கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

28 August, 2018

இப்படி செய்யலாமா பெண்களே...


 
வசர அவசரமாக ஓடி
ஒதுங்கி நின்றேன்
அடை மழையை
பார்த்தவுடன்...!


நின்று..
நிதானமாக...
நனைந்து...
நீர் சொட்டச் சொட்ட
பொறுமையாக
வந்தடைந்தது...

என்
பால்ய மனசு...!

*************************


ப்தமின்றி 
உடைப்படும்
ஒரு நீர்குமிழிபோல்....

என் 
கனவுகளில்
கல் எறிந்துவிட்டுப் 
போகிறாய்....

அர்த்தமற்றதாகி விட்டது
என் அத்தனை 
இரவுகளும்...!

******************************


ந்திக்கும் தருவாயில்
அவளிடம்
இப்படியாய்
பேசவேண்டும் என...

மேறுகேற்றி 
வைந்திருந்த
அத்தனை
வார்த்தைகளும்....

மனசெனும்
பெருவெயியில்
சிக்கி சிதைந்து
போகிறது...

பேசாமல்
திரும்பிய
சந்திப்புகளின் முடிவில்...!

***************************
பேசும் படம்....

வாசித்தமைக்கு மிக்க நன்றி..! 


14 August, 2018

இந்த ஆசை யாருக்கெல்லாம் இருக்கிறது..!






கோடி 
பட்டாம்பூச்சிகள்
பறந்து வருவதை போல்
இருக்கும்..

என் 
மூன்று வயது
குட்டி தேவதை 
நடந்துவருவது...!


தத்திவந்து
என்னை 
தவழுகையில்...

குற்றால
சாரலின் சுகம்
அத்தனையும்
என்னை சுற்றி கிடக்கும்...!


சுண்டு விரல்
என் தேகம்
தொடுகையில்...

அமைதிக்கடலை
தாலாட்டும்
தென்றல் போல்
இருக்கும்...!


என்னை 
கட்டியணைத்து
முத்தமிட்டால்...

எனை ஒட்டிக்கொள்ளும்
துருவப்பகுதியின்
அத்தனை 
குளிரும்...!


எங்கள்
இருவருக்கான
புரிதல் என்பது....

இரண்டு
அன்னப்பறவைகள்
மௌனத்தால்
பேசிகொள்வதுபோல்...


இறுதியாய்....

மெல்லிய 
தென்றல் வந்து
படர்கையில்...

காம்பிடம் 
சொல்லாமலே
விடைப்பெற்றுப் 
கொள்ளுமே
பூக்கள்...


அப்படியாகத்தான்
நிகழவேண்டும்
என் 
மரணமும்..!


இது...
யாராவது என்னிடம்
“உன் மரணம் எப்படி நிகழவேண்டும்“ 
என  கேட்டால் 
அதற்கான பதில்...



நன்றிகள்...
வருகைக்கும்... வாசித்தமைக்கு


26 July, 2018

உயிர் பயம் பொதுதானே...!





காலை நேர
பயிற்சிக்காக
நடந்துக்கொண்டிருந்தேன்
சாலையேரம்...


மரச்செடி நட
தோண்டப்பட்டிருந்த
குழிவொன்றை
எட்டிப்பார்த்தேன்
ஏதேச்சையாக...


முன்தினம் பேய்ந்த
கோடைமழை
தேங்கிக்கிடந்தது
கொஞ்சம் குழியினுள்...


அந்த மூன்றடி
குழியினுள்
தவறிவிழுந்து
வட்டத்துக்குள்ளே
வட்டமடித்துக்கொண்டிருந்தது...

ஓரடி 
நீளமுள்ள
குட்டி பாம்பு ஒன்று...


எப்படி 
வெளியேறுவது
என்ற தவிப்பில் 
பாம்பும்...

எப்படி 
விழுந்திருக்கும்
என்ற தர்க்கத்தில் 
நானும்...


பயத்தோடு
அமைதியாய் 
சந்தித்துக்கொண்டது
இருவரது பார்வைகளும்...


அருகில் கிடந்த 
கொம்பெடுத்து 
பாம்பு வெளியேற
சாத்தி வைக்கிறேன்...

தாக்கவரும் 
ஆயுதமென
தலைதெறிக்க 
ஓடுகிறது
வட்டத்திற்குள்ளே..


மேலே வரும்போது
தீண்டிவிடுமோ என்ற பயத்தில்

நகர்கிறேன்
என் வழியை நோக்கி...

 
வெளியில் சென்றால்
என்னாகுமோ
என்று எண்ணி
தொட மறுக்கிறது 
கொம்பின் நுனியை...!


இருவருக்குமான
உயிர்வாழ்தலின்
நீளத்தை

நீட்டிக்க வைக்கிறது
பயம்...!




எல்லா 
உயிர்களுக்கும்
பொதுதானே
உயிர் பயம்....!



( நன்றி...
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...)

19 April, 2018

பயப்பட வச்சிட்டோம்ல...



பாலுக்காகவே
காலம் காலமாய்
கட்டிவைத்து
வஞ்சிக்கிறோம்
மாடுகளை...

அழகெனவே
சூடிக்கொள்ள...
கண்ணீர்  சிந்த
வைத்துவிடுகிறோம்
மலர் செடிகளை...

சாமரம்வீச
சிறகு வேண்டின்
சட்டென
உயிரறுத்து விடுகிறோம்
மயில்களை...

 கருணையின்றி
கல்லெறிந்து
காயப்படுத்துகிறோம்
காய்த்து கொடுக்கும்
கனிமரங்களை....

மகிழ்வென
உடுத்திகொள்வதற்காக
மொத்தமாய்
மாய்ந்துபோகிறது
பட்டுபுழு....

