு தேனீர் கடை...!

தேநீர் அருந்தும் நோக்கோடு
பார்த்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்...!

உண்மையில் அப்போது
என் பையில் பணமில்லை...

நண்பரிடம் சொல்லி பிரிகிறேன்
எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம்
இல்லையென்று...!

எனக்கும் பழக்கும் இல்லை என்று
பிரிகிறார் நண்பர்...

ஒருவேளை அவரிடமும்
இதே நிலையோ...!

எப்போதும்...
பணம் இல்லாத வாழ்க்கை
சங்கடத்துடனே நகர்கிறது...!

12 August, 2013

அட.. இந்த பெண்களே இப்படித்தானா?




இருக்கும் கருமையை விலக்க விரும்பி
எத்தனை முயச்சிகள் இங்கு...

வெட்கப்பட்டால் சிவக்கும் கன்னத்துக்கு
வெட்கமில்லாமல் எதையோ பூசுகிறாய்...

மெய்பூச  வேண்டிய உதடுகளுக்கு ஏன்
பொய் பூசிக்கொண்டிருக்கிறாய்...

சிரிக்கும் பூக்களை சிதறவிட்டுவிட்டு
அப்படி என்ன சிநேகம் உனக்கு செயற்கைகளோடு...

ம்...
இன்னும் எத்தனை  எத்தனை முயற்சி
உலகிற்கு பொய்முகம் காட்ட...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

05 August, 2013

இப்போது பெயரில் என்ன இருக்கிறது...! /// 700 -வது பதிவு



பொய் சொல்வதையே 
பிழைப்பாக கொண்டிருந்தார்
அடுத்ததெரு அரிச்சந்திரன்....


வசரம் என்று உதவிகேட்டால்
தவறாமல் செய்கிறார் பத்துவட்டிக்கு
எங்க ஊர் காந்தி...!


டுத்தவன் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு 

அத்தனையையும் எனக்கே என்கிறார்
கடைசி தெரு புத்தன்...!


ன்வீட்டு விளக்கொளி

அடுத்தவர் வீட்டில் விழுகிறது என்பதற்காக
விளக்கை அணைத்தார் பக்கத்துவீட்டு பாரி...


ருக்கென்றால் உபதேசித்து
தனக்கென்று வந்தபோது கருவருத்தார்
கலியுகக் கண்ணன்...

 ற்போது பெயரில் ஒன்றும் இருப்பதில்லை
அழைக்கவும்... 

அடையாளம் சொல்லவும் தவிர...


கவிதைவீதியின்  -வது பதிவு....

ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி..!

29 July, 2013

இது எல்லாமே வேஷம் தானே...!



ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டு
அழுகிற உலகம்...!


முழதாய் ஒப்பனைசெய்துக்கொண்டு
சிரிக்கும் உதடுகள்...!


நன்றாக வாழ்கிறவனைக்கண்டு
எரிகிற வயிறுகள்...!


நாணயத்தை பார்த்தால் மட்டும்
நீளுகிற நட்பு...!


வலியுள்ளவனை காலில் விழவைக்கும்
நாகரீக கலாச்சாரம்....!


எவ்வளவு தேடிப்பார்த்தும்
கிடைக்கவில்லை நிஜங்கள்...!


வாழ்க்கை ‌மேடையில் அரங்கேறுகிறது
வேஷம் கட்டிய நாடகங்கள்...!


Related Posts Plugin for WordPress, Blogger...