உயிர்கொண்டு
உயிர் கொள்கிறோம்...
மீனெனும் சுவைக்காக
கழுவேற்றுகிறோம்
புழுக்களை....

உள்ளிருக்கும்
ஆதிமனிதனை
இன்றளவும்
அமைதி படுத்துவது
ஆடும்  கோழியும்...

வாழ்வென
விரிவுபடுத்திக்கொள்ள
உயிர் அகற்றி
காயப்படுத்தி விடுகிறோம்
காடுகளை....

பல்லுயிர்
வேற்றுமை பாராது
காரணமின்றியே
அறுக்கிறோம்
உணவு சங்கிலியை

உண்மையில்
இன்றளவும்

நம்மை
சுற்றி வாழவே
பயந்துக் கொண்டுதான்
இருக்கிறது
சுற்றமும்.... சூழலும்....


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

24 March, 2018

கோடையை சமாளிக்கலாம் வாங்க... பகுதி 1


கோடை வருவதற்கு முன்பே வெயில் வறுத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ் இங்கே....


தினமும் உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், மற்றும் புதினா ஆகியவற்றைத் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்...


இளம் வேப்பிலை, துளசி ஆகியவற்றை காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, நீரில் கலந்து குளிக்கலாம். வியர்க்காமல் இருப்பதோடு, சரும வியாதிகளும், கோடை வெயில் கொப்பளங்களும் வராது.


மாதுளம் இலையை அரைத்துப் பூசிக் குளித்தால், சூட்டுக் கட்டிகள்,
உடற் வியர்க்குரு ஆகியன  நீங்கும்.


நா வறட்சி தணிய கொத்தமல்லி, கசகசா இரண்டையும் சிவக்க வறுத்து, அவற்றுடன் பனைவெல்லம், ஏலக்காய்பொடி சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் தாகம் தீர்வதோடு பித்தமும் நீங்கும்.


வெளியே கிளம்பும்போது நெல்லிக்காய் ஒன்றிரண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். நாக்கு உலர்ந்து போகாமல் இருக்கும்.

உச்சி வெயிலில் வெளியே போகும்போது, ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தையோ, அல்லது ரோஜாப்பூவையோ கையில் கொண்டு செல்லவும். மயக்கம் வருவது போல் இருந்தால், முகர்ந்து பார்த்துக் கொள்ளவும்.


ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து மறுநாள் காலை தலைக்குப் பூசிக் குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.


இளம் பச்சை நிற கர்ட்டன்களை வீட்டின் ஜன்னலில் தொங்க விடுவது குளிர்ச்சி தரும்.


உடலின் வியர்வையை வெளியேற்றக்கூடிய பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

மோரை அடிக்கடி குடிப்பதால் வெயிலினால் ஏற்படும் நரம்புத் தளர்ச்சி சரியாகும்...

22 March, 2018

பஸ்ஸில் நடந்த உண்மைச் சம்பவம்



இன்னும் அறிமுகமாகாத
என் சி‌‌‌நேகிதியே...


தற்போதெல்லாம்
நாம் இருவரும் வெவ்வேறு
திசைகளில் பயணிக்கிறோம்
ஒரே பேருந்தில்...


ஏறுவதும்.... இறங்குவதும்...
நீ முன்வழியில்...
நான் பின்வழியில்....


வலபுற ஜன்னலோரத்தில்
அமர்ந்துக்கொண்டு
ஜன்னலுக்கு வெளியே 
சிறகடிக்கிறது உன் மனசு...


நான்... 
இடபுற ஜன்னலில்....


அருகில் அமர்ந்திருப்பது 
யாரென்று அறிந்திலர் 
இருவரும்...


நிறுத்தங்கள் பல கடந்து
நீயும் நானும்
இறங்கும் இடம் வருகிறது....


ஏறியது போலவே 
இறஙகும் ‌போதும்
நீ முன்வழி.. 
நான் பின் வழி...


இது  தான்  வாடிக்கை
பல நாட்களாய்...


ஆனால்...!
ஊரார் மூலம் காற்று வழியில்
‌ஒரு செய்தி வந்துக்‌‌கோண்டிருக்கிறது.....

இருவரும்...
தினமும்....
”ஒன்னாதான் போறாங்களாம்...
”ஒன்னாதான் வாறாங்களாம்....”
என்று...


திருமணமாகாத 
ஏக்கத்தில் நீயும்....

தங்கைகள் திருமணம்..., 
வேலையின்மை
என்ற விரக்தியில் நானும்...
நடை பிணமாய் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...


ஊரார்க்கு என்ன தெரியும்....

பேருந்தில்... 
நாம் அமர்ந்து எழும்
இருக்கைகள் மட்டுமே அறியும் 
நம் மனங்கள் சுமக்கும்
வேதனைகள்.... 

(மீள்)

08 January, 2016

என் வெற்றிக்கான மூலதனம்...!



நான் வெற்றியை
பதிவு செய்யும் போதெல்லாம்
என் சுற்றம்
பொறாமைக் கொள்கிறது...

அவர்களுக்கு தெரியாது
என் வெற்றிக்கு மூலதனம்
அவர்கள் கொடுத்த 
அவமானங்கள் என்று...

********************************

நான் ரசித்த ஜென் கதை...!

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.


பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ‘ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

’எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி. ‘இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

‘நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய். ‘ஆனால், எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’

அமைதியாகச் சொன்னார் பான்கெய். ‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்துவிடுவோம்!’


********************************** 

மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா 
இருக்கிற மாதிரி நடிங்க

கணவன்: ஏன் .. .. ?

மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு 
உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே

**********************************  


மரங்களின்றி உயிரினங்களுக்கு வாழ்வில்லை....
மரங்கள் வளர்ப்போம்....

19 January, 2015

இந்த வாழ்க்கை யாருக்கும் வேண்டாம்


 
கோயிலுக்குச் சென்று
ஏக்கத்தோடு பார்த்துவிட்டு வருகிறேன்...
கடவுளையல்ல...
 
அங்கிருந்த படையலையும்
ஆரத்திதட்டில் இருந்த 
சில்லரைகளையும்...!

*************************************

யாசகம் கேட்டவனிடம்
ஏதும் சொல்லாமல்
அமைதியாய் இருந்துவிட்டு...

தனிமையில் 
புலப்பிக்கொண்டிருக்கிறேன்
என் இயலாமையோடு...!
*************************************

 
 தென்றல் வருடியது...
பட்டாம்பூச்சிகள் 
தொட்டுசென்றது...
கூடவே குயில்களின் கானம்..

ஆனால் தீரவில்லை
பசி....!

*************************************
 
 
ஒவ்வொரு வேளையும்
ஒரு கடவுளின் அவதாரம்
என் வழிப்பாட்டில்....

பசியை மறைக்க
விரதங்களென்று...!
 
*************************************
 
#‎வறுமை_வரிகள்‬

27 September, 2014

மெட்ராஸ் - சினிமா விமர்சனம் / Karthi-in Madras Cinima Review

தான் எடுத்துக்கொண்ட கதையில் வலுவாக இருந்து... நேர்த்தியாக திரைக்கதை அமைத்து... கதைகலத்தோடு ஒன்றிப்போய்.... கதையில் ஹீரோக்கென்று எந்த ஒரு மாற்றமும் செய்யாமல்... ஒரு இயக்குனரின் மனதில் என்ன கதை ஓடுகிறதோ அதை அப்படியே காட்சிப்படுத்தினால் அந்த கதை சினிமாவாக இல்லாமல் எதார்த்தமாக நம் கண்முன்னே காணும் வாழ்க்கைப்போல் ஆகிவிடும்... எடுத்துக்கொண்ட கதையிலிருந்து விலகும்போதுதான் சினிமா சிரிப்புக்குள்ளாகிறது...!

வடச்சென்னை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் இரண்டு அரசியல் கட்சி கோஷ்டிகள் அந்தப்பகுதி சந்திப்பில் இருக்கும் ஒரு சுவரைப்பிடித்து கொண்டு அரசியல் விளம்பரம் எழுதுகிறார்கள்.. இது அடுத்த கோஷ்டிக்கு கோவத்தை ஏற்படுத்த எப்படியாவது அந்த இடத்தை பிடித்து நாம் கட்சி விளம்பரம் எழுதவேண்டும் என்று இவர்கள் பிடிக்க.. எனமாறிமாறி இரண்டு தரப்பிலும் பல ஆண்டுகளாக வெட்டுக்குத்து என்று இருந்து வருகிறது... அது தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த பிரச்சனைத் தொடர்கிறது...

“சுவரில் இருப்பது நம் கட்சியின் விளம்பரம் அல்ல நம்மேல் மக்கள் வைத்திருக்கும் பயம்... இந்த இடத்தைவிட்டுவிட்டால் நம்மேல் இருக்கும் பயம் போய்விடும்“ என சுவற்றையே குறியாகவைத்து செயல்படும் இரண்டு கோஷ்டிகளும் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள்... தற்போது பெருமாள் என்ற கோஷ்டியிடம் இருக்கும் அந்த இடத்தை, மாரி கோஷ்டியினர் கைப்பற்ற நினைக்கிறார்கள் அப்படி அந்த இடத்தை கைப்பற்றினார்களா...? இதில் யார் வெற்றிப்பெற்றது... படித்துவிட்டு வேலைக்குசென்றுவரும் ஒரு கால்பந்து வீரரான காளி எனும் கார்த்தி இந்த பிரச்சனையில் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை, வெட்டு, குத்து, இரத்தத்தோடு கொஞ்சம் காதலையும் கலந்து அழகாக விளக்கியிருக்கும் படம்தான் மெட்ராஸ்...!

குடிசைமாற்று குடியிருப்பில் வசித்துவரும் படித்து வேலைக்கு போகும் விளையாட்டு வீரராக காளி என்ற காதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கார்த்தி... சுவர் பிடிப்பதற்கான பகுதிபிரச்சனையில் நண்பர்களுடன் கைகோர்க்கும்போதும்... இதுவரை திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத விரக்தியில் அந்த பகுதி பெண்ணை நண்பர்கள் கோர்த்துவிட அதன்பின் நாயகியை விரட்டிக் காதலிக்கும்போதும்... நண்பரை கொன்றவர்களை பழித்தீர்க்க கத்திஎடுத்து போராடும் போதும்... சண்டைக்காட்சிகளிலும் தான் ஒரு சாதாரண வடசென்னை பையனாகவே மாறியிருக்கிறார் கார்த்தி...

நான் மகான் இல்லை படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தின விதமாக இப்படத்திலும் அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (சில ஊத்தல்ப் படங்களுக்கு மத்தியில் இப்படம் கார்த்திக்கு ஒரு ஆறுதல்தான்) கதாநாயகி கேத்ரின் இயல்பான நடிப்பில் தன் மனதை கவர்கிறார். காதல் டூயட்டுகள் என ஏதும் இல்லாமல் நாயகியை கதையோடு ஒன்ற வைத்திருக்கிறார்கள்...

வடசென்னை மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் அன்றாட பணிகள், அவர்களின் அரசியல், சண்டைசச்சரவுகள், ஆட்டம், கோவம் போன்றவற்றை, உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் அழகு...

படத்தில் வரும் கதாபாத்திரங்களான பெருமாள், மாரி, ஜானி, அன்பு, அன்புவின் மனைவி, கலையரசி கார்த்தியின் குடும்பத்தினர், ஒரு நடனக்குழு என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு அவ்வளவு பலம். இன்னும் குறிப்பாக ரவுடியாக இருந்து தற்போது பைத்தியம்போல் வரும் ஜானி என்ற பெரியவர் கதாபாத்திரம் கைதட்டவும் வைக்கிறது.. மனதிலும் நிற்க வைக்கிறது.. மேலும் நடனக்குழு இளைஞர்களை பயன்படுத்திய விதமும் அழகு.
இசையும் அழகாக வந்திருக்கிறது.. கான பாலாவின் “இறந்திடவா நீ பிறந்தாய்“ என்ற ஒப்பாரி பாடல் மனதை இழுக்கிறது... இன்னும் சிலப்பாடல்கள் ரசிக்கும்படியிருக்கிறது....

வெட்டுக்குத்து ‌என்றாலும் அருவருப்பாக இல்லாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனரான அட்டகத்தி பா.ரஞ்சித். இரவில் எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு.. இடையில் கொஞ்சம் வேகம் குறையாதுபார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் படம்பேசப்பட்டிருக்கும்.

29 April, 2014

என் அவதாரங்கள்...



என் தலைமுடியை பிடித்து
உன் பச்சைநிற ரிப்பனில்
உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்...

உன் நெற்றி பொட்டு எடுத்து
என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது
என்று குதுகலித்தாய்...

சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க...!
நீயே கற்பனை செய்துகொண்டு
விழுந்து விழுந்து சிரித்தாய்....
 

கொஞ்சுகையில் மீசை வேண்டாம் ‌‌என்று..கிறாய்
கெஞ்சுகையில் அதையே அழகு என்று..

என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்...

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு...
தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு

நெடிக்குகொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..!

வீட்டில் இன்முகம்கூட காட்டாத நான்
ஒரு விகடகவியாகி
சிரிப்பால் உன்னை அழகுபடுத்துகிறேன்...!



இப்படியாய் உன்னை மகிழ்விக்க 
இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுக்கவும் 
நான் தயார்தான்...!

(உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை வாய்க்கவில்லை)

10 April, 2014

நாம் யாவரும் வாய் சொல்லில் மட்டும்தான் வீரரா..?

 
ஒரு சில விஷயங்களை மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று மார்த்தட்டும் தைரியம் நம் மனித குலத்துக்குமட்டுமே உள்ளது... மற்றவர்களின் கவனத்தை கவர... ஒரு இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்த... தன்னுடைய மதிப்பை கூட்ட இப்படி செய்யவேண்டியதாகிவிடுகிறது... சண்டையிட தைரியம் இல்லையென்றாலும் ஒரு வீரன்போல் பேசும் வீரர்கள் நாம்...

பார்க்காததை பார்த்ததாகவும்... செய்யாததை செய்ததாகவும்... தெரியாததை தெரிந்ததாகவும் பாவிக்கிற மனசு நமக்கு எப்படித்தான் வந்துவிடுகிறதோ என்று தெரியவில்லை... இந்த விஷயத்தில் எந்த ஒரு தனிநபரும் யாருக்கும் சலைத்தவர் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.

சிலரின் பிரச்சனையை கேட்கும்போது நானாக இருந்தால் இந்நேரம் அப்படி செய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் என்று விளக்கம்கொ‌டுக்கும் நாம், அதே பிரச்சனை நமக்கு வரும்போது கால்கள் உதர நின்றுக்கொண்டிருப்போம் என்பதுதான் உண்மை....

இந்த உலகம் தகவல்களின் கலஞ்சியம்... ஒவ்வொறு நெடியும் எதையாவது கற்றுக்கொடுக்கூடிய பாடசாலை.. இதில் நாம் கற்பதற்குதான் அதிக கவனம் செலுத்துவதில்லை மாறாக கற்றுக்கொடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்... எல்‌லோரும் கற்றுக்கெர்டுப்பவர்களாக இருந்தால் கற்பதுயார்?
 
நாம் எதையும் முழுமையாக கற்கவில்லை.... நாமக்கு எதுவும் முழுமையாக தெரியாது.... என்று நமக்கு தெரியும் ஆனால் அதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்காமல் அதை தெரியும் என்போதுபோல் பாவனை செய்தால் என்னாகும் என்று விளக்கும் அழகிய ஜென்கதை ஒன்று...!

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
 

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது...

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக்கொண்டு, அடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செய்யும் காரியம்தான் வெற்றியையும் புகழையும் தரும்... வாய்ச்சொல்லில் எதுவும் நடந்துவிடாது.

04 April, 2014

மான் கராத்தே சினிமா விமர்சனம் / Maan karate Tamil movie review


தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்... ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே...!  ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்...

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் திடீரென புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விநியோகஸ்கர் வரை படுகுஷியில் இருக்கவைத்தது... ஆனால்... தற்போது வந்துள்ள மான் கராத்தே படம்.. அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததா என்பது கேள்விகுறிதான்....!


மிகப்பெரிய கணினி நிறுவனமான சத்யம் கம்யூட்டர்ஸில் வேலை செய்யும் எதிர்நீச்சல் சதீஷ் உள்பட 5 நபர்கள் காடுகளில் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்கு ஒரு சித்தரை சந்திக்க நேர்கிறது. அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள்... யாராவது ஒருவருக்கு மட்டும் ஒரு வரம் தருகிறோன் என்று சித்தர் கூற... இவர்கள்  ஐந்துபேரும் தன்னுடைய வரத்தை கேட்க... அதில் சதீஷின் விருப்பமான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாள் வரவைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை நிரைவேற்றுகிறார் சித்தர்.

துறவியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்... அதில் சில செய்திகளாக... சத்யம் சாப்ட்வேர் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது... நம்ம கம்பெனி மூடிவிட்டார்களா..? இதுபொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்ல.. ஊழல் பிரச்சனையில் வெங்கடபதிராஜுவை கைது செய்து கம்பெனி மூடப்படுகிறது என்று அதிர்ச்சி தகவல் வருகிறது.



அதன்பின் என்ன செய்வது என்று தெரியாத இவர்கள்... மீண்டும் அந்த செய்திதாளை தேடி... அதில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று பார்க்கிறார்கள்...


அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வென்று 2 கோடி ரூபாய் பரிசுபெருகிறார் என்ற செய்தி இருக்கிறது. சரி அவர் யார் என்று கண்டறிந்து இந்த போட்டியின் ஸ்பான்ஸராக நாம் வந்துவிடடு அந்த 2 கோடியை நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்..

அதன்பிறகுதான் தெரிகிறது குத்துச்சண்டை என்றால் என்னவென்று கூட தெரியாத சிவகார்த்திகேயன் தான் பீட்டர் என்பது இவர்களுக்கு தெரிய வருகிறது... 

சுமாராக இருக்கும் சிவகார்த்தி... ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் தெற்றிக்கொள்ள அவரிடம் எப்படி காதலை கணிய வைப்பது என்று தெரியாமல் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்...

இதற்கிடையில் சிவகார்த்தியை தேடி பிடிக்கும் அவர்கள்... அவரை எப்படியாவது இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வைக்க முயச்சிக்கிறார்கள்... ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் ஆகையால் நீங்கள் குத்துச்சண்டையில் கலந்துக்கொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி... குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்து குத்துச்சண்டையைில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.



ஹன்சிகாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டாக குத்துச்சண்டையில் கலந்துக்கொள்ள முடிவெடுத்து நகைச்சுவையாக அதற்கான வேலையில் இறங்குகிறார் சிவகார்த்தி.... ஆனால் அதற்காக எந்த உத்வேகமும் கொள்ளாமல் விளையாட்டாக இருப்பது அபத்தம்..

அப்படி இப்படியென சிலபோட்டிகளில் தன்னுடைய குரும்புதனத்தால் இறுதிபோட்டிவரை முன்னேறும் சிவகார்த்தி... குத்துச்சண்டையில் மிகபிரபலமாக இருக்கும் கில்லர் பீட்டர் (வம்சிகிருண்னன்) சண்டையில் இறுதிப்போட்டியிக்கு வர அவரிடம்.... குத்துச்சண்டையின் போது குத்துச்சண்டையே தெரியாமல் மான்போல் ஓடி ஒளிந்து காமெடியோடி சண்டையிடும் மான்கராத்தே பீட்டர் (சிவகார்த்தி) எப்படி ஜெயிக்கிறார் என்று கடைசி 10 நிமிட படத்தைமட்டும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்...


செய்திதாளில் இருப்பது எந்தபீட்டர் என்று குழம்பும் அந்த 5 பேரும்  சிவகார்த்திகேயனை போட்டியில் கலக்க வைத்து வெற்றியடையச் செய்தார்களா..? இறுதியில் குத்துச்சண்டைபோட்டியில் வென்றது எந்த பீட்டர்...? தன்னை குத்துச்சண்டைவீரர் என்று பொய் சொன்ன சிவகார்த்தியை ஹன்சிகா கரம்பிடித்தாரா..? என்பதை தான் கொஞ்சம் இழுவையாக இழுத்து முடித்திருக்கிறார்கள்...

சிவகார்த்திகேயனின் நடிப்பு படத்துக்கு படம் மாறுபட்டுவருவது மகிழ்ச்சி... ஆனால் இந்தப்படத்தில் அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..  ஹன்சிகாவை பார்த்து வழிவதும்... அவரை கவர முயற்சித்து பலஇடங்களில் மொக்கை வாங்குவதும்.... குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்துக்கொள்வதும்.. அதை ஒரு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கோச் உள்பட அனைவரையும் கிண்டலடிப்பதும் பார்க்க சகிக்கமுடியவில்லை...



காமெடி நடிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் கதையையும் திரைக்கதையையும் அமைக்க வேண்டும்.. ஆனால் சீரியஸாக போகவேண்டிய கதைக்கு நகைச்சுவையாக திரைக்கதை எழுதியிருப்பது படுமொக்கையாக இருக்கிறது... எதிர்நீச்சல் படத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இந்தப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


குத்துச்சண்டையில் காமெடி நடிகர்களுடன் போடும் சண்டை செம ஜாலி... அப்படி இப்படி என பைனலுக்கு சென்றுவிடுவதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருசில குத்துச்சண்டைகளுக்கு நடுவராக சூரி வந்திருக்கிறார்... (கௌரவ தோற்றம்)... கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்...

ஹன்சிகா  படம் முழுக்க அம்புட்டு அழகாக காட்டியிருக்கிறார்கள்.. ஆனால் அப்படிப்பட்ட அழகிக்கு 10 திருக்குறள் ஒப்புவித்தால் தன்மகளை திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவருடைய தந்தை சொல்லி ஆட்களை தேர்வு செய்வது அறுவருப்பு... அதிலும் கலந்துக்கொண்டு திருக்குறள் சொல்லமுடியாமல் திரும்புவது அதைவிட மொக்கை.... அதுவும் சில காமெடி பீஸ்களை வைத்து...


இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். பாடல்கள் சுமார் ரகம்தான் ஆனால் காட்சிகள் அழகாக வந்திருக்கிறது... ஒரு பாடலில் அனிருத் வந்து ஆடுவது பரவாயில்லை என்று பார்க்கவேண்டியதாயிருக்கிறது... ஒருசில பாடல்கள் பரவாயில்லை...

ஏ.ஆர். முருகதாஸ் அவர்களின் கதையை... இயக்குனர் திருக்குமரன் சரியாக கையாளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.... உதவி இயக்குனர்கள் முதலில் வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதைஅமைத்து அனைத்து ரசிகர்களாலும் கவரகூடியராக இருந்தால்தான் அடுத்தடுத்து அவர் ஜொலிக்க முடியும்...

ஏற்கனவே பார்த்த காட்சிகள் கேட்ட நகைச்சுவை துணுக்குகள் என்று எந்தபக்கமும் ஒரு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. முதல்பாதியும் பிற்பாதியும் விருவிருப்பு இல்லாத காட்சிகளால் எப்போது கிளம்பலாம் என்று என்னவேண்டிய சூழல்...


திருவள்ளூரில் கிருஷ்ணா, லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் படம் வெளிவந்துள்ளது. நானும் வேடந்தாங்கல் கரணும் லட்சுமியில் படம்பார்த்தோம்... எங்களுடன் மேலும் 30 பேர் படம் பார்த்தனர்...
 

இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் சறுக்கல்...!

01 April, 2014

பெண்ணே..! தயவு செய்து இப்படி செய்யாதே...!


 
ந்தவனங்களைவிட்டு இடம்மாறி
கூடைகளில் பூத்திருந்த பூக்களை 

நீ ஒருமுறை பார்க்கையில்
மூர்ச்சையாகிறது அனைத்தும்...!


உன்னைப்பார்த்த வேளையில்
மயங்கிப்போன அனைத்தையும்
நீர்தெளித்து எழுப்பிவிடுகிறாள்
பூக்களின் வேதனைபார்த்து பூக்காரி...!


ஒவ்வொரு பூவாய்
தொட்டு... தடவி... இதழ்பிரித்து...
வாய்ப்பளிக்கிறாய்
ஏதோஒரு ஒற்றை ரோஜாவுக்கு...!


தெளித்த நீர்த்துளிகளை
கண்ணீர் துளியாய் காட்சிப்படுத்தி
கவலையோடு கலங்கி நிற்கிறது
மற்ற பூக்கள் அனைத்தும்...!


கோதிவிட்ட கூந்தலோடு
சேர்ந்துக்கொண்டு கர்வப்படுகிறது ஒன்று
தவிர்த்துவிட்ட வே‌தனையில்
தவிக்கிறது மற்றவைகள்...!


கூடி குழைந்து வாடி வதங்கி
உதிரும் வேளையில் கூட
சிரித்துக்கொண்டே சிதைந்துப்போகும்
வாய்ப்பு உன்னோடிருக்கும் பூக்களுக்குத்தான்...!


நொந்து வெந்து வலித்து சகித்து
மாலைவேளையில்
மயக்கிக்கொண்டே மரணிக்கும் வாய்ப்பு
உன்னை அடையா பூக்களுக்கு...!


உனக்கு எத்தனை முறை சொல்லுவது
பூக்கடைகளுக்குச் சென்று
பூக்களுக்குள் கலவரம் 

ஏற்படுத்தாதே என்று...!

வேண்டுமென்றால்
அனைத்து பூக்களையும் அரவணைத்துக்கொள்
இல்லையென்றால்
பூக்களை சூடுவதை நிறுத்திக்கொள்...!


உன்னைப்பார்த்து 

சில பூக்கள் கர்வப்படுவதையும்
சில பூக்கள் காயப்படுவதையும்
பார்த்து சகிக்கும் மனசு
என்னிடத்தில்லை...!




25 March, 2014

பேருந்து பயணமும்... மனசுக்குள் மலரும் ஆசையும்...!




குளித்துமுடித்து
எண்ணெய் தேய்த்து படியவாரிய

தலைமுடியை கலைந்துவிட்டாலும்...

நெடிக்கொருமுறை புழுதிகிளப்பி
மரம்... கெடி... கிளை.... உரசி

கண்ணில் தூசி பட்டாலும்...

பின் இருப்பவர்களைபற்றி 
கவலைப்படாத முன்னிருக்கைக்காரரின் எச்சில் 
ஆடைகளில்பட்டு தெரித்தாலும்....

சில்லூட்டும் பனிப்படலமே
முகம் நனைக்கும் மழைத்துளியோ
சுட்டெரிக்கும் வெயில் கதிரோ....


உயரத்தில் பறந்துப்போகும்
பெயர் தெரியாத பறவையோ
இல்லை வித்தியாசமான எதுவோ....


விரையும் எதிர்பேருந்தில்
புன்னகைக்கும் அடையாளம் 
தெரியாத எதோ ஒரு முகமோ...

கொய்யா வேண்டுமா அல்லது
வேர்கடலை வேண்டுமா
என பரிதாபக்குரல்கள் இம்சித்தாலும்...!


இப்படி எதாவது ஒன்று
ஒவ்வொரு பயணத்தின்போதும்
வாய்க்கிறது என்றாலும்.....


அந்த ஜன்னலோர பயணத்தைதான் 
எதிர்பார்த்து சிறகடிக்கிறது
பேருந்துப் பயணங்களில் மனசு....



17 March, 2014

அவள் இல்லாத தனிமைகளில்..!


   
னித்திருந்து
வானம் பார்க்கும் இரவுகளில்
சட்டென்று விழும்
எரி நட்சத்திரமோ...!

யாருமற்ற ஒரு நாளில்
பின்புற கொல்லையில்
இறகு உதிர்த்து சென்றிருந்த
பறவையோ...!

முற்றத்தில் ஓடும் நீரில்
படகுவிட ஆளில்லா
வெறுமையைத் தந்த
ஒரு மழையோ...!

விழாவற்ற ஒரு நாளில்
தெருவில் ஆடிஅசைந்து
ஆசீர்வதித்து வந்துகொண்டிந்த
ஒரு யானையோ...!

புல்வெளிகளில் காத்திருக்கையில்
அங்கு சிறகடித்துவரும்
வண்ணங்களில் வசப்படுத்தும்
ஏதோ ஒரு பட்டாம்பூச்சியோ..!


சப்பதங்களற்ற 

ஒரு ‌ஏகாந்த வேளையில்
வீற்றிருந்த என் நினைவை
எழுப்பிவிட்டு போகும் ஒரு குயிலோ..!

இன்னும் எதுவெதுவோ
வந்துப்போகிறது ஞாபக சுவடுகளாய்
அவள் இல்லது தவிக்கும்
என் தனிமைகளில்...!



24 February, 2014

மிரட்டும் போஸ்டர்கள்..!



தமிழகத்தில் சமீப காலமாய் எழுதப்படாத ஒரு வராலாறு எழுச்சிப்பெற்று வருகிறது. அது எந்த நிகழ்வானாலும் உடனடியாக சுவரொட்டி தயாரித்து ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான். (முதலில் ஒரேகலரில்தான் அச்சடித்தார்கள் இப்போது வண்ண போஸ்டர்கள்தான்) அப்படியில்லையென்றால் பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துவிடவேண்டும் என்ற பழக்கம்தான் அது.

ஒருகாலத்தில் சினிமாத்துறையை மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம்... பின்பு அரசியலை ஆக்கிரமித்து இன்று சாமானியன் வீட்டு விஷேசம் வரை பரவிக்கிடக்கிறது...

பிறந்தநாள், திருமணம், காதுகுத்தல், தொடங்கி இரங்கல் செய்திவரையும்... அரசியல் தலைவர்களின் அசைவுகளில் தொடங்கி, அரசியலில் பதவி வழங்கியற்கு நன்றி.. தலைவர் பிறந்தநாள்.. தலைவர் வருகை, மற்றும் கட்சி புகழ்... என தினம் தினம் புதுசுபுதுசாக கண்டிப்பாக போஸ்டர் அடித்து ஒட்டியாக வேண்டும் என்ற பழக்கம் அனைத்து மக்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஒரு போஸ்டர் ஒட்டினால் கூடபோதும் ஆனால் ஒரு சுவர் இருந்தால் அந்த சுவர்முழுக்க ‌எரே போஸ்டரை ஒட்டி திகைக்க வைக்கிறார்கள்... அடுத்த நாள் அதை கிழித்து எறிந்துவிட்டு அடுத்தவர் ஒட்டுகிறார்.. சில இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்க்கு முன்பதிவும்கூட செய்துவிட்டுபோகிறார்கள்.. சிலசமயம் இது கைகலப்பாக மாறி வெட்டுக்குத்துவரை சென்றிருக்கிறது.
இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் விளம்ரங்கள், ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், கல்வி நிறுவன மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதை சாப்பிடுவதற்கு என்றே ஆடு மாடுகள் ரோட்டில் அலைகிறது இதனால் பல விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுபோதென்று டிஜிட்டல் பேனர்கள் பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... ஒருவர் இறந்துவிட்டால் அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில் வைத்துவிடுகிறார்கள்... இதுவே ஒரு அரசியல் மாநாடு.. அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள், வருகை, அறிவிப்பு, பிறவிழா இப்படி எதாவது ஒன்று இருந்தால் பேனர்களின் எண்ணிக்கை வழக்ககத்தைவிட எல்லை மீறி சென்று கொண்ருவிடுகிறது. இவைகள் சலைகளை மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை காடாக மாற்றி கொண்டிருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் சாலையில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை. பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும், அரசியல் போஸ்டர்களையும் பார்த்து கொண்டே முன்னே செல்லும் வாகனங்களில் இடித்து விபத்துக்குள்ளாகிறார்கள். இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...? இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...? எதுவும் தெரியவில்லை. 

இதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உண்டா...? சில வருடங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் விளம்பர பலகைகளை வைப்பதற்கு தடை விதித்தார்கள்... டிஜிட்டல் பேனர் ஒரு மக்காபொருள் அதற்கு தடை என்று சுற்றுச்சூழல் துறையும் தடையை அறிவித்தது.. ஆனால் அதையும் மீறி விளம்பர பலகைகள் வைப்பது நிற்கவில்லை.. அது ஏற்படுத்து இடைஞ்சல்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

20x20 என்ற அளவில் ஒரு டிஜிட்டல் பேனர்அச்சடித்து ‌வைக்க... பிரிண்டிங் 8000 முதல் 10000 வரை செலவாகும்... சில பேனர்கள் 1 லட்சம் 2 லட்சம் வரைகூட செல்கிறது.. இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டுப்பார்த்தால் தலையோ சுற்றுகிறது.. அரசியல் வாதிகள் இப்படி செலவிடும் பணம் கண்டிப்பாக நேர்மையாக சம்மாதித்ததுதானா என்ற சந்தேகம் வரத்தானே செய்கிறது...?

ஆட்சியில் இருப்பவர்களே இந்த போஸ்டர் வழக்கத்தை கடுமையாக பின்பற்றி ஊரையே அசிங்கபடுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்... நாம் ஆளும் மாநிலம் அழகாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆள்பவர்களுக்கும்.. அதைச்சார்ந்த நகர, மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களும் போஸ்டர் ஒட்டி கொண்டு விளம்பரம் தேடி கொண்டிருந்தால் யார் தான் இதை கட்டுபடுத்துவது?


போருந்துகளில், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால், சில தனியார் சுவர்களில் அனுமதியின்றி விளம்பரப்படுத்தினால் தண்டனை என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எத்தனைபேர்மேல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை... இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்களா என்றும் தெரியவில்லை.




நாம் இருக்கும் பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு... சாலைகளில் உள்ள தடுப்புகளில் செடிகள் நடப்பட்டு பேணப்பட்டு... அழகாக வளர்ந்து நல்ல சுற்று சுழல் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதுபோன்று போஸ்டர் பேனர் வைக்கும் செலவுக்கு தானதர்மங்கள் செய்யலாம்... இயலாதவர்களுக்கு உதவலாம் ஆனால் அந்த எண்ணம் யார்மனதிலும் வருவதில்லை

சமீபத்தில் நகரின் ஒரு பிரபலத்தை சந்தித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை 7.00 மணிவரை வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த  மாணவர்களுக்கு ஏதாவது மாலை டி பிஸ்கெட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று உதவிகோரியதில் சொற்ப்ப உதவியே செய்தார். ஆனால் அதே வாரத்தில் கட்சி தலைவரின் சாதனைகள் நகர்முழுக்க பெரிய டிஜிட்டல்பேனர்கள் வைத்து அசத்தல் போஸ் கொடுக்கிறார்... எதை என்னவென்று சொல்வது... வீணான விளம்பர பணத்தை உதவிகள் செய்ய வேண்டும் எண்ணம் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

மேம்பாலங்கள், அவற்றின் தூண்கள், பேருந்து நிலையங்கள்.. பள்ளி, கல்லூரி, அரசுஅலுவலக சுற்றுச்சுவர்கள், இன்னும் பிற இடங்களில் அழகான ஓவியங்களோ அல்லது அங்கும் செடிகளோ வைக்கப்பட்டு ஊரை பார்பதற்கு குளிர்ச்சியாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் அப்படியொரு சூழலில் வாழவே முடியாதா...?

17 February, 2014

நம் பலத்தை தீர்மானிப்பது யார்?



குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன் தொடர்ந்து அவரை வந்து சந்திக்கிறான். தன் பலத்தால் நூறு பேரை வீழ்த்தும் சக்தியுடைய அவனை குரு பயிற்சிக்கு சேர்த்துக்கொள்கிறார்.

மாதங்கள் கழிகின்றன. பலமாத பயிற்சிக்குபிறகு குரு எதேச்சையாக சீடனை அழைத்து “இப்போது உன் சக்தியை சோதிக்கிறேன்.. எத்தனை பேரை நீ வீழ்த்த முடியும்“ என்று கேட்கிறார்.

பயிற்சிக்கு முன்பு நூறு பேரை வீழ்த்துவேன் என்று கூறிய அவன் பயிற்சிக்குப்பிறகு ‌ஐம்பது பேரை மட்டுமே வீழ்த்த முடியும் என்கிறான்..

பிறகும் சில மாதங்கள் கழிகின்றன. மறுபடியும் குரு சீடனை அழைத்து சக்தியை சோதனை நடத்த, அதே கேள்வியைக் கேட்கிறார். இப்போது உன்னால் எத்தனை பேரை வீழ்த்த முடியும்?

சீடன் பணிந்த கண்களோடு சொன்னான்.. “குருவே, இதை நானெப்படி சொல்ல முடியும்..? என் பலத்தை எதிரிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்“ என்கிறான்.

புன்னகைத்த குரு, சீடனை ஆசீர்வதித்து பயிற்சி முடிந்தது. வீட்டுக்கு போகலாம் என்று வழியனுப்பி வைக்கிறார்.

இக்கதை ‌போல்தான் நமது வாழ்வும், சாதாரணமான தேவைகளை தீர்மானிக்கும் போது கூட அது சராசரி நடைமுறைக்கு ஒத்துவருகிறதா எனப்பார்க்க வேண்டும். ஏனெனில், நம்முடைய பலம் எதிரே இருப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. பலம் பட்டுமல்ல பயனும்கூட.

நாம் என்னிவிடலாம் அனைவரையும் விட நாம் மேலானவன் என்று நமக்கு மேலே கோடிபேர் என்பதை உணராதவரை இந்த மயக்கம்தான் பலரை ஆட்கொண்டுவருகிறது. உண்மையான வீரம் மற்றவர்களை துன்புறுத்துவதிலோ அல்லது பிறரை இழிவுபடுத்துவதிலோ இல்லை. உண்மையான வீரம் ஆழமான அன்பைபே பொழியும்.


என்வாழ்க்கையில் இதுவரை சந்தித்தவர்களில் நிறையபேர் ரவுடி‌ப்போலவும், மிகப்பெரிய கோவக்காரர் போலவும் காட்டிக்கொள்கிறார்கள்... நான் அவர்களை பார்ப்பது இயலாதவர்களாகத்தான்... ஆம் சிலர் தன்னுடைய இயலாமையை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே கோவம், ரவுடிபோன்று பாவனை, அழுகை, வெறுப்பு என ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்...

கோவமோ, வீரமோ, அன்போ நாம் எவ்வளவு காட்டவேண்டும் என்பதை நாம் முடிவெடுக்க வேண்டாம் நம் எதிரில் இருக்கும் அடுத்தவர் காட்டும் அளவைப்பார்த்து முடிவெடுப்போம்.. அப்போதுதான் வாழ்க்கை தன்பயணத்தை எளிமையாக நகர்த்திக்கொண்டே இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...